கறுப்பு ரோஜாவின் கடைசி தரிசனம்!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரைக் கடைசியாகப் பார்த்த தருணத்தை விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் பொன். ஞானசேகரன்.
பெருந்தலைவர் காமராஜர்
பெருந்தலைவர் காமராஜர்

1975, அக்டோபர் 2 ஆம் நாள் பகல் 12 மணி... (சென்னை)  திருமலைப் பிள்ளை வீட்டு வாசலில் சட்டக் கல்லூரியின் நீல நிற பஸ் நிற்கிறது. 

சுமார் நூறு மாணவ நண்பர்களுடன் நானும் அதிலிருந்து இறங்குகிறேன். எப்போதோ அடித்த காவியும் கரைந்த நிலையில் காட்சியளிக்கும் அந்தச் சுற்றுச் சுவர் தெரிகிறது. மெழுகுவர்த்தியாக நாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்துவிட்ட, தலைவனின் வீடுதானே அது! வேறு எப்படி இருக்க முடியும்? 

கீழ்த் தளத்தின் முன்னால் உள்ள அறையில் கட்டிலில் அமர்ந்தவாறு யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறார் பெரியவர். நாலைந்து பேர் உள்ளே நுழைகிறோம். 

'ஐயா, சட்டக் கல்லூரி மாணவர்கள் உங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறோம்.'

'அப்படியா, இந்த சின்ன அறையில் எல்லோருக்கும் இடமிருக்காதே, சரி, சரி வெளியே வருகிறேன்' என்று சொல்லிய அவர், மெதுவாக எழுந்து காலணியைப் போட்டுகொண்டு, நடந்து வந்து 'போர்ட்டிகோ'வில் நிற்கிறார். 

'ஐயா, சேர் கொண்டு வருகிறேன், உட்கார்ந்து கொள்ளுங்கள்' என்கிறேன் நான். 'வேண்டாம், சும்மா நிற்கிறேன்' என்று பெரியவர் தடுத்து விடுகிறார்.

நாற்காலிகளைத் தேடியலையும் அரசியல்வாதிகளிடையே, பதவிச் சபலங்களுக்கு ஆட்படாத தலைவரல்லவா அவர். உடல்நலக் குறைவிலும் நாற்காலி அவருக்குத் தேவையற்றதாகவே தோன்றியது போலும்! 

மாணவர்கள் சார்பில் மலர் மாலை ஒன்று மக்கள் தலைவருக்குச் சூட்டப்படுகிறது (உயிரோடு அவர் பெற்றுக் கொண்ட கடைசி மாலை அதுதான்!). சிரித்தவாறே கைகளில் வாங்கி, தன் கழுத்தருகே கொண்டு சென்று அருகிலிருந்த உதவியாளரிடம் மாலையைத் தருகிறார். 

காலையில் கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கும் கிண்டி காந்தி மண்டபத்திற்கும் சென்று வந்ததை மாணவர்கள் சொல்கின்றனர். 

'ரொம்ப சந்தோஷம். காந்தி ஜெயந்தியன்று மாணவர்களாகிய நீங்களெல்லாம் இந்த அளவுக்கு ஆர்வமாக இருக்கிறது குறித்து மகிழ்ச்சி. சந்தோஷமாக இருங்க' என்று வாழ்த்துகிறார் பெரியவர். 

காமராஜர் வாழ்க, காந்தியம் வாழ்க! .. காந்தியின் வாரிசு காமராஜர் வாழ்க!... வாழ்த்து முழக்கம் ஒலிக்கிறது. 

இரு கை கூப்பியவாறே, 'அப்போ நான் வரட்டுமா?' என்று எங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறார் (இன்னும் சில மணி நேரத்தில் இந்த உலகிலிருந்தே விடைபெற்றுக் கொள்ளப்போகிறார் என்பதை அப்போது எவரும் அறிந்திருக்கவில்லை). 

காந்தி ஜெயந்தியன்று காந்தியத் தலைவரைத் தரிசித்த பூரிப்பில்.. விடுதிக்கு வந்து அறையில் உறங்கிக் கொண்டிருந்தேன். 

மாலை 3.45 மணியளவில் அறை நண்பர் அதிவேகமாக ஓடிவந்து தட்டி எழுப்பி... 'ஒரு சோகச் செய்தி (Bad news), காமராஜர் இறந்துவிட்டாராம்' என்கிறார். 

இப்போதுதான் பார்த்துவிட்டு வந்தோமே, அதற்குள்ளாகவா இந்த முடிவு! உண்மையாகவும் இது இருக்குமா? 

திடுக்கிட்டேன். அதிர்ச்சியும் துக்கமும் நெஞ்சைப் பிழிய, விடுதியின் பொது மண்டபத்தில் வந்து பார்க்கிறேன். அங்கே, கூட்டம் கூட்டமாக மாணவர்கள்... வாட்டமடைந்த முகங்கள்... வானொலி அழுகிறது...

'தமிழக முன்னாள் முதலமைச்சரும், ஸ்தாபன காங்கிரஸ் தலைவருமான திரு. கே. காமராஜ் இன்று மாலை 3.15 மணிக்கு மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.' 

நம்பத்தான் முடியவில்லை... ஆனால், நடந்துவிட்டதே! நாடொன்றே நாடித் தன்னலமொன்றும் நாடாத தனிப்பெருந்தலைவர் மறைந்துவிட்டாரே.. 

இரவு 7 மணியளவில் குதிரைப் படையின் சீற்றம், கண்ணீர்ப் புகை, தடியடி எல்லாவற்றையும் சமாளித்தவாறே ஜனசமுத்திரத்தில் எதிர் நீச்சலடித்துப்போய் ராஜாஜி மண்டபத்தில் அமைதியாக உறங்கிய அந்தத் தலைவனை மீண்டும் தரிசித்தேன். உலகத் துயரத்தையெல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டு, ஆகட்டும் பார்க்கலாம் என்பதுபோல், ஆழ்ந்த புன்னகை அந்தப் புனிதனின் முகத்தில் தெரிகிறது. 

கார்மேகவண்ணனைக் காலன் கொண்டுவிட்ட செய்தி கேட்க அன்று கதிரவனும் வரவில்லை... வானமும் கண்ணீர் விட்டழுகிறது... 

காமராஜ் வாழ்க! 

[கட்டுரையாளர் - மூத்த பத்திரிகையாளர்]

(ஜூலை 15 - காமராஜர் பிறந்த நாள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com