யாரைத் தேர்வு செய்ய வேண்டும்?
குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை தொடர்ந்து தேர்தல்கள் நடத்தப்படுவது ஜனநாயகத்தின் உயிர் நாடியாகும். வாக்காளர்கள் அரசின் மீதான தங்களின் கருத்துகளையும், விமர்சனங்களையும் காட்டும் வாய்ப்பை


குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை தொடர்ந்து தேர்தல்கள் நடத்தப்படுவது ஜனநாயகத்தின் உயிர் நாடியாகும்.
வாக்காளர்கள் அரசின் மீதான தங்களின் கருத்துகளையும், விமர்சனங்களையும் காட்டும் வாய்ப்பை தேர்தல்கள் தான் ஏற்படுத்தித் தருகின்றன. அப்படியொரு வாய்ப்பு இந்திய வாக்காளர்களுக்கு வாய்த்திருக்கிறது.
தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வும் முடிந்துள்ளது. மக்களவைக்கான 543 உறுப்பினர்களை சுமார் 102 கோடி மக்களில் 70 கோடி வாக்காளர்கள் வாக்களித்து தேர்வு செய்ய உள்ளனர்.
அந்தந்தத் தொகுதியில் உள்ள சாதி நிலவரம், தொகுதியில் உள்ள செல்வாக்கு, பணபலம், கட்சித் தலைமை, அவர்மீது வைத்துள்ள விருப்பு, வெறுப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களில் ஒருவரைத்தான் தேர்வு செய்ய உள்ளனர்.
அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.
வேட்பாளர்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவருக்குத்தான் அதாவது அந்தக் கட்சிக்குத்தான் என கட்சி சார்புடையவர்களும் தேர்தல் பிரசாரத்தின் போது "கவனிப்பவருக்கே' என அடித்தட்டு மக்களும் இருக்க, நடுத்தர வர்க்கத்தினரோ யாருக்கு வாக்களிக்கலாம் என சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.
தேர்தலைப் பொருத்தவரையில் மக்கள்தான் மன்னர். மன்னரின் நம்பிக்கையைப் பெற்றவர்தான் மக்களின் சார்பில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும். அத்தகையவர்கள் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை,
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார்
என்ற குறளின் மூலம் திருவள்ளுவர் கூறுகிறார்.
வள்ளுவர் வாக்கின்படி மன்னராகிய மக்கள் நம்பிக்கை வைத்து ஆளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவருக்கு இருக்க வேண்டிய முதல் குணம் ஒழுக்கம்.
அதன்படி பேச்சில் உண்மையும், குற்றங்களிலிருந்து நீங்கியவராகவும் பழிக்குப் பயப்படுகின்ற, வெட்கப்படுகின்ற நபராகவும் இருக்க வேண்டும்.
நடைமுறையில் குற்றங்களுக்கு வருந்தாமல், வெட்கப்படாமல் "யார்தான் குற்றம் செய்யவில்லை?' என்ற வாதம்தான் எழுப்பப்படுகிறது.
மக்களால் தேர்வு செய்யப்படும் நபர் மக்களிடம் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டவராக இருத்தல் வேண்டும். இந்த அக்கறை தொலை நோக்கு கொண்டதாகவும் மக்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்து அவர்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்கும் சுதந்திர நிலையை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.
அடுத்து சமூகத்தின் ஒட்டு மொத்த பொது நலனுக்கு உகந்தது எது என்று தெரிந்திருக்கும் வகையில் கல்வியறிவு பெற்றவராகவோ அல்லது அனுபவ அறிவு பெற்றவராகவோ இருக்க வேண்டும். மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட இனங்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் மத்திய அரசால் கொண்டுவரப்படும் பல்வேறு திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைவதில்லை என்று குறைபாடு எப்போதும் நிலவுகிறது.
இதற்குத் தீர்வு காண வேண்டுமானால் மக்களால் தேர்வு செய்யப்படுபவர் மத்திய அரசின் திட்டங்களை அறிந்தவராக இருக்க வேண்டும் அல்லது அறிந்து கொள்பவராக இருக்க வேண்டும். அது போன்ற மக்களவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் தன்மைக்கேற்ப நலத்திட்டங்களைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மக்களால் தேர்வு செய்யப்பட வேண்டியவர் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் நாணயமானவர்களாகவும் இருக்க வேண்டும். இந்தக் குணங்கள் கட்சி சார்ந்த மற்றும் கட்சி சாரா அனைத்து வேட்பாளர்களிடமும் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். வேட்பாளர்கள் தேர்வைப் பொருத்தவரையில் இப்படி பல்வேறு நற்குணங்கள் கொண்ட வேட்பாளர்களைத் தேர்வு செய்வது கடினமான ஒன்றாகும். ஆனாலும் கூட இதன்மூலம் வாக்காளர்களின் விருப்பத்தை அரசியல் கட்சிகளுக்குத் தெரியப்படுத்த முடியும். இந்த விருப்பம் வருங்காலத்திலாவது நிறைவேற வாய்ப்பு உள்ளது அல்லவா?
சுமார் 70 கோடி வாக்காளர்கள் 543 நல்ல மனிதர்களைத் தேர்வு செய்வதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது. அப்படி முடியவில்லை என்றால் நமது மக்களாட்சிக்குத் தான் என்ன மகிமை?
மக்களாட்சி மகத்துவம் பெற வேண்டுமானால் அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்.
மக்கள் விரும்பும் மாற்றங்கள் அரசியல் கட்சிகளால் மட்டும் வந்துவிடாது. அரசியல் கட்சிகளின் மேல் விதிக்கும் கட்டுப்பாட்டினால்தான் வரும். மக்கள் சக்தியை அரசியல் கட்சிகள் மதிக்கும் தேர்தல் நேரத்தில்தான் மக்களும் தங்களுக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நம்பிக்கையே வாழ்க்கைக்கு அடிப்படையாதலால் நம்பிக்கையை இழக்காமல் நல்லாட்சி அமைப்பது நம் கையில்தான் உள்ளது.
நாடாளுமன்றம் என்பது நாட்டு மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையை நிர்ணயிக்கும் மன்றமாகும். இந்த மன்றத்தின் உறுப்பினர் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நல்லவர்களாக, நாணயமானவர்களாக, நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால் நாடாளுமன்றம் நல்லவர்கள் மன்றமாக மாறும். அதுதானே நாட்டுக்கு நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...