வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மாறிவரும் வங்கிகள் முகம்!

வணிக வங்கிகள் தங்கள் கிளைகளைத் திறப்பதற்குத் தேர்வு செய்யும் இடம் எப்படிப்பட்டது? இதுபற்றி, பாரத ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள தகவல்கள் அதிருப்தி மட்டுமல்ல, அதிர்ச்சியும் ஊட்டுவதாக உள்ளது. 200

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:57 am

எஸ். கோபாலகிருஷ்ணன்

வணிக வங்கிகள் தங்கள் கிளைகளைத் திறப்பதற்குத் தேர்வு செய்யும் இடம் எப்படிப்பட்டது? இதுபற்றி, பாரத ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள தகவல்கள் அதிருப்தி மட்டுமல்ல, அதிர்ச்சியும் ஊட்டுவதாக உள்ளது. 2009 மார்ச் 31 நிலவரப்படி, இந்தியாவில் குறைந்தபட்சம் ஒரே ஒரு ஷெட்யூல்டு வணிக வங்கி செயல்படும் மையங்களை எடுத்துக் கொண்டால், அவற்றின் எண்ணிக்கை 34,636 மட்டுமே. இவற்றில் கணிசமான மையங்களில் அதாவது 28,000 இடங்களில் ஒரே ஒரு வங்கி அலுவலகம் மட்டுமே செயல்படுகிறது. இவை அனைத்தும் கிராமப்புற அல்லது ஊரகப் பகுதிகளில் உள்ளன.

  அதே சமயம், ஒரே மையத்தில் 100 வங்கிகளுக்கு மேல் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் கிளைகளை நிறுவியுள்ளன. இப்படி, அதிகபட்ச வங்கிக் கிளைகளைக் கொண்ட மையங்களின் எண்ணிக்கை 61 ஆகும்.

  ஆக, பெரிய நகரங்களிலும் வியாபார ஸ்தலங்களிலும், அனேகமாக அனைத்து வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு, பல கிளைகளை அமைத்துக் கொண்டுள்ளன. லாப நோக்கமே இதற்குக் காரணம்.

  வங்கிகள் 1969-ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டதற்கு முன்பு, வங்கிக் கிளைகளை பெரிய நகரங்களிலும், வணிகப் பகுதிகளிலும் மட்டுமே காண முடிந்தது. கிராமங்களில் வங்கிக் கிளைகளை அப்போது காணவே முடியாது.

  வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதற்குப் பிறகுதான், கிராமங்களில் கிளைகள் திறக்கப்பட வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது.

   இதன் விளைவாக, முன் எப்போதும் இல்லாத அளவில் வங்கிகள் கிராமங்களிலும், ஊரகப் பகுதிகளிலும், நடுத்தர நகரங்களிலும்கூட கிளைகளைத் திறந்தன.

  இத்தகைய வங்கிக் கிளைகள் விரிவாக்கம் உலகில் வேறு எந்த நாட்டிலும் எந்தக் காலகட்டத்திலும் நிகழ்ந்ததில்லை என்பது வரலாறு.

   இந்த விரிவாக்கத்தின் மூலம் விவசாயக் கடன் மற்றும் சிறுதொழில் கடன்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டன. பசுமைப் புரட்சிக்கும் சிறுதொழில் மேம்பாட்டுக்கும் இது வழிவகுத்தது.

  1990களில், உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் என்னும் பெயரில் செயல்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தத்தின் விளைவாக, மேற்கூறிய போக்கில் மாற்றம் ஏற்பட்டது.

   விரிவாக்கத்துக்குப் பதில், பலப்படுத்துதல் என்ற பெயரில், கிராமம் மற்றும் ஊரகப் பகுதிகளில் புதிய கிளைகள் திறப்பதை வங்கிகள் தவிர்த்தன.

  அடுத்தகட்டமாக, இரண்டு அல்லது மூன்று கிளைகளை ஒன்றாக இணைத்து, கிராமக் கிளைகள் மற்றும் ஊரகப்பகுதிக் கிளைகளின் எண்ணிக்கையைக் குறைத்தன.

  இதற்கெல்லாம் காரணம் ஒன்றுதான். அது, வங்கிகள், சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து, லாபத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கின என்பதுதான்!

  இப் புதிய போக்கின் வாயிலாக, வங்கிகள் தங்கள் செயல்பாடுகளின் பெரும்பகுதியை பெரிய நகரங்களிலும், பெரிய வணிகப் பகுதிகளிலும் சுருக்கிக் கொண்டன. இதற்கு எடுத்துக்காட்டாக கீழ்க்காணும் புள்ளிவிவரத்தைச் சொல்லலாம்.

  வங்கிகள் திரட்டியுள்ள ஒட்டுமொத்த வைப்புத் தொகையில் (டெபாசிட்டுகளில்) 69 சதவீதம் 100 பெரிய நகரங்களில் இருந்து கிடைத்துள்ளன.

  அதேபோல், வங்கிகள் அனைத்தும் வழங்கியுள்ள ஒட்டுமொத்த கடன் தொகையில் 79 சதவீதம், 100 பெரிய நகரங்களில் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 21 சதவீதக் கடன்தொகை மட்டுமே, விரிந்து, பரந்துள்ள இந்தியாவின் பிற பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 2009 மார்ச் 31 நிலவரமாகும்.

  எந்த நோக்கத்துக்காக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டனவோ, அந்த நோக்கம் முதல் 20 ஆண்டுகளில் நிறைவேறியது என்பது என்னவோ உண்மை. ஆனால், 1991-க்குப்பிறகு அந்த நோக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டது என்பது நிதர்சனம்.

  இதற்குக் காரணம், உலகமயம், தனியார்மயம், தாராளமயக் கொள்கைகளாகும். வங்கிகளுக்கு இடையே போட்டி அதிகரித்தது.

  வணிகத்தில், ஆரோக்கியமான போட்டி தேவைதான். ஆனால், ஒரு வங்கியின் வெற்றி, அது ஈட்டுகின்ற லாபத்தைக் கொண்டு அளவிடப்படுகிறது என்பதால், அனல் பறக்கும் போட்டியில், கிராமப்புற மேம்பாடு, எளியமக்களுக்கும் வங்கிச் சேவை தேவை என்பன போன்ற உன்னத நோக்கங்கள் கருகிப்போய்விட்டன. எனவேதான் இந்தியாவில் 60 சதவீத மக்கள் இன்னும் வங்கிகளை எட்டிக்கூடப் பார்த்ததில்லை.

  ஒருபுறம் லாபநோக்கம் என்றால், இன்னொருபுறம், சில ஆண்டுகளாகவே, வங்கிகள் மனதில் பதிந்துள்ள ஒரு தவறான கருத்து ஆகும்.

  சிறு தொழில்களுக்குக் கொடுக்கப்படும் கடன் உதவி வாராக் கடனாக மாறிவிடும் என்பதே அது. இது தவறான கருத்து என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

   உலகளாவிய பொருளாதார மந்தநிலையையும் தாண்டி, இந்தியாவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் சிறப்பாகவும் லாபகரமாகவும் செயல்படுகின்றன என பல சர்வதேச ஆய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

  கடன் வழங்கும்போது, ஓரளவு "ரிஸ்க்' இருப்பது இயல்பு. இந்த "ரிஸ்க்'கின் தன்மையை அனுபவ ரீதியில் உணர்ந்து, எந்த அளவுக்கு "ரிஸ்க்' எடுக்கலாம் என்பதை வங்கி மேலாளர்கள் தங்கள் பழுத்த அனுபவத்தாலும், அறிவு நுட்பத்தாலும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

   மாறாக, ""கிராமங்களில் கடன்கொடுப்பது திரும்பி வராது'' ""சிறுதொழில்களுக்குக் கடன் கொடுப்பது வாராக் கடனாகிவிடும்'' என்றெல்லாம் அஞ்சுவது சரியல்ல.

  நன்கு வளர்ந்துவிட்ட தொழில் நிறுவனங்கள், நகர்ப்புறத்து வாடிக்கையாளர்கள், வலுவான வணிகர்கள் போன்றவர்களுக்கு மட்டும் கடனை வழங்கிவிட்டு, புதிதாகத் தொழில் தொடங்கும் சிறிய நகரங்களைச் சேர்ந்த தொழில் ஆர்வலர்களுக்கு கடன் வழங்குவதைத் தவிர்ப்பது வங்கி தர்மம் ஆகாது.

  இந்நிலையில், பாரத ரிசர்வ் வங்கி ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாகியுள்ளன.

  நாட்டின் எல்லாப் பகுதிகளிலும், எல்லாத் தரப்பு மக்களுக்கும் வாரத்தில் ஒரு நாளாவது வங்கிச் சேவை கிடைப்பதற்கு ஏதுவாக ஒரு புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

   இதன்படி, இந்தியாவில் உள்ள எல்லா மாவட்டங்களிலும், ஒரு வங்கிகள் குழு அமைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் 2011-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வாரத்தில் ஒரு நாளாவது வங்கிச் சேவை கிடைப்பதற்குத் தேவையான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

    இத் திட்டம், பாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தொராட்டின் நேர்முக கண்காணிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

  இந்த வங்கிச் சேவை, கட்டமைப்பு வசதியுடன்கூடிய வங்கிக் கிளையின் வாயிலாக அல்லது நடமாடும் வங்கிக்கிளை, எக்ஸ்டென்ஷன் கவுண்டர் எனப்படும் விரிவாக்கக்கிளை அல்லது அந்தந்தக் கிராமத்துக்குப் பொருந்தக்கூடிய வேறு வகையில், குறைந்தபட்சம் வாரம் ஒரு நாளாவது வழங்கப்படும். பிறகு படிப்படியாக இச் சேவை விரிவு செய்யப்படும்.

  வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு, 40 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், பெரும்பாலான மக்கள், வங்கிகளுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இருக்கிறார்கள். எனவே, வங்கிச் சேவையின் பலன் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற இலக்கு நிறைவேற, இப்புதிய திட்டம் ஒரு தொடக்கம் எனலாம்.    எனினும், எளிய கிராமவாசிகளும் வங்கிளால் பயனடைவதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.