ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மக்களுக்காகப் பணியாற்றுங்கள்

ஒரு வழியாக இந்தியத் திருநாட்டின் 15-வது மக்களவைக்கு புதிய உறுப்பினர்கள், காபினெட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவியும் ஏற்றுவிட்டனர்.   ஒவ்வொரு முறை வாக்களிக்கும்போதும் நமக்காக ஏத

Updated On :20 செப்டம்பர் 2012, 12:20 pm

ஒரு வழியாக இந்தியத் திருநாட்டின் 15-வது மக்களவைக்கு புதிய உறுப்பினர்கள், காபினெட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவியும் ஏற்றுவிட்டனர்.

  ஒவ்வொரு முறை வாக்களிக்கும்போதும் நமக்காக ஏதாவது செய்வார்கள் என்றுதான் பெரும்பாலானோர் வாக்களிக்கின்றனர். ஒரு பகுதி வாக்காளர்கள் கட்சிக் கட்டளைப்படியும், மற்றொரு பகுதியினர் வழக்கமான வேலைகளுக்கு மத்தியில் இதையும் ஒரு "வேலையாக' நினைத்துச் செய்கின்றனர்.

  எப்படியாகிலும் அரசியல் சாசனச் சட்ட அடிப்படையின்படியும், நியாயப்படியும் மக்களவை உறுப்பினர்கள் தங்களது தொகுதி மக்களின் பிரதிநிதிகளாகத்தான் செயல்பட வேண்டும்; அதாவது மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும்.

  மக்களுக்குப் பணியாற்றுவது என்பது தொகுதி உறுப்பினர் பங்காக ஆண்டொன்றுக்கு ஒதுக்கப்படும் சில கோடிகளில் பேருந்து நிறுத்தங்கள், குடிநீர்த் தொட்டிகள் கட்டுவது மட்டும் அல்ல.

  இதையும் செய்யாமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள்- அவர்களை விட்டுவிடுவோம்.

  இவையெல்லாமும் கடந்து, தமிழக அரசிடம், உள்ளாட்சி அமைப்புகளிடம் கேட்டுப் பெற்றுத் தர வேண்டிய சில திட்டங்களையும் மக்களவை உறுப்பினர்கள் செய்து தர வேண்டும்.

  பொதுவாக "நாடு முழுவதும்' என்று தொடங்கப்படும் மத்தியத் திட்டங்களில் தமது தொகுதியின் பெயரைத் தேவைப்படும் இடங்களில் சிரத்தை மேற்கொண்டு சேர்க்க வேண்டும்.

  இவையன்றி அரசின் கொள்கைரீதியான, முடிவுகளுக்கான விவாதங்களின்போது தத்தம் தொகுதி பெரும்பான்மை மக்களின் கருத்தையும் மக்களவை உறுப்பினர் அவையில் பிரதிபலிக்க வேண்டும்.

  ஆனால், பெரும்பாலானவர்கள் இவ்வாறாகவெல்லாம் தத்தம் தொகுதியின் பிரதிநிதியாகச் செயலாற்றுவதில்லை.   சிலர் தேசிய அளவிலான பிரச்னைகளில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு அடுத்த தேர்தலின்போது வாக்குகளுக்காக மக்களை நாடுபவராக இருந்திருக்கின்றனர்.

  இதற்குக் காரணம் பெரும்பாலான அம்சங்களில் அவர்கள் அனைவரும் கட்சிப் பிரநிதிகளாகவே செயல்பட்டு வந்துள்ளனர். அதாவது, கட்சிப் பணியில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு, கட்சிக் கட்டளைகளை மட்டுமே அவையில் பேசுபவராகவும் இருந்துவிடுகின்றனர். கட்சியின் தேவைகளைச் செய்து கொடுத்து விடுவதால், மக்கள் பணியில் நமது உறுப்பினர் எப்படி? என்பதை எந்தக் கட்சியும் பரிசீலிப்பதும் இல்லை.

  இந்த இடத்தில்தான் எம்பி என்பவர் மக்களுக்கானவரா? கட்சிக்கானவரா? என்ற கேள்வி எழுகிறது. கட்சிதானே என்னைப் போட்டியிட வைத்தது; பிறகு கட்சி சொல்வதைக் கேட்காமல் எப்படி? என்று கேட்பதில் நியாயம் இருக்கலாம். ஆனால், உண்மையில்லை.

  இதுதொடர்பான விவாதத்தை எழுப்பினால் அது அனுமார் வாலைப் போல போகும் என்று நம்பி விட்டுவிடவும் முடியாது. இறுதிக் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்- கட்சி சொல்வதைச் செய்யலாம், மக்கள் சொல்வதையும் செய்யலாம்; மக்கள் சொல்வதைச் செய்ய முற்படும்போது, கட்சி தடுத்தால் என்ன செய்வது?

  இந்த கேள்விகளுக்கு மத்தியில் ஒன்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டும், பெரும்பாலும் கட்சியின் அதிகாரப்பூர்வ உத்தரவுகள், அந்தத் தொகுதி மக்களின் மனங்களுக்கு எதிராக இருப்பதில்லை.

  எனவே, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு விரோதமான- குறிப்பாக கட்சிகளின் அதிகார மையங்களின் ஆசைகள், ஆர்வங்களுக்கேற்ற அதிகாரப்பூர்வமற்ற உத்தரவுகளைத் தடுக்க வேண்டும். இதை அரசியல் கட்சிகள்தான் செய்ய வேண்டும்.

  15-வது மக்களவையில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்களே! மக்களுக்காகப் பணியாற்றுங்கள். அதுதான் தருமப்படி நீங்கள் ஏற்றிருக்கும் பதவிக்கான பணி. கட்சி தடுத்தால் மக்களுக்காக, மக்களை முன்னேற்றுவதற்காக கட்சிக்குள் போராடுங்கள். அப்போதுதான் உண்மையான மக்கள் பணியாளராக முடியும்; இப்போதுள்ள இந்தியாவின் தேவையும் அதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.