/

இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசின் துரோகம்

ஐ க்கிய நாடுகள் அவையின் சார்பில் உருவாக்கப்பட்ட "மனித உரிமைகள் அமைப்பு' ஜெனீவாவில் இயங்குகிறது. உலகில் எந்த நாட்டிலாவது அடிப்படை மனித உரிமைகளைச் சீரழிக்கும் செயல்பாடுகள் நடைபெற்றால் அவற்றை ஆராய்ந்து த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:27 pm

இரா. செழியன்

ஐ க்கிய நாடுகள் அவையின் சார்பில் உருவாக்கப்பட்ட "மனித உரிமைகள் அமைப்பு' ஜெனீவாவில் இயங்குகிறது. உலகில் எந்த நாட்டிலாவது அடிப்படை மனித உரிமைகளைச் சீரழிக்கும் செயல்பாடுகள் நடைபெற்றால் அவற்றை ஆராய்ந்து தமது பரிந்துரையை ஐக்கிய நாடுகள் அவைக்கு இந்த அமைப்பு அனுப்பும். ஐக்கிய நாடுகள் அவையில் உள்ள நாடுகள் அனைத்தும் வாக்குகள் தந்து இந்த உரிமை அமைப்பின் 47 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 16 நாடுகளின் ஆதரவுள்ள ஒரு மனுவை இந்த மனித உரிமை அமைப்பு ஆராயும்.

  இலங்கைத் தீவில் நடைபெறும் மனித உரிமைகள் சீர்குலைவு பற்றி ஆராய, 2009 மே நான்காவது வாரத்தில் 20 நாடுகளின் ஆதரவுடன் சுவிட்சர்லாந்து ஒரு விண்ணப்பத்தை அனுப்பி வைத்தது. அதனைக் கவனிக்க மே 26-27-ம் தேதிகளில் உரிமை அமைப்பின் சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த சுவிட்சர்லாந்தின் விண்ணப்பத்தை மறுத்து இலங்கைத் தூதர் ஒரு தீர்மானத்தை அனுப்பினார்.

  மே 26 உரிமை அமைப்பின் தொடக்க கவனிப்பில் சுவிட்சர்லாந்து தீர்மானத்துக்குப் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு இல்லை என்பது தெரியவந்ததால் இலங்கை அரசின் தீர்மானம் கவனிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்தச் செய்தி வெளிவந்தவுடன், ""இலங்கை அரசு தரும் தீர்மானம் இலங்கைவாழ் தமிழர்களின் நலன்களுக்குப் பாதகமாக இருக்கும் என்பதை பல கோடி உலகத் தமிழர்கள் பலமாக நம்புவதால், அதற்கு எதிரான தக்க நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் எடுக்க வேண்டும். ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிடக் கூடாது என்று ஒரு பக்கத்தில் கூறப்பட்டாலும் தனிப்பட்ட ஒன்றாக இந்தப் பிரச்னை கவனிக்கப்பட வேண்டும்'' என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தார். அந்தக் கடித விவரம் பத்திரிகைகளுக்குத் தரப்பட்டது.

  இந்தப் பிரச்னை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் து. ராஜாவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ""மக்கள் உரிமை அமைப்புக்குத் தரப்பட்டுள்ள இலங்கைத் தீர்மானத்தில் ஒரு நாட்டின் உள்நாட்டு நடவடிக்கைகளில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது என்பதை வலியுறுத்துவது, இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கவனிக்காமல் கைவிட்டுவிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக முடியும். இலங்கைத் தீவில் போர் காலத்தில் இழைக்கப்பட்டுள்ள குற்றங்களையும் இன அழிவு அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் கவனிக்க வேண்டும் என்று முதலில் தரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக வந்துள்ள இலங்கைத் தீர்மானத்தை இந்தியா எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

  இருப்பினும் மே 27 இலங்கைத் தீர்மானம் 29 நாடுகளின் ஆதரவு, 12 நாடுகளின் எதிர்ப்புடன் மக்கள் உரிமை அமைப்பில் நிறைவேற்றப்பட்டது. 6 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

  இதை தமது ஆட்சிமுறைக்கும் ராணுவ நடவடிக்கைகளுக்கும் கிடைத்த வெற்றியாக இலங்கை அரசு எக்காளமிட்டுக் கொண்டாடியது.

  ஜெனீவா மனித உரிமை தமது முடிவை ஐக்கிய நாடுகள் பரிந்துரைக்கு அனுப்ப முடியுமே தவிர, அதன் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. மனித உரிமைகளுக்கு முரண்பட்டு இலங்கை வாழ் சிறுபான்மையினரை இன அழிவுக்கு ஆளாக்கிய இலங்கை அரசின் நடவடிக்கைகளை மனித உரிமை அமைப்பு ஆராய வேண்டும் என்று சுவிட்சர்லாந்து தயாரித்த தீர்மானத்துக்கு உடன் ஆதரவு தந்த 19 நாடுகள்: செக். குடியரசு, லக்ஸம்பர்க், எஸ்தோனியா, ஜெர்மனி, போலந்து, ஆஸ்திரியா, பின்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், ஹங்கேரி, ஸ்லோவேனியா, சைப்ரஸ், கிரேக்க நாடு, நெதர்லாந்து, ஐஸ்லாந்து, இங்கிலாந்து, சுவீடன்.

  சுவிட்சர்லாந்து தீர்மானத்துக்கு எதிராக இலங்கை தந்த தீர்மானத்துக்கு உடன் ஆதரவு தந்த 12 நாடுகள்: இந்தோனேசியா, சீனா, சவூதி அரேபியா, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, பஹ்ரைன், பிலிப்பின்ஸ், கியூபா, எகிப்து, நிகராகுவா, பொலிவியா.

  சுவிட்சர்லாந்து தீர்மானத்தை முதலில் மனித உரிமை அமைப்பு கவனிக்கத் தொடங்கிய போது இந்தியா அதை எதிர்த்து வெளிநடப்புச் செய்தது. பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில் சுவிட்சர்லாந்து தீர்மானம் கைவிடப்பட்டு, இலங்கைத் தீர்மானம் ஆராயப்பட்டது. கடைசியாக நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா, சீனா பாகிஸ்தான் திரட்டிய ஆதரவின் பேரில் 29 நாடுகள் ஆதரவுடன் மே 27-ம் தேதி இலங்கைத் தீர்மானம் நிறைவேறியது.

  இதற்கு முன்னதாக 2008 மே மாதத்தில் மனித உரிமை அமைப்புக்கு 4 நாடுகளை உறுப்பினர்கள் ஆக்குவதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் ஜப்பான், பஹ்ரைன், தென்கொரியா, பாகிஸ்தான், இலங்கை, டைமர் லெஸ்டே ஆகிய 6 நாடுகள் போட்டியிட்டன. மனித உரிமைகளை மிகவும் சீரழிக்கும் இலங்கை நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் அவையில் உள்ள நாடுகள் எதுவும் ஆதரவு தரக் கூடாது என்று உலகளவில் இருந்த முக்கியமான மனித உரிமை அமைப்புகள் பலமாக எதிர்த்தன.

  அவைகளுடன் அமைதிக்கான நோபல் பரிசுகள் பெற்ற அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், தென்னாப்பிரிக்காவின் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு, ஆர்ஜென்டீனாவின் அடால்ப் பெரே எஸ்குவில் ஆகியோர், "" ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பில் இடம் பெற இலங்கைக்கு சிறிது கூடத் தகுதி கிடையாது. நடைபெறும் தேர்தலில் இலங்கையை முற்றிலும் நிராகரிப்பது இலங்கை மக்களுக்கு நீங்கள் செய்யும் பெரும் சேவையாகும்'' என்று அந்தத் தேர்தலில் வாக்களித்த உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டார். தேர்தல் முடிவில் கிடைத்த வாக்குகள்: ஜப்பான்-155, பஹ்ரைன்-142, தென் கொரியா-139, பாகிஸ்தான் 114 என வெற்றி பெற்றன. 101 வாக்குகளைப் பெற்ற இலங்கை தோல்வி அடைந்தது. இலங்கைக்கு இந்தத் தேர்தலில் இந்தியா ஆதரவு அளித்தது.

  1980 தொடங்கிய காலகட்டத்தில் இலங்கையில் தமிழ் மக்களுடைய உடைமைகளும் உரிமைகளும் உயிர்களும் இனவெறிக்குப் பலியாக்கப்பட்ட நிலைமையில் இந்தியப் பிரதமர்களான இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் முன் வந்து இலங்கை அரசையும் தமிழர்களின் பிரதிநிதிகளையும் அழைத்து அமைதிக்கு வழிவகுக்கும் உடன்பாடுகளைச் செய்தார்கள்.

  இலங்கைத் தமிழர்களுக்குப் பாதுகாப்புத் தரும் வகையில் தமிழர் பிரதிநிதிகளுக்கும் போராளிகளுக்கும் இந்தியா பல வகைகளில் உதவிகளைச் செய்தது. ராஜீவ் காந்தியின் கோரமான படுகொலைக்குப் பிறகு இந்தியாவின் போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டு போராளிகளை அடக்குவதற்கு இலங்கை அரசுக்கு மிகவும் தேவைப்பட்ட ராணுவத் தளவாடங்கள், படைவீரர்கள் பயிற்சி, ரேடார் போன்ற நவீன போர் உபகரணங்களை இந்தியா தந்தது. காலப்போக்கில் இந்தியா தந்த இந்த ராணுவ உதவிகள் போராளிகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்பட்டதைவிட அதிகமான அளவுக்கு இலங்கையில் உள்ள தமிழினத்தை அடக்கவும் அச்சுறுத்தவும் இடம் விட்டு இடம் விரட்டியடிக்கவும் கொடுமையான இன அழிவுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

  இந்துமாக்கடலில் இந்தியாவுக்கு இருந்துவந்த முக்கியத்துவத்தை அகற்றும் வகையில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் நேரிடையாக இலங்கைக்கு ராணுவ உதவிகளையும் நிதிவசதிகளையும் தர முற்பட்டன. கடல்வழி ஆதிக்கத்தில் புதிய போட்டிகள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில், இலங்கை அரசுக்கு இணக்கமான போக்கில் இந்தியா தனது வெளியுறவு நடைமுறையை அமைத்துக் கொள்கிறதே தவிர, இலங்கைத் தமிழரின் நிலைமையைப் பற்றியோ, தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை முன்வைத்தோ, தமிழ்நாட்டு முதல்வர், இந்திய அரசியல் கட்சிகள் தரும் வேண்டுகோள்களுக்கு மதிப்பளித்தோ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தந்த வாக்குறுதிகளுக்கு எத்தகைய பலனும் கிடைக்கவில்லை.

  அண்மையில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு மத்திய அரசாங்கத்தில் காங்கிரஸ் கட்சியும், பத்திரிகை ஆய்வாளர்களும் எதிர்பார்த்த இடங்களைவிட அதிகமான இடங்களைப் பெற்று, மிகுந்த வலிவுடன், பொலிவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்திருப்பதால், உள்நாட்டில் மாநிலக் கட்சிகளுக்கும், பிரதேச உணர்வுகளுக்கும் முன்பு தந்த அளவுக்கு மதிப்புத் தர வேண்டிய கட்டாயம் குறைந்திருக்கிறது. ஆனால், அதேசமயம் வெளியுறவுக் கொள்கையில் அண்டை நாடுகளைக் கட்டுப்படுத்தும் வலிவும், தெளிவும் இந்திய அரசுக்குக் குறைந்திருக்கிறது என்றே கூற வேண்டும்.

  "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்' என்று குறள் கூறுகிறது.

 அதேபோல், தமிழ்நாட்டு மக்களுக்கு இதுவரை மத்திய அரசு தந்த வாக்குறுதிகளின்படி உரிய காலத்தில் தக்க வலிவுடன் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிய இந்திய அரசும், வெளிநாட்டு தீய சக்திகளின் எரிமுன்னர் தனது ஆட்சியின் வலிவை அழித்துக் கொள்வதுடன், இந்திய மக்களின் உரிமைகளையும், வாழ்வையும் சீரழித்துவிடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.