பெற்றோர் இல்லாத பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள்!
கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என அரசு ஆண்டுதோறும் எச்சரிக்கை விடுக்கிறது. ஆனால் நன்கொடை வசூலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தனியார் கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல.


கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என அரசு ஆண்டுதோறும் எச்சரிக்கை விடுக்கிறது. ஆனால் நன்கொடை வசூலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
தனியார் கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல. அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையின்போது பெற்றோர்-ஆசிரியர் கழகங்களின் மூலம் நன்கொடை வசூலிக்கப்படுகிறது. ஆனால் இவற்றைக் கட்டுப்படுத்த கல்வித் துறையால் முடியவில்லை.
ஏழை, எளிய மாணவர்களிடம் கூட அரசுப் பள்ளிகளில் பாரபட்சம் இன்றி நன்கொடை வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து புகார்கள் அளிக்கப்பட்டாலும், பெற்றோர்- ஆசிரியர் கழகங்களின் மீது கல்வித் துறையால் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.
பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகளாக அரசியல் கட்சிகளின் உள்ளூர் பிரமுகர்களே பொறுப்பில் உள்ளனர். ஆட்சிகள் மாறும்போது ஆளும்கட்சிப் பிரமுகர்களே பெற்றோர்-ஆசிரியர் கழகங்களின் தலைவர்களாகவும், முக்கிய நிர்வாகிகளாகவும் இடம்பிடித்து விடுகின்றனர்.
சில பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவராக ஆளும்கட்சியின் நகரச் செயலர் அல்லது உள்ளூர் எம்.எல்.ஏ.வே பொறுப்பு வகிக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டமே உள்ளது. இதனால் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நன்கொடை வசூலில் ஈடுபடுகின்றனர்.
"காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தாற்காலிகமாக ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு சம்பளம் வழங்கவே நன்கொடை வசூலிக்கிறோம்' என பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் தரப்பில் கூறப்படுகிறது. உண்மையில் ஆண்டுக்கு சில ஆசிரியர்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் சம்பளம் வழங்க, லட்சக்கணக்கில் பணம் திரட்டப்படுகிறது.
பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் இரு வேறு கணக்குகளை தங்கள் வசம் வைத்துள்ளன. அதாவது ஒவ்வொரு மாணவரிடமும் ஆண்டு சந்தா கட்டணமாக ரூ.5 வசூலித்துக் கொள்ளலாம் என்பது அரசின் விதி. இதன்மூலம் திரட்டப்படும் பணம் முறையாக கல்வித் துறைக்கு கணக்கு காட்டப்படும். ஆனால் நன்கொடை மூலம் சேகரிக்கப்பட்ட பணம் தனியே பராமரிக்கப்படுகிறது. இக்கணக்கு கல்வித் துறைக்குக் காட்டப்படுவதில்லை.
தாற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதைத் தவிர, மீதமுள்ள பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது? யாருக்கு வழங்கப்படுகிறது? என்ற விவரம் பெற்றோர்- ஆசிரியர் கழக உறுப்பினர்களுக்குக் கூட தெரியப்படுத்தப்படுவதில்லை.
ஏனென்றால் ஆண்டுதோறும் பெற்றோர்-ஆசிரியர் கழகங்களின் பொதுக்குழுக் கூட்டம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்வு என்ற விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. பல ஆண்டுகளாக சிலரே தொடர்ந்து பொறுப்புகளில் வகித்து வருவதும் நடந்து வருகிறது.
சில பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகளே கட்டடக் குழு, பள்ளி வளர்ச்சிக் குழு என்ற துணை அமைப்புகளை ஏற்படுத்தி அதன் மூலமும் நன்கொடை வசூலில் ஈடுபடுகின்றனர்.
தங்களது உறவினர்களையும், நண்பர்களையும் பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலம் தாற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கவும் செய்கின்றனர். முறையாக விண்ணப்பங்கள் பெற்று நேர்காணல் நடத்தி தேர்வு செய்யப்படுவதெல்லாம் கிடையாது.
அரசியல் பின்னணியுடன் பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் இருப்பதால், பள்ளித் தலைமை ஆசிரியர்களும் அவர்களிடம் அச்சப்படுவதாகவே தெரிகிறது.
பள்ளிகளில் அரசியல் பின்னணியுடன் பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் செயல்படுகின்றன. ஆளும்கட்சியினரும், முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்களும் பொறுப்பில் இருப்பதால் கல்வித் துறையும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது.
இவ்வாறு செயல்படும் பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் மீது அரசு தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியாளர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தொண்டு நிறுவனத்தினர், சமூக சேவை அமைப்பினர், மகளிர் அமைப்பினர் உள்ளிட்டோரைக் கொண்டு பெற்றோர்-ஆசிரியர் கழகங்களை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டுதோறும் முறையாக பொதுக்குழுக் கூட்டங்கள், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்தல் என முறைப்படி பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் செயல்பட வேண்டும். அரசியல், சாதி பின்னணியுடன் கூடியவர்களைப் பொறுப்பில் அமர்த்தாமல் அப்பள்ளியில் பயிலும் மாணவரின் பெற்றோர்களே பொறுப்புகளில் அமர வைக்கப்பட வேண்டும்.
பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் செம்மையான முறையில் நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...