புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இதுவா ஓய்வூதியத் திட்டம்?

ஓய்வூதிய நிதி ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம் அண்மையில் புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்தப் புதிய திட்டத்தில் சேர முடியும். இதன் மூலம் குறைந்தபட்ச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:48 pm

பிஎஸ்எம் ராவ்

ஓய்வூதிய நிதி ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம் அண்மையில் புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்தப் புதிய திட்டத்தில் சேர முடியும். இதன் மூலம் குறைந்தபட்ச வருவாய் உடையவர்கள் கூட வயதான காலத்தில் ஓய்வூதியம் பெற முடியும். அரசே இந்த நம்பிக்கையை அளித்திருக்கிறது. ஆனால், திட்டத்தை முழுமையாக அலசி ஆராய்ந்தால், பொதுமக்களுக்கு நன்மையளிப்பதற்குப் பதிலாக, அவர்களின் வருவாயை சுரண்டுவதற்கு வாய்ப்பளிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருப்பது தெரியவருகிறது.

18 முதல் 55 வயதுடைய எவரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேரலாம். தங்களது தகுதிக்குத் தக்கபடி ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரத்துக்குக் குறையாமல் எவ்வளவு வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். மாதாந்திர, காலாண்டு, அரையாண்டுத் தவணை வசதியும் உண்டு. இதையும் அவரவர் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம். இப்படி பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பு ஐசிஐசிஐ புருடென்ஷியல், ஐடிஎஃப்சி, கோடக் மஹிந்த்ரா, ரிலையன்ஸ் கேபிடல், எஸ்பிஐ, யுடிஐ ஆகிய 6 தனியார் ஓய்வூதிய நிதி மேலாண்மை அமைப்புகளிடம் விடப்பட்டிருக்கிறது. திரட்டப்படும் பணத்தை பல்வேறு வகையில் முதலீடு செய்து நிதியைப் பெருக்க வேண்டியது இந்த அமைப்புகளின் பொறுப்பு. இ,ஜி,சி ஆகிய 3 வகையான பிரிவுகளில்தான் பொதுமக்களின் பணம் முதலீடு செய்யப்பட வேண்டும். 30 நிறுவனங்களைக் கொண்ட மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 50 நிறுவனங்களைக் கொண்ட தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி ஆகியவை "இ' பிரிவைச் சேர்ந்தவை. மத்திய மற்றும் மாநில அரசுகளால் வெளியிடப்படும் கடன் பத்திரங்கள் "ஜி' பிரிவின் கீழ் வரும். அரசு அல்லாத நிறுவனங்களால் வெளியிடப்படும் கடன் பத்திரங்கள், பரஸ்பர நிதி, வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி போன்றவற்றைக் கொண்டது "சி' பிரிவு.

ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்தவருக்குத் திரும்பக் கிடைக்கும் தொகையானது, முதலீடு செய்யும் பங்குகளும், பத்திரங்களும் அடையும் லாப, நஷ்டத்தைப் பொருத்து மாறுபடும். முதலீட்டுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதைப் போல, திரும்பப்பெறும் முழுத் தொகைக்கு வரி விலக்கு கிடையாது. சேமிப்பும், சேமிப்பு மூலம் கிடைத்த லாபத்தையும் கூட்டி அதிலிருந்து வரி, அபராதம் ஆகியவற்றைக் கழித்தால் கிடைக்கும் தொகைதான் முதலீட்டாளருக்குத் திரும்பக் கிடைக்கும். அரசிடமிருந்து வேறு எந்த கூடுதல் பணமும் கிடைக்காது. அதேபோல், இவ்வளவு முதலீடு செய்தால் இத்தனை ஆண்டு முடிவில் இவ்வளவு தொகை உறுதியாகக் கிடைக்கும் என்ற வரைமுறையும் கிடையாது. அப்படி ஏதாவது மதிப்புகள் தரப்பட்டிருந்தால், அவையனைத்துமே ஊகங்கள்தான். அதாவது, வரைமுறை செய்யப்பட்ட முதலீடு; வரைமுறை செய்யப்படாத வருவாய். இதுதான் புதிய ஓய்வூதியத் திட்டம்.

வேறொரு வடிவில், இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ரூ. 65 ஆயிரம் கோடியை மத்திய, மாநில அரசுகள் ஓய்வூதியத்துக்காகச் செலவிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் 20 சதவீதம் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. 1995-ல் இருந்து 2000-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஓய்வூதியச் செலவு இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதை உலக வங்கி சுட்டிக் காட்டியிருக்கிறது.

இந்தச் சுமையைக் குறைப்பதற்காகத்தான் புதிய ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். பெரும்பாலான மாநில அரசுகளும் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, தங்களது மாநில அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்தியிருக்கின்றன. இந்தத் திட்டப்படி, அரசு ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்தில் 10 சதவீதத்தை ஓய்வூதியத்துக்காகச் செலுத்த வேண்டும். அதே அளவுத் தொகையை அரசும் செலுத்தும். சந்தை நிலவரத்தைப் பொருத்து, அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பயன்கள் கிடைக்கும். எதுவும் உறுதியானதல்ல.

இதே திட்டம்தான், அரசின் பங்களிப்பு ஏதும் இல்லாமல், குடிமக்கள் அனைவருக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 1999-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட "ஓயாசிஸ்' என்கிற "முதியோருக்கான சமூக மற்றும் வருவாய்ப் பாதுகாப்பு' திட்ட அறிக்கை, 2001-ம் ஆண்டில் காப்பீட்டு ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட "அமைப்புசாரத் துறையில் ஓய்வூதியச் சீரமைப்பு' தொடர்பான அறிக்கை, 2002-ம் ஆண்டில் வெளியான பி.கே.பட்டாச்சாரியா அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே புதிய ஓய்வூதியத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் வழங்குவதால் ஏற்படும் நிதிச் சுமையைக் குறைப்பதுடன், மற்றவர்களையும் ஓய்வூதியத் திட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும் என அரசு விரும்பியது. இதுபோன்ற திட்டம் இல்லாவிட்டால், வயதான காலத்தில் மக்கள் சிரமப்பட நேரிடும் எனவும் அரசு நினைத்தது.  இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட 8 கோடி பேர் இருக்கின்றனர். உலகில் வசிக்கும் மூத்த குடிமக்களில் இது 12.5 சதவீதமாகும். இன்னும் 20 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து கொண்டிருப்பதாலும், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாலும் கவனிப்பதற்கு ஆளில்லாமல் வயதானவர்கள் தனித்து விடப்படும் நிலை உருவாகிறது. 1991-ல் சேகரிக்கப்பட்ட ஓயாசிஸ் தகவல்களின்படி நாட்டில் வேலை செய்யும் பிரிவினரில் 15 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தரமான சம்பளத்தைப் பெறுபவர்கள். 53 சதவீதம்பேர் சுயவேலை செய்வோராகவும், 32 சதவீதம்பேர் தினக்கூலிகளாகவும் இருக்கின்றனர் என மதிப்பிடப்பட்டது. இந்த நிலை இப்போது இன்னும் மோசமாகியிருக்கிறது. தற்போதைய மதிப்பீட்டின்படி, 88 சதவீதம் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் பெறும் வாய்ப்பே இல்லை.

இந்தப் புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், சமூகப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வயதானவர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பது அவசியம். ஆனால், இப்போது அரசு அறிவித்திருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் இந்த நோக்கம் நிறைவேறுவதற்கு வாய்ப்பே இல்லை. மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்ளவே இந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்கள் சுரண்டி லாபமடைவதற்கும் வசதியாகியிருக்கிறது.

2001-ம் ஆண்டு அரசு நியமித்த நிபுணர்குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி, 2025 ஆண்டில் ஓய்வூதியச் சேமிப்பு ரூ.4,064 கோடியாக உயரும் என்றும், ஒட்டுமொத்தச் சேமிப்பு உள்நாட்டு உற்பத்தியில் 35 சதவீதமாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டது. இந்தப் பணத்தின் மீதுதான் தனியார் ஓய்வூதிய நிறுவனங்கள் கண் வைத்திருக்கின்றன. மற்றபடி, மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கப் போகிறோம் என்று கூறுவதெல்லாம் வெறும் கண்துடைப்பு. இவையெல்லாம் முதலீட்டுத் திட்டங்களேயன்றி, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகாது என 2001-ல் ஓயாசிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய பொழுதைக் கழிப்பதற்குக்கூட வருவாய் இல்லாத மக்கள் எதிர்காலத்துக்காகச் சேமிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது எப்படி சாத்தியமாகும்? அதுவும், நாள்தோறும் தடுமாறிக் கொண்டிருக்கும் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்ட, இதுபோன்ற சிக்கலான திட்டங்களில் முதலீடு செய்வது மக்களுக்கு ஏமாற்றத்தைத்தான் அளிக்கும். ஆக, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் பெயரில் மட்டும்தான் சமூகப் பாதுகாப்பு இருக்கிறது. மற்றபடி, அரசின் நிதிச்சுமை குறைவதற்கும், தனியார்கள் லாபமடைவதற்குமே இந்தத் திட்டம் பயன்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.