ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜெய் ஹோ இந்தியா!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது தேசிய முழக்கமாக ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மானின் "ஜெய் ஹோ இந்தியா!' என்கிற பாடலைத்தான் பயன்படுத்தியது காங்கிரஸ் கட்சி. "ஜெய் ஹோ' என்றால் வெற்றி கிடைக்கட்டும் என்ற

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:07 pm

மை.பா. நாராயணன்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது தேசிய முழக்கமாக ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மானின் "ஜெய் ஹோ இந்தியா!' என்கிற பாடலைத்தான் பயன்படுத்தியது காங்கிரஸ் கட்சி. "ஜெய் ஹோ' என்றால் வெற்றி கிடைக்கட்டும் என்று அர்த்தம். ஆனால், தற்போது இந்தியாவின் எல்லை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பைப் பொறுத்தவரை வெற்றி கிடைப்பது இருக்கட்டும், தோல்வி அல்லவா நம்மைத் துரத்திக் கொண்டு இருக்கிறது.

  முதலில் பாகிஸ்தானிலிருந்து தொடங்குவோம். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதற்கு ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள், கொடும்பாவி கொளுத்துகிறார்கள். அது வெறும் விளையாட்டு. விளையாட்டில் தோற்பதும் ஜெயிப்பதும் சகஜம். அதற்கான மனோபாவத்துக்கு மக்கள் பக்குவப்பட வேண்டும். விளையாட்டில் தோல்வி அடைந்ததற்காக வருத்தப்படலாம். கோபப்படலாகாது.

  ஆனால், தேசியப் பாதுகாப்பு என்பது விளையாட்டு அல்ல. அது ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் வாழ்வாதாரத்தோடு பின்னிப் பிணைந்த விஷயம். ஆனால், அதைப் பிரதமரும், உள்துறை அமைச்சகமும் விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்களே என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

  நவம்பர் - 26 மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல் என்பது இந்திய இறையாண்மை, பாதுகாப்பு மீதான வரலாற்றுக்கரை. அந்தத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட நபர் ஜமாத்-உத்-தவா என்ற அமைப்பின் தலைவர் சயீத், தற்போது பாகிஸ்தானில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அது மும்பைத் தாக்குதல் குற்றச்சாட்டுக்காக அல்ல, அங்கே நடந்த வேறு ஒரு பிரச்னைக்காக. அதாவது மாமன் மச்சான் தகராறுக்காக.

  சமீபத்தில் இதைப் பற்றிய ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், "சயீத்தை பாகிஸ்தானில் வைத்து பாகிஸ்தானே விசாரிக்க வேண்டும்'. மும்பைத் தாக்குதலுக்கான ஆதாரங்களைத் திரட்டி இந்தியாவிடம் தரவேண்டும்... என்று பதில் அளித்திருக்கிறார். இது எப்படியிருக்கிறது என்றால் "பின்லேடனைப் பிடித்து ஆஃப்கானிஸ்தானிலேயே வைத்து தலிபான்கள் விசாரிக்க வேண்டும். செப்டம்பர் 11 - தாக்குதலுக்கான ஆதாரத்தைத் திரட்டி அமெரிக்காவிடம் தரவேண்டும்' என அமெரிக்க அரசு தலிபான்களிடம் வேண்டுகோள் வைத்தால் எப்படி இருக்கும்...? உள்துறை அமைச்சரா இப்படிப் பேசுவது?

  கராச்சியிலிருந்து கடல் மார்க்கமாக ஊடுருவிய தீவிரவாதிகளால்தான் மும்பைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தக் கொடூரத்திலிருந்து பாடம் கற்ற பிறகு, சதிவலையின் கண்ணிகளை அறிந்துணர்ந்த பிறகு, தேசத்தின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எப்படி இருக்கிறது? காஷ்மீரில் இந்திய எல்லைக்குள்பட்ட கிராமங்களில் பாகிஸ்தானின் ராக்கெட் லாஞ்சர்கள் வந்து விழுந்து அச்சுறுத்துவது வாடிக்கையாகிவிட்டது.

  நமது நாட்டின் எல்லையோரங்களில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்தி நம் ராணுவத்தின் கவனத்தைக் கலைக்கிறது பாகிஸ்தான். அந்தத் துப்பாக்கிச் சூடு நடக்கிற இடைவெளிகளைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவுகிறார்கள் என்று வருகிற செய்திகள் நமது பாதுகாப்பின் மீது பயத்தின் விஷ விதைகளை விதைக்கின்றன.

  இந்தியாவைக் குறிவைக்கிற பல பயங்கரவாதக் குழுக்களின் "நெட்வொர்க்'கிற்கு தலைமையிடம் - மறைவிடம் எல்லாமே பாகிஸ்தான்தான். ஆனால் பாகிஸ்தான் அரசிடம், "வேண்டுகோள்', "எச்சரிக்கை', "நிபந்தனை' என மாறி மாறி அறிக்கை விளையாட்டு நடத்துகிறார் பிரதமர். பாதுகாப்பு பேச்சுவார்த்தைகள் தோறும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறார். அவர்களும், "நீ அடிக்கிற மாதிரி அடி... நான் அழுகிற மாதிரி அழுகிறேன்' என அலட்சியப் போக்கிலேயே செயல்படுகிறார்கள்.

  அடுத்து சீனா. அமெரிக்காவே பயப்படுகிற அளவுக்கு இன்று வல்லரசாக வளர்ந்து வரும் சீனாவுக்கு வளத்திலும் பலத்திலும் அறிவிலும் ஆற்றலிலும் எந்த விதத்திலும் குறைவானதில்லை நம் நாடு. அதற்காக, சீனாவுடன் ஒரு நாளும் இந்தியா வம்பு சண்டைக்குப் போனதுமில்லை. முன்பு நடந்த எல்லைப்போருக்குப் பிறகு வரையறுக்கப்பட்ட எல்லைக்கோட்டை மீறி "ஆக்டோபஸ்' ஆக்கிரமிப்பில் ஈடுபடவுமில்லை.

  ஆனால், சீன நாடோ, காஷ்மீர், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் இந்தப் பகுதிகளை அத்துமீறி கையகப்படுத்தும் அதிகார வெறிச்செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்திய எல்லைக்குள்பட்ட இந்தப் பகுதிகளில் இதுவரை 1,500 கி.மீ. பரப்பளவு இடங்களை சீனா ஊடுருவி ஆக்கிரமித்திருக்கிறது என்ற செய்தி ஒவ்வோர் இந்தியனையும் அதிர வைத்து அச்சுறுத்துகிறது.

  இவ்வளவு நடந்தும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் எதிர் நடவடிக்கை என்ன? குறைந்தபட்சம் சீனாவின் வரம்பு மீறி அதிகார ஆக்கிரமிப்புப் பசியை சர்வதேச சமூகத்தில் வெளிச்சமிட எடுத்த நடவடிக்கைகள் தான் என்ன? பதிலாக பயமும் ஏமாற்றமுமே மிஞ்சுகிறது.

  இதையெல்லாம் தாண்டி உள்நாட்டுப் பயங்கரவாதத்தில் சிக்கித் தவிக்கும் மாநிலங்களும் மக்களும் தேசத்தின் தீராத சாபத்தை அனுபவிக்கிறார்கள். ஆந்திரத்தில் தொடங்கி வடகிழக்கு மாநிலங்கள் வரை நக்சலைட்டுகள் மாவோயிஸ்டுகள் நடத்தும் ஆயுத வேட்டையில் அனுதினமும் இந்திய வரைபடத்தில் ரத்தம் தெறிக்கிறது. நாட்டில் மூன்றில் ஒரு பங்கு மாவட்டங்களில் நக்சலைட்டுகள் மற்றும் தீவிரவாதிகளின் ஆதிக்கம் இருக்கிறது என்கிற புள்ளிவிவரம் எதிர்காலம் பற்றிய ஏகோபித்த அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

  ஜார்க்கண்ட், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், பிகார், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைக் குலைக்கிற, நிர்ணயிக்கிற சக்தியாக நக்சலைட்டுகள் மாறிப்போயிருக்கிறார்கள். நமது உள்துறை அமைச்சரோ, பாதுகாப்பு அமைச்சரோ, பிரதமரோ ஜார்க்கண்ட், அருணாச்சல பிரதேசத்துக்கோ போவதையே ஆச்சரியமான, சாகசமான நிகழ்வாகப் பேசுகிற அளவுக்கு ஆகிவிட்டிருக்கிறது நாட்டின் பாதுகாப்பு லட்சணம்.

  வடகிழக்கு மாநிலங்களில் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் பற்றிக் கேட்டால், அங்கெல்லாம் ராணுவம் அனுப்பப்பட மாட்டாது என்கிறார் உள்துறை அமைச்சர். "சட்டத்தை அமல்படுத்துவதோடு... அந்தப் பகுதி மக்களின் வளர்ச்சிக்கும் வழிவகை செய்ய வேண்டும்' என்கிறார் பிரதமர். எல்லாம் சரி... எப்போது செய்யப்போகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியுமா என்பது தெரியவில்லை.

  அறிவிப்பதற்கும், ஆறப்போடுவதற்கும், சமாளிப்பதற்கும் இது தேர்தல் வாக்குறுதியோ, அரசுத் திட்டங்களோ அல்ல. நாட்டின் அடிப்படை ஆதாரப் பாதுகாப்பு விஷயம். உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தைப் பொறுத்தவரை பாகிஸ்தான், சீனா, நக்சலைட்டுகள் விஷயத்தில் அவர் காட்டுகிற மெத்தனப் போக்கைக்கூட விடுங்கள்... அவரது சிவகங்கைத் தொகுதியிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கிற ராமேஸ்வரம் மீனவர்களின் துயரம் துடைக்கக்கூட உறுதி காட்டாத செயல்பாடுதான் உறுத்தலின் உச்சம். இந்த விஷயத்தில் இலங்கை அரசை எதிர்த்து துணிகர நடவடிக்கையில் ஈடுபடாததற்குக் காரணம் என்ன? தமிழக மீனவர்கள் இந்திய ஜனநாயகத்தின் சவலைப் பிள்ளைகளா? அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால், கண்ணீரைத் துடைக்காவிட்டால் தேசிய இறையாண்மையை எப்படிக் கட்டிக் காக்க முடியும்?

  இந்த நேரத்தில் தேசப்பாதுகாப்புக்கே பேரிடியாக அசாம் மாநிலத்தைச் சுற்றிலும் இருக்கிற 1500 காபித் தோட்டங்களை, நமக்குப் பக்கத்தில் தீப்பெட்டி சைஸில் இருக்கிற வங்கதேசம் பிடித்து வைத்திருக்கிறது என்கிற அதிர்ச்சியான செய்தி வருகிறது. பாகிஸ்தானிடமிருந்து இதே வங்கதேசத்தை மீட்டு உயிர் கொடுத்த இந்திராகாந்தி இன்று இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? இப்படி நாலுபுறங்களிலும் அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் சூழ்ந்துள்ள இந்த நிலையில்தான் வல்லபாய் படேல், இந்திரா காந்தி போன்ற மகத்தான தலைவர்களின் அருமை புரிகிறது. அவர்களைப்போல ஒரு தலைவர் இருந்தால்... அப்படி ஒரு தலைமையைத் தாருங்கள் என்றுதான் ஆட்சியாளர்களை மன்றாடிக் கேட்க வேண்டியிருக்கிறது.

  மறுபடி "ஜெய் ஹோ'வுக்கே வருவோம். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அண்டை நாடுகளும் தீயசக்திகளும் இந்தியப் பாதுகாப்பு அரண்களைத் தாண்டி ஊடுருவி முன்னேறுவதுதான் இப்போது நடக்கிறது. நிஜமான மகிழ்வோடும், பாதுகாப்பு உணர்வோடும் நம் மக்கள் எப்போது பயமின்றி மகிழ்ச்சியாக இருக்கப் போகிறார்கள்...

  ஜெய் ஹோ இந்தியா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.