ஒவ்வொரு திங்கள்கிழமையும் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும், அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும், மாதம்தோறும் ஒரு நாளில் ஓய்வூதியர்களுக்கு குறை தீர்க்கும் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இவற்றுடன் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் அலுவலரும் தனித்தனியே கிராமங்களுக்குச் சென்று மனுநீதி நாள் முகாம்களையும் ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகின்றனர்.
இதைப்போல, உடல் ஊனமுற்றோர், அரவானிகளுக்கெனத் தனியாக குறைகேட்பு, முன்னாள் ராணுவத்தினரிடம் குறைகேட்பு. இவை அனைத்தையும் கூர்ந்து கவனித்துப் பட்டியலிட்டால் மக்களின் வாழ்நிலை நம்மை மிகவும் வருத்தத்துக்குள்ளாக்கும்.
இவையனைத்தையும் தாண்டி முதல்வர் அலுவலகத்தில் "முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு' ஒன்றும் இயங்கி வருகிறது. இங்கிருந்து நடவடிக்கை கோரி அனுப்பிவைக்கப்படும் மனுக்களின் தற்போதைய நிலை குறித்து வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் கூட்டத்திலேயே மாவட்ட ஆட்சியர் ஆய்வும் செய்கிறார்.
இப்போது, காவல் துறை அலுவலர்களும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைகேட்கத் தொடங்கியிருக்கின்றனர். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள அமைச்சர்களும் வார்டு வாரியாக குறைகேட்டு வருகின்றனர்; இங்கெல்லாமும் ஆயிரக்கணக்கில் மனுக்கள் குவிகின்றன.
இவையன்றி, முக்கியப் பிரமுகர்கள் யார் தெருவுக்குள் வந்தாலும் கோரிக்கை மனு கொடுப்பதும், மேடையில் கோரிக்கை குறித்துப் பேசுவதும், முற்றுகையிடுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.
எத்தனை முகாம்கள், எத்தனை வேறு பெயர்களில் நடத்தினாலும் கூட்டம் கூடுவதற்கு, மனுக்கள் குவிவதற்கு இரு காரணங்கள் இருக்கக் கூடும். முதலாவது காரணம்- மக்களின் குறைகளை நம்மால் கேட்கத்தான் முடிகிறதே தவிர, தீர்க்க முடியவில்லை என்பது.
இரண்டாவது காரணம்- மக்களும் தங்களின் அடக்க முடியாத ஆசைகளுடன் ஏதாவது கிடைத்தால் பரவாயில்லை என்று முட்டி மோதுகின்றனர்.
பொதுமக்கள் தரப்பில் கேட்டால் முதல் காரணத்தை வழிமொழிவார்கள். அதிகாரிகள் தரப்பில் கேட்டால் இரண்டாவது காரணத்தை வழிமொழிவார்கள்.
இந்தக் காரணங்களில் வழியில் ஆய்வு செய்தால், எது சரி என்பதற்கான விடை கிடைக்கிறதோ இல்லையோ, ஒரு சில அதிர்ச்சிகரமான உண்மைகள் நமக்குப் புலப்படும். முன்பைவிடவும், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதையும்விட முக்கியமானது, மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை என்பதுதான்.
பணிச்சுமை அதிகரிக்க அதிகரிக்க, மறைமுகமாக ஒரு வழியில் லஞ்சமும், ஊழலும், எதேச்சாதிகாரப் போக்கும் "ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரோடி' வளர்ந்து விடுகிறது.
இதனாலேயே, ஒரு முறை போடப்படும் எந்தச் சாலையும், கட்டப்படும் சாக்கடையும், கட்டடங்களும் பல ஆண்டுகளுக்கும் பலன் தருபவையாக நீடித்து நிலைப்பதில்லை. மீண்டும் மீண்டும் அந்தப் பகுதிகளில் இருந்து கோரிக்கை மனுக்கள் வருவது தவிர்க்க முடியாததுதான்.
இதேநிலைதான் காவல் நிலையங்களிலும். சாதாரண அடிதடி வழக்கைக்கூட முழுமையாக விசாரிக்க முடியாத நிலை அங்குள்ள குறைந்த எண்ணிக்கையிலான காவலர்களுக்கு. "நாளை காலை 11 மணிக்கு வா, நாளைக்கு வா' என்று ஒரு மனுவுக்காக ஒவ்வொரு நாளுமாக அலைந்து திரும்புவது சென்று வந்தவர்களால் மட்டுமே உணர முடியும்.
இதனாலேயே உடனடித் தீர்வு என்பதெல்லாம், ஆட்சியில் உள்ளவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே. இதுதான் வெளியே செய்தியாகப் பிரபலமாக்கப்படுகிறது.
அடுத்து, "சான்றிதழ்களை'ப் பெறுவதுதான் மனுக்களிலேயே அதிகமானது. வட்டாட்சியர் அலுவலகங்களில் எந்த நேரத்திலும் இருக்கும் கணிசமான கூட்டம் எதற்காகவாவது சான்றிதழ் பெறத்தான். பள்ளிகளிலேயே சாதிச் சான்று, வருமானச் சான்று என அரசு புதிது புதிதாக அறிவித்தாலும் எதுவும் முழுமையாகச் செயலுக்கு வந்ததாகத் தெரியவில்லை.
இன்னொரு முக்கியமான ஓர் அம்சம். இலவசம், சான்று என எதற்காகச் சென்றாலும், அந்த மனுவுடன் சேர்த்து அளிக்க வேண்டிய அல்லது அந்த மனுவிலேயே சான்றொப்பம் பெற வேண்டிய நிலையிலுள்ள "பலரது' அத்தாட்சிகள்.
குறைந்தபட்சம் எல்லாவற்றுக்கும் சாதிச் சான்று, குடியிருப்புச் சான்று, வருமானச் சான்று, பிறப்புச் சான்று அவசியம். ஒவ்வொரு சான்றுக்கும் அலைந்து திரிந்து இறுதியாக வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் செல்வதைவிட, அமைச்சரிடமே கொடுத்துவிட்டால்... சுலபமாகக் கிட்டிவிடும் என்ற எண்ணமும் பெரும்பாலானோருக்கு இருக்கிறது.
இப்படி நுட்பமான பிரச்னைகள் ஏராளம். இதையெல்லாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து தீர்ப்பதற்கான வழிமுறைகளைச் செய்யாமல், குறை தீர்க்கும் கூட்டங்களை இன்னும் வெவ்வேறு வடிவங்களில் நடத்துவது, வண்ணமயமாக நடத்துவது எதுவும் நிரந்தரத் தீர்வைத் தந்துவிடாது.
ஏனென்றால், இவ்வாறாக நடத்தப்படும் முகாம்களில் பெறப்படும் மனுக்களில் 40 சத மனுக்கள் நிராகரிக்கப்படுபவை. எது சரியென்றும், எது சரியான வழியென்றும் தெரியாமல் மீண்டும் மீண்டும் மனு அளித்துக் கொண்டே இருப்பார்கள். எப்படித் தீர்வு கிட்டும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.