முணுமுணுப்புகள் முழக்கமாகும் முன்...

நாடு பொருளாதாரத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது; ஆனால் பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத்தரம் தாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது வேடிக்கையாக இல்லையா? நமது நாட்டின் உண்மைநிலை இதுதான். இங்கே கிராமவாசியும் உயரவி
Updated on
3 min read

நாடு பொருளாதாரத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது; ஆனால் பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத்தரம் தாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது வேடிக்கையாக இல்லையா? நமது நாட்டின் உண்மைநிலை இதுதான். இங்கே கிராமவாசியும் உயரவில்லை; நகரவாசியும் உயரவில்லை; விலைவாசிகள் மட்டுமே கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கின்றன.

இதைக் குடியரசுத் தலைவரும், பிரதமரும் மறுக்கவில்லை. குறைவதற்காக நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த விலைவாசியைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குவது ஏனோ?

குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பட்ஜெட் தொடரின் கூட்டுக் கூட்டத்தில் கீழ்கண்டவாறு பேசியுள்ளார்: ""உணவுப் பொருள்களின் விலை கடுமையாக அதிகரித்து அதனால் சமூகத்தின் அடித்தட்டு மக்களும், ஏழைகளும், நடுத்தர மக்களும் வெகுவாகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது உண்மைதான். இவர்களுக்கு நிவாரணம் கிடைக்க, விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். எந்த நிலையிலும் யாரும் பட்டினியால் மடியக் கூடாது என்ற நோக்கத்துடன் உணவுக்கு உத்தரவாதம் தர வகைசெய்யும் சட்டம் கொண்டு வரப்படும்...''

பிரதமர் மன்மோகன் சிங்கும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பேசும்போது, ""விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இருக்கிறது...'' என்று உறுதி கூறியுள்ளார். நாடும், மக்களும் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால் நடந்தது என்ன?

இந்த உறுதிமொழிகளுக்குப் பிறகுதான் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் மீது வரியை விதித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயரும் என்பது இவர்களுக்குத் தெரியாதா? இதுபற்றி எதிர்க்கட்சிகள் முறையிட்டும் ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. "இதுதான் விலைவாசியைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையா?' என்று பொதுமக்கள் கேட்கின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது; புதிய வரி விதிப்புகள் இல்லாமல் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க இயலாது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 விழுக்காட்டிலிருந்து 8.5 விழுக்காடாக உயர வேண்டுமெனில் அதற்குச் சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்; இந்த இலக்கை எட்ட வேண்டுமெனில் வரிவிதிப்பு தவிர்க்க முடியாதது என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார். பிறகு எப்படி விலைவாசியைக் குறைக்கப் போகிறார்?

நாடெங்கும் விலைவாசி உயர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் கிளம்பவே, அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களின் மாநாட்டை பிரதமர் கூட்டினார். அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையைக் குறைப்பது தொடர்பாக ஆலோசனை தெரிவிக்க மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கொண்ட உயர்நிலைக்குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இப்போது விலைவாசி உயர்வுக்கு, மத்திய அரசு மாநில அரசுகளின்மேல் பழிபோடுவதும், மாநில அரசுகள் மத்திய அரசைக் குறை கூறுவதும் வழக்கமாகிவிட்டது. அத்துடன் மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் விலைவாசி உயர்வுக்கும், தமது அமைச்சகத்துக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார். அடுத்து, "கஷ்டகாலம் முடிந்துவிட்டது. இப்போது சர்க்கரை, பருப்பு, காய்கறிகளின் விலைகள் குறையத் தொடங்கிவிட்டன' என்று அவர் கூறியதும் எதிர்க்கட்சியினர் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருள்களுக்குக் கட்டுபடியான விலை கிடைக்கவில்லை என்று வருந்துகின்றனர். அதேநேரத்தில் சந்தையில் அப்பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது? இடைத்தரகர்களின் ஆதிக்கம்தான் இதற்குக் காரணம் என்பது அரசுக்குத் தெரியாதா?

""விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு கொள்முதல் செய்யும் நெல், கோதுமை, கரும்பு ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைக் கணிசமாக உயர்த்தியது. இந்தப் பலன் சிறு, குறு விவசாயிகளைச் சென்றடைகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது...'' என்று பொருளாதார ஆய்வறிக்கை 2009-10 கூறுகிறது.

5 ஹெக்டேருக்கும் குறைவான நிலப்பரப்பைக் கொண்ட விவசாயிகள் சிறு, குறு விவசாயிகளாகக் கருதப்படுகின்றனர். நாட்டில் மொத்தமுள்ள 60 கோடி விவசாயிகளில் இத்தகைய பிரிவினரின் எண்ணிக்கை 80 விழுக்காடாகும்.

வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்காக கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாகக் கூறப்பட்டது. கொள்முதல் விலை உயர்வே விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்று இப்போது கூறப்படுகிறது. விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கும்போது நுகர்வோரின் நலனையும் காப்பது அரசின் கடமையாகும்.

""வேளாண் உற்பத்திப் பொருள்கள் மண்டியிலிருந்து சமையலறைக்குள் செல்வதற்குள் விலை அதிக அளவு அதிகரித்து விடுவதே இப்போது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இந்த இடைவெளியில் பொருள்களின் விலை அதிக அளவு உயர்த்தப்படுகிறது. இதனைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்...'' என்று மக்களவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விலைவாசி உயர்வு பற்றிய விவாதத்தில் தெரிவித்துள்ளார்.

வரலாறு காணாத அளவுக்கு விலைவாசிகள் உயர்ந்ததற்கு உணவுப் பொருள் ஏற்றுமதி, இறக்குமதியில் நடைபெற்ற ஊழலே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. தன் தவறுகளை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் அடுத்தவர்மேல் பழி போடும்போக்கே அதிகரித்துள்ளது. சர்க்கரை ஏற்றுமதி இறக்குமதியில் நடந்துள்ள ஊழல் பற்றி நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும். விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலனைப் பலி கொடுத்து, சர்க்கரை ஆலை முதலாளிகள் லாபம் அடையும் வகையில் அரசின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக இடதுசாரிகள் கூறியுள்ளனர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முக்கிய கட்சியான காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் "உணவுப் பாதுகாப்புச் சட்டம்' கொண்டு வருவதாகக் கூறியிருந்தது. இதன்படி வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தினருக்கு மாதம்தோறும் 25 கிலோ கோதுமை அல்லது அரிசி கிலோ ரூ. 3-க்கு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இன்றுவரை மத்திய அரசு இதனைச் செயல்படுத்தவில்லை.

நாட்டில் உணவுப் பண்டங்கள் தொடர்பான பணவீக்கம் முன்எப்போதும் இல்லாத அளவாக 20 விழுக்காட்டை நெருங்கியுள்ளது. இதற்குக் காரணம் ஊக வணிகம்தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன் பெரிய வணிக நிறுவனங்களும், மொத்த வியாபாரிகளும் அதிக லாபம் சம்பாதிப்பதற்காக உற்பத்தி மாநிலங்களில் பண்டங்களைப் பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

உலகத்தில் பட்டினியால் வாடும் மக்களின் பட்டியலில் உள்ள 88 நாடுகளில் இந்தியா 66-வது இடத்தில் உள்ளது. உணவுப் பொருள்களின் விலை உயர்வால் நாட்டின் பெரும்பகுதி மக்கள் குறிப்பாக குழந்தைகளும், பெண்களும் ஊட்டச்சத்துக் குறைவான உணவை உட்கொள்ள வேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர்.

ஏற்கெனவே அதிகரித்துள்ள வேலையில்லாத் திண்டாட்டம், வேலை கிடைத்தாலும் குறைந்த கூலியே கொடுக்கப்படும் அவலம், வறுமை இவற்றுடன் இப்போது உயர்ந்து வரும் விலைவாசியும் சேர்ந்து மக்களுக்கு உணவுப் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது; இதனால் எதிர்காலம் பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது.

"பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்' என்பதற்கிணங்க பசித்த மக்களின் கோபத்தால்தான் பல சாம்ராஜ்யங்கள் சரிந்தன என்பது வரலாறு. பட்டினி கிடந்த ஏழை மக்களின் எழுச்சியே பிரபுக்களை விரட்டிய "பிரெஞ்சுப் புரட்சி' என்பதை நாடறியும். காங்கிரஸ் விரட்டப்பட்டதற்கும், திமுக வெற்றி பெற்றதற்கும் அரிசிப் பஞ்சமும், அண்ணாவின் "ரூபாய்க்கு மூன்றுபடி' என்னும் வாக்குறுதியும்தான் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே!

""சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்-வெறும் சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம்?'' என்று வருந்திய பாரதி, "தனிமனிதனுக்கு உணவிலையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்' என்று கோபம் கொண்டதும் இதனால்தான்.

""ஏழைகளுக்குப் பொருளாதாரம்தான் ஆன்மிகம். பட்டினி கிடக்கும் அந்தக் கோடிக்கணக்கான மக்களிடத்தில் வேறு எந்த வேண்டுகோளையும் வைக்க முடியாது. அவற்றை அவர்கள் கேட்டுக் கொள்ளவும் மறுத்து விடுவார்கள். ஆனால், அவர்களிடம் உணவைக் கொண்டு போனால் உங்களைக் கடவுளாகக் கருதுவார்கள். வேறு எதையும் அவர்களால் நினைக்க இயலாது..'' என்றார் காந்தி. அதுதானே உண்மை.

மனிதர்களுக்கு மிகத் தேவையானது உணவும், கல்வியும். ஆரம்பக் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், வறுமைக்கோட்டுக்குக் கீழே வாடும் குடும்பத்தினருக்கு "உணவுப் பாதுகாப்புச் சட்டம்' விரைவில் வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நமது நாட்டில் எல்லாச் சட்டங்களுமே வெறும் அறிவிப்பாக இருக்கிறதே தவிர, நடைமுறைக்கு வருவதே இல்லை என்பதுதான் மக்களின் முணுமுணுப்பு. இந்த முணுமுணுப்பு முழக்கமாக வெடிக்கும் முன்னர் அரசு விழித்துக் கொள்வது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com