திரைப்படங்களை விஞ்சும் தொலைக்காட்சிகள்
திரைப்படங்களில் வரும் விரும்பத்தகாத காட்சிகளைவிட இப்போது தொலைக்காட்சிகளில் அந்தக் காட்சிகள் அதிகரித்து வருகின்றன. திரைப்படங்களைக் காண திரையரங்குகளுக்கு தந்தை,தாய்,மகன்,மகள் என குடும்பத்துடன் சென்ற கா


திரைப்படங்களில் வரும் விரும்பத்தகாத காட்சிகளைவிட இப்போது தொலைக்காட்சிகளில் அந்தக் காட்சிகள் அதிகரித்து வருகின்றன.
திரைப்படங்களைக் காண திரையரங்குகளுக்கு தந்தை,தாய்,மகன்,மகள் என குடும்பத்துடன் சென்ற காலம் இப்போது மலையேறிவிட்டது. பழைய திரைப்படங்களில் விரசம் இல்லாத நிலை இருந்தது.
ஒரு சில படங்களில் மட்டும்தான் குறிப்பிட்ட பாடலுக்குக் கவர்ச்சி நடிகைகளைப் பயன்படுத்தி வந்தனர். இதன் காரணமாக அந்தக் காட்சி வரும் நேரங்களில் தங்கள் பிள்ளைகளை வெளியே கூட்டிபோய் பெரியவர்கள் சமாளித்து வந்தனர்.
தற்போது படம் முழுக்க நிரம்பியுள்ள கவர்ச்சிக் காட்சிகளை குடும்பத்துடன் கண்டு களிப்பது என்பது எந்தப் பெற்றோராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகிவிட்டது.
இந்த நிலையில்தான் தொலைக்காட்சி என்ற புதிய அவதாரம் மக்களின் மனங்களில் நுழைந்து, அமர்ந்து, கவர்ந்து அங்கேயே தங்கியும் வருகிறது. குடும்பத்துடன் கண்டுகளிக்க முடியாத திரைப்படங்கள் வரும் சூழ்நிலையில், அதனைத் தவிர்க்க விரும்பும் பெற்றோர்கள், சரி தொலைக்காட்சி நிகழ்ச்சியையாவது பார்க்கட்டுமே என பெரிய மனதுடன் இருந்து வருகின்றனர்.
ஆனால், அன்றைய பொதிகை தொலைக்காட்சியில் காட்டப்பட்ட நிகழ்ச்சிகள் போல், இன்று பெரும்பாலான தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் அமைக்கப்படுவதில்லை.
திரைப்படங்களைக் காண விரும்புபவர்கள் திரையரங்குக்குச் செல்ல வேண்டும். விரும்பாதவர்கள் அதனைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பதால், அதில் வரும் விரும்பத்தகாத காட்சிகளைப் பற்றி பெற்றோர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
இப்போது பல சேனல்கள் நடனப் போட்டிகளைப் பாரபட்சமின்றி நடத்தி வருகின்றன. இதில் போட்டியாளர்களின் உடை நாகரிகத்தைகூட விட்டுவிடலாம். ஆனால், நடுவர்கள் என்று அழைக்கப்படும் சிலரின் உடை நாகரிகம் கண்ணைக் கூசச் செய்வதுடன் உடலையும் கூச வைக்கிறது.
ஒரு காலத்தில் நடனம் என்பது கடவுளின் அம்சமாகப் போற்றப்பட்டு, மரியாதைக்குரியதாகக் கருதப்பட்டது.
ஆனால், இன்றோ போட்டியாளர்களின் நடன அசைவுகளும், நடுவர்களின் உடை அலங்காரமும் நடனம் என்ற உயரிய கலையை அசிங்கப்படுத்துகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இப்படி வீட்டுக்கு வீடு நேரடியாக வலம் வரும் இது போன்ற ஷோக்களில் பயன்படுத்தப்படுகிற ஆடைகளின் வடிவமைப்பு, பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்காதா? அதையும் விட இளைஞர்கள், யுவதிகளின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தாதா?
""ஏன் டாடி, ஜட்ஜஸ் எல்லாரும் சேலை கட்டி கறுப்பு கோட்தானே போடுவாங்க இவங்க மட்டும் ஏன் வித்தியாசமா இருக்காங்க'' என எனது நண்பரின் சிறு வயதுப் பெண், நடனப் போட்டிக்கு வந்திருந்த நடுவரின் டிரஸ் குறித்து கேட்ட கேள்விக்கு யார் தெளிவான பதில் கொடுப்பது?
இப்படி உடை நாகரிகத்தில் மட்டும்தான் கலாசாரம் காணாமல் போய்விட்டது என்றில்லை. தொலைக்காட்சி சீரியல்களில் தொடக்க காலத்தில் அடிப்பது, வெட்டுவது, சுடுவது என்பது போன்ற வன்முறைக் காட்சிகள் அவ்வளவாக இடம்பெற்றது கிடையாது. ஆனால், இன்று இந்தக் காட்சிகள் இல்லாத சீரியல்களே இல்லை.
அதிலும் பழிவாங்குவது போன்ற காட்சிகள் எல்லா வகை சீரியல்களிலும் மறக்காமல் இடம்பெறும் நிகழ்வாகும்.
பள்ளியில் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர், பழிவாங்க நினைக்கக் கூடாது என பிள்ளைகளுக்குக் கூறும் அறிவுரை, வீட்டுக்குச் சென்று தொலைக்காட்சி முன் அமர்ந்ததும் சீரியல்களின் தாக்கத்தால் மறந்துவிடும்.
இத்தனை எதிர்விளைவுகள் தொலைக்காட்சிகளால் ஏற்படுகிறது என நன்கு அறிந்த பின்னரும், தொலைக்காட்சிகளைப் பார்க்காதீர்கள் என பெற்றோர்களும் கூறுவதில்லை. காரணம், அந்த அளவுக்கு அவர்களும் தொலைக்காட்சியும் இரண்டறக் கலந்து விட்டதுதான். அப்படி என்றால் எதிர்கால இளைஞனின் வாழ்க்கை என்னாவது என்ற கேள்விக்குத் தொலைக்காட்சி நிறுவனங்கள்தான் பதிலளிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...