தேவையற்ற சூப்பர் நெறிமுறையாளர் ஏன்?
இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் பலரது புருவங்களை உயர்த்தியது. ""நிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு சபை'' பற்றிய உத்தேசத் திட்டமே அது. இப்போது வங்கிகளைக் கண்காணிக்கவும், கட்டுப்படு


இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் பலரது புருவங்களை உயர்த்தியது. ""நிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு சபை'' பற்றிய உத்தேசத் திட்டமே அது.
இப்போது வங்கிகளைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், வழிநடத்தவும் பாரத ரிசர்வ் வங்கி உள்ளது. காப்பீட்டு நிறுவனங்களை நெறிப்படுத்துவதற்கு காப்பீட்டு நெறிமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.) இருக்கிறது. முதலீட்டுச் சந்தை, பங்குச் சந்தை ஆகியவற்றைக் கண்காணிப்பதற்கும், வழிகாட்டுதல்களுக்கும் "செபி' செயல்படுகிறது.
அண்மைக்காலங்களில், ஒரு சில விஷயங்களில், மேற்கூறிய கண்காணிப்பு அமைப்புகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. உதாரணமாக, யூனிட்டுகள் தொடர்புடைய காப்பீட்டுத் திட்டங்களைச் (யூலிப்) செயல்படுத்துவதில், ஐ.ஆர்.டி.ஏ. மற்றும் "செபி'க்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. ""எது, யாருடைய பொறுப்பு?'' என்பதை நிர்ணயிப்பதில் சர்ச்சை எழுந்தது. காரணம், யூலிப் செயல்பாட்டில் அந்த இரண்டு அமைப்புகளுக்குமே தொடர்பு உள்ளது. முதலீடு என்ற வகையில் "செபி'க்கு அதிகாரம் இருக்கிறது. காப்பீடு என்ற வகையில், ஐ.ஆர்.டி.ஏ.க்கு அதிகாரம் உள்ளது.
இந்தச் சர்ச்சையைத் தீர்த்துவைப்பதற்கு, மத்திய நிதி அமைச்சகம் தொடக்கத்தில் மேற்கொண்ட நடவடிக்கை உதவிகரமாக இருந்தது. ஆனால், விஷயம் அத்துடன் நிற்கவில்லை.
இதுபோன்ற சர்ச்சைகள் வரும் காலத்தில் நேராமல் பார்த்துக் கொள்வதற்கும், அப்படி ஒருவேளை நேர்ந்தால், அதை மத்தியஸ்தம் செய்து வைப்பதற்கும், மத்திய அரசு கடந்த ஜூன் 18-ம் தேதி ஓர் அவசரச் சட்டம் பிறப்பித்தது. இச்சட்டத்தின் மையக் கருத்து என்னவெனில், நிதி நிர்வாகத் தொடர்புடைய ஆணையங்களுக்கிடையே பிணக்குகள் ஏற்பட்டால், அதைத் தீர்த்து வைப்பதற்காக ஓர் உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும் என்பதே. அக்குழுவில் பாரத ரிசர்வ் வங்கி, செபி, ஐ.ஆர்.டி.ஏ., பி.எஃப்.ஆர்.டி.ஏ. உள்ளிட்ட அனைத்து ஆணையங்களும் இடம்பெறும். அதேசமயம் இக்குழுவின் தலைவராக மத்திய நிதி அமைச்சர் செயல்படுவார் என்பதே புதிய ஏற்பாடு.
பாரத ரிசர்வ் வங்கி நாட்டின் பழம்பெரும் நிதி நெறிமுறை அமைப்பு மட்டுமல்ல. நாட்டின் பணம் தொடர்பான அனைத்து வகை நெறிமுறைகளையும் வகுக்கக்கூடிய பொறுப்பையும் பெற்று, அவற்றை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ஒரு முக்கிய அமைப்பு.
இந்நிலையில், செபி, ஐ.ஆர்.டி.ஏ. போன்ற அமைப்புகளுக்குச் சமமான நிலையில் பாரத ரிசர்வ் வங்கியை வைப்பது ஏற்புடையதல்ல. இதற்கு ரிசர்வ் வங்கியே தனது அதிருப்தியைப் பதிவு செய்து இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
முதற்கண், இத்தகைய ஒரு குழு அவசியமா என்பதே விவாதத்துக்குரியது. அத்துடன் நிதி தொடர்பான ஆணையங்கள் அடங்கிய ஒரு குழுவுக்கு மத்திய நிதி அமைச்சர் தலைவராகவும், நிதி அமைச்சகச் செயலர் அதன் "கன்வீனரா'கவும் இருப்பது, எந்த அளவுக்கு அந்த ஆணையங்களின் சுதந்திரத்தைப் பேணுவதாக இருக்கும் என்ற ஐயம் எழுகிறது. அதிகார மையங்களின் தேவையற்ற தலையீடுகள் இருக்கக்கூடுமே என்ற அச்சமும் ஏற்படுவது இயல்பு.
இதற்கு அரசுத்தரப்பில் தெரிவிக்கப்படும் சமாதானத்தில் சாரம் இல்லை. அதாவது, ஏற்கெனவே ரிசர்வ் வங்கியின் தலைமையில் செயல்படும் நிதிச் சந்தைகளின் குழுவில் தீர்வு காணப்படாத விஷயங்கள்தான், நிதி அமைச்சர் தலைமையிலான குழுவின் பரிசீலனைக்கு வரும் என்பதே அது.
அத்துடன் இப்படி ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்பது பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது என்றும் சுட்டிக்காட்டுகிறது மத்திய அரசு.
இக் கருத்து பட்ஜெட்டில் இடம்பெற்றபோதே அதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது என்பதே உண்மை. அப்போதே, அதுபோன்ற உயர்நிலை அமைப்பால், நிதி நெறிமுறை அமைப்புகளின் சுதந்திரமான சிந்தனையும் செயல்பாடும் பறிபோகும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்ல, இப்படி ஒரு புதிய குழுவை அமைப்பதற்குப் பதிலாக, இப்போதுள்ள உயர்நிலைக் குழுவின் அதிகார வரம்புகளை மேலும் தெளிவுபடுத்துவதும், வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைச் சட்டப்படி வலுப்படுத்துவதுமே சரியான அணுகுமுறையாக அமைந்திருக்கும்.
உலகில் உள்ள அனைத்து வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் ரிசர்வ் வங்கிகள்தான் பிரதான இடத்தைப் பெற்றுள்ளன. பத்தோடு, பதினொன்றாக, அது எந்த நாட்டிலும் கருதப்படவில்லை.
இன்னும் சொல்வதெனில், சர்வதேச அளவில் எப்போதெல்லாம் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் இந்தியப் பொருளாதாரத்தைக் கட்டிக் காத்தது பாரத ரிசர்வ் வங்கிதான் என்பதில் இருகருத்துகள் இல்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சர்வதேச நிதி நெருக்கடி என்னும் சுனாமி தாக்கியபோது, இந்திய வங்கிகள் பாதிக்கப்படவில்லை. அதேநேரம், அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 140 வங்கிகள் மூடப்பட்டன.
வங்கிகள் தொடர்ந்து மூடப்படுவதால் அமெரிக்காவில் வங்கி முறையே முழு தோல்வி அடைந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கருத்தை வெளியிட்டிருப்பது, வங்கிகளின் டெபாசிட் தொகைகளுக்கு காப்பீடு வழங்கும் அமெரிக்க ஃபெடரல் டெபாசிட் காப்பீட்டு நிறுவனம்தான்.
சர்வதேச அளவில் இது முதல்முறையாக நிகழவில்லை. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன், கிழக்கு ஆசிய நாடுகளில் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அப்போது அந்த நாடுகளின் நாணய மதிப்புச் சரிந்தது.
வெளிநாட்டு மூலதனம் ஒரேசமயத்தில் விரைந்து வெளியேறியதும் அதற்கு ஒரு காரணம். மூலதனக் கணக்கை முற்றிலுமாக மாற்றிக் கொள்ளும் திட்டம் அந்த நாடுகளில் அப்போதே செயல்படுத்தப்பட்டது. இதுதான் அந்த நாடுகளில் நிதி நெருக்கடி ஏற்படக் காரணமாக இருந்தது.
அந்தநேரத்திலும், கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடி இந்தியாவில் தலைகாட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூலதனக் கணக்கை முற்றிலும் மாற்றும் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படவில்லை என்பதும் ஒரு காரணம்.
இதற்கெல்லாம் மூலகாரணம், இந்திய வங்கிகளின் வலிமையும், பாரத ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலும்தான். வங்கிகளுக்கு எப்போது, எது தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப, நெறிமுறைகளை வகுத்து வருவது ரிசர்வ் வங்கியின் தனிச்சிறப்பு.
இந்த அணுகுமுறை பாரத ரிசர்வ் வங்கிக்குச் சாத்தியமாவதற்குக் காரணம், அதற்கு நிதித் துறையில் உள்ள பிரதான நிலையும், பரிபூரண சுதந்திரமும்தான் என்றால் மிகையல்ல.
இதை உன்னிப்பாகக் கவனித்து வருகிற அமெரிக்காவும், இங்கிலாந்தும் இதர ஐரோப்பிய நாடுகளும், ஜப்பானும், இந்தியாவைப்போல், தம் தம் நாடுகளிலும் நிதித்துறை செயல்படுத்தப்பட வேண்டும் என்று உரத்த குரலில் யோசிக்கத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், நாம் பாதை மாறுவது நியாயமா?
ஜூன் 18-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் காலாவதியாவதற்கு வழிகோல வேண்டும் என்று பல வல்லுநர்கள் வலியுறுத்தினர். அவ்வாறு நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக இருந்தது.
ஆனால், அந்த எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. அவசரச் சட்டத்துக்கு முறையான சட்டவடிவம் கொடுக்கும் மசோதா மக்களவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி நிறைவேற்றப்பட்டுவிட்டது.
இத்திட்டம் தொடர்பாக எழுந்த கடுமையான எதிர்ப்புகளுக்குச் சமாதானம் தெரிவிக்கும் வகையில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது குழுவின் தலைவராக நிதி அமைச்சர் இருப்பார் என்பதில் மாற்றம் இல்லை. குழுவின் துணைத்தலைவராக பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் செயல்படுவார் என்பதே அந்தச் சிறிய மாற்றம்; சிறிய சலுகை! எனினும், இந்திய நிதித்துறையில் அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் இருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...