நூலகத் தொண்டும் கல்வியும்
ஆசிரியப்பணி அறப்பணியென்றும், மருத்துவப்பணி உயிர்காக்கும் உன்னதப் பணியென்றும் நாட்டில் அவ்வப்போது அறிஞர்களும், தலைவர்களும் பேசக் கேட்டிருக்கிறோம். இப்பணிகள் இவ்வாறு போற்றப்படக் காரணம், கடமையைத் தாண்டி


ஆசிரியப்பணி அறப்பணியென்றும், மருத்துவப்பணி உயிர்காக்கும் உன்னதப் பணியென்றும் நாட்டில் அவ்வப்போது அறிஞர்களும், தலைவர்களும் பேசக் கேட்டிருக்கிறோம்.
இப்பணிகள் இவ்வாறு போற்றப்படக் காரணம், கடமையைத் தாண்டி உளப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும், உண்மையான அக்கறையோடும் செய்யப்பட வேண்டிய பணிகள் என்பதாலேயே அவைகள் அவ்வாறு புகழப்படுகின்றன. சொல்லப் போனால் இவர்கள் ஆற்றுவது பணியல்ல, தொண்டு.
அத்தொண்டின் உன்னதம் புரிந்து அவர்கள் பணியாற்ற வேண்டுமென்று மூத்தோர் பலர் முன்மொழிந்திருக்கின்றனர். இன்னும் ஒருபடி மேலேபோய் "ஆசிரியர்களும், மருத்துவர்களும் இந்நாட்டின் இரு கண்களைப் போன்றவர்கள்'- என்று அறிஞர் அண்ணா விளம்பியிருப்பதும் இப்பணிகளின் மேன்மையை அழுத்தி உரைக்கும் கல்வெட்டு வார்த்தைகள். ஆசிரியர் பணி, மருத்துவப்பணி போலவே நூலகப்பணியும் மிகுந்த மேன்மைக்கும், கண்ணியத்துக்கும் உரிய பணி. அகரம் கற்பிக்கும் ஆசிரியர்களாலும், உயிரைப் பேணி வளர்க்கும் மருத்துவர்களாலும் செய்யப்பட்ட பணிகளின் நீட்சி, அறிவை வளர்த் தெடுக்கும் நூலகங்களில் பணிபுரியும் நூலகர்களின் பணியில் மட்டுமே புதைந்து கிடக்கிறதென்றால் மிகையல்ல.
கல்வி மட்டுமே தனிமனிதனையும், சமூகத்தையும் ஒருங்கே கட்டமைத்து நெறிப்படுத்தக்கூடிய ஆற்றலும் வல்லமையும் வாய்ந்தது. எழுத்தும் சொல்லும் கற்றவர்கள், வார்த்தைகளை இணைத்துப் பேச, எழுதப் பழகியவர்களால், ஓரிடத்தில் வெறுமனே சும்மா இருத்தல் இயலாது. இது மனித இயல்பு.
நாட்டுப்புறத்தில் மூன்றாம் வகுப்போடு படிப்பை நிறுத்தியவர்கள் கூட தேனீர் கடைகளில் மணிக்கணக்காய் உட்கார்ந்து செய்தித்தாளின் எல்லா பக்கங்களையும் புரட்டி, எழுத்துக் கூட்டி படிப்பதைப் பல சமயங்களில் நம்மால் பார்க்க முடியும். தவறாகவே படித்தாலும் செய்தித்தாள் முழுவதையும் படித்து விட்டுத்தான் அவர்கள் எழுந்து போவார்கள். அதைப் போலவே வயதானவர்கள், கண்பார்வை மங்கியவர்கள் கூட கண்களை இடுக்கி மிக அருகில் வைத்து ஒவ்வொன்றாய் படித்துத்தான் சாப்பிடக்கூட எழுந்து போவார்கள்.
அக்காலங்களில் பெண்கள் வீட்டுக்கு மல்லி, மிளகாய் போன்ற பொருள்கள் வாங்கி வந்த காகிதங்களைப் பிரித்து அடுப்படியிலேயே உட்கார்ந்து, அடுப்புச் சுள்ளிகளைத் தள்ளி விட்டுக் கொண்டே, புகை மண்டலமாய்க் காட்சியளிக்கும் அவ்வறையில் கண்ணெரிச்சலையும் சகித்து, கண்ணீர் தேங்கி நிற்க, அக்காகிதங்களைப் படிப்பதைப் பார்க்கும் நிகழ்வுகள் யாவருக்கும் சிறுவயதில் நிகழ்ந்திருக்கக்கூடும்.
நம் பாட்டியும், அம்மாவும், பல பெண்களும் படிப்பதற்காக ஏங்கிய ஏக்கங்களைச் சொல்வதற்கு இதை விடவும் வேறென்ன உதாரணம் வேண்டும்? இதைப்போலவே எல்லா பேருந்து நிலையங்களிலும் தள்ளுவண்டியில் விற்கப்படும் சுண்டல் பொட்டலங்களை வாங்கித் தின்ற பிறகு அந்தக் காகிதத்தைக் கூட விட்டு வைக்காமல் படித்துவிடுகிற படிப்பார்வமிக்க பெண்களும், ஆண்களும் தம் தீராத தாகத்தைத் தீர்க்கக் கிடைத்த தவச்சாலையாக நாடுவது நூலகமன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?
÷இன்றைக்கு மாநகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை நூலகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பொது நூலகங்கள், கிராம நூலகங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக நூலகங்கள், மேலும் தனியார் அமைப்புகள், அறக்கட்டளைகள் நிறுவியிருக்கும் நூலகங்கள் என பல வகை நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. செய்தித்தாள்கள், வார, மாத இதழ்கள், வேலை வாய்ப்புச் செய்தி இதழ்கள், இலக்கிய இதழ்கள், சிற்றிதழ்கள், சிறப்பிதழ்கள் என எல்லா வகை இதழ்களும் நூலகத்தை அனுதினமும் அலங்கரித்து வருகின்றன.
÷அது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான புகழ்பெற்ற கதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆய்வு நூல்கள், அறிஞர்களின் பொன்மொழிகள், அறிவியல் நூல்கள், வரலாற்று நூல்கள், கணிப்பொறி நூல்கள், கணித நூல்கள், பிற மொழி இலக்கிய நூல்கள் என பல்வேறு தலைப்புகளில் பார்த்தால் அறிவுப் பசியை போக்கிக் கொள்ள இதுவே சரியான இடம் என்கிற கருத்து இன்னும் வலுப்பெறும்.
இந்நூல்களையெல்லாம் அழகிய தன்மையுடன் அடுக்கி, ஒவ்வொரு புத்தகத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிட்டு, பதிவேடுகளில் பதிவு செய்து, நிர்வகிப்பது மட்டுமல்லாமல் நாளிதழ்களை தேதிவாரியாக அடுக்கி, பாதுகாத்து வைப்பதும், வேலை தேடுவோர், ஆய்வு மாணவர்கள் போன்றவர்களுக்கு எளிதில் எடுத்து, குறிப்பெடுக்க உதவியாய் வகை பிரித்து வைப்பதும், நூலகர்களின் உன்னதப் பணியாக அமைந்துள்ளன. மேலும் சந்தாதாரர்களுக்குப் புத்தகம் கொடுத்தும், வாங்கியும் புத்தகங்களைப் பாதுகாத்து வரும் நூலகர்களின் பணி உண்மையில் போற்றத்தக்க ஒன்றே.
÷நூலகர்களின் பணி நுண்மான் நுழைபுலம் மிக்கோர் நாடும் இடத்தை நிர்வகிக்கும் பணியென்பதால் கவனத்துடனும், இன்முகத்துடனும், படிப்பார்வத்தைத் தூண்டும் விதமும், வருகிறவர்களுடன் நட்புடன் பேசிப் பழகி இணக்கத்தை வளர்க்கும் விதமாகவும் இருத்தல் மிக அவசியம். இதிலிருந்து நூலகர் தவறும் பட்சத்தில் நூலகத்தின் அடிப்படை நோக்கமே ஆட்டம்காணத் தொடங்கிவிடும்.
இன்றைய ஊடகங்களின் ஆதிக்கம் சொல்லி மாளாது. வயது வித்தியாசமில்லாமல் எல்லோரையுமே இன்றைய ஊடக உலகம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. பல மணி நேரத்தை வீணாய் கழியச் செய்யும் அற்பப் பணியை இன்றைய தொலைக்காட்சிப் பெட்டிகள் மிகக் கச்சிதமாய்ச் செய்து வருகின்றன. இவற்றிலிருந்து தப்பிப் பிழைப்பது என்பது அரிதிலும் அரிதாக இருக்கும் பட்சத்தில், படிப்பின் ஆர்வம் மிகுதியாய் குறைந்துவிட்டது. இந்த மனநிலை அவசியம் மாற்றப்பட வேண்டும்.
தற்கால வாழ்வின் அவசரகதி, காலநெருக்கடி, நுகர்வுக் கலாசாரம், சுயநலவாழ்க்கை முறை, அலைபேசிகளின் ஆதிக்கம், தனிமனிதத் துதிபாடும் போக்கு போன்ற பலவும் உள்ளன. இவை மனிதனின் பரந்துபட்ட வாழ்வு முறையை, நேசத்தை, அன்பை, உண்மையான அங்கீகரிப்பை, உன்னதமான உறவுகளைத் தவிர்த்து தன்னைத் தானே சுருக்கிக் கொள்ளும் நத்தை வாழ்க்கையை நோக்கி நம்மைத் தள்ளியுள்ளது.
நாட்டில் இன்று பெருகியுள்ள வன்முறை, வெடிகுண்டு கலாசாரம் அமைதியான வாழ்வுமுறைக்கு பெரும் சவாலாகவுள்ளது. அறநெறிகளை வார்த்து உலகுக்கு வழங்கிய நம் புண்ணிய பூமியில் இன்று காவிரி நீருக்கும், முல்லைப் பெரியாறு உரிமைக்கும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், ரத்தம் பார்க்காத விடியலே இல்லை என்று சொல்லிக் கொள்கிற அளவுக்கு உலகெங்கிலும் வன்முறையின் கோரத் தாண்டவம் பெருகி, வளர்ந்து, அகோரமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு வசதி வாய்ப்புகளைப் பெற்று சுகபோகமாயிருக்கிறோம். அதே வேளையில் இது போன்ற கொடிய நிகழ்வுகள் பெருகியுள்ளதற்கான காரணங்களை ஆராய்ந்தால், ஊடகங்களையே முதன்மையாக குற்றம் சுமத்த முடியும். ஊடகங்களின் பரவல் புத்தக நேசர்களை மிகுதியாக திசைமாற்றி தன்னுள்ளே ஈர்த்துக் கொண்டுள்ளது. இச்சூழல் மறுபடியும் மாறுதலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதற்கான தலையாய பணியை நூலகங்களும், நூலகர்களுமே செய்ய முடியும்.
காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை தற்சமயம் தமிழ்நாட்டு நூலகங்களின் வேலைநேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. நூலகங்களில் பணிபுரியும் ஊழியர்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, காலையில் ஒரு பிரிவினரும் மதியத்திற்கு மேல் ஒரு பிரிவினரும் வேலை செய்யும் வண்ணம் (ஷிப்டு முறை) பணிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறே சிறப்பாக ஊழியர்களும் பணியாற்றிவரும் வேளையில் ஒரு சிலர் செய்யும் தவறான நடைமுறைகளால் படிப்பார்வம் மிக்கோர் பலரும் நொந்து போக வாய்ப்புள்ளது.
இரவு எட்டு மணிக்கு வேலை நேரம் முடிகிறதென்றால் ஏழு மணிக்கு மேல் புத்தகம் எடுக்கக்கூடாது. குறிப்புதவி எடுக்கும் பிரிவிலும் நுழையக்கூடாது போன்ற விதிமுறைகளுக்கு முரணான செயல்கள் செய்வதை நூலகர்கள் பணியின் மேன்மை கருதித் தவிர்க்க வேண்டும். இது குறிப்புதவி எடுப்போர், வேலை தேடுவோர், ஆய்வுத் தளத்தில் இயங்குவோர், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், மேலும் நூலகத்தை விரும்பி வரும் ஒரு சிலரையும் தம் சொற்களால் விரட்டும் நிலைக்குத் தள்ளிவிடும் என்பதை நூலகத் துறையில் பணிபுரிவோர் அவசியம் மனதில் கொள்ள வேண்டும்.
நூலகர்கள் ஓர் அறிவுப்புதையலின் தளபதியாக விளங்கி வருகின்றனர் என்பதை மனதில் கம்பீரத்தோடும், கர்வத்தோடும் கொள்ளலாம். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்தக் கர்வம், படிக்க வரும் வாசகர்களின் எண்ணிக்கையால் தான் மேலும் பளிச்சிடவும் கௌரவிக்கப்படவும் செய்யும் என்பதை நூலக ஊழியர்கள் உணராதவர்கள் அல்லர்.
கனிந்த சேவை, காயம் ஏற்படுத்தாத சொற்கள், நிறைந்த அரவணைப்பு போன்றவைகளால் வாசகர் தளத்தை பெரும்பான்மையாக நூலகம் நோக்கி அழைக்க முடியும். நூலகப் பயன்பாட்டினால் ஊரெங்கும் அறிவு தழைக்கும். அங்கு குறிப்புதவி எடுத்து அதன் மூலம் வேலை வாய்ப்பைப் பெற்றோர், ஆய்வுப் பரப்பில் கௌரவிக்கப்படுவோர், பல்வேறு துறைகளில் உயர்ந்த பதவிகளைப் பெற்றோர் யாவருக்கும் நூலகம் ஓர் ஆலயம். நூலகர் ஒரு கடவுளைப் போல போற்றப்பட வேண்டுமெனில், மாசு மருவற்ற தொண்டுள்ளத்தோடு சேவை செய்வதையே உயிர் மூச்சாகக் கொள்ள முன்வர வேண்டும்.
பணியாளர் குறைபாடுகள், ஊதியம், பிற வசதிகளையும் அரசு முன்னுரிமை வழங்கி செய்து தந்து இவர்களை முழுமனதோடு இப்பணியில் ஈடுபட ஊக்குவிப்பதில் பல நல்ல விளைச்சல்களை குடிமக்களிடமிருந்து பெற முடியும்.
(கட்டுரையாளர்: எழுத்தாளர்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...