ஜவுளிக்கு ஏற்றம் எப்போது?
ஜவுளித் தொழில் பற்றி வங்கியாளர்களிடையே ஒரு பேச்சு உண்டு! ஜவுளி ஆலைகள் இரண்டு, மூன்று ஆண்டுகள் லாபம் ஈட்டுவதும், பிறகு ஓரிரு ஆண்டுகள் இழப்பைச் சந்திப்பதும் வாடிக்கை; பொதுவாக ஜவுளித் தொழிலில் ஏற்றமும்,


ஜவுளித் தொழில் பற்றி வங்கியாளர்களிடையே ஒரு பேச்சு உண்டு! ஜவுளி ஆலைகள் இரண்டு, மூன்று ஆண்டுகள் லாபம் ஈட்டுவதும், பிறகு ஓரிரு ஆண்டுகள் இழப்பைச் சந்திப்பதும் வாடிக்கை; பொதுவாக ஜவுளித் தொழிலில் ஏற்றமும், இறக்கமும் மாறி, மாறி வருகிறது என்பதுதான் அந்தப் பேச்சு. இது விஞ்ஞானரீதியிலான மதிப்பீடா அல்லது அனுபவத்தின் அடிப்படையிலான கருத்தா என்பது விவாதத்துக்குரியது.
இந்நிலையில், இரண்டாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடியும் சேர்ந்து கொண்டதால், நிலைமை மேலும் கடினமானதில் வியப்பில்லை. ஆனால், சர்வதேச பொருளாதார நெருக்கடியை, இந்திய ஜவுளித்துறை எந்த அளவு சமாளித்தது என்பதுதான் கேள்வி.
நம் நாட்டு ஜவுளி ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவையும் ஐரோப்பிய யூனியன் நாடுகளையும் தான் பெரும் அளவில் நம்பியிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், அமெரிக்க சந்தையும், ஐரோப்பிய சந்தையும் பெரும்பாலும் ஒரே மாதிரிதான் இயங்கி வருகின்றன. விற்பனை அதிகரித்தால் இரண்டு சந்தைகளிலும் அதிகரிக்கும்; சரிந்தால் இரண்டும் சரியும்.
கடந்த ஆண்டு, அமெரிக்காவின் ஜவுளி இறக்குமதி 12.04 சதவீதம் சரிந்தது. ஆனால், அமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி 7.56 சதவீதம் மட்டுமே சரிந்தது. ஆக, பல நாடுகளின் ஏற்றுமதியைவிட, இந்திய ஏற்றுமதி அதிகம் என்பது வெளிப்படை.
ஐரோப்பிய நாடுகளுக்கான இந்திய ஜவுளி ஏற்றுமதி கிட்டத்தட்ட அதேபோல்தான் இருந்தது.
இது ஓரளவு நம்பிக்கையூட்டுவதாக இருந்தாலும், நமது ஜவுளி உற்பத்தியாளர்கள் மேற்கொள்ள வேண்டியது இரண்டு: ஒன்று, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளை மட்டும் நம்பியிருக்கக் கூடாது; இதர பெரிய நாடுகளின் சந்தைகளைக் குறி வைத்து, ஏற்றுமதியைப் பெருக்க வேண்டும்.
இரண்டாவதாக, உள்நாட்டுத் தேவைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக் கொண்டுள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்தப் புதிய உள்நாட்டுத் தேவைகளை எதிர்கொள்வதற்கு, இப்போதைய உற்பத்தியைவிட அதிகம் தேவை. இதற்கு நமது ஜவுளித்துறை தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதே உண்மை.
இப்போதைய உற்பத்தியில் பாதிக்கு மேல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால், உலக நாடுகளின் ஜவுளி உபயோகத்தில், இந்தியாவின் உள்நாட்டுச் சொந்த உபயோகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. என்ன இருந்தாலும், நாம் 110 கோடி மக்கள் அல்லவா?
அண்மையில், இந்திய தொழில் சம்மேளனங்களின் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) மும்பையில் நடத்திய ஜவுளித் தொழில் வட்ட மேஜை மாநாட்டில் பேசிய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் ஜவுளி உற்பத்தியை 12 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உள்நாட்டுத் தேவையைச் செம்மையாகப் பயன்படுத்திக் கொண்டு, விற்பனையை அதிகரிப்பதற்கு, பெரிய நகரங்களில் புதிது, புதிதாகத் தோன்றியுள்ள "மெகா மால்'கள் உள்ளிட்ட நவநாகரிக, அசுர விற்பனைக் கூடங்களை மட்டும் நம்பியிராமல், ஊரகப் பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் உள்ள சந்தைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்ல பலனைத் தரும்.
இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்புகளை அள்ளித் தருவது ஜவுளித்துறையே. உலகம் முழுவதிலும் விளையும் பருத்தியில், ஐந்தில் ஒரு பங்கு (அதாவது 20 சதவீதம்) இந்தியாவில்தான் விளைகிறது. அந்த அளவுக்கு ஜவுளித்துறை நமக்கு முக்கியமானது.
ஜவுளி ஏற்றுமதியில் நமது பிரதான போட்டி நாடு சீனா. அதன் பலம், நவீனமயமாக்கப்பட்ட ஆலைகளே. சீனாவுடன் போட்டி போட்டுக் கொண்டு, பிற நாட்டுச் சந்தைகளை நாம் ஊடுருவ வேண்டுமெனில் நமது ஆலைகள் உலகத்தரத்துக்கு உயர்த்தப்பட வேண்டும். இதற்கு பொதுத்துறை மற்றும் தனியார் துறை இரண்டும் இணைந்து கூடுதல் முதலீடு செய்ய வேண்டும். மத்திய அரசு, தன் பங்குக்கு, ஆலைகளை நவீனமயமாக்குவதற்காக கடந்த 10 ஆண்டுகளாக ஒரு தொழிலியல் மேம்பாட்டு நிதியை அமைத்து ஆலைகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. 1999-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை, ஜவுளி ஆலைகளை நவீனமயமாக்குவதற்கு மத்திய அரசு ரூ. 66,275 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது.
இதன் எதிரொலியாக, ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் புதிய முதலீடுகள் கிடைத்துள்ளன. சுமார் 26,000 ஜவுளி ஆலைகள் இதனால் பயன் அடைந்துள்ளன. இதில் 18,000 சிறு தொழில்களும் அடக்கம். நவீன தொழில்நுட்பம், அதிநவீன உற்பத்தித் தளவாடங்கள் ஆகியவற்றைப் பெறுவதற்குத் தேவையான மூலதனச் செலவு, மேற்கூறிய தொழிலியல் மேம்பாட்டு நிதியின் மூலம் கணிசமாகக் குறைந்துள்ளது.
தென்னிந்தியாவை எடுத்துக்கொண்டோமானால், ஜவுளித்துறை முதலீடுகளில் முதல் இடத்தில் இருப்பது ஆந்திரம்; இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. கர்நாடகம் மற்றும் கேரளம் மூன்றாவது, நான்காவது இடங்களில் உள்ளன.
ஆந்திரத்தில் முதலீடு ரூ. 3,379 கோடி; தமிழ்நாட்டில் ரூ. 3,165 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ரூ. 270 கோடி; கேரளத்தில் ரூ. 106 கோடி மட்டுமே முதலீடுகளாக உள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இப்போது ஆண்டுக்கு ரூ. 15,000 கோடி முதல் ரூ. 20,000 கோடி அளவுக்குத்தான் வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதியாகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இதை இரண்டு மடங்காக அதிகப்படுத்த வேண்டும் என்பது இலக்கு. அதற்கு ஏற்றபடி, தமிழ்நாட்டில் ஜவுளித்துறையில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை முதலீடுகள் பெருக வேண்டும்.
÷ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு சபை (அப்பேரல் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில்) தொழில்நுட்ப மேம்பாட்டு அமைப்பு ஒன்றை திருப்பூரில் நிறுவியுள்ளது. இதன் நோக்கம் என்னவெனில், பின்னலாடைகள் உற்பத்திக்குத் தேவையான அதிநவீன தவளாடங்களையும் கருவிகளையும் இறக்குமதி செய்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கூடங்களை அமைத்தல், தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல் ஆகியவை ஆகும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மத்திய அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. ஏற்றுமதி தொடர்பான சேவைகளுக்கு சேவை வரி நீக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது. இதுதவிர, கழிவு விகிதத்தை 15 சதவிகிதத்திலிருந்து, 25 சதவிகிதமாக உயர்த்துதல், பருத்தி பின்னலாடைகளுக்கு "டூட்டி டிராபேக்' என்னும் கட்டிய வரியைத் திரும்பப் பெறும் சலுகையை 5 சதவிகிதத்திலிருந்து 13.5 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகளே அவை. மத்திய அரசு இதனைப் பரிவுடன் பரிசீலிக்கும் என்று நம்பலாம்.
இந்திய ஜவுளி ஏற்றுமதியில், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி ஒரு முக்கிய அம்சம் ஆகும். அண்மைக்காலம் வரை, இந்தியாவின் சந்தைப் பங்கு வெறும் 3 சதவிகிதம் மட்டுமே. நல்லவேளையாக கடந்த ஓரிரு ஆண்டுகளாக இத்துறையில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருகிறது. செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் 2009-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் ரூ. 10,124 கோடி அளவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் அதேகாலத்தில் ஏற்றுமதி ரூ. 8,186 கோடியாக மட்டுமே இருந்தது. இந்த வகை ஆடைகள் வளைகுடா நாடுகள் மற்றும் டர்க்கி, சவூதி அரேபியா, இரான், இஸ்ரேல், குவைத், லெபனான், ஈராக் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
பலமுனைகளிலும் முன்னேற்றம் கண்டுவரும் இந்திய ஜவுளித்துறை அடுத்துவரும் ஆண்டுகளில் சிறப்பான ஏற்றம் பெறத் தொடங்கும் என்பதே வல்லுநர்களின் கணிப்பாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச பொருளாதார மந்தநிலையை இந்திய ஜவுளித்துறையால் சமாளிக்க முடிந்தது என்றால் அதற்கு அரசின் புத்துயிர் திட்டங்களே காரணம். அதேநேரம், இப்போது பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது. அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வருகிறது, பணவீக்கம் உயர்கிறது என்பதால், இப்போது அளித்துவரும் பொருளாதாரச் சலுகைகளையும், ஊக்குவிப்புகளையும் ஓரளவு குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு கருதுகிறது.
இந்தப் பொதுவான கொள்கையின் அடிப்படையில் ஜவுளித்துறைக்கு அளிக்கப்படும் சலுகைகள் உடனடியாகக் குறைக்கப்படுமேயானால், அது ""வெண்ணெய் திரண்டு வரும் தருணத்தில், தாழி உடைந்த'' கதையாகிவிடக் கூடும். எனவே, சலுகைகளைத் திரும்பப் பெறும் விஷயத்தில் நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...