வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தேவை சிறு, குறுந்தொழில் வளர்ச்சி

உலக அளவில், குறுந்தொழில், சிறு தொழில் மற்றும் நடுத்தரத் தொழில், அண்மைக்காலமாகச் சரிந்துள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2007-08-ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி இதற்கு ஒரு முக்கியக் காரணம் என்று கூறப்பட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:07 pm

எஸ். கோபாலகிருஷ்ணன்

உலக அளவில், குறுந்தொழில், சிறு தொழில் மற்றும் நடுத்தரத் தொழில், அண்மைக்காலமாகச் சரிந்துள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2007-08-ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி இதற்கு ஒரு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

 இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில், 2008-ம் ஆண்டில் முதல் மூன்று காலாண்டுகளில், குறுந்தொழில், சிறுதொழில் மற்றும் நடுத்தரத் தொழில்கள் பரவலாகச் சரிந்துள்ளன என சில வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

 இந்தியாவைப் பொறுத்தவரை, குறுந்தொழில், சிறுதொழில் மற்றும் நடுத்தரத் தொழில்களின் சரிவுக்கு சர்வதேச பொருளாதார வீழ்ச்சி ஒரு முக்கியக் காரணமே அல்ல. மாறாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் பருவமழை பொய்த்ததன் விளைவாக, விவசாய வளர்ச்சி சரிந்ததே, சிறுதொழிலின் இப்போதைய பின்னடைவுக்கான பல காரணங்களில் ஒன்று எனலாம். நம் நாட்டில் விவசாய வளர்ச்சிக்கும் சிறுதொழில் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

 வேளாண் வளர்ச்சி உயரும்போது, வேளாண் சார்ந்த தொழில்கள் மற்றும் சேவைகள் வளர்ச்சி அடைகின்றன. விவசாய வளர்ச்சி குன்றும்போது ஊரகப்பகுதிகளில் வீடு கட்டும் பணிகள், வீடு கட்டுவதற்குத் தேவையான பொருள்களின் உற்பத்தி ஆகியவை குறைவது கண்கூடு. இதுதவிர, இதர பிராந்திய காரணங்களும், அரசின் கொள்கை அடிப்படையிலான காரணங்களும் சிறுதொழில்களை நீண்ட காலமாகவே சீரழித்து வருகின்றன என்பதுதான் உண்மை.

 இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் சிறுதொழில்கள் சிறந்து விளங்கிய கான்பூரில் (உ.பி.) பல தொழிற்கூடங்கள் மூடப்படுகின்றன. சில வலுவான தொழிற்கூடங்கள் வேறு சாதகமான நகரங்களுக்கு இடம்பெயர்கின்றன. வளர்ச்சிக்கு ஏற்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அங்கு இல்லாததே காரணம்.

 வெண்கலப் பாத்திரங்களுக்கும், வெண்கல கைவினைப் பொருள்களுக்கும் உலகப் பிரசித்தி  பெற்ற மொராதாபாத் நகரிலும் இதே நிலைதான். மூலப் பொருள்களின் விலை கடுமையாக அதிகரித்துவிட்டதால், இழப்பைச் சந்தித்த தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. சிறந்த கைவினைக் கலைஞர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.

 தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப் புகழப்படும் திருப்பூரில், ஜவுளி மற்றும் பின்னலாடைத்தொழில் சந்திக்கும் சவால்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. கடந்த காலங்களில் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய பல சலுகைகளையும் மீறி, திருப்பூரில் பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது. போதிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இன்மையே திருப்பூரின் முக்கிய பிரச்னை. உதாரணமாக, மின்தடை, போக்குவரத்து வசதியில் அடிக்கடி ஏற்படும் முட்டுக்கட்டைகள் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

 மேற்கு வங்கத்தில், பகல்பூர் நகரில் உற்பத்தியாகும் டஸ்ஸர் பட்டு அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், இப்போது கடன் வசதியில் தாமதம், மின்தடை, ஆமதாபாத், பெங்களூர் ஆகிய இடங்களிலுள்ள பெரிய தொழிற்சாலைகளின் போட்டி ஆகியவற்றால் பகல்பூர் பட்டுத்தொழில் நசிவடைந்து வருகிறது.

 இவையெல்லாம் சில உதாரணங்களே தவிர பட்டியல் நீள்கிறது.

 குறுந்தொழில், சிறுதொழில் மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், வங்கிக் கடன் வசதி, வரிச் சலுகை உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால் இவைமட்டும் இத்தொழிலைக் காப்பாற்றுவதற்குப்  போதுமானது அல்ல.

 தொடக்க காலத்தில், இந்தச் சலுகைகளால் கவரப்பட்டு, இத்தொழிலில் கால் ஊன்றுவதற்குத் தேவையான பயிற்சி, ஆர்வம், வியாபாரத் திறமை இல்லாதவர்கள்கூட இத்தொழிலில் ஈடுபட்டார்கள். நாளடைவில், அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறினார்கள் என்பது தனிக்கதை.

 அதேநேரம், உண்மையாக உழைத்து, இத்தொழிலில் வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் வந்த திறமைசாலிகளாலும் நிலைத்து நிற்க முடியாமல் போகிறதே, அதற்கு என்ன காரணம்?

 சில நேரங்களில், பல்வேறு காரணங்களால், பொருளாதார மந்தநிலை ஏற்படும்போது, வங்கிகளின் மனோநிலையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுகிறது. வாராக் கடன் தொகையின் அளவு அவர்களைப் பூதாகரமாக அச்சுறுத்துகிறது. எவரால், எதனால் வாராக்கடன் தொகை அதிகரிக்கிறது என்பதை ஆழ்ந்து ஆராயாமல், எடுத்த எடுப்பில் வங்கிகள் சிறு, குறுந்தொழில்களுக்கு கடன் வழங்குவதற்குத் தயங்குகின்றன; அல்லது கடன் வழங்குவது தாமதிக்கப்படுகின்றன.

 இதன் விளைவாக, இந்தச் சிறு நிறுவனங்களின் நிதி நிலைமை நிலைகுலைந்து போகிறது. மூலப்பொருள்களை வழங்கியவர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதில் அதீத தாமதம் ஏற்படுகிறது. ஏன், தொழிலாளர்களுக்கும் உரிய நேரத்தில் ஊதியம் வழங்க முடியாமல் போகிறது. இவையெல்லாம் அந்த நிறுவனத்தின் செயல்பாட்டை வெகுவாகப் பாதிக்கிறது.

 அடுத்த முக்கியக் காரணம், அரசின் கொள்கை சார்ந்த ஒன்று. பல்லாண்டுகளாக, சில  குறிப்பிட்ட துறைகளில் உற்பத்தி செய்யும் வாய்ப்பு சிறு தொழில்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, இந்த ஒதுக்கீடு படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இதன்விளைவாக, பெரிய தொழிற்சாலைகளுடன் இந்தச் சின்னஞ்சிறு நிறுவனங்கள் போட்டியிட இயலவில்லை. "டி - ரிசர்வேஷன்' எனப்படும் ஒதுக்கீட்டை விலக்கும் கொள்கை, பொருளாதார சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. ஆனால், இது செயல்படுத்தப்பட்ட விதம் சர்ச்சைக்கு உரியது என்பதில் ஐயம் இல்லை.

 சிறு தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய போட்டிகளைச் சமாளிக்கும் வகையில், சிறு தொழில்களுக்கு எவ்வித உதவியும் செய்யப்படவில்லை.

 இன்னும் சொல்லப்போனால், 2001-ம் ஆண்டு முதல் நம் நாட்டில், போட்டிகள் சட்டம்  (காம்பெடிஷன் ஆக்ட்) மற்றும் போட்டிகள் (காம்பெடிஷன்) ஆணையம் செயல்படுகின்றன. ஆனால், குறுந்தொழில்கள், சிறுதொழில்கள் மற்றும் நடுத்தரத் தொழில்களுக்காக இந்த ஆணையம் இதுவரை ஏதும் செய்யவில்லை என்பதுதான் சோகம்.

அதேநேரம், இந்தோனேஷியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் தங்களது போட்டிகள் கொள்கையில்  சிறுதொழில்களையும் இணைத்துக் கொண்டு, அவற்றுக்குத் தேவையான நெறிமுறைகளை வகுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 மற்றோர் இடர்ப்பாடு என்னவெனில், தாராளமயமாக்கலின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வது எளிமையாக்கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் இறக்குமதி செய்யலாம் என்பது போன்ற ஒரு நிலை நிலவுகிறது.

இதனால் சிறு தொழில்களின் உற்பத்திப் பொருள்களின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சிறு, குறுந்தொழில்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு இறக்குமதிக் கொள்கை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

 சிறு, குறுந்தொழில் உற்பத்தியில் 20 சதவீதப் பொருள்களை மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். பாரதப் பிரதமரால் அமைக்கப்பட்ட உயர்நிலை பணிக்குழு இந்தக் கோரிக்கையைத் தனது பரிந்துரைகளில் ஒன்றாகத் தெரிவித்துள்ளது. பணிக்குழுவின் இந்தப் பரிந்துரையும் அதன் இதரப் பரிந்துரைகளும் ஏற்கப்பட வேண்டும்.

 பார்க்கப் போனால், பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில், கொள்கை அடிப்படையில் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு, சிறுதொழில் உற்பத்தி செய்யும் பொருள்களை கூடியவரை கொள்முதல் செய்தன. இந்த நியதி காலப்போக்கில் ஏனோ நீர்த்துப் போய்விட்டது.

 நாட்டின் மொத்த ஏற்றுமதியில் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 40 சதவீதம் என பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் உற்பத்தியாகும் ஒட்டுமொத்த ஆலைப் பொருள்களில் இந்த நிறுவனங்களிலிருந்து மட்டும், 45 சதவீதப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

 முறையாகப் பதிவு செய்து கொண்டோ அல்லது பதிவு செய்து கொள்ளாமலோ, 2 கோடியே 60 லட்சம் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் நாட்டில் 6 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளன.

 எனவே, இந்நிறுவனங்கள் தொடர்பாக பாரதப்பிரதமர் அமைத்த பணிக்குழுவின் பரிந்துரைகள் - முக்கியமாக, வங்கிக்கடன் வழங்குவதில் சீர்திருத்தம், சந்தைப்படுத்துதல், தொழிலாளர் நலன், தொழில்நுட்ப மேம்பாடு, தொழிலாளர் திறன் மேம்பாடு, வரிச்சலுகை ஆகியவை தொடர்பான பரிந்துரைகள் - உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும். கடந்த ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள் இன்னும் அமல்படுத்தப்படாமல் இருப்பது, மக்கள் நல அரசுக்கு அழகல்ல.

 பாரதப் பிரதமரால் அமைக்கப்பட்ட மற்றொரு முக்கியமான குழு, தேசிய திறன் மேம்பாட்டுக் குழு. இந்தக் குழுவின் இலக்கு என்னவெனில் 2020-ம் ஆண்டுக்குள் 50 கோடி நபர்களை, மேம்பட்ட செயல்திறன் படைத்தவர்களாக உருவாக்குவதாகும்.

 இந்த பிரம்மாண்டமான பயிற்சித் திட்டத்தில், பயிற்சி வசதிகள் அதிகம் இல்லாத, சிறு, குறுந்தொழில் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவது பொருத்தமாக இருக்கும்.

 எப்போது நெருக்கடிகள் கடுமையாகின்றனவோ அப்போது, முன்னேற்றத்துக்கான வழி பிறக்கும். முன் எப்போதையும்விட கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள சிறு, குறுந்தொழில்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், புதிய பாதை விரைவில் உருவாக்கப்படும் என்று நம்புவோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.