தனியார் பள்ளிகளின் தனியாட்சி

இந்தியாவில் அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் 2010 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி 6 வயது முதல் 14 வயது வரையிலான ஆண், பெண் குழந்தைகள் பயன் பெறுவர்; இதைப்ப
Updated on
3 min read

இந்தியாவில் அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் 2010 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி 6 வயது முதல் 14 வயது வரையிலான ஆண், பெண் குழந்தைகள் பயன் பெறுவர்; இதைப்போலவே இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமைச்சட்டம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

அதிக அளவிலான இளைய சமுதாயத்தைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. வருங்காலச் சந்ததியினரை கல்வியறிவு பெற்றவர்களாக உருவாக்குவதற்கு இந்த மசோதா வழி       செய்கிறது. இதன்மூலம் வலிமையான நாட்டை உருவாக்குவது நிச்சயம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

100 ஆண்டுகளுக்கு முன்பாகவே கோபாலகிருஷ்ண கோகலே இந்திய மக்களுக்குக் கல்வியை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று ஆங்கில அரசின் சட்டப்பேரவையில் பேசியுள்ளார். 90 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வி உரிமையை அடிப்படை உரிமையாக்குவதற்கு இந்திய அரசியல் அமைப்பின் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

இப்போது நாட்டில் 6 முதல் 14 வயது வரை உள்ள பிரிவில் 22 கோடிப் பேர் உள்ளனர். இவர்களில் 4.6 விழுக்காடு குழந்தைகள் அதாவது 92 லட்சம் பேர் பள்ளிகளுக்கே செல்லவில்லை. இவர்களைக் கண்டறிந்து அவர்களைப் பள்ளிகளில் சேர்க்க உள்ளூர் ஊராட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிலையில் ஏற்கெனவே பல தனியார் பள்ளிகள் இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்களை இலவசக் கல்விக்காக ஒதுக்கீடு செய்ய முடியாது என அவை எதிர்க்கின்றன.

அரசு மற்றும் கல்வித்துறையின் ஆணைகளையும், சட்டங்களையும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் ஓரளவு ஏற்றுச் செயல்படுகின்றன. ஆனால், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் வணிக நோக்கம் மட்டுமே கொண்டவை; அவை அரசின் ஆணைகளை மதிப்பதில்லை.

தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தையும் எதிர்த்து வருகின்றன; தேவையற்ற பிரச்னைகளை உருவாக்குகின்றன. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை சென்று தாமதப்படுத்தின.

"அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையைத் தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்க வழியமைப்போம்' என்பது ஆளும் தி.மு. கழகத்தின் தேர்தல் அறிக்கை. அதைச் செயல்படுத்துமாறு கல்வியமைப்புகளும், கல்வியாளர்களும் வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட பிறகே அரசின் கவனம் அதன்பக்கம் திரும்பியது.

8-9-2006 அன்று பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இப்போது செயல்பாட்டில் உள்ள பல்வேறு கல்விமுறைகளான நர்சரி கல்விமுறை, மெட்ரிகுலேஷன் கல்விமுறை, ஆங்கிலோ - இந்தியன் கல்விமுறை, ஓரியண்டல் கல்விமுறை, மாநில வாரியக் கல்விமுறை ஆகியவற்றை ஆய்வு செய்து அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கும் சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இக்குழு தமிழகம் முழுவதும் சென்று பல்வேறு வகை கல்வியாளர்கள், கல்வித்துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோரைச் சந்தித்து, விரிவாக ஆய்வு செய்து அவர்களின் கருத்துகளைத் திரட்டியது.

அக்கருத்துகளின் அடிப்படையில் குழுவின் பரிந்துரை கடந்த 4-7-2007 அன்று தமிழக முதல்வரிடம் வழங்கப்பட்டது.

அதன் பிறகும் தமிழக அரசு இந்தக் கல்வித்திட்டத்தை உடனே செயல்படுத்தவில்லை. இந்தப் பரிந்துரைகளை ஆராய ஒரு குழுவும், பிற மாநிலங்களின் செயல்பாடுகளைக் கண்டறிய ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இவ்வாறு காலதாமதம் செய்யப்படுவதைக் கண்டறிந்து சில மாணவர் சங்கங்களும், கல்வியாளர்களும், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை முதலிய கல்வியமைப்புகளும் கருத்தரங்கங்கள் மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடத்திய பிறகே இந்த ஆண்டுமுதல் சமச்சீர் கல்வியை அமல்படுத்த  அரசு முன்வந்தது.

இப்போதும்கூட பாடத்திட்டம் மட்டுமே ஒரேமாதிரியாகச் சரிசெய்யப்பட்டுள்ளதே தவிர மற்றவையெல்லாம் தனியார் பள்ளிகளின் விருப்பத்திற்கே விடப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம் பற்றிய நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் பரிந்துரைகளையும் இந்தப் பள்ளி நிர்வாகங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றம் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளன.

முதலில், ""பள்ளிகளைத் திறக்க மாட்டோம்'' என்று ஒத்துழையாமை இயக்கம் நடத்திப் பார்த்தது. தமிழக அரசின் கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகு, ""பள்ளிகள் திறக்கப்படும்'' என்றும், ""நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் கல்விக் கட்டணப் பரிந்துரைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்'' என்றும், ""அதுவரை பழைய கட்டணங்களையே வசூல் செய்ய  அனுமதிக்க வேண்டும்'' என்றும் கேட்டுக்கொண்டே, பழையபடியே கட்டணங்களை வாங்கிப் பெட்டிகளை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.

பள்ளியின் கட்டமைப்பு வசதி, ஆசிரியர் ஊதியம், மாணவர் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தக் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அரசும், கல்வித்துறையும் கூறிவிட்டால் போதுமா? எந்தப் பள்ளிக்கு எவ்வளவு கட்டணம் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டாமா? அந்தப் பள்ளியின் கல்விக் கட்டணம் என்ன என்றே பெற்றோர் அறியாத நிலையில் பள்ளிகள் கேட்கும் கட்டணத்தைக் கட்டுவதைத் தவிர வேறு வழி என்ன?

அரசாங்கத்துக்கு எதிராக இந்தத் தனியார் பள்ளிகள் போர்ப்பிரகடனம் செய்கின்றன. இந்தப் பள்ளி நிர்வாகங்களுக்கு இப்படிப்பட்ட துணிச்சலைக் கொடுத்தது யார்? தனியார் பள்ளிகள் தனியரசு நடத்துகின்றனவா? போட்டி ஆட்சி நடத்துவதை அரசு பொறுமையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா?

இந்தத் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஆதரவாக ஆளும் கட்சியினரும், அரசியல்வாதிகளும் செயல்படுகின்றனர். அத்துடன் ஓய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரிகளே இந்தப் பள்ளி நிர்வாகங்களுக்கு ஆலோசகர்களாக இருக்கின்றனர். அரசின் சட்டத்தையும், விதிகளையும் எப்படியெல்லாம் மீறலாம் என்பதை இவர்களே சொல்லிக் கொடுக்கின்றனர். இதற்காக அவர்கள் தனி ஊதியம் பெறுகின்றனர்.

அரசாங்கத்தின் மெத்தனப் போக்குக்கும், மென்மையான நடவடிக்கைகளுக்கும் காரணம் தெரிகிறதா? பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக இருப்பது இப்படித்தான். இவர்களிடம் இருந்த "இரும்புக்கரம்' கரும்புக்கரமாக மாறி விட்டதா?

ஒரு காலத்தில் எத்தனையோ கல்வி வள்ளல்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது. வள்ளல் பச்சையப்பர், கலவல கண்ணன் செட்டி, அழகப்பச் செட்டியார், அண்ணாமலைச் செட்டியார், என்.கே. திருமலாச்சாரியார் போன்ற கொடையாளர்கள் கை சிவக்கச் சிவக்கச் செல்வத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தனர். சென்னை, காஞ்சிபுரம், சிதம்பரம், மதுரை, திருச்சி, தஞ்சை போன்ற நகரங்களில் அவர்கள் இனாமாக விட்டுச் சென்ற இடங்களின் சொத்து மதிப்பை எண்ணிப் பார்த்தால் வியப்பாகவும் திகைப்பாகவும் இருக்கிறது.

"அன்னசத்திரம் ஆயிரம் கட்டுவதைவிட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே புண்ணியம் கோடி' என்ற பாரதியின் பாடலை அவர்கள் பொன்னெனப் போற்றி வாழ்ந்தனர்; அறவாழ்வு வாழ்ந்து புகழை நிலைநிறுத்தி பூதவுடலை மறைத்துக் கொண்டனர்; இன்றும் அவர்கள் அந்தக் கல்விக்கூடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் நிறுவிச் சென்ற அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் அரசின் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு சிறப்போடு செயல்படுகின்றன; ஆனால், இங்கு அண்மையில் திடீரென முளைத்த நர்சரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அரசின் சட்டதிட்டங்களை மட்டுமல்ல, இயற்கை தரும நியாயங்களையும் காலிலே போட்டு மிதிக்கின்றன; இதயத்தை எடுத்து எறிந்துவிட்ட இவர்களே கல்வியை வளர்ப்பதாகக் கூறுவது வேதனையிலும் வேதனை.

இதற்கு முழுக்க முழுக்க தனியார் பள்ளிகளையே குறை கூற முடியுமா? அதிக கட்டணம் வாங்கும் பள்ளிகளே சிறந்த கல்வியைத் தரும் கல்விக்கூடங்களாகக் கருதும் மாயை மக்களிடம் பரவியுள்ளது. பொதுமக்களின் அறியாமையையும், ஆங்கில மோகத்தையும் இவர்கள் அறுவடை செய்கின்றனர். இப்போது, "குய்யோ முறையோ' என்று அலறுவதால் பயன் என்ன?

இந்த ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகளைப் பார்த்தால் இது மாயைதான் என்பது தெரியும். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் திருநெல்வேலி மாநகராட்சிப் பள்ளி மாணவியே மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இரண்டாம் இடம்பெற்ற 4 பேரும், மூன்றாம் இடம் பெற்ற 11 பேரும் புறநகர்ப் பகுதி மாணவ, மாணவிகளே என்பது எதனைத் தெரிவிக்கிறது? இந்தக் கட்டணக் கொள்ளையர்களின் கொட்டம் அடங்க இது போதாதா?

நமது அரசியலமைப்பு, இந்திய மக்களின் "சமத்துவ உரிமை'யை உறுதி செய்கிறது. சமத்துவத்தை எங்கிருந்து தொடங்குவது? கல்வியிலிருந்துதான் தொடங்க வேண்டும். சமூக நீதியின் முதல்படியாகக் கருதப்படுவது சமச்சீர் கல்வியாகும். அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பது அரசியல் சட்டத்தையே அவமதிப்பது ஆகாதா?

தனியார் பள்ளிகள் தனியரசாகச் செயல்படுவதை இனியும் தமிழக அரசு அனுமதிக்கலாகாது. மக்களின் நலனை நாடாமல் மக்களாட்சியின் பெருமை பேசுவதில் பயன் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com