ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தள்ளாட்டத்தைத் தவிர்ப்போம்

மதுவிலக்கு குறித்த குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கும் அதேவேளையில் கள் இறக்கும் உரிமைகோரி போராடிக் கொண்டேயிருக்கிறார்கள் பனைத்தொழிலாளர்கள். ÷தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மூலம் அர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:14 pm

மீனா சுந்தர்

மதுவிலக்கு குறித்த குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கும் அதேவேளையில் கள் இறக்கும் உரிமைகோரி போராடிக் கொண்டேயிருக்கிறார்கள் பனைத்தொழிலாளர்கள்.

÷தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மூலம் அரசால் நடத்தப்படுகின்ற மதுபானக்கடைகளின் புண்ணியத்தில் தற்சமயம் இளைஞர்கள் எப்போதும் சந்தோஷத்தை அனுபவித்தபடியே வாழும் கலையைப் பழகி வருகின்றனர்.

மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள்கூட தற்சமயம் மதுவகைகளின் தரம்பார்த்துப் பருகி, கண்ணெனக் கல்வியைக் கற்றுவரும் சூழல் மிகுந்த கவலையைத் தருகிறது.

இவர்களே இப்படியென்றால் கல்லூரி மாணவர்களைப் பற்றிக் கேட்க வேண்டியதில்லை.

÷பிறந்தநாள், திருமணநாள் போன்ற வைபவங்களின் நினைவாக கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடிய காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. அப்படியே இருந்தாலும் அவைகளெல்லாம் சம்பிரதாயத்துக்கு வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கே. ஆண்கள் நண்பர்கள் வட்டத்துடன் கொண்டாடித் திளைப்பது மதுபானக் கடைகளில்தான் என்பதை நூறு சதவீதம் அடித்துச் சொல்லலாம்.

÷தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் திருநாளில் மட்டும் விற்பனையான மதுபான வகைகளின் மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாயைக் கேட்டால் நமக்கு மயக்கமே வந்துவிடும் போலிருக்கிறது. ஆம்! அன்று ஒருநாள் மட்டும் ரூ.66 கோடிக்கு தமிழகத்தில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

மேலும், டாஸ்மாக் கடைகளில் ஆண்டுக்கு ரூ. 10,500 கோடி அளவுக்கு மதுபான வகைகள் விற்பனையாகி வருவதாகவும், ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 50 கோடி வரை மதுபானங்கள் விற்பனை செய் யப்படுவதாகவும் ஒரு புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது. சமீபத்தில் கொண்டாடப்பட்ட புத்தாண்டு நிகழ்வின்போது மட்டும் ரூ. 47 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன எனவும், இதைவிட பொங்கல் பண்டிகைக்கு ரூ. 19 கோடி கூடுதலாக விற்பனையை உயர்த்தி நம் குடிமகன்கள் சாதனை நிகழ்த்தியுள்ளனர் என்பதும் பெரும் அதிர்ச்சியாகவும், தள்ளாடும் தமிழகத்தின் உச்சபட்ச காட்சியாகவும், வேதனையாகவும் இருக்கிறது. அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் நலத்திட்டங்கள் எல்லாமும் டாஸ்மாக் வருவாய் பெருக்கத்தின்மூலமே தேக்கமின்றிச் சிறப்பாக நிறைவேற்றப்படுகிறது என்றும், ஆகவே கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொழுத்துக் கொண்டிருந்த தனியார் மதுவிற்பனையாளர்களின் தலையில்தட்டி, அரசே நடத்தும் இக்கடைகளால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், வாழ்வின் மீதான ஓர் உறுதித்தன்மையும் கிடைத்திருக்கிறது என்றும், இக்கடைகளை அரசு தொடர்ந்து நடத்துவதில் எந்தத் தவறுமில்லையென மக்களிலேயே ஒருசாரார் நியாயம் கற்பித்து முழங்கி வந்தாலும், எதிர்காலச் சமுதாயத்தின் வாழ்வு இருண்டு போவதற்கான பெரும் காரணமாக இந்தக் கடைகளே விளங்குகின்றன என்பதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை.

÷கடந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்த இத்திட்டத்தை நிறுத்தினால் லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை பறிபோவதற்கு யார் பொறுப்பு? அப்பெரும் பழியைச் சுமக்க அரசு தயாராக இல்லை என்பதைப்போல ஆளுங்கட்சித் தரப்பு நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

÷எதிர்க்கட்சிகள் டாஸ்மாக் தொழிற்சங்கம் அமைப்பதிலும், அக்கடைகளில் பணிபுரிவோரின் நலம் பேணுவதிலுமே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஒரு சிலர் இதனை நிறுத்த வேண்டிய அவசியம் குறித்து மாநாடுகளும், பொதுக்கூட்டங்களும் நடத்தி வலியுறுத்தி வருகின்றனர்.

÷"மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்குக் கேடு' என்ற வாசகம் அனைத்து மதுபாட்டில்கள் மற்றும் டாஸ்மாக் பெயர்ப்பலகையிலும் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

மதுவால் தீமையே என்கிற கருத்தில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

ஆகவே, தொலைநோக்குப் பார்வையோடு அனைவரும் ஓரணியில் நின்று படிப்படியாக மதுபானக் கடைகளை ஒழிப்பதே நாட்டுக்கு நலம் பயக்கும். மதுக்கடைகளில் பணிபுரியும் இளைஞர்களின் வாழ்வும் பாதிக்காத அளவுக்கு அவர்கள் அனைவரையும் அரசின் காலிப்பணியிடங்களில் நியமனம் செய்வதே அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.