வலுவான நிதித்துறையை நோக்கி...
பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர், நிதித்துறைக்கு நிறைய ஒதுக்கீடு ஏதும் செய்யவில்லை; ஆனால், தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சில கொள்கை முடிவுகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளார். இது கவனிக்கப்பட வேண்டிய ஓர்


பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர், நிதித்துறைக்கு நிறைய ஒதுக்கீடு ஏதும் செய்யவில்லை; ஆனால், தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சில கொள்கை முடிவுகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளார். இது கவனிக்கப்பட வேண்டிய ஓர் அம்சம்.
÷வழக்கம்போல், அரசுடைமை வங்கிகளின் மூலதனம் உரிய அளவு உயர்த்தப்படுவதற்காக, நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்கிறது. 2008-09-ம் ஆண்டில் நான்கு அரசு வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பதற்காக, ரூ. 1,900 கோடி வழங்கப்பட்டது. நடப்பாண்டில் அதேபோல் வங்கிகளின் மூலதனத்துக்காக ரூ. 1,200 கோடி மத்திய அரசு வழங்குகிறது. இதே காரணத்துக்காக, வரும் நிதி ஆண்டில் கணிசமான தொகையை, அதாவது ரூ. 16,500 கோடி அளவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நடவடிக்கையின் மூலம் அனைத்துப் பொதுத்துறை வங்கிகளிலும் மூலதனம் நிர்ணயிக்கப்பட்ட 8 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துவிடும்.
÷பொதுத்துறை வங்கிகளில் மூலதனம் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் இருக்க வேண்டும் என்பதில் இரு கருத்துகள் இல்லை. அதேநேரம், இப்போதைய சூழலில், இந்த மூலதனப் பொறுப்பை மத்திய அரசே ஏற்றுக் கொள்கிறது என்பதும் புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால், காலாகாலத்துக்கும் இந்தச் சுமையை அரசே ஏற்பது சாத்தியமா? பட்ஜெட் மூலம் ஒதுக்கீடு செய்யும்போது மறைமுகமாக அந்தச் சுமை மக்கள் தலையில்தானே விழும்?
இன்னொருபக்கம் பார்க்கும்போது, வங்கிகள் வழங்கும் கடன் தொகை அதிகரிக்க, அதிகரிக்க மூலதன விகிதம் அதிகரிக்கத்தானே செய்யும்? எனவே சம்பந்தப்பட்ட வங்கிகளே மூலதனச் சந்தையின் மூலம், முதலீட்டாளர்களிடமிருந்து தங்களுக்குத் தேவையான மூலதனத்தைத் திரட்டிக் கொள்வதே பொருத்தமாக இருக்கும்.
÷இதை உணர்ந்துதான், பொதுத்துறை வங்கிகள் சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ, பங்குச் சந்தையிலிருந்து மூலதனம் திரட்டத் தொடங்கிவிட்டன என்பது ஆறுதல் அளிக்கிறது. முதலீட்டாளர்களின் ஆதரவும் வங்கிகளுக்குக் கிடைத்து வருகிறது. ஆனால், இந்த வழிமுறைக்கும் ஓர் எல்லை உண்டு. இப்போதுள்ள கோட்பாடுகளின்படி, 51 சதவீத மூலதனம் மத்திய அரசின் பங்காக இருக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, முன்னதாக, வங்கிகளில் அரசின் மூலதனத்தை 33 சதவீதமாகக் குறைக்க வழிசெய்யும் சட்டத்திருத்த மசோதா தயாரிக்கப்பட்டது. ஆனால், இப்போது மத்திய அரசு அதைச் சட்டமாக்க விரும்பவில்லை என்பது வெளிப்படை.
÷இந்நிலையில், வேறு எந்த, எந்த வழிகளில் மூலதனத்தைப் பெருக்கலாம் என்பதை மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
÷வங்கிகளை இணைப்பதன் மூலம் இதைச் செய்யலாம் என்ற கருத்து கடந்த சில ஆண்டுகளாக விவாதிக்கப்படுகிறது. ஆனால், மூலதனத்தைப் பெருக்குவதற்கு அது சிறந்த வழி அல்ல என்பதே பலரது எண்ணம்.
÷அதுதவிர, பாரத ரிசர்வ் வங்கியின் வெளிப்படையான கருத்து என்னவெனில், உடனடித் தேவை, சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்பதே தவிர, வங்கிகளை இணைப்பதன் மூலம் பிரம்மாண்டமான வங்கிகளை உருவாக்க வேண்டும் என்பது அல்ல.
÷இந்த நோக்கம், புதிய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 2000 பேருக்கு அதிகமாக மக்கள்தொகை உள்ள குக்கிராமங்களிலும் வங்கிச் சேவை மற்றும் காப்பீட்டுச் சேவை கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற கொள்கை அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.
÷இத்திட்டத்தின் மூலம் 60,000 குக்கிராமங்கள் பயன் அடையும். இந்தச் சேவையை, வங்கிகள் தங்கள் கிளைகளை நிறுவித்தான் வழங்க வேண்டும் என்பதில்லை. இதர ஏற்பாடுகளின் மூலம் இச் சேவையை மக்களுக்கு நேரடியாக வழங்க முடியும். இதற்கான விரிவான செயல்திட்டம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். இதற்குத் தேவையான தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக "நபார்டு' அமைப்பிடம் உள்ள சிறப்பு நிதியத்துக்கு கூடுதலாக ரூ. 100 கோடி வழங்கப்பட உள்ளது.
÷மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட்டில் தெரிவித்துள்ள மற்றோர் அறிவிப்பு என்னவெனில், புதிய தனியார் வங்கிகளை அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கும் என்ற "ஒரு வரி' அறிவிப்பாகும். இதுகுறித்த விரிவான விளக்கம் வரும் வரை இதுபற்றி விவாதிக்க வழியில்லை. எது எப்படி இருந்தாலும், இவ்விஷயத்தில் பாரத ரிசர்வ் வங்கியின் கொள்கையில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. நாட்டிலுள்ள பெரிய, பெரிய தொழில் குழுமங்கள் எளிதில் வங்கிகளை அமைத்துவிடலாம் என்பதல்ல இதன் பொருள். காரணம், பெரிய தொழில் குழுமங்கள் வங்கிகளில் ஒரு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் பங்குகளை வைத்துக் கொள்ள முடியாது என்பதே சட்டம்.
÷அதுமட்டுமல்லாமல், இன்னொரு விஷயத்தை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். 1990-களில் பல தனியார் வங்கிகள் திறக்கப்பட்டன. ஏற்கெனவே சிறப்பாகச் செயல்பட்டு வந்த தொழில் மேம்பாட்டு நிதி அமைப்புகளால் தோற்றுவிக்கப்பட்ட புது வங்கிகள் மட்டுமே வெற்றி பெற்றன. மற்ற தனியார் வங்கிகளில், பழைய பெரிய வங்கி மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையைப் பாதுகாப்பதற்காக அந்த வங்கியை ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் என்னும் அரசுடைமை வங்கியுடன் இணைக்கப்பட்டது. எனவே, புதிய தனியார் வங்கிகள் பற்றிய பட்ஜெட் அறிவிப்பு மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தவில்லை.
÷பட்ஜெட்டில் உள்ள வேறு ஓர் அறிவிப்பு உண்மையிலேயே தொலைநோக்குப் பார்வை கொண்டது எனலாம். அதுதான் ""நிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு சபை'' என்பதாகும்.
÷இப்போது வங்கிகளைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், வழிநடத்துவதற்கும் பாரத ரிசர்வ் வங்கி உள்ளது. காப்பீட்டுத் துறையை நெறிப்படுத்துவதற்கு, காப்பீடு நெறிமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.) உள்ளது. முதலீட்டுச் சந்தை, பங்குச் சந்தை ஆகியவற்றைக் கண்காணிப்பதற்கும், வழிகாட்டுதல்களுக்கும் "செபி' செயல்படுகிறது.
÷இவை அனைத்துக்கும் ஒரு பொதுவான கொள்கை வகுக்கும் உயர்நிலை சபையாக அது அமையும் என்று தெரிகிறது. ஆழ்ந்த ஆலோசனைகளுக்குப் பிறகே இந்தச் சபையின் விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் வரையறுக்கப்படும் என்பது தெளிவு.
÷இப்போது ஒருசில விஷயங்களில் மேற்கூறிய கண்காணிப்பு அமைப்புகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் எழுகின்றன. உதாரணமாக, யூனிட்கள் தொடர்புடைய காப்பீடு திட்டங்களைச் (யூலிப்) செயல்படுத்துவதில், அண்மைக்காலமாக, ஐ.ஆர்.டி.ஏ. மற்றும் செபிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு வருகிறது. ""எது, யாருடைய பொறுப்பு?'' என்பதை நிர்ணயிப்பதில் சர்ச்சை எழுந்துள்ளது. காரணம், யூலிப் செயல்பாட்டில் அந்த இரண்டு நிறுவனங்களுக்குமே தொடர்பு உள்ளது. முதலீடு என்ற வகையில் செபி வருகிறது. காப்பீடு என்ற வகையில் ஐ.ஆர்.டி.ஏ. வருகிறது.
÷வருங்காலங்களில் முதலீடு, நிதி தொடர்புடைய புதிய புதிய நூதனமான திட்டங்கள் உருவாகும் என்பதால், இத்தகைய கருத்து வேற்றுமைகள் ஏற்படுவது இயல்பு. புதிய உயர்நிலைச் சபை போதிய முன்யோசனை மற்றும் ஆலோசனைக்குப் பிறகு அமைக்கப்படுமேயானால், இப்போதைய கண்காணிப்பு அமைப்புகளும் ஆணையங்களும் மேலும் வலுவடையுமே அல்லாமல், பாதிப்படையாது, புதிய சபையை, ""இது என்ன, ஒரு சூப்பர் ரிசர்வ் வங்கியா?'' அல்லது ""ஒரு சூப்பர் செபியா?'' என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது.
÷மாறாக, பல வகை நிதி அமைப்புகளின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து, மாறி வரும் சூழல்களுக்குத் தேவையான சீர்திருத்தங்களை உடனுக்குடன் பரிந்துரை செய்வதற்கும், கடந்த இரண்டு ஆண்டுகளில், சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி சிக்கல்களிலிருந்து கற்ற பாடங்களின் அடிப்படையில், உகந்த பாதுகாப்பு அரண்களை அமைப்பதற்கும் உத்தேச உயர்நிலை சபை வழிவகுக்கும் என்பதே உண்மை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...