கீழ்த் திசை நோக்கி வர்த்தகம்!
தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதற்கு, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முனைப்புக் காட்டி வருகிறது. ஜப்பான், வியட்நாம், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா


தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதற்கு, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முனைப்புக் காட்டி வருகிறது. ஜப்பான், வியட்நாம், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, மியான்மர் போன்ற நாடுகளுடன் இருதரப்பு வர்த்தக உறவுகளைப் பலப்படுத்தும் வகையில் கடந்த பல ஆண்டுகளில், இரு நாடுகளும் செய்து கொண்டுள்ள பல்வேறு உடன்பாடுகள் தற்போது பலன் அளிக்கத் தொடங்கியுள்ளன.
2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில், அப்போதைய பாரதப் பிரதமர் வாஜ்பாய் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மேற்கொண்ட அரசு முறைப்பயணம், கீழ்த் திசை நோக்கி இந்தியாவின் வர்த்தகத்தை மேம்படுத்தும் கொள்கைக்கு மேலும் உத்வேகம் அளித்தது என்பதை இங்கு நினைவுகூர்வது பொருத்தமே.
இந்தப் பின்னணியில், சிங்கப்பூர் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் லிம் ஹிங் கியாங் மே மாதம் 11-ம் தேதி புதுதில்லியில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் அனந்த் ஷர்மாவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.
தற்போது இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு இடையேயான வர்த்தகத்தின் மதிப்பு 16 பில்லியன் டாலராக உள்ளது. (1 பில்லியன் என்பது 100 கோடி). இதை அடுத்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு - அதாவது 32 பில்லியன் டாலராக உயர்த்துவது என்று இரு நாட்டு அரசுகளும் முடிவு செய்துள்ளன.
இந்தியா - சிங்கப்பூர் இடையேயான கலாசார நட்புறவு தொன்மையானது. அந்நாட்டில் ஏராளமான இந்தியர்கள் வாழ்கின்றனர். எனவே, இந்தியா - சிங்கப்பூர் இடையே இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் வகையில் ஏற்கெனவே பல்வேறு உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இவற்றில் தொலைத்தொடர்புத் துறையிலும், கலாசாரம் மற்றும் பண்பாட்டுத் துறையிலும் உள்ள உடன்பாடுகள் முக்கியமானவை. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மேம்பட்ட ஒத்துழைப்பு நிலவி வருகிறது.
இவைதவிர, தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் சிங்கப்பூர் நிறுவனங்களின் முதலீடுகளைப் பெறுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்துறை, ஆயத்த ஆடைகள் தொழில், தமிழகத் துறைமுகங்களின் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக சிங்கப்பூர் நிறுவனங்களின் முதலீடுகளையும் தொழில்நுட்பங்களையும் பெறுவதற்கும் இந்திய மாநிலங்களுக்கு இடையே போட்டிகள் நிலவுகின்றன.
இன்னும் சொல்லப்போனால் தமிழக அரசைப் பொறுத்தவரை முதலீடுகளை ஈர்ப்பதில் காட்டும் அதே அக்கறையை நவீனத் தொழில்நுட்பக் கூட்டுறவைப் பெறுவதிலும் காட்டுகிறது.
உதாரணமாக, கூவம் நதி சீரமைப்புத் திட்டத்தை எடுத்துக்கொள்வோம். அத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு நிதி உதவியை வெவ்வேறு நிதி அமைப்புகளிலிருந்து பெறுவதற்கு முனைந்தபோதிலும், நவீனத் தொழில்நுட்ப உதவியை சிங்கப்பூர் நிறுவனங்களிலிருந்து பெறுவதற்கே தமிழக அரசு முன்னுரிமை அளிக்கிறது.
இரண்டாவதாக, "நிதி நகர்' அமைக்கும் திட்டத்தை எடுத்துக்கொள்வோம். மோட்டார் வாகனத் தொழில், மின்னணு வன்பொருள் (ஹார்டுவேர்) உற்பத்தித் தொழில்களில் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில், அண்டை மாநிலங்களை முந்திக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசின் அடுத்த இலக்கு "நிதி நகர்' அமைப்பதே. வங்கிகள், பெரும் நிதி நிறுவனங்கள், முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு உறுதுணையாக உள்ள அமைப்புகளின் சங்கமமாக ஒரே இடத்தில் திகழ்வதுதான் "நிதி நகர்'. மும்பை, சிங்கப்பூர் மற்றும் துபை ஆகிய இடங்களில் ஏற்கெனவே நிதி நகர்கள் இயங்குகின்றன. இவை பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பவை.
சென்னையில் உள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆகியோருடன் விவாதித்த பிறகு, சிங்கப்பூருக்கு மூத்த அமைச்சர்கள் நேரில் சென்று அங்குள்ள நிதி நகரைப் பார்வையிட்ட பிறகு தான் சென்னையில் நிதிநகர் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை இரண்டே ஆண்டுகளில் நிறைவேற்றுவதற்காக, இந்திய தொழில்கூட்டமைப்பின் தமிழ்நாடு சபை, "டிட்கோ', "சிப்காட்' மற்றும் தமிழ்நாடு அரசு தொழில்துறை ஆகியவை இணைந்து செயல்படத் தொடங்கிவிட்டன. இத் திட்டத்தை நிறைவேற்றுவதில் சிங்கப்பூர் நிதிநகர் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளப்படும் என்று சொல்லத் தேவையில்லை.
இந்நிலையில், சிங்கப்பூர் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் லிம் வருகையால், வர்த்தகம் தொடர்புடைய செயல்பாடுகள் மேலும் உத்வேகம் அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.
முக்கியமாக, ஏற்கெனவே செய்து கொள்ளப்பட்ட பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடுகளின்படி, தங்குதடையில்லாத வர்த்தகம் மற்றும் சேவை அளிப்பு ஒப்பந்தங்களின் செயலாக்கம் எந்த அளவு சிறப்பாக உள்ளது என்பதை இரு அமைச்சர்களும் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆய்வு செய்ய குறைபாடுகள் இருப்பின் அவற்றை நீக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிங்கப்பூரில் வசிக்கும் தொழில் முறை இந்திய டாக்டர்கள், பல் மருத்துவர்கள், செவிலியர்கள், பட்டயக் கணக்காளர்கள், கட்டடக் கலை நிபுணர்கள், கம்பெனி செயலர்கள் ஆகியோர் முழுமையாக அந்த நாட்டு அரசால் அங்கீகரிக்கப்படவில்லை. இவர்களை அங்கீகரிப்பதில் மேலும் காலதாமதம் கூடாது.
"பேடன்ட்' அல்லாத இந்திய மருந்து வகைகள் சிங்கப்பூரில் சந்தைப்படுத்துவதற்கு வழிவகுக்கும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாகியுள்ளது வரவேற்கத்தக்கது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்திய மருந்துகள் சந்தைப்படுத்துவதற்கு இது மேலும் உதவும் என்று நம்பலாம்.
தடையில்லா வர்த்தகம் மட்டுமல்லாமல், இருநாடுகளுக்கிடையே, மனிதவள பர்வர்த்தனைக்கும் இருக்கக்கூடிய தடைகள் நீக்கப்பட வேண்டும். இதை உறுதிசெய்யும் வகையில், இரு நாடுகளைச் சேர்ந்த தொழில்முறை மருத்துவர், பட்டயக் கணக்காளர் போன்றோர் தொழில், வர்த்தகம் மற்றும் பணிநிமித்தம் மேற்கொள்ளும் பயணங்களுக்கான வரைமுறைகள் வெகுவாக எளிமைப்படுத்திட வேண்டும்.
மேற்கூறியவற்றுக்கான பேச்சுவார்த்தைகள் அமைச்சர்கள் அளவில் நிகழ்ந்த பிறகு அதிகாரிகள் அளவில் கூடிப் பேசி செயல்முறைகளை வகுத்து குறித்த காலத்தில் செய்து முடிப்பதற்கு முனைப்புக் காட்ட வேண்டும்.
இந்தத் திட்டங்களை மேலும் துரிதப்படுத்துவதற்காக தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இரு அமைச்சர்களின் இப்போதைய நேர்முகப் பேச்சுகளின் பயனாக இருநாடுகளுக்கிடையே நீண்டகால அடிப்படையில் வர்த்தக மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்குரிய வழிமுறைகளைக் காண உயர்நிலை ஆய்வுக்குழு ஒன்றை அமைப்பதற்கு இரு நாடுகளும் முன்வர வேண்டும்.
இந்தியா-சிங்கப்பூர் நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் (சி.இ.ஓ) கூட்டமைப்பு ஒன்றை அமைப்பதற்கு இருநாட்டு அமைச்சர்கள் ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
இதை கால தாமதமில்லாமல் செயல்படுத்தினால் நல்லது. இந்த முன்முயற்சி வர்த்தக மேம்பாட்டை விரைவுபடுத்துவதுடன், உயர்நிலை அதிகாரிகள் ஒருவருக்கொருவர் உணர்வுபூர்வமாகப் புரிந்துகொண்டு, இணைந்து செயல்படுவதற்கும் வழிவகுக்கும் என்று நம்பலாம்.
சர்வதேச அளவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிங்கப்பூர் ஒன்று. எனினும் சிங்கப்பூர் அந்தப் பின்னடைவிலிருந்து விரைந்து மீட்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தென்கிழக்காசிய நாடுகளுடன் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்தியாவின் இலக்கு என மத்திய அரசு பிரகடனம் செய்து பல்லாண்டுகள் உருண்டோடிவிட்டன.
"கீழ்த் திசையை நோக்கி...' என அப்போது மிகப்பிரபலமடைந்த இந்தக் கொள்கை, இப்போது மெல்ல மெல்ல செயல்வடிவம் பெற்று வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. அத்துடன்,இதர தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சிங்கப்பூர் அனுபவம் வழிகாட்டுவதாகவும் அமையட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...