பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' என்கிற வள்ளுவ நெறிதான் பொது விநியோகத் திட்டங்களின் அடிப்படை. உணவில்லை என எவரும் துன்பப்படக்கூடாது என்கிற உயரிய நோக்கங்களுடன்தான் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
÷இந்தத் திட்டங்களை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதற்காக, தேசிய உணவு உத்தரவாதச் சட்டத்தை இயற்றுவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மே 6-ம் தேதி நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றும்போது இந்தச் சட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்களுக்கு கிலோ ரூ.3 விலையில் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கவும் தற்போது நடைமுறையில் இருக்கும் பொதுவிநியோகத் திட்டத்தைச் சீர்திருத்துவதற்கும் இந்தச் சட்டம் வகை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அனைவருக்கும் உணவுக்கு உத்தரவாதம் அளிப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம். ஆனால், இந்த நோக்கம் நடைமுறையில் நிறைவேறுமா என பலரது மனதிலும் சந்தேகம் எழுந்திருக்கிறது. நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை குறித்து அரசு சொல்வதற்கும் அதன் நோக்கத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதுதான் இந்தச் சந்தேகம் எழுவதற்குக் காரணம்.
÷ஏழைகளைப் பற்றி பொருளாதார நிபுணர்கள் தந்திருக்கும் புள்ளி விவரங்கள் அனைத்தும் குழப்பமானவையாகவே இருக்கின்றன. ஒவ்வொரு கமிட்டியும் ஒவ்வொரு வகையான புள்ளிவிவரங்களைத் தந்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நாட்டில் எவ்வளவு ஏழைகள் இருக்கிறார்கள் என்பதிலேயே யாருக்கும் தெளிவில்லை.
இந்த எண்ணிக்கைக் குழப்பத்தால் பெரிய ஆபத்து ஒன்றுமில்லை. ஆனால், ஏழைகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும்போது, அரசுகள் தங்களுக்குச் சாதகமான எண்ணிக்கையை எடுத்துக்கொள்வதற்கு இந்தக் குழப்பம் ஒரு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.
தற்போது சுரேஷ் தெண்டுல்கர் கமிட்டி, சக்úஸனா கமிட்டி, அமைப்புசாரா துறையின் தொழில்களுக்கான தேசிய ஆணையம் (என்சிஇயூ) ஆகியவற்றின் 3 வகையான புள்ளி விவரங்கள் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.
÷நாட்டில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வசிப்பதாக சக்úஸனா கமிட்டி கூறியுள்ளது. கிராமப்புறங்களில் 2,400 கிலோ கலோரிகளும் நகர்ப்புறங்களில் 2,100 கிலோ கலோரிகளும் சக்தி கொண்ட உணவுப் பொருள்களை வாங்குவதற்குத் திறனற்றவர்களை ஏழைகள் என்று இந்தக் கமிட்டி மதிப்பிட்டது. பல ஆண்டுகளாக ஏழைகள் என்ற வரையறைக்குப் பயன்படும் முறை இது. இதன்படி நகர்ப்புறங்களில் ரூ.1000-க்கும் கிராமப்புறங்களில் ரூ.700-க்கும் குறைவான வருமானம் ஈட்டுவோரை ஏழைகள் என்றது இந்தக் கமிட்டி. திட்டக்குழு தந்த வருவாய் வரம்பைக் காட்டிலும் இது அதிகமாகும்.
திட்டக்குழுவின் கணக்குப்படி நகர்ப்புறத்தில் ரூ.539-க்கும் கிராமப்புறத்தில் ரூ.369-க்கும் குறைவான வருவாய் கொண்டவர்களே ஏழைகள். சரி, இதுதான் இப்படி முரண்பாடாக இருக்கிறது என்றால், என்சிஇயூ-வின் புள்ளி விவரம் அதிர்ச்சியளிக்கிறது. நாட்டில் 77 சதவீதம் பேருக்கு ஒரு நாளைக்கு ரூ.20-க்கும் குறைவான வருமானமே கிடைப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் அந்த அமைப்பு, அவர்களில் 87.8 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், 85 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என்றும், 77.9 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்டோர் என்றும் மதிப்பிட்டிருக்கிறது.
இதில் கவலைதரும் அம்சம் என்னவென்றால், ஏழைகள் என்று வரையறுக்கப்பட்டோரில் பெரும்பகுதியினருக்கு முறையான பணிகளைச் செய்யும் திறன் இல்லை என்பதுதான். இந்தியாவில் படிப்பறிவில்லாதவர்களில் 86 சதவீதம் பேர் ஏழைகளாகவும், ஏழைகளில் 78.6 சதவீதம் பேர் தொடக்கக் கல்வியைக்கூடத் தாண்டாதவர்களாகவும் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. அதனால் இந்த மக்கள் தினக்கூலிகளாகவும் அமைப்புசாரா பணியாளர்களாகவும் பணி உத்தரவாதமில்லாத நிலையில் வாழ்கின்றனர்.
÷சுரேஷ் தெண்டுல்கர் கமிட்டியின் அறிக்கை இவற்றுக்கெல்லாம் நேரெதிரானதாக இருக்கிறது. நாட்டில் 37.2 சதவீதம் பேர் மட்டுமே ஏழைகள் எனத் தெரிவித்திருக்கும் இந்தக் கமிட்டி, இந்த விகிதம் கிராமப் புறங்களில் 41.8 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 25.7 சதவீதமாகவும் இருப்பதாகக் கண்டறிந்திருக்கிறது. ஏழைகளைக் குறிவைத்து செயல்படுத்தப்படும் திட்டங்களில் அதிகம் பேர் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த விகிதங்கள் 10 சதவீதம் அதிகரித்து மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் அந்தக் கமிட்டி தெரிவித்திருக்கிறது. ஏழைகளை வரையறுப்பதில் உணவுப் பொருள்களை வாங்கும் திறனை மட்டுமல்லாமல், சுகாதாரம், கல்விச் செலவு உள்ளிட்டவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது. அப்படியிருந்தும், மற்ற மதிப்பீடுகளைவிட ஏழைகளின் எண்ணிக்கை இந்தக் கமிட்டியின் அறிக்கையில் குறைந்திருந்தது.
அதற்கும் காரணம் இருக்கிறது. ஏழைகளுக்கான வரையறையில் கிராமப்புறங்களுக்கு 2,400 கலோரி, நகர்ப்புறங்களுக்கு 2,100 கலோரி என்று இருந்ததை சுரேஷ் தெண்டுல்கர் கமிட்டி பொதுவாக 1,800 கலோரிகளாகக் குறைத்துக் கொண்டதுடன் பன்னாட்டு உணவு மற்றும் வேளாண் அமைப்பின் புதிய வரையறைப்படியே இந்த அளவு குறைக்கப்பட்டதாகவும் நியாயம் கூறப்பட்டது. ஆனால், குறைந்த அளவு உடல் உழைப்புக்கே இது பொருந்தும் என்பதையும், இந்தியக் கிராமப்புற மக்களுக்கு எந்த விதத்திலும் பொருத்தமாகாது என்பதையும் இந்தக் கமிட்டி வசதியாக மறந்துவிட்டது.
÷இந்த அடிப்படையில், கிராமப்புறங்களில் ரூ.446.68-க்கும் நகர்ப்புறங்களில் ரூ.578.80-க்கும் குறைவான மாத வருமானம் உடையவர்களே ஏழைகள் என இந்தக் கமிட்டி வரையறுத்திருக்கிறது. ஏழைகளை வரையறுப்பதில் ஆழமான கணக்கீடுகளைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள்கூட, 500, 600 ரூபாய் பணத்தைக் கொண்டு ஒரு மாதம் வாழ்க்கை நடத்த முடியாது எனக் கூறிவிடுவர்.
உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் கிரிபாலு மகாராஜ ஆசிரமத்தில் இலவச உணவு மற்றும் பாத்திரங்களைப் பெறுவதற்காகக் கூடியிருந்தவர்கள் மத்தியில் நெரிசல் ஏற்பட்டு பெண்களும் குழந்தைகளுமாக 65 பேர் பலியான சம்பவம் நினைவை விட்டு அகன்றிருக்காது. இந்தச் சம்பவத்தின்போது இலவச உணவுக்காகப் பல்லாயிரக் கணக்கானோர் கூடியிருந்தார்கள் என்றால், நாட்டில் இருக்கும் ஏழ்மையைப் படம்பிடித்துக் காட்டுவதற்கு வேறென்ன வேண்டும்? அப்படியானால், ஏழைகளின் எண்ணிக்கை குறித்து கமிட்டிகள் தரும் புள்ளிவிவரங்களெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவைதானே?
வேறொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 5.24 கோடி குடும்பங்களுக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாக அந்தத் திட்டத்துக்கான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன்படி, சராசரியாக ஒரு குடும்பத்துக்கு 5 பேர் என்று வைத்துக் கொண்டால் இந்தத் திட்டத்தின் கீழ் 26 கோடிப் பேர் பயன் பெறுகிறார்கள். வேறு வகையில் வருவாய் ஈட்டுவோருக்கு தினக்கூலிகளாகப் பணிபுரிய வேண்டும் என்று அவசியமிருக்காது என்பதால், இந்த 26 கோடிப் பேரும் உண்மையிலேயே ஏழைகள்தான் என்பதை மறுக்க முடியாது.
யுனிசெஃப் தந்திருக்கும் புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 50 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகில் மொத்தமுள்ள ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள மக்களில் 29 சதவீதம் பேர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள் என்பது பன்னாட்டு உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தகவல். அதேபோல், பிறந்து 6 முதல் 35 மாதம் வரையான 78.9 சதவீதம் குழந்தைகள் ரத்தசோகையால் பலவீனமாக இருப்பதாக மூன்றாவது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில் தெரிய வந்திருக்கிறது. 15 முதல் 49 வயதுக்குள்பட்ட 56.2 சதவீதம் திருமணமான பெண்களும் இப்படிப் பாதிக்கப்பட்டவர்கள்தான்.
÷அந்தக் கணக்கெடுப்பு இன்னொரு அதிர்ச்சிகரமான தகவலையும் சொல்லியிருக்கிறது. நாட்டில் 60 சதவீதம் குழந்தை பிறப்புகள் இன்னமும் வீடுகளிலேதான் நடக்கின்றன என்று தெரியவந்திருக்கிறது. கிராமப்புறங்களில் இன்னும் அதிகமாக, 70 சதவீதப் பிறப்புகள் வீடுகளில்தான் நடக்கின்றன.
64-வது சுற்று தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின்படி, நாட்டில் 50 சதவீதம் பேர்தான் ஓரளவு நல்ல வீடுகளில் வசிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர் முறைசார்ந்த பாதுகாப்பான பணிகளில் இருப்பதாகவும் அந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, நாட்டில் 55 சதவீதம் பேருக்கு கழிவறை வசதியே இல்லை.
மேற்சொன்ன புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஏழைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், அது நிச்சயமாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களைக் காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும்.
÷இன்னொரு புறம், உண்மையான ஏழைகளில் 57 சதவீதம் பேருக்கு பொதுவிநியோகத் திட்டத்தின் பலன்கள் கிடைப்பதில்லை எனவும், தகுதியுடையோருக்கு ரேஷன் கார்டுகள் கிடைக்காத நிலையில், தகுதியில்லாதவர்கள் அவற்றைப் பெற்று ஊழலுக்கு வழிவகுப்பதாகவும் திட்டக் குழுவின் கணக்கெடுப்பு தெரிவித்திருக்கிறது. ஆக, தற்போதைய அணுகுமுறைப்படி, பொதுவிநியோகத் திட்டத்தின் வழியாக அனைவருக்கும் உணவுக்கு உத்தரவாதம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த முயன்றால் அது இன்னமும் நிலைமையை மோசமாக்கவே உதவும்.
அனைவருக்கும் உணவுக்கு உத்தரவாதம் வழங்க வேண்டுமெனில், போதுமான அளவுக்கு உணவுப் பொருள்களைத் தயாரிக்க வேண்டியதும் அவசியம். ஆனால்,இங்கு நேரெதிராகத்தான் நடக்கிறது. 70 சதவீதம் மக்கள் சார்ந்திருக்கும் வேளாண் தொழில், அரசால் கண்டுகொள்ளப்படாமல், கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து கொண்டிருக்கிறது. வேளாண்மையையும் விவசாயிகளையும் காப்பாற்றுவதற்கான விரிவான திட்டங்களை வகுக்க வேண்டும் என்கிற அக்கறை அரசுக்கு இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.
உண்மையான உணவுப் பாதுகாப்பு என்பது வேளாண்மையைக் காப்பதில்தான் இருக்கிறது. சமூக நலத் திட்டங்களுக்கான செலவினங்களைக் குறைத்துக் கொண்டிருக்கும் அரசு, தனது அணுகுமுறையை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். பொது விநியோகத் திட்டத்தின் பலன் உண்மையானவர்களைச் சென்றடையவில்லை என்பது தெரியவந்திருப்பதால், அனைவரையும் உள்ளடக்கிய புதிய பொதுவிநியோகத் திட்டத்தை உருவாக்க வேண்டும். அதுதான் அனைவரது வயிற்றுப் பசியையும் போக்கும் வழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய இலக்கியச் சிற்பிகள்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

வரப்பெற்றோம் (13-04-2026)
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


