அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

யாருக்காக... இது யாருக்காக...?

தமிழக அரசின் 2010-11-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, தமிழகத்தில் குடிசைகளே இல்லாத கிராமங்களை உருவாக்கும் புரட்சிகரத் திட்டமாக "கலைஞர் வீட்டு வசதித்திட்டம்' அறிவிக்

Updated On :20 செப்டம்பர் 2012, 10:55 pm IST

தமிழக அரசின் 2010-11-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, தமிழகத்தில் குடிசைகளே இல்லாத கிராமங்களை உருவாக்கும் புரட்சிகரத் திட்டமாக "கலைஞர் வீட்டு வசதித்திட்டம்' அறிவிக்கப்பட்டது.

 3.3.2010 அன்று திருச்சியில் தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் அடுத்த 6 ஆண்டுகளில் 21 லட்சம் ஓலைக் குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும். வரும் நிதியாண்டில் 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு இந்தியாவில் குடிசைகளே இல்லாத முதல் மாநிலமாகத் தமிழகம் விளங்கும். (2010-2011-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 19-ம் நாள் தாக்கல் செய்யப்பட்டது). குடிசைகளே இல்லாத முதல் மாநிலமாக வளர்ச்சியடைந்தால், தமிழ் மக்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைவார்கள்; பெருமிதம் கொள்வார்கள்.

தேர்தல் வரவிருப்பதால், திட்டங்களைத் துரிதமாக நிறைவேற்றி முடிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு மனையும், வீடும் வழங்குவது பற்றித் திட்டமிடப்பட்டது. இப்போது 11-வது ஐந்தாண்டுத் திட்டம் முடியும் தருவாயிலும் ஏழைகளுக்கு மனை - வீடு வழங்குவது பற்றிப் பேசப்படுகிறது. திருவிழாக்கால வியாபாரம் போல் விளம்பரப்படுத்துவது, தேர்தல் காலத்தில் வாடிக்கையாகிவிட்டது.

 ஐந்தாண்டுத் திட்டங்களின் முடிவிலும், நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் இறுதிக் காலத்திலும் மத்திய, மாநில அரசுகள் ஆய்வுக் குழுக்கள் அமைக்கும்.   அக்குழுவினர் விசாரணை நடத்தி கடைசியில் அறிவுரை வழங்குவார்கள்:

 நிலச்சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் அரசுக்கும், நிர்வாகத்துக்கும் இத்தகைய நல்ல திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற அரசியல் உறுதிப்பாடு இல்லை, என்றும் திட்டத்தை நிறைவேற்றுவதில் சம்பந்தப்பட்ட மக்களைத் திருப்திப்படுத்துவதில் தவறியுள்ளது என்றும் அறிவுரைகள் கூறப்படுவது வழக்கமாகிவிட்டது.

 உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடம் -  மூன்றும் மனிதனுக்கு ஆதார சுருதிகளாகும். மனிதனுக்குத் தான் குடியிருக்கும் இடத்தைப் பொறுத்தே அவனுக்கு முகவரி கிடைக்கிறது.

 உழைத்து ஓய்ந்துவரும் வேளையில் அவனுக்கு கால் நீட்டிப்படுத்து ஓய்வெடுக்க வேண்டும்.  குடும்ப உறவுகளுக்கு மறைவான இடம் அவசியமானது. பெற்றெடுத்த குழந்தைகளும் தங்கும் இடமில்லாமல் வீதியே வீடாகவும், எல்லாமாகவும் இருந்தால் பிஞ்சுக் குழந்தைகளின் மனம் பாதித்து விடுவதாக சமூகவியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

இன்பம் என்றசொல்லைக் கேட்டதுண்டு - அது

எங்கள் வீட்டுப்பக்கம்  வந்ததுண்டா?

என்ற பாடலில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஏழைகளின் நிலைமையைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.  மிராசுதாரிடம் வேலைபார்க்கும் விவசாயத் தொழிலாளி வளர்த்த வாழை குலை தள்ளுகிறது.   அதை மிராசுதார் வீட்டுக்கு வெட்டிச் செல்லும்போது, வாழையிலிருந்தும் சாறு வடிகிறது.  விவசாயத் தொழிலாளியும் அவனது மனைவி குழந்தைகளும் கண்ணீர் வடிக்கிறார்கள். இந்தக் காட்சியை அறிஞர் அண்ணா செவ்வாழை என்ற சிறுகதையில் சித்திரிக்கிறார்.

 தமிழ்நாட்டில் குடிசைகள் கொளுத்தப்பட்டு, மக்களை வெளியேற்றுவதிலும் மர்மம் இருப்பதாகப் பேசப்படுகிறது. ஆக்கிரமிப்பு என்று குடிசைகள் அகற்றப்படும் போதும் மாற்று இடம் ஒதுக்காமல் தெருக்களில் நிறுத்தப்படும் அவலமும் நீடித்து வருகிறது.

 வீடுகளைப் பற்றிய கணக்கெடுப்பில் நான்கு மண் சுவருக்குள் ஒரே சதுரத்துக்குள்ளிருக்கும் இடமே வீடாகக் கருதப்படுகிறது. குடிசைக்குள் சமையல் ஒன்றுதான் நடக்கும்.

 தமிழக அரசு 1970 - 1980-ம் ஆண்டுகளில் குடியிருப்பு மனைப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவந்தது. தனியார் தோப்புகளில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தது இரண்டு சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. வெளியேற்றப்படாமல் பாதுகாப்புக் கிடைத்தது. ஆனால் பட்டா பெறுவது இன்னும் இழுபறியாகவே நீடித்து வருகிறது.

 குடியிருப்பு மனை பாதுகாப்புச் சட்டத்திலும் பல விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டன.  பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மலையடிவாரங்கள் போன்ற இடங்களில் வாழும் குடிசைவாசிகளுக்கு அச்சட்டம் செல்லாது. அவர்களுக்குப் பட்டா பெறும் உரிமை கிடையாது. இச்சட்டம் இன்னும் நீடிக்கிறது.

 குடிசைகளை கான்கிரீட் வீடுகளாகக் கட்டிக் கொடுக்கும் திட்டத்துக்கும் மேலே கூறப்பட்ட சட்ட விதிவிலக்குகள் உள்ளன.

 கோயில்கள், மடங்கள், வக்ஃப் வாரியம் போன்ற மத நிறுவனங்களுக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளன. இந்த நிலங்களில் குடியிருப்பவர்களுக்கும் அரசின் சலுகைகள் கிடையாது.

 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. 2001-ம் ஆண்டின் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டைப் பற்றிய குறிப்புகள் தொகுப்பாக வெளியிடப்பட்டன.

 கிராமங்களில் வாழும் குடும்பங்கள்: 1,46,85,983; நகரங்களில் வாழும் குடும்பங்கள்: 82 லட்சம்; வீடில்லாத குடும்பங்கள்: 84,472.

 தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலையும் ஆறுகளின் அமைப்புகளும் நகரங்கள் உருவாவதற்கு இயல்பாக அமைந்து விட்டன. வேளாண்மையை அடுத்து நெசவுத் தொழில் நிறைந்த பெரிய நகரங்கள் வளர்ந்துள்ளன. அதன் தொடர்ச்சி இன்று வரை நீடித்து வருகிறது. இருபது கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளாக ஒரு பேரூராட்சி, நகராட்சி அமைந்துள்ளது.

 தற்போது தமிழ்நாட்டில் 44 விழுக்காடு மக்கள் நகரங்களில் வாழ்கிறார்கள். கடந்த இருபதாண்டுகளில் வேளாண்மை வளர்ச்சி குறைந்து வருகிறது. விளை நிலங்களெல்லாம் குடியிருப்புகளாக மாற்றப்பட்டு வருகின்றன. மக்கள் கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கிக் குடிபெயர்தல் அதிகரித்து வருகிறது. தென் மாவட்ட மக்களின் வேடந்தாங்கலாக திருப்பூர் மாறிவருகிறது.

 சென்னை மாநகரின் குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. சென்னை மாநகரின் சிறப்புத் திட்ட நகல் வரைவு அறிக்கை சென்ற ஆண்டு வெளியிடப்பட்டது. குடிசைப் பகுதிகள் : 1230; குடிசைகள்: 29,6012; குடிசைவாழ் மக்கள்: 18,03,000.

 தங்கள் உழைப்பாலும் பிழைப்பாலும் சென்னை மாநகரை உருவாக்கிய குடிசைவாழ் மக்களைப் புறக்கணித்துவிட்டு, சிங்காரச் சென்னையாக்குவது ஆணிவேரையே, வெட்டி அழிப்பது போலாகும்.

 சிற்றூர்களிலும் நகரங்களிலும் ஏழை எளியவர்கள் குடிசைகளில் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வருகிறார்கள். வாக்குச் சீட்டு இருக்கிறது.  நியாயவிலை பொருள்கள் வாங்கும் குடும்ப அட்டை உள்ளது. இலவசமாக வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியும் உள்ளது. மின் இணைப்பும் உள்ளது. இலவச மின்சாரம் பெற்றுவரும் குடிசைகள் மட்டும் 11 லட்சத்து 80 ஆயிரம் என்று தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். ஆனால் இவ்வளவு அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்கள் இருந்தும் பட்டா மட்டுமில்லை. தங்களின் குடிசை எப்போது பிய்த்து எறியப்படும் என்ற அச்சத்திலேயே பதற்றத்தோடு வாழ்ந்து வருகிறார்கள்.

பட்டா வழங்குவதில் பல்வேறு சட்டச் சிக்கல்களைக் கிளறிவிட்டு, வருவாய்த் துறை அதிகாரிகள் பட்டா கொடுக்க மறுக்கிறார்கள்.

 தண்ணீர் வரத்தில்லாது வறண்டு கிடக்கும் குளங்களைத் தூர்த்து, சில நிலத்தரகர்கள் கையகப்படுத்தி ரியல் எஸ்டேட் தொழில் நடத்துகிறார்கள். இவர்களின் தூண்டுதலாலும் அதிகாரிகள் குடிசைகளை அகற்றும் சூழ்ச்சிகளும் நடக்கின்றன.

 1. குடிசைகளை அகற்றாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

 புறம்போக்கு நிலங்களிடையே உள்ள பல பிரிவுகளைப் பரிசீலித்து, பொருத்தமற்றவைகளை நீக்கவேண்டும். மக்களின் வசதிக்கேற்ப பலவகைப் பிரிவுகளை நத்தம் புறம்போக்காக வகைமாற்றும் நடவடிக்கை எடுத்து, பட்டா கொடுப்பதற்கு இருக்கும் சட்டத்தடைகளை நீக்க வேண்டும்.

2. (அ) குடியிருப்பு மனைப் பாதுகாப்புச் சட்டத்தில் குறைந்தது 2 முதல் 3 சென்ட் என்று வரையறுக்கப்பட்டது.

(ஆ) திமுக தேர்தல் அறிக்கையிலும் 5 சென்ட் மனைப்பட்டா என்று அறிவிக்கப்பட்டது.

 (இ) விவசாயத் தொழிலாளர் நலனுக்காக அமைக்கப்பட்ட உயர் மட்டக்குழு ஐ.ஏ.எஸ். அதிகாரி கோலப்பன் தலைமையில் அமைக்கப்பட்டது. அதில் விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக  இருந்தார்கள். அக்குழுவின் பரிந்துரை குறைந்தது 5 சென்ட் நிலமாவது குடிமனைக்கு ஒதுக்கப்பட வேண்டுமென்பதாகும்.

 (ஈ) முந்தைய பரிந்துரைகளைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, குறைந்தது 5 சென்ட் மனையாவது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒதுக்க வேண்டும்.

 3. குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கு 200 (சதுர அடி)க்கு  60,000 என்று ஒதுக்கியது. விவசாயத் தொழிலாளர்களின் தொடர்ந்த வலியுறுத்தலால் மேலும்  15 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.  3 லட்சத்துக்கும் குறைந்து சிறு வீடுகட்ட முடியாது என்பது இன்றைய நிலவரம்.  இதை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 4. கிராமங்களில் கான்கிரீட் வீடுகள் - ஒதுக்கீடு செய்வதற்கு  1 கிராம நிர்வாக அதிகாரி, 2 மக்கள் நலப் பணியாளர்கள், 3 ஊராட்சி உதவியாளர்கள் - ஆகிய மூவரும் நிர்வாக ஊழியர்களே. இக்குழுவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவரோ, துணைத் தலைவரோ இல்லை. இத்தகைய நியமனமே நல்லத்திட்டம் தவறாகப் பயன்படுத்தத் துண்டுதலாகும். இக்குழுவை மாற்றி அமைக்க வேண்டும்.

 தமிழக அரசின் குடிசைகளே இல்லாத தமிழகம் திட்டத்தை முறையாகவும் சரியான திசைவழியிலும் செயல்படுத்த வேண்டும்.

 வருவாய்த்துறை அதிகாரிகளிடம் லட்சக்கணக்கான மக்கள் வீட்டுமனை கேட்டுத் தனித்தனி விண்ணப்பம் கொடுத்து வருகிறார்கள். மக்களின் விண்ணப்பங்களையே ஆதாரமாக வைத்து அதிகாரிகள் பரிசீலனைக்கு எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஏழைகள் எதிர்பார்க்கிறார்கள்.

 இவை எதுவுமே செய்யப்படாமல் "கலைஞர் வீட்டுவசதித் திட்டம்' நிறைவேற்றப்படுமானால், அது தேர்தலில் வாக்கு வேட்டையாடத்தானே தவிர, ஏழை எளிய மக்களின் துயர்துடைப்பதற்காக அல்ல. "கான்கிரீட் வீட்டுத் திட்டம்' சரி... இது கான்கிரீட்டான திட்டமாக இருக்குமா என்பதுதான் சந்தேகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.