தேவை, மீண்டும் ஒரு சத்தியாக்கிரகம்
இந்திய விடுதலைப் போரில் காந்தியடிகளால் நடத்தப்பெற்ற உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு மகத்தான பின்னணி உண்டு. உப்புக்கு வரி விதித்து மக்களை வாட்டி வதைத்த ஆங்கிலேய அரசை அறவழியில் எதிர்கொண்ட போராட்டம


இந்திய விடுதலைப் போரில் காந்தியடிகளால் நடத்தப்பெற்ற உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு மகத்தான பின்னணி உண்டு. உப்புக்கு வரி விதித்து மக்களை வாட்டி வதைத்த ஆங்கிலேய அரசை அறவழியில் எதிர்கொண்ட போராட்டம். கடந்த 1930-ம் ஆண்டு மார்ச் 12-ம் நாள், காந்தியடிகளின் தலைமையில் குஜராத் சபர்மதி ஆசிரமத்திலிருந்து புறப்பட்ட நடைப்பயணம், ஏப்ரல் 6-ம் நாளன்று தண்டியில் நிறைவுற்றது.
உப்புக்கு எதிரான வெள்ளை அரசின் சட்டங்களை உடைத்து, மாபெரும் சட்ட மறுப்பு இயக்கமாக நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகம், இந்திய விடுதலைப் போரின் தேவை, நியாயம் குறித்து உலக நாடுகளுக்கு உணர்த்தியது.
இப்போராட்டத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதாயினர். பிரிட்டிஷ் அரசின் உப்பு வரிக்கு எதிராக ஓராண்டு தொடர்ந்து உப்பு சத்தியாக்கிரக அறப்போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றது. இந்திய விடுதலைப் போரின் பெரு முழக்கமாய் எதிரொலித்த முழுத் தன்னாட்சி என்ற அடிப்படைக் கோரிக்கை, உப்பு சத்தியாக்கிரகத்தில்தான் தீவிரம் பெற்றது.
1882-ம் ஆண்டு ஆங்கிலேய அரசால் இயற்றப்பட்ட உப்புச் சட்டம், உப்பு உற்பத்திக்கும், உப்பு சேகரிப்புக்கும் ஏகபோக உரிமையை அரசுக்கு வழங்கியது. உப்புச் சட்டத்தை மீறுவது குற்றச்செயலாக அறிவிக்கப்பட்டது. இந்திய மக்களின் உணவுப் பயன்பாட்டில் உப்பு முக்கிய இடத்தைப் பெறுகிற காரணத்தால், இவ்வரி விதிப்பின் காரணமாய் 8.2% அரசுக்கு வரி வருமானம் உயர்ந்தது. ஆனால், உப்புத் தொழிலை நம்பி உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபட்ட அடித்தட்டு மக்களின் வாழ்வில் பலத்த வீழ்ச்சியை ஏற்படுத்தியது.
1920-1922-ம் ஆண்டுகளில் காந்தியடிகளால் முன்னெடுக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்துக்குப் பிறகு, பெரும் எண்ணிக்கையிலான இந்திய மக்கள் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில்தான் பங்கெடுத்தனர்.
சபர்மதி ஆசிரமத்திலிருந்து ஒரு லட்சம் பேர் காந்தியைப் பின்தொடர, தொடங்கிய நடைப்பயணம் 24 நாள்களில், 4 மாவட்டங்கள், 48 கிராமங்களைக் கடந்து சென்றது.
பல்லாயிரக்கணக்கில் மக்கள் ஆங்காங்கே இணைந்து அப்போராட்டத்தை மாபெரும் வெற்றியடையச் செய்தனர். காந்தியடிகள் செல்லுமிடமெல்லாம் அப்போராட்டத்துக்கு ஆதரவாய் திரண்ட கூட்டத்தைக் கண்டு, வெளிநாட்டு ஊடகங்கள் இதனை ஒரு யுகப்புரட்சி என்றே எழுதின.
ஏப்ரல் 6-ம் நாள் குஜராத்தின் கடற்கரையோர கிராமமான தண்டியில் கையளவு உப்பை அள்ளிய பின்னர், காந்தியடிகள், "இதனுடன் நான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தை அசைக்கிறேன்' என்று முழங்கினார்.
இதற்குப் பிறகு நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களிலும் மக்களின் நம்பிக்கையை வென்றதுடன், ஆங்கிலேய அரசின் வெளியேற்றத்துக்கும் உப்பு சத்தியாக்கிரகமே அடித்தளமாய் அமைந்ததெனில் அது சற்றும் மிகையல்ல.
"நாம் வாழ்வா, சாவா போராட்டத்தில் நுழைகிறோம். ஒரு புனிதப் போரை, நாம் அனைவரும் அனைத்தையும் தழுவிய தியாகங்களை நிகழ்த்தி அதில் நாம் நம்மையே பலியிட அளிக்கிறோம்' என்று உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் தொடக்கத்தில் காந்தி பிரகடனமாக அறிவித்தார். மானத்தோடும், உணர்வோடும் காந்தியின் பின்னால் அணி வகுத்தது, மக்கள் திரள். அதுதான், இந்தியத் திருநாட்டின் மகத்தான விடுதலைக்கு வித்திட்டது.
சத்தியாக்கிரகம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு உண்மையை உறுதியாகப் பற்றியிருத்தல் என்பது பொருள். மனத்தாலும்கூட உண்மைக்குப் புறம்பாகச் செயல்படாத மாவீரர்களே இந்தத் தேசத்தின் விடுதலைக்குக் காரணமாய் இருந்தனர். காந்தியின் தலைமையை ஏற்று, அறவழியில் வெள்ளையர்களை விரட்டிய வரலாற்றைப் பெற்றிருந்தனர் நமது முந்தைய தலைமுறையினர்.
ஆனால் இன்றோ... இந்திய நாடு, தன்னலமற்ற தலைவன் ஒருவனுக்காகத் தவமாய்த் தவமிருக்கிறது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஊழல் மலிந்த நாடுகளின் பட்டியலில் கம்போடியா, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா நான்காமிடத்தைப் பெற்றுத் திகழ்வதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மக்கள் திரள் போராட்டம் என்றால் என்ன? அகிம்சையின் வலிமை எத்தகையது? உண்மை, நேர்மை, துணிச்சல்மிக்க தலைவர்கள் யார்? மக்களுக்கான திட்டங்கள் எப்படியிருக்கும்? என்றெல்லாம் உலக நாடுகளுக்கு ஒருகாலத்தில் வகுப்பெடுத்த இந்தியா, இன்றைக்கு எப்படி நூதனமான முறையில் கொள்ளையடிக்கலாம்? எந்த வழியிலெல்லாம் சுரண்டிக் கொழுக்கலாம்? மக்களை என்ன சொல்லி ஏமாற்றலாம்? மக்களாட்சி என்ற பெயரில் தன் மக்களின் ஆட்சியை எப்படியெல்லாம் நடத்திக் காட்டலாம்? என்ற கேவலமான வகுப்புகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறது.
இலவசங்களாலும், பொறுப்பற்ற திட்டங்களாலும் மக்களை மேலும், மேலும் கீழ்நிலையில் வைத்திருக்க விரும்பும் நம் அரசியல்வாதிகள் இந்த மண்ணிலிருந்தே விரட்டப்பட வேண்டிய கொள்ளையர்களாவர்.
நம் முன்னோர்கள் வெள்ளையரை விரட்டிய வீரத்தைக் கைக் கொண்டு, வாக்குச் சீட்டு எனும் ஜனநாயகக் கருவியால் இந்தக் கொள்ளையர்களை விரட்ட வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மக்களுக்காகத் தீட்டப்பட்ட திட்டங்களைச் சொல்லி வாக்குக் கேட்ட நிலை மாறி, அடித்த கொள்ளையில் ஓட்டுக்குப் பணம் என்ற பெயரில் மக்களுக்கும் பங்கு கொடுக்க வெட்கம் கெட்டு அலைகிறார்கள். வாகனங்களில் கத்தை கத்தையாய் பிடிபடும் பணம், மக்களாட்சியின் மாண்புக்கே உலை வைக்கத் தொடங்கியிருக்கிறது. நல்லவேளையாக நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்வது, பணநாயகத்தையும் மீறி இந்த மண்ணில் ஜனநாயகம் வேரூன்றியிருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
"ஓட்டுக்குப் பணம் வாங்காமல் உங்களின் வாக்கை அளித்தால், ஜனநாயக மாற்றம் உங்களிடமிருந்து தொடங்கும்' என்று மாணவர்களுக்கு அறம் போதித்த மதுரை மாவட்ட ஆட்சியரை, உடனடியாக மாற்றக்கோரி எழும்புகிறது ஆளும் தரப்பிலிருந்து கூக்குரல்.
தனது சொத்துக் கணக்கைத் துணிந்து வெளியிட்ட இந்தியாவின் முதல் ஆட்சிப் பணி அலுவலர் என்ற பெருமையைக் கொண்ட ஒருவருக்கே இப்படியொரு எதிர்ப்புக்குரல் எழுவதைப் பார்க்கும்போது, தமிழகத்தின் இழிநிலை குறித்து வேதனைதான் எஞ்சுகிறது.
நல்லது செய்தீராயின் மக்களின் வாக்கு எப்போதும் நல்லவர்க்கே, அல்லன செய்தீராயின் அதன் பலனை அனுபவிக்கத்தானே வேண்டும். தேர்தல் கால அறப்பணியைத் துணிவுடன் செய்ய நினைக்கும் தேர்தல் ஆணையத்துக்கும், அலுவலர்களுக்கும் எத்தனை எத்தனை இடையூறுகள்.
சொந்த மண்ணில் இலவசங்கள் எனும் பிச்சைப் பருக்கைகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம்தான் உண்மையான ஏதிலிகள். இல்லையென்றால், விலை மதிப்பற்ற வாக்குகளை ஜனநாயகப் போரில் விற்றுவிட்டு, நிராயுதபாணிகளாய் வாழ்கிற நிலை நமக்கு ஏற்படுமா? சிந்தித்துப் பாருங்கள்.
இப்போது தேவை மற்றுமொரு சத்தியாக்கிரக அறப்போர். முதன்முதலாய் வாக்களிக்கவிருக்கும் இளையதலைமுறையின் வாக்குகளே இந்தத் தேர்தலின் தலையெழுத்தை மாற்றி எழுதவிருக்கிறது. நாம் வாழ்வா, சாவா போராட்டத்தில் நுழைகிறோம்.
"ஒரு புனிதப் போரை, நாம் அனைவரும் அனைத்தையும் தழுவிய தியாகங்களை நிகழ்த்தி அதில் நாம் நம்மையே பலியிட அளிக்கிறோம்' - உப்பு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கி வைத்து, காந்தியடிகள் ஆற்றிய அந்தப் பேருரையே நமக்கான பிரகடனமாகவும் அமையட்டும்!
கட்டுரையாளர்: சமூகவியல் ஆய்வாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...