சுனாமியைக் காட்டிலும் ஆபத்தானது பினாமி. நாட்டின் பொருளாதாரத்தை நடுங்க வைக்கும் நேரடிப் பூகம்பம் இது.
அபகரிப்பு, ஆர்ப்பரிப்பு, இருட்டடிப்பு, ஈவ் டீசிங், பல் இளிப்பு, உயிரோடு எரிப்பு, ஊழல் சிறப்பு, எதிரியைத் தாக்கு, ஏசினால் வழக்கு என்று அரசியல் ஆத்திசூடி நீளும். மண் தாது சுரண்டல், மணல் கொள்ளை, மரம் வெட்டு, மதக் கலவரம் போன்ற திருக்காரியங்களுக்கே நம் தலைவர்களுக்கு நேரம் போதவில்லை.
""வந்து நின்று வாக்குக் கேள் / உட்கார்ந்து ஊழல் செய் / படுத்தபடி ஜாமீன் கேள்'' என்கிற ஹைக்கூ நெறியைக் கடைப்பிடிக்கின்றனர். அதிசயத்துக்கு ஆள்மாறாட்டம் செய்து பள்ளித்தேர்வில் தேர்ச்சி பெற்று ஆட்சியில் என்ன சாதிக்கப் போகிறார்களோ?
இதற்கு மத்தியில் மக்கள் இடையே "குளம்' போய் "அணை' உடையும் என்று சர்வ பயம். இது உள்ளூர் மண்புழுப் பார்வை. தரையில் ஊர்ந்தபடி "சுவர்' மட்டுமே காண்பது. பக்கப் பரப்பில் அணைநீரும் சேர்த்துக் காணும் மாநிலத் தலைவர்களுக்கும் மீன் கண்ணோட்டம்தான் கொஞ்சம் சுற்றுச்சூழல் தெரியும். ஆனால், உயரே பறந்தபடி முப்பரிமாணத்தில் கவனிக்கும் விசாலமான தேசியப் "பறவைக் கண்ணோட்டம்' நம் தேவை.
அதில் அணு உலையோ, அணைநிலமோ, உள்ளூர்த் தலைவர்களின் அக்கம்பக்கத்து பினாமி நிலபுலன்களும் பதிவாகக் கூடும். அதனாலேயே அங்கு பூமி நடுங்குகிறதோ இல்லையோ, அரசியல் ஆசாமிகள் நடுங்குகிறார்கள் என்று ஓர் அதிர்ச்சித் தகவல்.
அதையும் தாண்டி விண்வெளியில் இருந்து பார்த்தால் உலகமே உள்ளங்கை ஆகிவிடும். செயற்கைக்கோள் பார்வை. அதில் ஒவ்வொரு ரேகையும் நுண்ணோக்கி வழி மாதிரி, துல்லியமாகப் புலப்படும்.
அறிவியல் பார்வை என்பது அண்டவெளியில் பூமியைச் சுற்றியபடி அனைத்து நடவடிக்கைகளையும் துல்லியமாக நோக்கும் கண்ணோட்டம். பொது மக்களும், ஊடகங்களும், சமூக ஆர்வலர்களுமே இத்தகைய செயற்கைக்கோள் பார்வை பெற வேண்டும். தகவல்களை கொஞ்சம் அறிவியல் நேர்மையுடன் அலசி அறிவித்தால் அதுவே சமுதாயக் கண்ணோட்டம்.
அணை உடைவதாக வருவது வெறும் திரைப்படம்தானே, அனுமதித்தால் என்ன என்று தமிழகத்துக்கு உள்ளேயே சில மேலைப் புத்தி ஊடகங்கள் புராணம் பாட முயல்கின்றன. "எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படப் பாடலில் வரும் ஒரு கட்சி வார்த்தையைக் கெட்ட வார்த்தை என்று நீக்கியது தணிக்கைத்துறை. ஊடகங்களில் நச்சு அபாயத்தைத் தடுக்கும் உபாயம் தேவை.
கணக்குத் தணிக்கை அதிகாரிகள் போன்று திரைத் தணிக்கை அதிகாரிகளும் துணிந்து செயல்பட வேண்டும். "சீனத்' மாதிரியான சிலுக்கு நடிகை இறந்த நாளில் "அழுக்குப்படம்' ("டர்ட்டி பிக்சர்') வெளியிட்டு ஜென்ம சாபல்யம் அடைகிறார் ஒரு இந்திக்காரர்.
நம் கதாநாயகியரோ மக்கள் ரசிப்பதால் "காட்டுகிறார்கள்' என்ற ஜனநாயகச் சப்பைக்கட்டு வேறு. "மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் பலர் காண மூடல் உடல்' என்பதே நம்மவர் சொரணை. "நான் டமில் கேர்ல், வில்லேஜ் கேர்ல்' என்று லண்டன் வானொலிக்காகவா பேட்டி தருகிறார்கள்? பிறகு யாருக்குத்தான் "கொலைவெறி' வராது?
தமிழர்களை அறிவாளிகள் ஆக்காமல் "அரிவாளிகள்' ஆக்கும் திரைப்படங்கள் மறுபக்கம். இதற்கு மத்தியில் தென்னிந்திய வரலாறு என்ற பெயரில் 1600 ஆண்டுகளுக்கு முந்திய களப்பிரர் காலம் பற்றிய "எட்டாம் அறிவு' வேறு.
இலக்கிய வரலாற்றின் அந்த "இருண்ட கால'த் தமிழர் குறிப்பு எங்கு இருந்து கிடைத்ததோ? என்னவோ கப்பலோட்டிய தமிழன், கட்டபொம்மன், காந்தி வரலாறு மாதிரி எல்லாம் ஒரேயடியான "பில்ட்-அப்' பிரசாரங்கள். போகட்டும்.
""அதோ, காலடியில் பாருங்கள், ஐயோ சிலந்தி'' என்று யாரேனும் உங்கள் அருகில் வந்து அலறினால் வெலவெலத்துப் போவீர்களா, மாட்டீர்களா? உண்மையில் இத்தகைய பூச்சிப் பயம் ஏன் வந்தது?
உர்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் ஜார்ஜ் ஆல்ப்பர்ஸ் எனும் உளவியல் நிபுணர் இத்தகைய சிலந்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
தேள் மாதிரி கொடுக்கு இருந்தாலேயே மக்கள் பயப்படுகிறார்கள் என்றால் குளவி, தேனீ கண்டும் அஞ்ச வேண்டுமே. ஒருவாறாக, அனைத்துப் புள்ளி விவரங்களையும் சேகரித்தார். சிலந்தி தான் பலருக்கும் அச்சம், அருவருப்பு, ஆபத்து ஊட்டுவதாகத் தெரியவந்தது.
லண்டன் "இயற்கை வரலாற்று அருங்காட்சியக'த்தின் பூச்சியியலார் ஸ்டூவர்ட் ஹைன் ""சிலந்திக்குப் பயப்படுவது தான் உலகறிந்த பாடம் ஆயிற்றே' என்றாராம். என்ன காரணம் தெரியுமா?
இந்தியாவில் எப்படியோ, மேனாடுகளில் முன்னொரு காலத்தில் ஊரெங்கும் பட்டி தொட்டிகள் எல்லாம் கொள்ளைக் காய்ச்சல் பரவியது இவ்வகைப் பூச்சிகளால்தானாம். அதனால் சிலந்திப் பயம் இன்னொரு கொள்ளைநோயாக மக்கள் மனதில் தொற்றிக்கொண்டது.
அந்த மாதிரி தான் ஊழல்வாதிகள் பற்றிய மக்கள் பயம். நல்லவர்கள் அவர்களை ஒண்ட மாட்டார்கள். ஊழல் என்றால் உதடுகளே ஒட்டாது. லஞ்சம் என்றால் உதடுகள் ஒட்டும். அதில் பசை இருக்கிறதே!
எந்தத் திட்டம் இட்டாலும் கட்சிபேதம் இன்றி அவர்களின் சொந்தக்காரர்களும், உறவினர்களுமே பலன் அடைகின்றனர் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள். ஏற்கெனவே மாநிலந்தோறும், நாடு முழுவதிலும் அமைச்சர்கள் பெயர்களில் பல்வேறு புகார்களும் திகார்களும் உள்ளன.
வருமானமே இல்லாத இல்லத்தரசிக்கு ஏக்கர் நிலங்கள். பிள்ளைகளுக்குப் பல லட்சம் சந்தைப் பங்குகள். பறக்கும் கம்பளங்கள். தொட்டில் முதல் பதவிக் கட்டில் வரை வயதுக்கு ஒருகோடி வீதம் என்றாலும் ஐம்பதாம் வயதில் ஐம்பது கோடி எப்படி?
ஐந்து ஆண்டுக் காலத்தில் குடியரசுத் தலைவரின் மொத்த சம்பாத்தியமே அரைக் கோடி அல்லவா? கடைக்கோடி ஒன்றிய ஆட்சி உறுப்பினர் கணக்கிலும் கோடிகள். என்ன சீ பூம்பா மந்திரமோ?
இன்றைய ஜனநாயகத்தில் இன்னொரு அதிசயத்தைப் பாருங்கள். 114 கோடி ஜனங்களில் பதிவு பெற்ற வாக்காளர்கள் 67 கோடி பேர். அதிலும், சராசரி 38 கோடி ஜனங்களே வாக்கு உரிமையைப் பயன்படுத்துகின்றனர்.
இங்கு பல கட்சிகள் கூடி 20 கோடிக்கும் குறைவான வாக்காளர்களின் ஆதரவில் வென்று அரசு அமைக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், குடிமக்களில் ஆறில் ஒருவரால் உருவாக்கப்படும் வெள்ளைக்கார ஜனநாயகத்தை அப்படியே ஏற்றுக்கொண்டோம்.
இரண்டாவது திகம்பர ரகசியம் - இங்கு முதலில் வாக்காளர்கள் ஆட்சிமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்து எடுப்பது இல்லை. (தேர்தல் அதிகாரிகளைத் தாங்களாகவே மிரட்டிச் சான்றிதழ் வாங்கிச் செல்கிறார்களா என்று கிண்டல் வேண்டாம்!) உண்மையில் ஆட்சிமன்ற உறுப்பினர்கள் ஆக நினைப்பவர்கள்தான் தங்களுக்குச் சாதகமான வாக்காளர் தொகுதிகளைத் தேடித் தேர்ந்து எடுக்கிறார்கள்.
பாருங்களேன், அரண்மனைவாசிகள் சம்பந்தமே இல்லாத குடிசைவாசிகள் நிறைந்த ஏதேனும் ஒர் பரம்பரைத் தொகுதியையே தேர்ந்து எடுக்கின்றனர். அந்தப் பாமர ஜனங்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு ஆட்சிமன்றம் சென்றவர்களோ அடுத்த தேர்தலுக்குத்தான் அங்குச் சுற்றுலா வருகிறார்கள். ஒரு பிராந்திய ஜனங்கள் முச்சூடும் தம்முடன் வாழும் பிரதிநிதிகளை ஆட்சிமன்றத்திற்கு அனுப்பினால் அல்லவா உண்மையான ஜனநாயகம்?
இதில் மூன்றாவது ஆச்சரியம் - மக்கள் "தேர்ந்து' எடுப்பது மாண்புமிகு "உறுப்பினர்க'ளையே அன்றி அமைச்சர்களை அல்ல!
தேர்தலில் ஜெயித்த ஒரு தனி அல்லது கூட்டணிக் கட்சியால் அமைச்சர்கள் பின்னர் தேர்வு செய்யப்படுகின்றனர். அதனாலேயே அமைச்சர்களை அகற்ற முடியும். உறுப்பினர்களை அகற்ற முடிவது இல்லை.
ஒரு வகையில் பார்த்தால், பாராளுமன்றமோ, யாராளுமன்றமோ என்கிற பொதுஜன சந்தேகத்தில் அறம் மட்டுமல்ல, பொருளும் இருக்கிறது.
வாக்காளப் பெருமக்களே, இனி பரிகாரம் கேட்க வேண்டியது உங்களுக்கு வாக்குறுதி அளித்த கட்சித் தலைமையிடமே அன்றி, அவர்களால் "தேர்வு' செய்யப்பட்ட பாவம், ஆட்சித் தலைமையை அல்ல!
ஒரு குடும்பஸ்தன் நூறு ரூபாய்ச் செலவு செய்து ஒரு பொருள் வாங்கினால், கடைக்காரர் ஒரு மிட்டாய் இனாமாகத் தருவார். தொடர் வாடிக்கையாளர் என்றால் பத்து ரூபாய்க் காலண்டர் பரிசு.
ஆயிரம் ரூபாய்க்குப் பலசரக்கு என்றால் அரைக்கிலோ இனிப்பு அன்பளிப்பு. லட்ச ரூபாய் வியாபாரத்தில் இஸ்திரிப் பெட்டியோ ஏதோ ஒரு வீட்டு உபகரணப் பொருள் இலவசம்.
கோடி ரூபாய் அரசியல் திட்டங்களில் ஒப்பந்தக்காரர்கள் உபயத்தால் பினாமிக்கு ஆதாயம் இருக்கவே செய்யும். அதிலும் பல கோடி வர்த்தகத்தில் சில கோடிகள் தலைமைக் கணக்கில் விழும். பிறகென்ன, உள்நாட்டில் விலைவாசி உயரும். வெளிநாட்டில் கருப்புப் பணம் பெருகும்.
இந்நிலையில் அன்னிய நேரடி முதலீட்டைத் திறந்துவிட்டால் பலன் "நம் மக்களுக்கே' என்று வாதாடுகிறார்களே அவர்தம் ஜனநாயக மடமையை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.