டிசம்பர் 9-ம் தேதி உலக ஊழல் ஒழிப்பு நாளாகும். அதே நாளில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் அவரது துறையில் இருந்த உயர் அதிகாரிகளின் வீடுகள் சி.பி.ஐ. அதிகாரிகளால் சோதனைக்குள்ளானது குறிப்பிடத்தக்கதாகும்.
அதைப்போல சென்ற 2010-ம் ஆண்டு அதிர்ச்சிகரமான ஊழல்கள் வெளியான ஆண்டாகும். இந்திய மருத்துவ ஆணையத்தின் தலைவர் கேத்தன் தேசாய் வீட்டிலிருந்து சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள பணமும் நகைகளும் கைப்பற்றப்பட்டன. ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல் அமைச்சர் மதுகோடா செய்த பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள ஊழல்களும் அம்பலமாயின. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற பெரும் ஊழல்கள் உலக நாடுகளுக்கு முன்னால் நம்மைத் தலைகுனியவைத்தன. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததுபோல ஸ்பெக்ட்ரம் ஊழல் நாட்டையே திடுக்கிட வைத்தது.
அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் இந்த ஊழல்களில் பெருமளவு தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பது திடுக்கிட வைப்பதாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அதிகாரவர்க்கம் மக்களை அடக்கி ஒடுக்கி வைப்பதற்காகப் பயன்பட்டது.
சுதந்திர நாட்டில் அதே அதிகாரவர்க்கத்தைக் கட்டுப்படுத்தி மக்களுக்கான நிர்வாகம் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்கு பெருமுயற்சி நடந்தது. ஐ.சி.எஸ். என்பது மாற்றப்பட்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்றவை உருவாக்கப்பட்டன. முதலாவது பிரதமராகப் பதவி வகித்த ஜவாஹர்லால் நேருவும், உள்துறை அமைச்சராக விளங்கிய சர்தார் வல்லபாய் படேலும் அதிகாரவர்க்கத்தைத் தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அரசின் கொள்கைகளை அவர்கள் வகுத்தனர். அதைச் செயல்படுத்தும் பொறுப்பை அதிகாரிகளிடம் அளித்தனர்.
தியாகப் பின்னணியும் மக்கள் செல்வாக்கும் மிகுந்த இந்தத் தலைவர்களை மீறி அதிகாரிகளால் செயல்பட முடியவில்லை. வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் நேரு முடிவெடுத்தபோது, கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபுவும் உயர் அதிகாரிகளும் இது நடைமுறைச் சாத்தியமல்ல எனக் கூறினர். ஆனால், சிறந்த ஜனநாயகவாதியான நேரு, தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதன் விளைவாக, நாட்டின் மூலைமுடுக்குவரை அரசியல்மயமாயிற்று அரசின் கொள்கை வகுப்பில் மக்களும் பங்கேற்கும் நிலை ஏற்பட்டது. நாட்டின் மொத்தச் சூழ்நிலையில் பெரும் மாறுதல் உருவாயிற்று. அரசியல் கட்சிகள், தேர்தல்கள், நாடாளுமன்றம், அமைச்சர் குழு ஆகியவை முக்கியத்துவம் பெற்றன. மாநிலங்களிலும் இந்த மாறுதல் பரவியது.
பிரதமர் நேரு ஜனநாயக நெறி முறைகளில் நம்பிக்கை கொண்டவராக இருந்ததால் காங்கிரஸ் கட்சியிலும், மாநில ஆட்சியிலும், மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள் பதவிகளில் அமர்வதை ஊக்குவித்தார். ஒருபோதும் அவர்களின் செயல்பாடுகளில் தலையிட்டதில்லை. தன்னை மிஞ்சி இவர்கள் செயல்பட்டால் என்ன செய்வது என்ற அச்சம் அவருக்கு எழவில்லை.
தமிழ்நாட்டில் காமராஜ், ஆந்திரத்தில் சஞ்சீவ ரெட்டி, மகாராஷ்டிரத்தில் ஒய்.பி. சவான், குஜராத்தில் மொரார்ஜி தேசாய், வங்கத்தில் பி.சி. ராய், பஞ்சாபில் கெய்ரோன், ஒரிசாவில் பட்நாயக், கர்நாடகத்தில் நிஜலிங்கப்பா என பல்வேறு மாநிலங்களிலும் உருவான மாநிலத் தலைவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்புக் கொடுத்தார்.
ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்குவதிலும், மத்திய அரசின் கொள்கைகளை வகுப்பதிலும் மாநிலத் தலைவர்களுக்குப் பெரும் பங்கு இருந்தது. மத்தியிலும், மாநிலத்திலும் இருந்த அதிகார வர்க்கம் இந்த மக்கள் தலைவர்களை மீறிச் செயல்பட ஒருபோதும் துணியவில்லை.
ஆனால், நேருவின் மறைவுக்குப் பிறகு நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது. பிரதமராக லால்பகதூர் சாஸ்திரி பொறுப்பேற்றபோது, அதிகாரவர்க்கத்தையே நம்பிச் செயல்பட வேண்டிய நிலையில் அவர் இருந்தார். மிக்க அதிகாரம் படைத்த பிரதமரின் செயலகம் ஒன்றை அவர் உருவாக்கினார்.
1964-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி பிரதமரின் செயலராகவும் இந்தச் செயலகத்தின் தலைமைப் பொறுப்பாளராகவும் ஐ.சி.எஸ். அதிகாரியான எல்.கே. ஜா நியமிக்கப்பட்டார். இவர் திறமைவாய்ந்த அதிகாரி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால், நாளடைவில் இவர் தலைமையின்கீழ் பிரதமரின் செயலகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. வெளிநாட்டுத் தலைவர்கள் பிரதமரைச் சந்திக்கும்போதெல்லாம் அவரும் உடனிருப்பார். பிரதமரின் செயலராக மட்டுமல்ல, அவரின் ஆலோசகராகவும் அவர் மாறினார். அரசாங்கத்தின் கொள்கை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இதன் விளைவாக, தில்லியில் இருந்த வெளிநாட்டுத் தூதர்களும், அரசியல் தலைவர்களும் பிரதமரைச் சந்திப்பதற்கு ஜாவின் தயவை நாடத் தொடங்கினார்கள்.
1965-ம் ஆண்டில் துறைச் செயலர்களைக் கொண்ட குழு ஒன்றைப் பிரதமர் சாஸ்திரி அமைத்தார். இக்குழுவில் அமைச்சரவைச் செயலர் பாதுகாப்புத் துறைச் செயலர், வெளிநாட்டுத்துறைச் செயலர், பொருளாதாரத் துறையைச் சேர்ந்த இரு செயலர்கள், பிரதமரின் செயலர் எல்.கே.ஜா ஆகியோர் இடம்பெற்றனர். பிரதமருக்கு எல்லா விஷயங்களிலும் ஆலோசனை கூறுவதுதான் இந்தக் குழுவின் நோக்கமாகும். சூப்பர் அமைச்சரவையாக மாறிய இக்குழுவினர் எடுத்த முடிவுகளை அமைச்சரவை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவாயிற்று.
காங்கிரஸ் கட்சிக்குள்ளும், மத்திய அரசிலும் கூட்டு அரசியல் தலைமையை ஏற்படுத்த காங்கிரஸ் தலைவர் காமராஜ் முயற்சி செய்தார். கட்டுப்பாடான தலைமை இல்லாவிட்டால் அதிகாரவர்க்கத்தின் கை ஓங்கிவிடும் என்பதை அவர் தெளிவாக உணர்ந்திருந்தார். அவர் காங்கிரஸ் தலைவராக இருந்தவரை பிரதமர் சாஸ்திரி அவரை நேரடியாக எதிர்க்கத் தயங்கினார். ஆனால், அவருக்குப்பின் பிரதமரான இந்திரா காந்தி கூட்டுத் தலைமையை அலட்சியப்படுத்தினார். தன்னுடைய தலைமையைக் கட்சியிலும் ஆட்சியிலும் நிலைநிறுத்த அவர் செய்த முயற்சிகளின் விளைவாக அதிகாரவர்க்கத்தையும் துதிபாடிகளையும் சார்ந்து நிற்கவேண்டிய அவலநிலைக்கு ஆளாகி, இறுதியில் அவசரகால நிலைமையை அறிவித்து, மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகி ஆட்சியை இழக்கும் பரிதாபம் அவருக்கு ஏற்பட்டது.
பிரதமர் சாஸ்திரியின் காலத்தில் உருவாகிய இந்தச் சரிவு மன்மோகன் சிங் காலம்வரை தொடர்கிறது. பிரதமராக இந்திரா பதவி வகித்தபோது, அவரின் முதன்மைச் செயலரான பி.சி. அலெக்சாண்டர் சர்வ அதிகாரம் படைத்தவராகத் திகழ்ந்தார்.
பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தபோது, உளவுத்துறை அதிகாரியான எம்.கே. நாராயணன், வெளியுறவுத் துறை செயலரான ரொமேஷ் பண்டாரி, ஜே.என்.தீட்சித் போன்ற அதிகாரிகள் அவரின் ஆலோசகர்களாகத் திகழ்ந்தார்கள். பிரதமராக பி.வி. நரசிம்ம ராவ் பதவி வகித்தபோது, பிரிஜேஷ் மிஸ்ரா முதன்மைச் செயலராக விளங்கி கட்சியிலும் ஆட்சியிலும் பெரும் ஆதிக்கம் செலுத்தினார்.
பிரதமராக மன்மோகன் சிங் இருக்கும்போது திட்டக்குழுவின் துணைத் தலைவர் அலுவாலியா, பாதுகாப்பு ஆலோசகர்களான எம்.கே. நாராயணன், ஜே.என்.தீட்சித், சிவசங்கர மேனன் போன்ற அதிகாரிகள் அவருக்கு ஆலோசகர்களாக விளங்கி வருகிறார்கள். இந்த நிலைமை நீடிப்பது அதிகார வர்க்கத்தின் கை ஓங்குவதற்கு வழிவகை செய்துவிட்டது. அதனால்தான், ஸ்பெக்ட்ரம் ஊழலாக இருந்தாலும் வேறு ஊழலாக இருந்தாலும் அதிகாரிகளும் அதிலே தொடர்புகொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால், இன்று ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் ஊழல் சாக்கடையில் மூழ்கியவர்களாகத் திகழ்வதால் அதிகாரிகளும் தவறிழைக்கிறார்கள். தங்களின் ஊழல் திட்டங்களுக்கு ஒத்துழைப்பவர்களையே முக்கியப் பொறுப்புகளில் ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் நியமிக்கிறார்கள். எனவே, நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படும் சூழ்நிலை உருவாகிவிட்டது. மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் வரையிலும் ஊழல் பரவுவதற்கு பலவீனமான அரசியல் தலைமையே முக்கிய காரணமாகும்.
கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்களாக அரசியல் தலைவர்கள் விளங்கும்வரை அதிகாரிகள் அவர்களுக்கு அடங்கி ஒடுங்கி இருப்பார்கள். அரசியல் தலைமை ஊழல்களில் ஈடுபடும்போது அவர்களுக்குத் துணைநிற்கவேண்டிய நிலை அதிகாரிகளுக்கு ஏற்படுகிறது. எனவே, பெரும்பாலான அதிகாரிகள் ஊழலுக்கு ஒத்துழைக்கிறார்கள். பங்கும் பெறுகிறார்கள். பதவி உயர்வும் பெறுகிறார்கள்.
அரசியல் தலைமை வகுக்கும் கொள்கைகளைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் அதிகாரிகளுக்கு உண்டு. அரசியல் தலைமை தடுமாறும்போது அதிகாரிகளும் தடுமாறுகிறார்கள்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக காமராஜ் இருந்தபோது, கல்வித்துறையில் எல்லோருக்கும் இலவசக் கல்வி, சீருடை, மதிய உணவு ஆகியவை அளிக்கப்பட வேண்டும் என்றும், மின்துறையில் மின்வசதி இல்லாத கிராமம் இருக்கக்கூடாது என்றும் கொள்கை வகுத்தார். அதை நிறைவேற்றும் பொறுப்பை நெ.து. சுந்தரவடிவேலு, அப்பாதுரை ஆகிய இரு நேர்மையான அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். காமராஜின் திட்டத்தை அவர்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்கள். இதன் விளைவாக, தமிழகத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் உருவாயின. காமராஜ் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரராக இருந்ததாலும், தனது கொள்கைகளைச் செயல்படுத்தத் தக்க அதிகாரிகளை நியமித்து வேலை வாங்கியதாலும் அவரது ஆட்சிக்காலம் பொற்காலமாகத் திகழ்ந்தது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பிரதமரின் ஆலோசனையையும் மீறி அமைச்சர் ராசா செயல்பட்டதை உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது. இந்த நிலைமை உருவானதற்கு ராசாவின் துணிவு மட்டும் காரணமல்ல. பிரதமர் மன்மோகன் சிங்கின் பலவீனமான தலைமையும் காரணமாகும். தனது அறிவுரையை மீறிச் செயல்படத் துணிந்த ராசாவை பிரதமர் நீக்கியிருந்திருப்பாரானால், இந்த ஊழலைத் தடுத்திருக்க முடியும். மத்தியில் மட்டுமல்ல, மாநில அரசுகளில் நடைபெறும் தவறுகளையும் தடுத்து திருத்தவேண்டிய கடமையும் பொறுப்பும் பிரதமருக்கு உண்டு.
எல்லாவற்றையும் மௌனமாகப் பார்த்துக்கொண்டு செயலற்றுக் கிடக்கும் பிரதமரின் போக்குதான் அடுக்கடுக்கான ஊழல்கள் வளர்வதற்குக் காரணமாகும். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பி.ஜே. தாமûஸ ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்க வேண்டிய பரிதாபகரமான சூழ்நிலைக்குப் பிரதமர் ஆளானார். இதற்குக் காரணம் என்ன? அவரை ஆட்டுவித்த படியெல்லாம் ஆட்டுவிக்கும் சக்தி எது?
பிரதமர் மன்மோகன் சிங் முழுமையாக சோனியாவைச் சார்ந்து நிற்கிறார். காங்கிரஸ் தலைவியான சோனியாவோ தனது செயலர்களான ஜார்ஜ், அகமதுபடேல் போன்றவர்களைச் சார்ந்து நிற்கிறார். அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல் தலைவர்களின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்படுகின்றன.
பதவி நாற்காலியை அலங்கரிப்பதற்காக மட்டும் பிரதமர் இருக்கக்கூடாது. தனது நிழலில் நடைபெறும் ஊழல்களை அனுமதிப்பதும், பார்த்தும் பாராமுகமாக இருப்பதுமே பெரும் ஊழல் ஆகும். இப்படி அவமானங்களைச் சுமந்துகொண்டும், ஊழல் முடை நாற்றத்தைச் சகித்துக் கொண்டும் பதவியில் தொடர்வதைவிட, விலகிவிடுவது மன்மோகன் சிங்குக்குப் பெருமை தரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.