ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வகுப்பறையில் வாடலாமா வருங்காலம்?

இயற்கை எத்தனையோ ஜீவராசிகளை உள்ளடக்கியதாக இருப்பினும் மனிதரே அதிஉன்னதமானவராகக் கருதப்படுகிறார். காரணம், அவரது சிந்தனைத் திறனும், வாழ்வு குறித்த ஓயாத தேடலும்தான். இவையே மனிதரை மற்றவற்றிலிருந்து வேறுபடுத

Updated On :20 செப்டம்பர் 2012, 1:28 am

இயற்கை எத்தனையோ ஜீவராசிகளை உள்ளடக்கியதாக இருப்பினும் மனிதரே அதிஉன்னதமானவராகக் கருதப்படுகிறார். காரணம், அவரது சிந்தனைத் திறனும், வாழ்வு குறித்த ஓயாத தேடலும்தான். இவையே மனிதரை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவதில் பிரதான பங்கு வகிக்கிறது. ஆனாலும் மற்றொரு காரணமும் மறைந்து நிற்கிறது. ஆம், தன்னைத்தானே அழித்துக்கொள்வது. மனிதரைத் தவிர, வேறு எந்த உயிரினமும் தெரிந்தே தன்னை அழித்துக்கொள்வதில்லை.

 "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்று ஒளவையார் தள்ளாத வயதிலும் பாடிச்சென்றது இதற்காகத்தானா?

 கடந்த ஜனவரி 29-ம் தேதி சென்னை மாணவி திவ்யா (20) மீது ஒரு திருட்டுக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, மூன்று உதவிப் பேராசிரியைகள் உள்ளிட்ட நான்கு பேர், மாணவியின் ஆடைகளைக் களைந்து சோதனையிட்டதாகக் கூறப்படுகிறது.

 ஏழ்மையின் எல்லையிலிருந்து விரக்தியின் விளிம்புக்குச் சென்ற மாணவி இரு நாள்கள் கழித்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார். மாணவியின் மரணம் மனசாட்சி உள்ளோரை உலுக்குவதோடு மட்டுமல்லாது, இந்தச் சமூகத்தில் சில கேள்விகளையும் விட்டுச்செல்வதாக உள்ளது.

 மாணவியின் ஆடைகளைக் களைந்து சோதனையிடும் அளவுக்கு ஆசிரியைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதா? அவ்வாறெனில் கடந்த டிசம்பரில் அமெரிக்க விமான நிலையத்தில் இந்தியத் தூதர் மீராசங்கரின் சேலையைக் களைந்து சோதனையிட்ட அமெரிக்கருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? எல்லை தாண்டிச்செல்லும் மீனவரைச் சுட்டுக்கொல்லும் சிங்கள கடற்படைக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்றுமில்லை! ஒன்றுமேயில்லை!!

 அந்த 4 பேராசிரியைகளின் மகள் மீது இதுபோன்றதொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பின் இப்படித்தான் விசாரித்திருப்பார்களா? 20 வயது மாணவியை விசாரிக்கவும், சோதனையிடவும் 26 வயதே நிரம்பிய உதவிப்பேராசிரியை போதுமான அளவு பக்குவமும், அனுபவ முதிர்ச்சியும் அடைந்திருப்பாரா?

 மாணவியின் ஏழ்மைதான் இப்படியொரு சோதனைக்கு இட்டுச் சென்றதா? நிலைகுலைந்துபோன மாணவியைத் தேற்ற சக மாணவிகள் ஒருவர்கூட முன்வரவில்லையா? சுமத்தப்படும் குற்றச்சாட்டு எதுவாக இருப்பினும் தன்னை அழித்துக்கொள்வது சரியான தீர்வாகுமா? மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில்வருமா? ஓர் உயிரின் மதிப்பு இவ்வளவுதானா?

 செய்முறைத்தேர்வு மதிப்பெண்களை வைத்துக்கொண்டு சர்வாதிகாரப்போக்கை மேற்கொள்ளும் ஒருசில ஆசிரியர்கள் இனிமேலாவது தங்களைத் திருத்திக்கொள்ள முன்வர வேண்டும். இல்லையேல், ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயமும் தலைகுனிய நேரிடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

 காலனின் கையில் அகப்பட்டுக்கொண்ட உயிரையே மீட்டு வந்த சாவித்திரியும், மார்க்கண்டேயனும் பிறந்த மண்ணில் இப்படியொரு முடிவை மாணவி தேடிக்கொண்டது வேதனையென்றால், அதற்குக் காரணம் ஆசிரியைகள் எனக் கூறப்படுவது வேதனையிலும் வேதனை.

 சென்னை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ராஜசேகர் ஷாம் நன்கொடையாக ரூ. 18.6 கோடியை அப் பல்கலைக்கழகத்துக்கு அளித்துவிட்டு இறந்துபோனாரே, அந்த மாணவரின் தியாகத்தை ஆசிரியைகள் சற்றேனும் நினைத்துப் பார்த்திருப்பார்களாயின் நன்கு படித்துக்கொண்டிருந்த இந்த மாணவியை இழக்க நேரிட்டிருக்காது. உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் தண்டிப்பதுதான் மாணவ சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் வழியென்றால் பள்ளிகளும் கல்லூரிகளும் எதற்கு? காவல் நிலையங்களும் அங்குள்ள அதிகாரிகளும் போதுமே!

 ராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியரை இந்தியாவின் முதல் குடிமகனாக்கி அழகுபார்த்த பெருமை நமக்குண்டு. அதேசமயம் ஒருசில ஆசிரியைகளால் ஒரு பெண் இறந்த அவமானம் ஏற்பட்டது என்பதையும் மறுக்க முடியாதுதானே? ஒவ்வொரு வெற்றியிலும் தனது பள்ளி, கல்லூரி ஆசிரியர்களைப் பெருமையோடும் நன்றியோடும் நினைத்துப் பார்க்கும் மாணவர்கள் இன்றளவும் இருக்கிறார்கள்.

 அதேநேரத்தில் இன்றைய மாணவர்களிடம் கணினி அறிவும், நவீன கலாசார அறிவும் சிறப்பாகக் காணப்படுகிறதே தவிர, மனதளவில் பக்குவம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல், உடற்பயிற்சி, விளையாட்டுகளின் மீதான ஆர்வம் குறைவாகவே காணப்படுகிறது. உணர்ச்சி மேலீட்டால் தவறான முடிவுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோரையும், குடும்பத்தாரையும் சற்றேனும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

 தொடக்கப் பள்ளிமுதல் கல்லூரிவரை உளவியல் சார்ந்த பாடத்திட்டத்தைக் கட்டாயமாக்குவதுடன் தற்கொலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாணவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரவலாக நிகழ்த்துவதன் மூலமும் இதுபோன்றதொரு நிகழ்வு மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

 மாணவர்கள் தங்கள் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களைக் கைவிட்டு, நச்சு விதைகளைக் களையெடுத்து, நம்பிக்கையை விதைக்க வேண்டும். அப்துல் கலாம் கனவுகண்ட 2020-ம் ஆண்டை நோக்கி வேகமாகவும், விவேகமாகவும் அடியெடுத்து வைப்பதோடு மட்டுமல்லாது, "இனியொரு விதிசெய்வோம்' என்ற பாரதியாரின் வரியை எப்பொழுதும் மனதில் நிலைநிறுத்தவும் வேண்டும். கனவு மெய்ப்படுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.