ஏற்றுமதி எழுச்சி தொடருமா?
சென்ற டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் ஏற்றுமதி 36.4 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 2,250 கோடி டாலர் ஆகும். கடந்த 33 மாதங்களில் இதுவே அதிகபட்ச ஏற்றுமதி. இது ஒரு சாதனை எனலாம். பொதுவாக,


சென்ற டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் ஏற்றுமதி 36.4 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 2,250 கோடி டாலர் ஆகும். கடந்த 33 மாதங்களில் இதுவே அதிகபட்ச ஏற்றுமதி. இது ஒரு சாதனை எனலாம்.
பொதுவாக, ஒரு நிதி ஆண்டில், கடைசி மூன்று மாதங்களில் ஏற்றுமதி அதிகரிப்பது வாடிக்கை. எனவே, 2011-ம் ஆண்டில், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஏற்றுமதி மேலும் கணிசமாக அதிகரிக்கும் என்பது மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கணிப்பு.
அதிக அளவில் ஏற்றுமதியான பொருள்கள் ஜவுளி, சிறிய மோட்டார் வாகனம், உருக்கு, உருக்கு சார்ந்த மெஷின்கள் உள்ளிட்ட பொறியியல் உற்பத்திப் பொருள்கள், ரசாயனம், மருந்துவகை, மின்னணுப் பொருள்கள், ஆபரணக் கற்கள், ஆபரணங்கள், கைவினைப் பொருள்கள், தோல் பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள்.
ஏற்றுமதியில் சரிவைச் சந்தித்த பொருள்களும் உண்டு. முக்கியமாக தேயிலை. காரணம், இந்த ஆண்டு தேயிலை விளைச்சல் மிகவும் குறைந்தது. அதேபோல், பழங்கள், காய்கறி, வெங்காயம் ஆகியவை ஏற்றுமதியில் வீழ்ச்சி கண்டன. வெங்காயம் பற்றி சொல்லவே தேவையில்லை. அதன் ஏற்றுமதிதான் தடை செய்யப்பட்டுள்ளதே!
மற்றபடி, அண்மைக்காலமாக, ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு அரசின் ஊக்குவிப்பு, சலுகைகள் தவிர, வேறு சில முக்கியமான காரணங்கள் உள்ளன: வழக்கமாக நாம் ஏற்றுமதி செய்யும் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளை மட்டும் நம்பி இராமல், ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன், அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் இந்திய ஏற்றுமதியாளர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
அடுத்து, சர்வதேசப் பொருளாதார மந்த நிலையிலிருந்து மெல்ல, மெல்ல மீட்சி அடைந்துவரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தேவை அதிகரித்து வருகிறது.
முக்கியமாக ஓர் உணர்வுபூர்வமான காரணமும் உண்டு. குழந்தைத் தொழிலாளர்களின் உழைப்பைப் பயன்படுத்துவதில்லை என்ற உண்மை, வெளிநாட்டு இறக்குமதியாளர்களை உரிய வகையில் சென்றடைந்துள்ளது. இது ஒரு நல்ல திருப்பம்.
உதாரணமாக, காஷ்மீர் மற்றும் லக்னௌ போன்ற வடமாநிலங்களில் தயாரிக்கப்படும் கலை அழகு மிளிரும் நேர்த்தியான கம்பளங்கள், தரைவிரிப்புகள் (கார்பெட்) ஆகியவற்றுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. அவற்றின் ஏற்றுமதி முன்பைவிட கணிசமாக அதிகரித்துள்ளது.
மத்திய அரசு செயல்படுத்திவரும் ஊக்குவிப்புத் திட்டங்கள், புத்துயிர்த் திட்டங்களின் பயனாக பொருள்களின் விலையை முடிந்த அளவு குறைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மொத்தத்தில், கடந்த காலங்களைவிட, இப்போது இந்திய ஏற்றுமதியாளர் மீதுள்ள நன்மதிப்பு, நல்லெண்ணம் உயர்ந்துள்ளது. இதைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஏற்றுமதியாளர்கள் அரும்பாடுபட வேண்டும் என்பது வெளிப்படை.
பொருளாதார வல்லுநர்களின் கணிப்புப்படி, அமெரிக்காவின் இறக்குமதி எதிர்காலத்தில் 15 சதவீதம் குறையும்; ஐரோப்பிய நாடுகளின் இறக்குமதி 10 சதவீதம் குறையக்கூடும். காரணம், அந்த நாடுகளில் பொருளாதார மீட்சி முழுமையாக ஏற்படவில்லை என்பதே.
இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஓர் அச்சுறுத்தல். இந்நிலையில், ஏற்றுமதியில் எழுச்சி தொடர வேண்டும் எனில், உலகிலுள்ள புத்தம் புதிய சந்தைகளை அடையாளம் கண்டு, அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தீவிரம் காட்டியே ஆக வேண்டும்.
உதாரணமாக, கஸகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளில் சுபீட்சம் அதிகரித்துள்ளது மட்டுமல்ல. அங்கெல்லாம் தேவை கணிசமாக உயர்ந்துள்ளது.
ரஷியா, உக்ரைன் போன்ற நாடுகள் இந்தியப் பொருள்களை இறக்குமதி செய்வதில் நாட்டம் கொண்டவர்கள். குறிப்பாக, பொறியியல் துறைப் பொருள்களைப் பொறுத்தவரை, கொலம்பியா, பிரேசில் போன்ற நாடுகளின் புதிய சந்தைகள், சீனப் பொருள்களைவிட இந்தியப் பொறியியல் பொருள்களையே இறக்குமதி செய்ய விரும்புகிறார்கள். காரணம், நியாயமான விலை, நல்ல தரம் என்பதே.
இது ஒருபுறம் இருக்க, அரசுத்தரப்பில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் பல உண்டு. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டாலே அல்லாமல் ஏற்றுமதிப் பெருக்கத்துக்கு வழி காண முடியாது.
நெடுஞ்சாலைகள் மேம்பாடு, துறைமுகங்கள், விமானக் கூடங்கள் நவீனமயமாக்கம் ஆகியவை உடனடித் தேவை. பெங்களூர், ஹைதராபாத், தில்லி உள்ளிட்ட சில விமானக் கூடங்கள் உலகத்தரத்தில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன என்பது உண்மை. எனினும், நாட்டின் எட்டுத் திசைகளிலும் உள்ள விமானக்கூடங்கள், சரக்குப் போக்குவரத்துக்கு ஏதுவாக, குறிப்பிட்ட காலவரம்புக்குள் நவீனமயமாக்கப்பட வேண்டும்.
சரக்குப் பெட்டக வசதிகள், குளிர்சாதனப் பண்டகசாலைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டும். குளிர்சாதன வசதியுடன் கூடிய மோட்டார் "வேன்'கள் போன்ற வசதியை அதிகரிப்பதுடன், நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் பரவலாக்கப்பட வேண்டும். 11-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டு இருப்பதால், மேற்கூறிய திட்டங்கள் விரைவுபடுத்தப்படும் என்று நம்புவோம்.
ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு ஜவுளித்துறை, கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, தோல் பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு அண்மையில் ரூ. 1,052 கோடி அளவுக்குச் சலுகைகள் வழங்கியுள்ளது. அதிக தொழிலாளர்களை உள்ளடக்கிய தொழில்களைத் தேர்வு செய்து ஊக்குவிப்பு வழங்கப்பட்டுள்ளது, வரவேற்கத்தக்கதே.
பொறியியல் துறை மற்றும் ரசாயனப் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்க, ஏற்கெனவே, அதாவது சென்ற ஆண்டு ஜனவரியில் வழங்கப்பட்ட சலுகைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
மூலதனப் பொருள்களின் ஏற்றுமதிக்கு முற்றிலும் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 2012 மார்ச் வரை தொடரும்.
வரிச்சலுகை பாஸ் புத்தகத் திட்டம் நடப்பாண்டு ஜூன் 30-ம் தேதி முடிவுக்கு வருகிறது. இது ஒரு முக்கியமான திட்டம். நீண்டகாலமாகச் செயல்படுத்தப்படுகிறது. உலக வர்த்தக அமைப்பு இதைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. எனினும், அந்த எதிர்ப்பைச் சமாளிக்கும் வகையில், இத்திட்டத்துக்கு மாற்றாக, வேறு சலுகை அளிப்பது அவசியம்.
இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மத்திய வர்த்தக அமைச்சகம் விரைந்து செயல்பட்டு, ஏற்றுமதியாளர்களின் நலன் காக்க வேண்டும். உலக வர்த்தக அமைப்பின் எதிர்ப்பை அமெரிக்கா போன்ற நாடுகள் எப்படிச் சமாளிக்கின்றன என்பது உலகறிந்த ரகசியம்!
அமெரிக்க விவசாயிகளுக்கு விதிமுறைகளுக்குப் புறம்பாக, அப்பட்டமாக வழங்கப்படும் சலுகைகள் கடுகளவும் குறையாத வகையில், புதிய, புதிய உருவில் இன்றளவும் தொடருகின்றன என்பதே உண்மை.
ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி அளவும், டாலர் மதிப்பும் அதிகரித்துள்ளது என்பதையே மனத்தில்கொண்டு, அவற்றுக்கு வழங்கப்படும் சலுகைகளைக் குறைக்க இருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன. இது முறையல்ல.
நிதி நிலையைக் காரணம் காட்டி, எந்த ஒரு துறைக்கும் சலுகைகளைக் குறைப்பதற்கு இது தருணம் அல்ல. இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஏற்றுமதியாளர்களுக்குத் தீராத தலைவலியாக இருப்பது, சிக்கலான நடைமுறைகளும், முடிவில்லாத காகிதப் பணிகளும்தான். காலம் கடந்தாவது, மத்திய அரசு இதனை உணரத் தொடங்கியுள்ளது.
பல்வேறு ஆவணங்களையும், சான்றிதழ்களையும் தயாரிப்பதில் ஆகும் கால விரயமும், பண விரயமும் கொஞ்சம் நஞ்சம் அல்ல. ஒருவர் ஏற்றுமதி செய்யும் மதிப்பில் குறைந்தது 7 முதல் 10 சதவீதம்வரை இதற்கு செலவாகிறது.
இந்தத் தகவல் வர்த்தக அமைச்சகத்தால், ஆய்வு செய்யப்பட்டு, கண்டுள்ள அதிகாரப்பூர்வமான தகவல். இந்தச் செலவில் பாதி குறைந்தால்கூட, ஏற்றுமதிப் பொருள்களின் விலை அந்த அளவு குறைந்து, போட்டியை எதிர்கொள்வதற்கு உதவும்; ஏற்றுமதியாளர்களின் லாபமும் சற்று உயரும்.
இந்த நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், ""நம்பிக்கை அடிப்படையிலான'' புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய அரசு யோசித்து வருகிறது. அதன்படி, ஏற்றுமதியாளர்கள் தரும் சுய அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படும். ஒரு நிபந்தனை: அந்த அறிக்கை உண்மை என்பதற்கு அறிகுறியாக, ஒரு சார்டர்டு அக்கவுண்டென்ட் கையெழுத்து போட வேண்டும்.
அதேபோல், சுங்கத் துறை, கலால் துறை, சேவை வரித்துறை, அந்நிய வர்த்தகத் துறை எனப் பல்வேறு துறைகளின் ஒப்புதல்களைப் பெற வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட துறைகள் ஏற்கெனவே கணினி மயமாக்கப்பட்டுள்ளன. எனவே, ஒரே ஒரு "பத்திரத்தை'த் தாக்கல் செய்தால், சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலகங்களும், அந்தப் பத்திரத்தின் அடிப்படையில் செயல்படலாம் என்ற யோசனையும் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த யோசனைகள் ஏட்டளவில் நின்றுவிடாமல் விரைந்து செயல்படுத்தப்பட்டால் நல்லது.
ஏற்றுமதிக்குச் சாதகமாக உள்ள சூழலை நன்கு பயன்படுத்திக்கொண்டு, ஏற்றுமதியாளர்களும் அரசும் முனைப்புடன் செயல்பட்டு, ஏற்றுமதியைப் பெருக்கிட வேண்டும் என்பதே இப்போதைய தேவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...