வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பட்ஜெட்: நினைத்ததும், நடந்ததும்!

நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் 6-வது பட்ஜெட் பற்றி அப்படி ஒன்றும் பிரமாதமான எதிர்பார்ப்புகள் இல்லை. காரணம்,நாட்டில் தற்போது நிலவும் சூழல் - பணவீக்கம், விலைவாசி உயர்வு, அடுத்தடுத்து கிளம்பும் ஊழல் ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:07 am

எஸ். கோபாலகிருஷ்ணன்

நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் 6-வது பட்ஜெட் பற்றி அப்படி ஒன்றும் பிரமாதமான எதிர்பார்ப்புகள் இல்லை. காரணம்,நாட்டில் தற்போது நிலவும் சூழல் - பணவீக்கம், விலைவாசி உயர்வு, அடுத்தடுத்து கிளம்பும் ஊழல் பூதம், கறுப்புப்பணம் பற்றிய கவலை ஆகியவையே மக்கள் மனதில் மேலோங்கி உள்ளன. எனினும், சில அடிப்படை எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்தன.

உதாரணமாக, தனி நபர்கள், குறிப்பாக மாதச் சம்பளம் பெறுபவர்களின் வருமான வரிக்கு உச்சவரம்பு அதிகரிப்பு, சேமிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய வரிச்சலுகை, வீட்டு வசதி மேம்பாட்டுத் திட்டங்கள், சிறுதொழில் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்குச் சலுகைகள், நெசவாளர் கடன் தள்ளுபடி ஆகியவற்றைச் சொல்லலாம்.

நடந்தது என்ன? வருமான வரிவிலக்கு ரூ.1.60 லட்சத்திலிருந்து ரூ.1.80 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த வரம்புக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு ரூ.2,060 வரி சேமிப்புக் கிட்டும். மகளிருக்கு ஏற்கெனவே இருந்த வரம்பான ரூ.1.90 லட்சம் தொடர்கிறது.

மூத்த குடிமக்களைப் பொறுத்தவரை, நிதி அமைச்சர் சற்று தாராளம் காட்டியுள்ளார். அவர்களுக்கு மூன்று வகை நன்மைகள் கிடைத்துள்ளன. ஒன்று தற்போதுள்ள வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2.40 லட்சத்திலிருந்து ரூ. 2.50 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் வரி சேமிப்பு ரூ.1,030 ஆகும்.

இரண்டாவதாக, மூத்த குடிமக்களுக்கான சலுகைகளைப் பெறுவதற்கு 65 வயது பூர்த்தி ஆகவேண்டும் என இருந்தது. அது 60 வயது ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ரயில் கட்டணச் சலுகை, வங்கியில் அரை சதவீதம் கூடுதல் வட்டி ஆகிய சலுகைகளுக்கு 60 வயது நிரம்பினால் போதும். அதையொட்டி இப்போது வரிச்சலுகையும் அமைந்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்று.

மூன்றாவதாக, முற்றிலும் புதுமையான ஓர் அறிவிப்பு என்னவெனில், 80 வயது நிரம்பியவர்கள், அதாவது 1,000 பிறைகளைக் கண்டவர்களை, மிகவும் மூத்த குடிமக்கள் என்று ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்களுக்குத் தற்போது புதிதாக அறிவித்துள்ள ரூ.2.50 லட்சத்தை, இரண்டு மடங்காக அதாவது ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளார்கள்.

ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக வருவாய் ஈட்டும் 80 வயது தாண்டியவர்களுக்கு இதனால் ரூ.26,780 வரி மிச்சமாகும். இந்தப் பலனைப் பெறக்கூடிய பாக்கியசாலிகள் எத்தனை பேரோ? காரணம், தற்போது 80 வயதில் இருப்பவர்கள், அவர்களது இளமைக்காலத்தில், நிலவிய சம்பள அளவு, சேமிப்பு சக்தி, முதலீட்டு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதை மறக்க முடியுமா?

அதேசமயம், 25 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளுக்கு 5 சதவீத சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது ஒரு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அதனால் மருத்துவச் செலவு மேலும் அதிகரிக்கும். இது பொதுவாக அனைவரையும், குறிப்பாக மூத்த குடிமக்களையும் பாதிக்கும் என்று சொல்லத் தேவையில்லை. உலக வங்கியின் ஆய்வு ஒன்று தெரிவிப்பது என்னவெனில், இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடியே 40 லட்சம் பேர் மருத்துவச் செலவுகளைச் செய்தே ஏழைகளாகி இருக்கிறார்கள் என்பதுதான்.

நடுத்தர மக்களின் "இல்லக்கனவை' நனவாக்கும் வகையில் புதிய திட்டங்கள் ஏதும் இல்லை. பட்ஜெட் வீடுகளுக்கான கடன் வட்டிச்சலுகை என்னும் பெயரில் ரூ.25 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கு ஒரு சதவீதம் மானியம் வழங்கப்படும்.

இதுவரை ரூ.15 லட்சம் வரையிலான வீட்டுக்கடன் முன்னுரிமைத் திட்டத்தின்கீழ் வந்தது. அது ரூ. 25 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுபோன்ற விளிம்புநிலை விஷயங்களுடன் வீட்டுவசதித் திட்டம் சுருங்கிவிட்டது. தற்போது நாட்டில் 26 கோடி குடியிருப்புகள் பற்றாக்குறை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே, சீனாவுக்கு அடுத்தபடியாக, அதிகமாகச் சேமிப்புப் பழக்கத்தைக் கொண்டவர்கள் இந்தியர்கள்தான். இது இந்தியப் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாகத் திகழ்கிறது. எனினும், சேமிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய வரிச்சலுகை ஏதும் இல்லை என்பது ஏமாற்றமே.

கம்பெனிகளை எடுத்துக்கொண்டால், அடிப்படை வருமான வரிவிதிப்பில் மாற்றம் இல்லை. ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான வருவாய் ஈட்டும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் 7.5 சதவீத கூடுதல் வரி (சர்சார்ஜ்) 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக, பட்ஜெட் அறிவிப்பின்போது பங்குச்சந்தை எழுச்சி கண்டது!

மினிமம் ஆல்டர்னேட் வரி 18 சதவீதத்திலிருந்து 18.5 சதவீதமாக உயர்கிறது. நல்லவேளையாக ஏற்றுமதியாளர்களுக்கு செயல்படுத்திய ஊக்குவிப்புத் திட்டங்கள், பயந்தது போல் விலக்கிக்கொள்ளப்படவில்லை. இது ஆறுதல் தரும் விஷயம்.

உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பழம், பால், காய்கறிகள் போன்றவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு, போதிய எண்ணிக்கையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பண்டகசாலைகள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை முனைப்புடன் செயல்படுத்தப்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

""உணவுப் பாதுகாப்பு'' என்ற மாபெரும் திட்டம் சென்ற ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அது ஓராண்டுக்குப் பிறகும் செயல்வடிவம் பெறவில்லை. காரணம்,தேசிய ஆலோசனைக் குழுவுக்கும், மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கும் இடையே எழுந்துள்ள விவாதம் இன்னும் முடிந்தபாடில்லை!

நிதி அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பைச் செய்துள்ளார். மண்ணெண்ணெய், எரிவாயு (எல்.பி.ஜி.), உரம் ஆகியவற்றுக்கு அரசு வழங்கும் மானியத்தை வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பயனாளிகளுக்கு நேரடியாக ரொக்கத்தொகை வழங்கும் திட்டம்தான் அது. லத்தின் அமெரிக்கா போன்ற சில நாடுகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது இத்திட்டம். ஆனால், இந்தியச் சூழலில் இது சாத்தியமா என்பதைத் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். நந்தன் நீல்கேனியின் தலைமையில் செயல்படும் "குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை எண்' எண்ணும் திட்டம் நிறைவேறினால், இது சாத்தியமாகலாம்.

பொருளாதாரச் சீர்திருத்தம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அந்நிய நேரடி முதலீட்டை (எப்.டி.ஐ.) வரவேற்கலாம். காரணம், அது இந்தியத் தொழில்துறையை வலுப்படுத்தக்கூடியது. முதலீடு ஓரளவு நிலையானதும் கூட. ஆனால் அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீட்டை (எப்.ஐ.ஐ.) ஓரளவுக்கு மேல் வரவேற்பது உசிதமல்ல. அது எப்போது வரும், எப்போது போகும் என்று சொல்ல முடியாது. இந்தியப் பொருளாதாரத்தில் சிறிய மாற்றம் என்றால் கூட, ""அற்றகுளத்து அருநீர் பறவை'' போல் பறந்துவிடும். இதனால் நிதி நெருக்கடி பங்குச்சந்தை வீழ்ச்சி ஆகியவை ஏற்படும். இந்நிலையில் அந்நிய நிறுவன முதலீடுகளுக்கான (எப்.ஐ.ஐ.) உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இது மறுபரிசீலனைக்கு உள்படுத்தப்பட வேண்டும்.

நிதி அமைச்சர், ஊழல் தடுப்பு நடவடிக்கை பற்றி போகிற போக்கில் பேசினாரே தவிர, உறுதியான நடவடிக்கைகளை அறிவிக்கவில்லை. தற்போது அரசுக்கு உள்ள சுய யோசனை சார்ந்த விருப்ப அதிகாரத்தை ரத்து செய்வது குறித்து ஆராயப்படுவதாகக் கூறினாரே அல்லாமல் வேறு செயல்திட்டம் இல்லை. ஆனால் ஒன்று, இந்தியாவில் இத்துடன் 80 பட்ஜெட்டுகள் வந்துவிட்டன. ஆனால், ""ஊழல் பிரச்னை'' என்று இதுவரை இப்போது தான் பட்ஜெட் உரையில் பேசப்பட்டது.

சுவிஸ் வங்கி, பஹாமாஸ், பெர்முடா, பிரிட்டிஷ் வர்ஜின் தீவு, கோமென் தீவு, மொனாக்கோ, ஆர்ஜெண்டினா, மார்ஷல் தீவு என பல நாடுகள் மற்றும் சின்னஞ்சிறு தீவுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பான புதிய சட்டதிட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது.

உத்தேசமாக ரூ.25 லட்சம் கோடிக்கு மேல், ரூ.75 லட்சம் கோடி வரையிலான அளவில் இந்தியக் கறுப்புப்பணம் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது என்பது ஒரு மதிப்பீடு. இது வெறும் கறுப்புப்பணம் மட்டும் அல்ல. கறுப்புப் பணம் என்றால், கணக்கில் வராத பணம். அதாவது வருமானத்துக்கு ஏற்ப அரசுக்கு வரி கட்டாமல் ஏமாற்றி பதுக்கிவைத்துள்ள பணம் என்றுதான் பலருக்குத் தோன்றும். அது உண்மை அல்ல. கடுமையான தண்டனைக்கு உரிய பெரும் குற்றங்களைப்புரிந்து சேர்த்து வைத்துள்ள பணம் இது. முற்றிலும் சட்ட விரோதமான வழிகளில் சம்பாதிக்கப்பட்ட பணம். உதாரணமாக, தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல், மேல்நிலைகளில் ஊழல், ஹவாலா உள்ளிட்ட வழிகளில் சேர்த்தபணம் தான் இது.

எனவே, அண்மைக்காலமாக, நாடுதழுவிய முறையில் சூடாக விவாதம் நடக்கும் இந்தத் தீமையை முறியடித்து, வெளிநாடுகளில்ருந்து இந்தப் பணத்தைக் கொண்டுவர அதிரடித்திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படாதது வியப்பளிக்கிறது. எனினும் பட்ஜெட்டில் அறிவிக்காவிட்டாலும், இனியும் காலம் தாழ்த்தாமல் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

இது ஒருபுறம் இருக்க, நேரடி வரி விதிப்பு முறை தற்போது நாடாளுமன்றக் குழுவின் முன் பரிசீலனையில் உள்ளது. அது 2012-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, வருமான வரி உள்ளிட்ட அனைத்து வகை வரிகளிலும், ஒருவித ஸ்திரத்தன்மை, தெளிவு, எளிமை மற்றும் தொடர்ச்சி ஆகியவற்றுக்குப் புதிய முறை வழி வகுக்கும் என்று நம்பலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.