மோசடி விளையாட்டு

தொலைக்காட்சிகளின் ஆதிக்கத்துக்குப் பிறகு மக்களின் சிந்தனைகளை மழுங்கச் செய்யும் நிகழ்ச்சிகள் எளிதில் மக்களை விழுங்குகின்றன என்ற குற்றச்சாட்டு பழையது. இப்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் "மோசடி விளை
Updated on
2 min read

தொலைக்காட்சிகளின் ஆதிக்கத்துக்குப் பிறகு மக்களின் சிந்தனைகளை மழுங்கச் செய்யும் நிகழ்ச்சிகள் எளிதில் மக்களை விழுங்குகின்றன என்ற குற்றச்சாட்டு பழையது. இப்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் "மோசடி விளையாட்டு' புதியது.

 "சினிமா கலாட்டா', "சினிமா சினிமா' போன்ற வெவ்வேறு பெயர்களில் இந்த நிகழ்ச்சிகள் சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றன.

 இந்த நிகழ்ச்சிகளில் வழக்கம்போல அரைகுறை ஆடையணிந்த ஒரு பெண், சில நேரங்களில் கூடவே பரிதாபமாக முழுமையாக உடையணிந்த ஓர் ஆண்.

 பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாகக் கொள்ளலாம்.

 ஏழு இலக்க எண்ணைக் கொண்ட ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்து விடுகிறார்கள். அதில் தொடர்பு கொண்டு திரையில் காட்டப்படும் சிதைக்கப்பட்ட முகம் அல்லது வெட்டப்பட்ட முகத்துக்குரியவர் யார் என்பதைச் சொல்ல வேண்டும். இதுதான் விளையாட்டு.

 பிஎஸ்என்எல் தவிர்த்து மீதமுள்ள அத்தனை தனியார் தொலைபேசிகள், கைப்பேசிகள் மூலம் இந்த எண்ணைத் தொடர்பு கொள்ள முடியும். கட்டணம் நிமிஷத்துக்கு ரூ. 10.

 அழைப்பு சென்று கொண்டே இருக்கும். தொலைக்காட்சியில் பேசுபவர்கள் வேறு. தொலைபேசியில் பேசுபவர்கள் வேறு.

 தொலைபேசியின் மறுமுனையில், அந்த ஏழு இலக்க எண்ணில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு பெண்ணின் குரல். உங்களது அழைப்பு வரிசையில் காத்திருக்கிறது.

 "விளையாடுங்கள், விளையாடுங்கள்' என நம்மை உற்சாகப்படுத்துகிறார்கள்.

 ""ஹோல்டு பண்ணுங்கள், பார்க்கலாம், நீங்கள் அதிர்ஷ்டசாலியா? நன்றி... நீங்களாகவும் இருக்கலாம்... எந்த நேரமும் ஸ்டுடியோவுடன் இணைக்கப்படுவீர்கள்.... உங்களுடைய கால் எங்களுக்கு முக்கியமானது... டி.வி.யில் காட்டப்படும் படத்தை கவனமாகப் பாருங்கள்... நீண்டநேரம் லயனில் காத்திருந்தால் இணைப்பைத் துண்டித்துவிட்டு மீண்டும் கால் செய்யுங்கள்.... அடடே! நீங்கள் நீண்டநேரம் காத்திருக்கிறீர்கள்- செம ஸ்மார்ட்டா இருக்கிறீர்கள்...

 வெற்றி இலக்கின் இன்னும் பக்கமாக போகிறீர்கள்... சினிமா வெயிட்டிங் ரூம்ல இருக்கீங்க... ஸ்டுடியோ பக்கத்தில்தான் இருக்கீங்க... சீக்கிரமே கனெக்ட் செய்யப்படலாம்.... இவளோ காசு சேர்த்து என்ன செய்வீங்க.... லயனில் காத்திருங்க... வெற்றி இலக்கின் பக்கம் போக லயனில் காத்திருங்க... பொறுமையாகக் காத்திருந்தா பலன் நிச்சயம்ன்னு சொல்லுவாங்க...

 லக்கி காலரா ஹோல்டு பண்ணுங்க, பாக்கலாம்... லயனை ஹோல்டு செய்ததற்கு நன்றி... ஸ்டுடியோவுடன் எந்நேரமும் இணைக்கப்படுவீர்கள்... உங்களின் கால் எங்களுக்கு முக்கியமானது... ரொம்ப நேரம் காத்திருந்தால் டிஸ்கனெக்ட் செஞ்சு மீண்டும் கால் போடலாம்... ஜெயிக்கலாம் பல லட்சம் ரூபாய்... சூப்பர் எல்லோரையும்விட நீங்கள் செம ஸ்மார்ட்டா இருக்கீங்க...''

 -இப்படியே, சரியாகச் சொன்னால் உசுப்பேத்திக் கொண்டே இருப்பார்கள்.

 டி.வி.யில் என்னதான் நடக்கும் என்கிறீர்களா? திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள்.

 "உடனே கால் பண்ணுங்க, ரூ. 40 ஆயிரம் பரிசை உடனே வெல்லுங்க' என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவ்வப்போது சிலர் தொலைபேசியில் அழைப்பார்கள்.

 நன்றாகவே தெரியும் அளவில் இருக்கும் படத்தை மிக அபத்தமாக தவறாகச் சொல்லி அழைப்பைத் துண்டித்துக் கொள்வார்கள். இதுவே இந்த நிகழ்ச்சி மோசடி என்பதை வெட்டவெளிச்சமாக்கிவிடுகிறது.

 தொடர்ந்து இப்படியே 5 நிமிஷங்களுக்கு ஒருவர் வந்து திரும்பத் திரும்ப நிரூபிப்பார். ஒரு கட்டத்தில் "க்ளு' சொல்கிறோம். அப்போது பதில் கூறினால் பரிசுத் தொகை குறைக்கப்படும். தெளிவாக "க்ளு' கொடுத்தும் யாரும் பதிலைச் சொன்னதும் இல்லை; ரூ. 10 ஆயிரம் என்று குறைக்கப்பட்ட பரிசுத் தொகையையும் இதுவரை எவரும் பெற்றதுமில்லை.

 தமிழ் சேனல் என்பதால் தமிழ்நாட்டிலிருந்து குறைந்தபட்சம் ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் ஒரு மணி நேர நிகழ்ச்சிக்கு வருகிறது என்று மிகக் குறைந்த கணக்கீட்டில் யோசிப்போம். ஒவ்வொரு அழைப்பாளரும் குறைந்தது 5 நிமிஷங்கள் காத்திருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். நிமிஷத்துக்கு ரூ. 10 கட்டணம்- கணக்கு என்ன ஆனது?

 மோசடியில்லாமல் இதற்கு வேறென்ன பெயர்? வெளிநாடுகளுக்கு ரகசியமான ஏற்பாடுகளைச் செய்வது, ஒப்பந்தங்களில் கொள்ளையடிப்பது இவையெல்லாமும் ஒருபுறம் துரோகம், குற்றம் என்றால், உள்நாட்டில் அநியாயமாக மக்களைச் சுரண்டும் இது மற்றொரு பெரும் குற்றம்.

 அதிலும், மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் "அதிர்ஷ்டம்' என்ற ஒரு ஒற்றைச் சொல்லைக் கொண்டு ஏமாற்றுவது பெரிய அயோக்கியத்தனம்.

 தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இதுபோன்ற நிகழ்ச்சிகளைக் கண்காணிக்க வேண்டும். தொடர்புள்ள தனியார் தொலைபேசி நிறுவனங்களைத் தடை செய்ய வேண்டும். இதுவரை மக்களிடமிருந்து அடிக்கப்பட்ட கொள்ளையைக் கணக்கிட்டுப் பறிமுதல் செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com