நம் மக்களுக்கு ஞாபகமறதி அதிகம். ஆட்சியாளர்களுக்கு இது வசதியாகப் போய்விடுகிறது. வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அளிப்பது, மக்கள் மறந்தவுடன் அதே வாக்குறுதிகளை மீண்டும் அள்ளி விடுவதுதான் அரசியல்வாதிகளின் வேலை. நாங்கள் பதவிக்கு வந்தால் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம் என்பார்கள்.
பதவிக்கு வந்து 5 ஆண்டுகளில் ஏதேதோ திட்டங்களை அறிவித்து, இருக்கும் வேலைகளையும் ஒழிப்பார்கள். மக்களை மறந்து 5 ஆண்டுகளைக் கடத்துவார்கள். தேர்தல் வந்ததும், "மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...' என்று முழங்குவார்கள். மறதி நோய்க்குப் பீடித்திருக்கும் அப்பாவி மக்கள், அவர்களது வாக்குறுதிகளைப் புதிதாகச் சொல்வதுபோலவே ஒவ்வொரு முறையும் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம் என்று நமது நாட்டின் எல்லாப் பிரதமர்களுமே சூளுரைத்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.
அண்மையில் தேசிய உற்பத்திக் கொள்கையை வகுத்த நமது மத்திய அரசு அடுத்த 10 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என்று உறுதியளித்தது.
இதில் வேடிக்கை என்னவென்றால், 12 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோதும் இதேபோன்ற உறுதி மொழியைத்தான் அளித்தது. அப்போது ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கும் வேலை கிடைக்கும் என்றார்கள். அதையடுத்து 2004-ம் ஆண்டில் பதவிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இதே உறுதிமொழியை வழங்கியது.
அந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் அளித்த வாக்குறுதி இன்னும் போலியானது. நாட்டில் அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்று உறுதியளித்திருந்தார்கள். ஆட்சிக்கு வந்ததும் "ஆண்டுக்கு ஒரு கோடி' என்று பின்வாங்கிக் கொண்டார்கள்.
இவர்கள் மாத்திரமல்ல, 1990-ம் ஆண்டுக்குப் பிறகு நமது நாட்டில் பதவிக்கு வந்த எல்லா ஆட்சியாளர்களும் சொற்களைக் கொஞ்சம் மாற்றிப் போட்டு, இதே போன்ற வாக்குறுதிகளைத்தான் வழங்கியிருக்கிறார்கள்.
இவர்கள் சொன்னதுபோல், ஒவ்வோர் ஆண்டுக்கும் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தால், வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழிந்திருக்க வேண்டும்.
இதையெல்லாம் நமது அரசியல்வாதிகள் கணக்கிடுவதில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டோமே என்று வெட்கப்படுவதுமில்லை. பழைய வாக்குறுதியை தூசு தட்டி, புதிய வண்ணம் தீட்டி அறிவிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதே வாக்குறுதி, அதே இலக்கு. ஆண்டுக்கு ஒரு கோடி வேலைகள் கிடைக்குமாம். இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்பது இந்த வாக்குறுதியிலிருந்தே தெரிந்துவிடுகிறது.
நமது அரசின் புள்ளி விவரங்கள் எப்போதுமே சர்ச்சைக்குரிய வகையிலேயே இருக்கும். அதுவும் திட்டக்குழுவின் அறிக்கை என்றால் கேட்கவே வேண்டாம். 2009-10ம் நிதியாண்டுக் கணக்குப்படி நாட்டில் 9.4 சதவீதம் பேருக்கு வேலை இல்லை என்று திட்டக்குழு சொல்கிறது.
1993-94ல் இந்த அளவு 6.1 சதவீதமாகவும், 1999-2000ல் 7.3 சதவீதமாகவும், 2004-05-ல் 8.3 சதவீதமாகவும் இருந்தது என்று அக்குழுவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நமது நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதற்கு அரசு அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் இது. என்னதான் நமது பொருளாதாரம் எட்டுக் கால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருப்பதாக அரசு கூறினாலும், நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதை திட்டக்குழு அவ்வப்போது அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஆக, அரசு மார்தட்டிக் கொண்டிருக்கும் வளர்ச்சி, வேலைவாய்ப்பை உருவாக்க இயலாத வெற்று வளர்ச்சி; பெரும்பான்மையான மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாதது; ஏழைகளைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாதது.
இப்போது நமது நாட்டின் மக்கள் தொகை 121 கோடி. இதில் 9 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு வேலை கிடைக்கவில்லை என்று அரசு கூறுகிறது. 121 கோடியில் 9 சதவீதம் என்பது எண்ணிக்கையில் வரும்போது பிரமாண்டமாக இருக்கிறது.
வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் பிரிவு தந்திருக்கும் அறிக்கையில் 15 முதல் 59 வயதுடையவர்களில் 62.5 சதவீதம் பேர் பணிபுரியும் திறன் கொண்டவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் 1.1 கோடி பேர் இந்தப் பிரிவில் சேருவார்கள் என்பதையும் அந்த அறிக்கை கணித்திருக்கிறது.
இதன்படி பார்த்தால், அரசு உறுதியளித்தபடி ஆண்டுக்கு ஒரு கோடிப் பேருக்கு வேலை வழங்கினால் கூட நாட்டிலிருந்து வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்துவிட முடியாது.
நாட்டின் பெரும்பான்மை மக்கள் பணிபுரிவது அமைப்புசாராத துறைகளில்தான். இவர்களது வாழ்க்கைத் தரம் மிக மோசம். வேலைக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. ஆனால் இதுபற்றிய புள்ளி விவரங்கள் தெளிவாக இல்லை.
அமைப்புசார் துறைகளில் பணியாற்றுவோருக்கு ஒப்பீட்டளவில் தரமான வாழ்க்கை கிடைக்கிறது. பணிகளிலும், ஊதியத்திலும் பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும் இவர்கள் ஓரளவு மேம்பட்ட நிலையிலேயே இருக்கிறார்கள். ஆனால், நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் இவர்களது பங்கு வெறும் 7 சதவீதம்தான் என்றாலும், புள்ளிவிவரங்கள் துல்லியமாக இருப்பதால், இதையே உதாரணமாகக் கொண்டு ஆய்வு செய்வது சரியாக இருக்கும்.
2010-11-ம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையில், 2008-ம் ஆண்டுக் கணக்குப்படி நாடு முழுவதும் அமைப்புசார் துறையில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 2.75 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 1991-ம் ஆண்டில் 2.67 கோடியாக இருந்திருக்கிறது. இந்த 17 ஆண்டுகளில் இத் துறையில் பணிபுரிவோரின் எண்ணிக்கை வெறும் 8 லட்சம்தான் அதிகரித்திருக்கிறது.
இந்தக் காலகட்டத்தில் அமைப்புசார் பணிகளை வழங்கும் அரசுத்துறையில் பணிபுரிவோரின் எண்ணிக்கை 1.90 கோடியிலிருந்து 1.76 கோடியாகக் குறைந்திருக்கிறது. வேலைவாய்ப்பை அதிகரித்து, தனியார் துறைக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டிய அரசே, ஊழியர்களைக் குறைத்திருக்கிறது, பொருளாதார வளர்ச்சியால் வேலை வாய்ப்பை அதிகரிக்க முடியும் என்பது மாபெரும் பொய் என்பதற்கு இதைவிட வேறென்ற ஆதாரம் வேண்டியிருக்கிறது?
பெண்களுக்கு நியாயமான கூடுதல் வேலை வாய்ப்பை வழங்குவதற்கும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இப்போது அரசுத் துறையில் 30 லட்சம் பெண்கள் பணியாற்றுகிறார்கள். 1991-ம் ஆண்டிலிருந்து கொஞ்சம் முன்னேறியிருந்தாலும் அரசு கூறுவதுபோல மாபெரும் வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதாகக் கருத முடியாது.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது பொருளாதார வளர்ச்சியின் பலனை மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்பதில் அரசுக்குக் கொஞ்சமும் ஆர்வமில்லை என்பது தெரிகிறது. சமூகப் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்றவையெல்லாம் அரசின் அறிக்கைகளில் இடம்பெறும் வெற்று அலங்காரச் சொற்கள்தான்.
நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும். அதனால் இப்போதுள்ள "குறுகிய கால வலிகளை' பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று அரசும் நமது கொள்கை வகுப்பாளர்களும் கூறுகின்றனர். இவர்கள் கூறும் அந்தக் குறைந்த காலம் தொடங்கியே இருபது ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன.
பல்வேறு வகையிலும் மக்கள் "வலிகளை' அனுபவித்து வருகின்றனர். வளர்ச்சியைக் காரணம் காட்டி பல்வேறு சமூக நலத் திட்டங்களிலிருந்து அரசு பின்வாங்கிக் கொண்டிருக்கிறது.
இளைஞர்கள் முதல் முதியோர் வரை சமூகப் பாதுகாப்பு அளிக்கும் திட்டங்கள் பெரும்பாலானவை முடக்கப்பட்டு விட்டன. அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வந்த ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டு, தனியார் நிர்வகிக்கும் ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதுபோன்று அரசின் வளர்ச்சியை நோக்கிய நடவடிக்கைகள் ஏராளம்.
ஆனாலும், அரசு கூறிய அந்தக் "குறுகிய காலம்' இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஒருவேளை வலிகளைப் பொறுத்துக் கொள்ளும் காலம் முடிவுக்கு வந்தாலும், பெரும்பான்மையான மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. எல்லா வகையிலும் மக்களுக்கு துன்பத்தை அளித்து வரும் இந்த அரசு, வறுமையையும் வேலைவாய்ப்பையும் ஒழிப்போம் என்று கூறுவதெல்லாம் போலி வாக்குறுதிகள்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தயக்கமே இல்லாமல் "ஆண்டுக்குக் கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்' என்று நமது ஆட்சியாளர்களால் மீண்டும் மீண்டும் வாக்குறுதி அளித்துக் கொண்டே இருக்க முடியும்.
ஏனென்றால், அவர்கள் திட்டமிட்டிருக்கும் வளர்ச்சி, இருக்கிற வேலைகளையும் பறித்துக் கொள்ளப் போகிறது என்பதுதான் புள்ளிவிவரங்கள் காட்டும் உண்மை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு

தமிழில் வெளியாகும் வாழ - 2!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

