புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அன்றாடம் பயணிப்போருக்கு ஆறுதல் கிடைக்குமா?

பேருந்துக் கட்டண உயர்வால் அன்றாடம் பயணிப்போர், தங்களது வருவாயில் பெருமளவு பேருந்துக் கட்டணத்துக்குச் செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.  தமிழக மக்கள்தொகையில் பெரும்பாலானோர் பேருந்து பயணத்தையே நம்பியுள்ளனர்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:34 pm

தி. நந்​த​கு​மார்

பேருந்துக் கட்டண உயர்வால் அன்றாடம் பயணிப்போர், தங்களது வருவாயில் பெருமளவு பேருந்துக் கட்டணத்துக்குச் செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

 தமிழக மக்கள்தொகையில் பெரும்பாலானோர் பேருந்து பயணத்தையே நம்பியுள்ளனர். நாள்தோறும் சுமார் 3 கோடி பேர் இவற்றில் பயணிக்கின்றனர். இதனால், பேருந்துக் கட்டணத்தை உயர்த்தும்போது அரசு யோசிப்பதும் உண்டு. தங்களுக்கு ஆதரவான வாக்கு வங்கி பாதிக்கப்படுமோ? என்ற அச்சத்தில் திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் பேருந்துக் கட்டணத்தை நேரடியாக (!) உயர்த்துவதில்லை.

 இந்நிலையில், 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்து வந்த பேருந்துக் கட்டணம், இப்போது 50 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

 "டீசல் விலை, சுங்கச் சாவடி கட்டணம், பேருந்து உதிரிபாகங்களின் விலை, போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்டவை பல மடங்கு அதிகரிக்கப்பட்டும், 10 ஆண்டுகளாக பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இப்போது உயர்த்தப்படுவது நியாயமே' என்று வாதிடுவோரும் உண்டு.

 மாதத்தில் சில நாள்களில் பயணங்களை நாடுவோர் இக்கட்டண உயர்வை பொருள்படுத்தவில்லை. நாள்தோறும் பயணிப்போரே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது வருவாயில் கணிசமான தொகையை பேருந்துக் கட்டணத்துக்காக இழக்க நேரிடுகிறதே என்பதே அவர்களின் ஆதங்கமாக உள்ளது.

 எனவே, ரயில்களில் சீசன் டிக்கெட் வழங்கப்படுவதைப் போல் புறநகர் பஸ்களில் மாதாந்திர கட்டணச் சலுகை பாஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் எழுப்புகின்றனர்.

 இப்போது மாநகரங்களில் உள்ள பேருந்துகளில் தினம், மாதம்தோறும் பயணிக்க கட்டணச் சலுகை பாஸ்கள் வழங்கப்படுகின்றன. இதில், மாநகரில் உள்ள எந்த பேருந்திலும், எத்தனை முறைகள் வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

 நகரப் பேருந்துகளில் 30 கி.மீ. தூரம் வரை கட்டணச் சலுகை பாஸ்கள் வழங்கப்படுகின்றன. இதில், கல்லூரி மாணவர்களுக்கு மாதத்தின் மொத்தக் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கும், சாதாரணமானவர்களுக்கு மூன்றில் 2 பங்கும் கட்டணம் செலுத்த வேண்டும். இருப்பினும், புறநகர் பஸ்களில் கட்டணச் சலுகை இல்லை.

 கிராமங்களில் உள்ளோர் நகரங்களுக்கும், நகரங்களில் உள்ளோர் பிற நகரங்களுக்கும் என இருப்பிடங்களைவிட்டு பல கி.மீ. தூரம் பயணிப்போர் புறநகர் பேருந்துகளையே நாடுகின்றனர்.

 தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், தொழிலாளர்கள், அரசுத் துறைகளில் சொற்ப ஊதியத்தில் சத்துணவு, அங்கன்வாடி, டாஸ்மாக் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுவோர் இவ்வாறு பணி நிமித்தமாகச் செல்கின்றனர்.

 இவர்கள் பேருந்துக் கட்டண உயர்வால் தங்களது மாத வருவாயில் கணிசமான அளவு செலவழிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, அன்றாடம் புறநகர் பேருந்துகளில் பயணிப்போருக்கு அரசு சலுகை காட்ட வேண்டும்.

 இவர்களின் நலனுக்காக மாதாந்திர கட்டணச் சலுகை பாஸ்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பாஸ்களை வழங்குவதால், அரசுக்கு வருவாய் கூடுமே தவிர இழப்பு அல்ல.

 ஏற்கெனவே தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்களது பேருந்துகளில் அன்றாடம் பயணிப்போருக்கு 20 சதவிகிதம் வரை கட்டணச் சலுகைகளை அளித்து வருகின்றனர். வழக்கமாக, இவற்றில் பயணிப்போர் "சி' என்று சொல்லும்போது சலுகைகள் கிடைப்பதை பலரும் அறிவர்.

 எனவே, புறநகர் பேருந்துகளிலும் கட்டணச் சலுகை வழங்கினால் தனியார் பேருந்துகளில் அன்றாடம் பயணிப்போரும் அரசு பேருந்துகளை நாடும் சூழ்நிலையும் உருவாகும். இப்பேருந்துகளில் 50 கி.மீ. தூரத்துக்கு எல்லையாக நிர்ணயம் செய்து, சலுகை பாஸ்களை வழங்கலாம்.

 புறநகர் பேருந்துகளில் பாஸ்கள் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எந்தவித சிறப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

 ஏனெனில், போக்குவரத்துக் கழகப் பணிமனைகளிலும், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள போக்குவரத்து அலுவலகங்களிலும் இந்த பாஸ்களை விற்பனை செய்யலாம்.

 இதனால், பயணிகளின் அடுத்த பல நாள் பயணிப்பதற்கான கட்டணம் முன்கூட்டியே போக்குவரத்துக் கழகத்துக்கும் முதலீடாக சேரும் நிலையும் ஏற்படும். அன்றாடம் பயணிப்போரின் நலனைக் கருத்தில் கொள்ளுமா அரசு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.