தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் இல்லாத உற்சாகம் இப்போது உள்ளாட்சித் தேர்தலில் கரைபுரண்டு ஓடுகிறது.
"பொதுவாழ்வில்' ஈடுபட வீட்டுக்கு ஒருவர் முன்வர வேண்டும் என முந்தைய காலங்களில் தலைவர்கள் அழைத்தபோதெல்லாம் "ஊர்ப் பொல்லாப்பு' நமக்கெதற்கு என செவிசாய்க்காத மக்கள், விட்டால் இப்போது வீட்டுக்கு ஒருவர் கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துவிடுவார்கள் போலிருக்கிறது.
"தேர்தலில் என் மாமா நிற்கிறாக, மச்சான் நிற்கிறாக, தம்பி நிற்கிறாக, அக்கா நிற்கிறாக' என ஒவ்வொரு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களும் திருமண வீடுபோல களைகட்டியுள்ளன. "எனக்கு சீட் தரவில்லை, உனக்கு சீட் இல்லை' என உள்கட்சிக் குழப்பங்களுக்கும் பஞ்சமில்லை.
திடீரென இப்படி ஆயிரக்கணக்கானோர் சாரை சாரையாகத் தேர்தலில் போட்டியிட வரிசைகட்டி நிற்பதன் உளவியல் காரணம்தான் என்ன?
தேர்தலில் வெற்றிபெற்று கவுன்சிலர் ஆகிவிட்டால் வார்டு மக்களுக்குச் சேவையாற்ற ஒரு வாய்ப்பாக அமையுமே என்றா? அல்லது ஊரில் கவுன்சிலர் என்ற மிடுக்குடன் வலம் வரலாம் என்றா? இரண்டுமே இல்லை. ஒரே காரணம் பணம் கிடைக்குமே என்றுதான். ஆம், அப்படிப்பட்ட மனநிலையைத்தான் கவுன்சிலர்களிடையே நம் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தி வைத்துள்ளன.
கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, கவுன்சிலர்கள் சேர்ந்து தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முறை இருந்தது. அப்போது வெற்றிபெற்று உள்ளே நுழையும்போதே கவுன்சிலர்கள் பணமழையில் நனைந்ததை மறுக்க முடியுமா?
வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் எத்தனையோ ஊர்களில் கவுன்சிலர்கள் சேர்ந்து குடும்பத்துடன் உல்லாசப் பயணம் சென்றுவந்தார்களே... சொந்தப் பணத்திலா சுற்றுலா சென்றார்கள்? யார் பணத்தை யார் செலவு செய்வது?
பஞ்சாயத்துக் கூட்டங்களிலும் மக்கள் பிரச்னைகளை மறந்து, கூட்ட அரங்கில் எந்தத் தலைவர் படத்தை வைப்பது, யாருடைய ஆட்சியின் சாதனையைப் பாராட்டி தீர்மானம் கொண்டுவருவது என ரகளை செய்து இருக்கைகளையும், மைக்குகளையும் உடைத்த சம்பவங்கள்தானே இவர்களது பெரும் சாதனை!
ஓட்டு போட்டுத் தேர்ந்தெடுத்த வார்டு மக்களுக்காக நேர்மையாக, உண்மையாகப் பாடுபட்டேன் என எத்தனை பேரால் தைரியமாகச் சொல்ல முடியும்? ஒரு வார்டில் மொத்தமே உள்ள 5 தெருக்களிலும் தனக்கு ஓட்டு அதிகம் விழாத தெருக்களில் எந்த வளர்ச்சித் திட்டமும் நிறைவேற்றாமல் புறக்கணித்த கவுன்சிலர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
தங்கள் வார்டு பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஆதிக்கம் செலுத்துவது, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பஞ்சாயத்து அலுவலகங்களில், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஆகவேண்டிய வேலைகளைச் "செல்வாக்கை'ப் பயன்படுத்தி முடித்துக் கொடுப்பது... இதைத்தானே பிரதானமாகச் செய்தார்கள்.
சாலை அமைக்கவோ காண்டிராக்டர்களிடம் கமிஷன் வாங்காமல், ஒதுக்கப்பட்ட நிதியை அப்படியே பயன்படுத்தச் சொல்லி வலியுறுத்தியவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?
சட்டப்பேரவைத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் யாரைத் தேர்ந்தெடுத்து ஆட்சியையே மாற்றி அமைக்கலாம் என்று பரந்த சிந்தனையுடன் இருக்கும் மக்கள், முதலில் தங்கள் வார்டுக்குச் சரியான பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.
கடந்த முறை ஜெயித்து மக்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் இப்போது மறுபடியும் போட்டியிடும் வேட்பாளர்களைச் சிறிதும் தயக்கமின்றி புறக்கணியுங்கள்.
இதுநாள்வரை மக்கள் பிரச்னைகளுக்காக ஒரு துரும்பைக்கூட எடுத்துப்போடாமல், இப்போது ஜெயிக்க வையுங்கள் மலையையே நகர்த்திக் காட்டுகிறேன் என வாய்ஜாலம் காட்டுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
அரசியல் கட்சி வேட்பாளர் என்றால், கட்சிக்காக என கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்காமல், வேட்பாளர் கட்சிக்காக உழைத்து, போராட்டங்களில் பங்கேற்று அவருடைய கட்சிப் பணிகளுக்காக இடத்தைப் பெற்றவரா, மாவட்டத்தையோ, ஒன்றியத்தையோ, நகரத்தையோ அனுசரித்து இடத்தைப் பெற்றவரா எனப் பார்த்து வாக்களியுங்கள்.
ஏன் என்றால், இது உள்ளாட்சித் தேர்தல், இதில் யாரோ ஜெயித்து யாரோ பலனடையவிடக் கூடாது. உள்ளாட்சியில் நம் (மக்கள்) ஆட்சிதான் நடைபெற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.