நம் நாட்டு முன்னேற்றம், இன்றைக்கு ஆடு-புலி-புல்லுக்கட்டுக் கதை ஆகிவருகிறது. சாதுவான ஆடு-மதவாதம். பிறரை ஏய்த்துக் கொழுக்கும் புலி-முதலாளித்துவம். சாமானியப் புல்லுக் கட்டு - தொழிலாளர் நலம். ஜனநாயகப் படகோட்டி, இந்த மூன்றில் எந்த ஒன்றையும் தனியே அக்கரை சேர்ப்பது சாகசம்தான். இங்கு புலி, புல்லுக்கட்டையும் தின்கிறதே.
பாருங்களேன், இன்றைய மதக் காழ்ப்புணர்வு மாதிரியே விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும் பல்வேறு தடங்கல்கள். அனைத்தையும் மீறித்தான் அறிவியல் உண்மை ஜெயிக்கிறது.
சரியாக 400 ஆண்டுகளுக்கு முன்னால் 1612-ம் ஆண்டு கலிலியோ கலீலி என்னும் இத்தாலிய வானவியல் நிபுணர், எழுபதாம் வயதில் ஊருக்கு வெளியே ஊழல் குற்றவாளியைப்போல வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா?
விவிலியத்துக்கு விரோதமாக பூமி, சூரியனைச் சுற்றுகிறது என்னும் உண்மையைச் சொன்னதுதானாம். இன்றைக்கு அதுபற்றி நம் மதத் தலைவர்களிடம் கேட்டால், விஞ்ஞானிக்கும் தேவாலயத்துக்கும் இடையிலான ""பரஸ்பரப் புரிதல் இன்மை''யால் நிகழ்ந்துவிட்ட சம்பவமாம். நானூறு ஆண்டுகள் கழித்துப் பொறுமையான பதில்.
இந்த மாதிரி மத விரோதி என்று சந்தேகிக்கப்பட்ட கியோர்தானோ புரூனோ என்னும் இத்தாலியச் சிந்தனையாளரோ உயிருடன் எரித்தே கொல்லப்பட்டார் என்பது வரலாறு.
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்ற பரிணாமவியல் தத்துவத்தை எழுதி அவதூறு வழக்கில் மாட்டிக்கொண்டவர் சார்லஸ் டார்வின். "உயிரினங்களின் தோற்ற மூலம்' என்கிற தலைப்பில் ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்னர் 1859 நவம்பரில் நூல் வெளியிட்டார். அவரது அறிவியல் முயற்சி மதக் கொள்கைகளுக்கு விரோதம் ஆனது என்று விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் 2008 செப்டம்பர் மாதத்தில் பாவ மன்னிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் ""(டார்வின் ஆகிய) உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டதற்கும் மற்றவர்கள் தங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளும் வகையில் (உங்களுடன் ஏற்பட்ட கருத்து மோதலில்) எங்களது முதல் பிரதிபலிப்புத் தவறாக அமைந்துவிட்டதற்கும்'' ஆக மன்னிப்பு கோருகிறது, இங்கிலாந்து தேவாலயம்.
காற்றுக்கும் எடை உண்டு என்று பதினெட்டாம் நூற்றாண்டில் நிரூபித்தார் அன்டோய்ன் லெவாய்சியர் என்கிற பிரெஞ்சு வேதியியலார். 1775-ம் ஆண்டு லெவாய்சியர் பாரிஸ் நகரில் "தேசிய வெடிமருந்து ஆணைய'த்தின் முக்கிய பொறுப்பு ஏற்றார். அமெரிக்காவில் டெல்வர் நகரில் பிராண்டிவைன் நதிக்கரையில் வெடிமருந்துத் தொழிற்சாலை ஒன்று தொடங்கினார்.
அதிலும் ஜீன்-பால்-மாராத் என்கிற புரட்சியாளர் ஆட்சிக்கு வந்ததும் பிடித்தது வினை. அந்த மாராத் ஆரம்பத்தில் ஏதோ ஒரு சஞ்சிகையில் பணியாற்றி வந்தவர். அவர் தன்னை ஒரு விஞ்ஞானியாக வரிந்துகொண்டு எழுதிய "நெருப்பு பற்றிய இயற்பியல் ஆராய்ச்சிகள்' என்ற கையேட்டை லெவாய்சியர் கடுமையாக விமர்சனம் செய்தாராம். அது மட்டுமல்ல, பிரெஞ்சு அகாதெமியில் அவரைச் சேர்க்கவிடாமல் செய்துவிட்டதாகவும் ஆத்திரம் அடைந்தார் மாராத். விளைவு - லெவாய்சியர் தமது வெடிமருந்து தொழிற்சாலையால் அன்றைய பினாமி "பூர்ஷ்வா முதலாளிகளுக்கு' ஏழை ஜனங்களின் வயிற்றில் அடித்து வரி வசூலித்துக் கொடுப்பதாகக் குற்றம்சாட்டினார் மாராத்.
1791-ம் ஆண்டு அவரை வெடிமருந்துத் தொழிற்சாலையில் இருந்து அகற்றிச் சிறைவைக்க முனைந்தார். இறுதியில் அதனினும் கொடூரம் நிகழ்ந்தது. 1794 மே 8 அன்று அவரை கில்லட்டின் என்கிற தலைவெட்டிக் கருவியில் வைத்து பலிகடா மாதிரி வெட்டினார்களாம்.
அதே காலகட்டத்தில் இ ஜோசப் ப்ரிஸ்ட்லீ (கி.பி. 1733-1804) என்னும் ஆங்கில வேதியியலார் பல்வேறு வாயுக்களைக் கண்டுபிடித்தவர். எரிந்த பொருளின் எஞ்சிய ஒருவகைக் "காற்று' கரியமில வாயு என்பதை அன்றைக்கு அவர் அறியார். ஆனால், அந்த வாயு கரைத்த நீர் இன்சுவை உடையதாக இருந்தது. "சோடா நீர்' சுவையாக இருக்காதா பின்னே? அந்தக் கரைசலைக் கண்டுபிடித்ததற்காக இவருக்கு 1773-ம் ஆண்டு ராயல் சொசைட்டி தங்கப் பதக்கம் வழங்கிக் கெüரவித்தது.
இவர்தம் முடிவுகளை "வெவ்வேறு வகைக் காற்று குறித்த பரிசோதனைகளும் ஆய்வுகளும்' என்று ஒரு நூலாக வேறு எழுதினார். மத விரோதச் செயல்களில் ஈடுபட்டதாகவும், பிரெஞ்சு அமெரிக்கப் புரட்சிகளை ஆதரித்ததற்காகவும் அவரது வீடும் தேவாலயமும் ஒரு வன்முறைக் கும்பலால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. லெவாய்சியர் கொல்லப்பட்ட தருணத்தில் ப்ரீஸ்ட்லி அமெரிக்கா சென்றுவிட்டதால் தப்பித்தார்.
பூர்ஷ்வாத்தனம் பேசியே தொழில்நுட்பத்தைக் கிண்டல் செய்த அரசியல்வாதிகளும் அறிவியல் சரித்திர ஏட்டில் உள்ளனர். இன்றைக்குக் கைபேசி முதல் 2ஜி வரை அனைத்து மோசடிக்கும் முதல் குற்றவாளி மைக்கேல் ஃபாரடே என்ற ஆங்கிலேயர்தான். சும்மாவா, மின்சாரத்தைக் கண்டுபிடித்தது அவர் செய்த அடிப்படைக் குற்றம் அல்லவா? அதனால்தான் ஆலங்குளம் முதல் கூடங்குளம் வரை எங்கும் "ஷாக்' அடிக்கிறதே.
அன்றைக்கும் அந்த அறிவியல் நிபுணர் நிலை பரிதாபம். 1831 ஆகஸ்ட் 29 அன்று நிகழ்ந்தது. உலகின் மகத்தான கண்டுபிடிப்பாகிய "டைனமோ'வைக் கண்டுபிடித்தார் ஃபாரடே. அவர் தமது பரிசோதனையை லண்டன் அரசவைக் கழகத்தில் செயல்விளக்கிக் காட்டினார். அங்கு இங்கிலாந்து பிரதமர் கிளாட்ஸ்டோன்கூட "இத்துனூண்டு மின்சாரத்தால் என்ன பயன்?' என்று எகத்தாளமாகக் கேட்டாராம்.
அப்போது ஃபாரடே சொன்ன வாசகம் அட்சர லட்சம் பெறும்: ""குழந்தை இப்போதுதான் பிறந்து இருக்கிறது. அதன் பயனைப் பிறகு காலப்போக்கில் தான் பார்க்க வேண்டும்... வேண்டுமானால் பாருங்கள், எதிர்காலத்தில் இதற்கு நீங்களே வரி விதித்து அரசுக்கு வருமானம் ஈட்டப் போகிறீர்கள்'' என்றார் மின்விஞ்ஞானி. நல்லவேளை தமது கண்டுபிடிப்பை ஆதரிக்கும்படி யாருக்கும் பணம் கொடுக்கவில்லை.
இன்றைக்கும் பல்வேறு தொழில்நுட்பங்களும் ஏதோ காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டு வருகின்றன. மரபணுக்களின் நுனி உறுப்புகளை ஆராந்து 2009-ம் ஆண்டில் உடலியங்கியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் எலிசபெத் எச். பிளாக்பர்ன். ஆனால், அதிபர் புஷ் தெரிவித்த கருத்துக்கு எதிராக "மனிதக் கரு உயிரணு' ஆராய்ச்சியிலும் மனித உயிர்களைப் படி எடுக்கும் "குளோனிங்' நுட்பத்திலும் ஆர்வம் காட்டியதற்காக அவரது உயிரி அறிவியல் குழு உறுப்பினர் தகுதி பறிபோனது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.
இயந்திரமயத்தினால் தொழிலாளர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று முன்னொரு காலத்தில் கடும் போராட்டங்கள் நடந்தன. பதினெட்டாம் நூற்றாண்டில் ஜோசப் மேரி ஜேக்குவார்டு என்னும் பிரெஞ்சு நிபுணர் நெசவுத் தொழிலுக்கு 1805-ம் ஆண்டில் ஓர் இயந்திரத் தறியை உருவாக்கினார். ஜேக்குவார்டு தறி நாடெங்கும் பிரபலம் ஆனது. ஆனால், இதன் வரவால் நெசவாளிகளுக்கு வேலைவாய்ப்பு அற்றுப் போகும் என்கிற நியாயமான எதிர்ப்பும் வலுத்தது. அன்றைய பிரெஞ்சுத் தொழிற்சங்கங்களே இயந்திரத் தறிகளை லியோன்ஸ் எனும் இடத்தில் தீயிட்டுக் கொளுத்தினார்கள் என்றால் வேறு என்ன சொல்ல? ஆனால், 1812-ம் ஆண்டு மன்னர் நெப்போலியன் ஜேக்குவார்டு தறியை ஆதரித்து 11,000 தறிகள் உருவாக்கத் துணைபுரிந்தார் என்பது பிந்திய வரலாறு.
"கடந்த ஆயிரம் ஆண்டுகளில் ஒரே மாமேதை' என்று "வாழ்வியல் சஞ்சிகை'யால் புகழப்படுபவர் தாமஸ் ஆல்வா எடிசன். இவர் 1093 கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்கப் பதிவுரிமம் பெற்றவர் என்றால் மூக்கில் விரலை வைக்காமல் என்ன செய்ய? அமெரிக்கப் பதிவுரிமம் பெற்ற இவரது முதலாவது கண்டுபிடிப்பு என்பது மின்சார வாக்குப் பதிவு இயந்திரம். அதற்கு 1868-ம் ஆண்டு பதிவுரிமம் கிடைத்தாலும் ஆட்சி மன்றம் இத்தகைய புதுப்புனைவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதுதான் அறிவியல் ஆச்சரியம்.
இதில் இன்னொரு சுவாரஸ்யமான செய்தி. இவர் கண்டுபிடித்த மின்குமிழ் விளக்கை ஜோசப் ஸ்வான் எனும் ஆங்கிலேயர் தானே இதைக் கண்டுபிடித்ததாக உரிமை கொண்டாடினாராமே. ஆனால் ஸ்வான் மீது வழக்குத் தொடர்ந்தார் எடிசன். ("ஸ்வான்' என்கிற பெயர் வைத்தாலே "நேமாலஜி' சாஸ்திரப்படி வழக்கு வில்லங்கம் வருமோ?) எப்படியோ அவர் வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது. பின்னாளில் 1883-ம் ஆண்டு "எடிசன் ஸ்வான் எலக்ட்ரிக் லைட் கம்பெனி' மின்சார பல்பு தயாரிப்பில் ஈடுபட்டது.
இத்தனைக்கும் அவர் பள்ளிக்கூடத்துக்குச் சென்றது வெறும் மூன்றே மாதங்கள்தானாம். ஆரம்பக் காலங்களில் ரயில் நிலையங்களில் நாளிதழ் விற்றவர் இந்த விஞ்ஞானி. சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவரது காது சற்று மந்தம். அறுவைச் சிகிச்சை மூலம் அந்தக் குறையைச் சரி செய்துவிடலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.
ஆனால் மனிதர், ""செவிடாக இருப்பது பல விஷயங்களில் செüகரியமாக இருக்கிறது'' என்று மறுத்துவிட்டாராம். அறிவியல் எதிர்ப்பாளர்கள் மத்தியில் அதுதான் நியாயம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.