நிலம் கையகப்படுத்துவதை முறைப்படுத்துவதற்காக, ""தேசிய நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் மசோதா''வை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுவிட்டதால், நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத் தொடரிலேயே அதைச் சட்டமாக்கிவிடவும் அரசு முனைப்பாக இருக்கிறது.
நிலம் கையகப்படுத்துவதில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறை இருக்க வேண்டும் என்று அரசு விரும்புவதாலேயே இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் இவ்வளவு தீவிரமாக இருக்கிறது.
நமது அரசியல் சட்டப்படி நிலம் சம்பந்தமான விவகாரங்கள் மாநில அரசின் அதிகார வரம்புக்குள் இருந்தாலும், நிலம் கையகப்படுத்துவது மட்டும் பொதுப்பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை இயற்றுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரமளித்திருக்கிறது. 117 ஆண்டுகளுக்கு முன்பு 1894-ல் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்குப் பதிலாக இந்தப் புதிய சட்டம் இயற்றப்பட இருக்கிறது.
நிலம் கையகப்படுத்தும் பேச்சு எழுந்தாலே அங்கு விவசாயிகளின் போராட்டம் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் மத்திய அரசும் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், குஜராத் போன்ற மாநில அரசுகளும் திணறிப் போயிருக்கின்றன. சர்ச்சை ஏதும் இல்லாமல் சுமுகமாக நிலத்தைக் கையகப்படுத்தவே முடியாது என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இன்னும் எத்தனையோ திட்டங்களுக்காக நாட்டின் பல பகுதிகளில் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டியிருக்கிறது. அங்கெல்லாம்கூட இதுபோன்ற போராட்டங்கள் பரவக்கூடும் என்கிற அச்சம் மத்திய அரசுக்கு இருக்கிறது.
நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் போலீஸôரின் லத்திகளுக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் சவால் விடுகிறார்கள். ராணுவமே வந்து போராட்டத்தை அடக்க முயன்றும் முடியாமல் போயிருக்கிறது. துப்பாக்கிக் குண்டுகள் துளைத்து போராட்டக்காரர்கள் பலர் உயிரை விட்டிருக்கிறார்கள். போராட்டத்தின் வீரியத்தை இந்த உயிரிழப்புகள் குறைத்துவிடவில்லை.
நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான போராட்டங்கள் எல்லாம் வெறும் பணத்துக்காக நடக்கும் போராட்டங்கள் அல்ல. அவை மிகவும் உணர்வுப்பூர்வமானவை. ஒரு விவசாயிக்கு நிலம்தான் உயிர். அதைவிட விவசாயிக்குப் பெரிது ஒன்றுமில்லை. அதுதான் அவருக்கு எல்லாமும். அந்த உயிரைத் தன்னிடம் இருந்து பிரிக்க முயற்சிப்பவர்களை எதிர்த்து ஒவ்வொரு விவசாயியும் கிளர்ந்து எழுவதால்தான் போராட்டங்கள் தீவிரமாக இருக்கின்றன.
ஆனால், அரசு இந்த உண்மையை உணர மறுக்கிறது. இந்த விவகாரத்தை வெறும் பணம், பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயமாக மட்டுமே அரசு அணுகுகிறது. போதுமான இழப்பீடு வழங்கப்படாததால்தான் விவசாயிகள் போராடுகிறார்கள் என்று எண்ணுகிறது. கூடுதலாகப் பணமும் வேறுவகையான இழப்பீடும் கொடுத்தால் விவசாயிகள் மனம் குளிர்ந்துவிடுவார்கள் என்று கணக்குப் போடுகிறது.
அதனால்தான் கவர்ச்சிகரமான திட்டங்களைக் கொண்டு புதிய மசோதாவை அரசு உருவாக்கியிருக்கிறது. அதிக இழப்பீடு, வேலைவாய்ப்பு போன்றவையும் இதில் அடக்கம். பணமும் வேலையும் கிடைத்துவிட்டது; இனி வேறென்ன வேண்டும் என்பது போன்ற திருப்திகரமான மனநிலையை உருவாக்கவும் இந்த மசோதா முயற்சிக்கிறது.
நாட்டின் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், நகரமயமாதலை விரைவுபடுத்தவும் எந்தவித முட்டுக்கட்டையும் இல்லாமல் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு இந்த மசோதா வகை செய்கிறது. இதன்படி, நிலம் கையகப்படுத்த வேண்டுமானால், அதனால் பாதிக்கப்படும் 80 சதவீத குடும்பங்களின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். அரசின் திட்டங்கள், பொதுப் பயன்பாட்டுக்காக அரசு-தனியார் கூட்டாக உருவாக்கும் திட்டங்கள், பொது நலனுக்கான தனியார் திட்டங்கள் போன்றவற்றுக்காக அரசு நிலங்களைக் கையகப்படுத்தலாம் என்று இந்த மசோதா வரையறுத்திருக்கிறது.
இந்த மசோதாவைப் பார்த்தால், ஏதோ விவசாயிகளின் நன்மைக்காகவே உருவாக்கப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. நிலத்தைக் கொடுக்கும் விவசாயிகள்கூட இதைப்பார்த்து மயங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. உண்மையில் அழும் பிள்ளைக்கு குச்சி மிட்டாய் கொடுத்து ஏமாற்றும் வித்தைதான் இது. விவசாயிகளின் போராட்டத்தின் தீவிரத்தைக் குறைப்பதும், தாற்காலிகமாக முடக்குவதுமே அரசின் நோக்கம்.
நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் அதைச் சார்ந்த நடவடிக்கைகளின் பங்களிப்பு வெறும் 14 சதவீதம் மட்டுமே. ஆனால், நமது மக்கள்தொகையில் 60 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பை இந்தத் துறைதான் வழங்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மை மக்கள் சார்ந்திருக்கும் ஒரு துறையால் குறைந்த பங்களிப்பையே செய்ய முடிகிறதென்றால், அந்த மக்கள் மிகவும் குறைவாகச் சம்பாதிக்கிறார்கள் என்பதுதான் காரணமாக இருக்க முடியும். இந்த விவசாயிகளிலும் 80 சதவீதம் பேர் சிறு மற்றும் விளிம்பு நிலையில் உள்ளவர்கள்.
நாட்டின் 120 கோடி மக்களுக்கும் இவர்கள்தான் உணவளிக்கிறார்கள். உணவுக்கும், வேலைவாய்ப்புக்கும் பங்கம் வரக்கூடாது என்றால் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும். இது அரசின் தலையாய கடமைகளுள் ஒன்று.
அரசு கூறுவதுபோல தொழில்துறை வேகமாக வளர்ச்சியடைவது தேவையான ஒன்றாகக்கூட இருக்கலாம். ஆனால், அது விவசாயத்தை ஒழிக்கக்கூடியதாக இருக்கக்கூடாது. விவசாயத்தை விட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் சென்றுவிடுங்கள் என்று விவசாயிகளுக்கு அறிவுரை கூறும் பலர் இருக்கிறார்கள்.
நமது பிரதமர் மன்மோகன் சிங்கூட இந்த யோசனையைக் கூறியிருக்கிறார். அப்படி விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு இந்த மக்களெல்லோரும் என்னதான் செய்வார்கள்? நாட்டின் 60 சதவீதம் பேருக்கு நல்ல வேலை தரக்கூடிய திட்டம் ஏதாவது அரசிடம் இருக்கிறதா? அப்படி ஏதாவது இருந்தால், மகிழ்ச்சியுடன் விவசாயத்தை விட்டுவிடுவதற்கு நமது விவசாயிகள் தயாராகவே இருக்கிறார்கள்.
இப்போதைய அரசு கூறுவதைப்போல அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், இந்தியாவின் சூழலுக்கு ஏற்றவகையிலான உத்திகளை வகுக்க வேண்டும். ஒரு துறையிலிருந்து வெளியேறுபவருக்கு உடனடியாக வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டுமேயொழிய, "சந்தைப் பொருளாதாரம்' எனும் "ஆக்டோபஸி'ன் கரங்களுக்குள் சிக்கி மக்களைத் தவிக்கவிடக் கூடாது.
இப்போது இயற்றப்பட இருக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டம், ஒரு பிரிவினரை மட்டுமே வளப்படுத்தும். அனைத்து மக்களுக்கும் போய்ச் சேரக்கூடிய பொருளாதார வளர்ச்சிக்கு இந்தச் சட்டம் உதவப் போவதில்லை. ஏழை மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்த வகையிலும் பயன்படப் போவதில்லை.
உதாரணத்துக்கு, கிராமப்புறங்களில் 100 ஏக்கருக்குக் குறைவாக நிலத்தைக் கையகப்படுத்தித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, அதனால் ஏற்படும் சமூகப் பாதிப்பை அளவிடத் தேவையில்லை என்று இப்போதைய மசோதா கூறுகிறது. 100 ஏக்கருக்குக் குறைவான பகுதியில் அபாயகரமான தொழிற்சாலைகளை அமைத்து ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலத்திலும் நீர்நிலைகளிலும் நச்சுக் கழிவுகளை வெளியிடுவதால் ஏற்படும் சமூகப் பாதிப்புகள் குறித்து எதுவும் செய்ய முடியாது.
அதேபோல் சமூகப் பாதிப்புகள் குறித்த விதிமுறைகளில் இருந்து தப்பிப்பதற்காக முதலில் 100 ஏக்கருக்குக் குறைவான நிலத்தைப் பெற்றுக்கொண்டு பிறகு தேவையான நிலத்தை வளைத்துக் கொள்ளும் நிறுவனங்களையும் கட்டுப்படுத்த முடியாது. இதுபோன்ற தந்திரங்களைச் செய்வதற்கு பெருநிறுவனங்களுக்குச் சொல்லியா தர வேண்டும்?
80 சதவீதம் பேரிடம் ஒப்புதல் பெற்றால் நிலத்தைக் கையகப்படுத்தலாம் என்று இந்த மசோதாவில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதையும் பலர் வரவேற்கிறார்கள். ஆனால், இதுவும் போலியான வாக்குறுதிதான்.
கிராமப்புறங்களில் பலர் பல்வேறு அவசர காரணங்களுக்காக நிலத்தை விற்பதற்குத் தயாராக இருப்பார்கள். சிலர் நிலத்தை எக்காரணம் கொண்டும் விற்கக்கூடாது என்று உறுதியாக இருப்பார்கள். அதனால், 80 சதவீதம் பேரிடம் கிடைக்கும் கருத்தை ஒருமித்த கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது.
பாசன வசதி இல்லாத நிலங்களை மட்டுமே கையகப்படுத்துவதாகவும் இந்த மசோதா உறுதியளித்திருக்கிறது. உண்மையில், பாசன வசதி இருக்கும் நிலத்தைப் போலவே, பாசன வசதி இல்லாத மானாவாரி நிலங்களும் முக்கியத்துவம் கொண்டவை. உணவு தானிய உற்பத்தியில் இந்த நிலங்களுக்கு 50 சதவீதப் பங்கு உண்டு. அதனால், இந்த நிலங்களைக் கையகப்படுத்துவது விவசாயிகளைப் பாதிக்கக்கூடியதாகவே இருக்கும்.
ஏற்கெனவே, விவசாயநிலங்களில் பெரும்பகுதி, வீட்டு மனைகளாகவும் தொழிற்சாலைகளாகவும், சாலைகளாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பொருளாதாரத்தை வளர்ப்பதாகக் கூறி, இருக்கும் நிலங்களையும் வேறு பயன்பாட்டுக்குக் கொடுத்துவிட்டால், விவசாயம் அதிகமாகப் பாதிக்கப்படும்.
இப்போது அரசு உருவாக்கியிருக்கும் மசோதா பார்ப்பதற்கு மக்களைப் பாதுகாப்பதுபோல தெரிந்தாலும், இதன் உண்மையான நோக்கம் தனியார் நலனுக்காக விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பறிப்பதுதான். இதுவரையில் கொஞ்சம் அச்சத்துடன் நடந்துகொண்ட அரசுகள், இனிமேல் சட்டத்தின் துணையுடனும் பொதுநலன் என்கிற போர்வையிலும் துணிச்சலாக நிலத்தைப் பறிக்கப் போகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

