மனித உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் நரம்புகள் மரத்து வருகின்றனவோ என்ற சந்தேகம், அண்மையில் ஒரு பேருந்துப் பயணத்தின்போது எழுந்தது. இதற்குக் காரணம், அந்தப் பேருந்தில் ஒளிபரப்பப்பட்ட ஒரு திரைப்படக் காட்சி.
பேருந்து நிறைய பயணிகள் கூட்டம். பணிக்குச் செல்லும் ஆண்கள், பெண்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், குழந்தைகள், முதியவர்கள் என மக்கள் கூட்டம் நிற்கவே இடமற்ற அந்தப் பேருந்தில்தான் ஒளிபரப்பானது கற்பழிப்புக் காட்சி.
ஒரு பெண்ணை நான்கு முரடர்கள் பலவந்தப்படுத்தும் காட்சி. பேருந்தில் அனைவருக்கும் உச்சஸ்தாயியில் கேட்கிறது அந்தப் பெண்ணின் கதறல். முந்தைய காலங்களில் இத்தகைய நிகழ்வுகளை நாசூக்கான காட்சியமைப்பில் வக்கிரமின்றி சுருக்கமாக முடித்துக் கொள்வார்கள்.
பேருந்தில் பயணித்த பெண்கள் நெளிந்தார்கள். ஆண்களும் கூட இதைக் காணச் சகிக்காமல் தத்தளித்தார்கள். ஆயினும், சில இளைஞர்கள் எந்தக் கூச்சமும் இன்றி இக்காட்சியை ரசித்தபடி சிரித்துக் கொண்டிருந்தார்கள். நடத்துநரோ எதையும் கண்டுகொள்வதாக இல்லை.
இதை எதிர்த்துக் கேட்கத் திராணியின்றி, கேட்டால் யாரேனும் தவறாகக் கருதி விடுவார்களோ என்ற அச்சத்தில் பலர் வேடிக்கை பார்க்க, ஒரேயொரு மூதாட்டி திடீரென கர்ஜித்தார்.
"பொம்பளைங்க இந்த பஸ்சில் வர்றதா, வேண்டாமா? இங்கு யாருக்குமே புத்தி இல்லையா?' என்ற அவரது ஆவேசம், அடுத்த சில நிமிடங்களில் பேருந்தில் ஒளிபரப்பான திரைப்படக் காட்சி நிறுத்தப்பட்டது.
சுமார் 80 பேர் பயணித்த பேருந்தில் ஒரேயொரு பயணிக்குத் தான் அந்தத் தார்மிக ஆவேசம் வந்திருந்தது. ஏன் பிறருக்கு அந்த நியாயமான கோபம் வரவில்லை? சிந்தித்துப் பார்த்தால் நமது கலாசார வீழ்ச்சியின் அபாயம் புரிகிறது.
வெட்கம், நாணம், கூச்சம் போன்றவை ஆறறிவு படைத்த மனிதருக்கே உரித்தானவை. பிற உயிரினங்கள் இவற்றை வெளிப்படுத்துவதில்லை. மனிதரின் பண்பாட்டுயர்வு தீய செயல்களுக்கு நாணுவதில்தான் வெளிப்படுகிறது.
அதேபோல, இருட்டில் நடக்க வேண்டிய இல்லற நிகழ்வுகளை பொது இடங்களில் வெளிப்படுத்தத் தயங்கும் கூச்சமும் வெட்கமும், மனிதரின் உன்னத நிலையாக விளங்கி வந்திருக்கின்றன. இவைதான் அண்மைக்காலமாக காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.
இருபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திரைப்படங்கள் தணிக்கைத்துறையின் கண்டிப்புக்கு அஞ்சி பல காட்சிகளை வெட்டியதுண்டு. இன்றோ, வயதுக்கு வந்தவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய திரைப்படங்கள் கூட "யு-ஏ' சான்றிதழ்களுடன் வெளியிடப்படுகின்றன. அது எப்படி இருவிதப் பிராயத்தினருக்கும் ஏற்றதாக ஒரு படம் சான்றிதழ் பெற முடியும்? இதைத் தட்டிக் கேட்கும் ஒருவர்கூட திரைப்படத் தணிக்கைத் துறையில் இல்லை.
வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்கக் கூடிய "ஏ' சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை இரவு 11.00 மணிக்கு மேல் தான் தொலைக்காட்சிகளில் திரையிட முடியும். ஆனால், இந்த "யு-ஏ' சான்றிதழ் கோளாறு காரணமாக, இத்தகைய பாலியல், வன்முறை கலந்த படங்கள் பகல் நேரத்திலேயே நமது வீடுகளில் வலம் வருகின்றன.
பொது உபயோகத்துக்கான பேருந்துகளில் ஒளிபரப்பு சாதனங்களின் பயன்பாட்டுக்கு வரையறை உள்ளது. இத்தகைய உணர்ச்சியைத் தூண்டும் காட்சிகளை ஒளிபரப்புவது, விபத்துக்கும் குற்றங்களுக்கும் வழிவகுக்கலாம். ஆனால், இதை ஆய்வு செய்து கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகளிடமும் மனிதநேயம் இல்லை.
சமுதாயத்தில் பாலியல் சார்ந்த குற்றங்கள் அதிகரிக்க, நாணமற்ற தன்மையே காரணமாக உள்ளது என்கின்றனர் மனோவியல் வல்லுநர்கள். உண்மையில் நாணமும் வெட்கமும் நம்மைக் காக்கும் கவசங்கள்; அவை நம்மைப் பிற்போக்குத்தனத்தில் தள்ளுபவை அல்ல. ஆனால், நமது வெகுஜன ஊடகங்களும் கருத்துருவாக்கும் முற்போக்கு அறிவுஜீவிகளும் கட்டுப்பாடற்ற நுகர்வுக் கலாசாரமே சிறந்தது என்று கருதுகிறார்கள். அதையே சாமானியரும் தொடர்கிறார்கள்.
ஆபாச சுவரொட்டிகளை எந்தத் துணுக்குறலும் இன்றிக் கடக்கும் மனநிலையே எங்கும் தொடர்கிறது. தார்மிக ஆவேசத்துக்கும், மனிதநேயத்துக்கும் உள்ள தொடர்பு தெளிவாகவே தெரிகிறது.
நமது பண்டைய இலக்கியங்கள் அகம் - புறம் என்றும், களவு - கற்பு என்றும் பாகுபடுத்திய மனித வாழ்க்கையின் சிறப்பு, கலாசாரச் சீரழிவால் காணாமல் போகிறது. இனியும் நமது மனிதநேயம் வேலை செய்யாவிட்டால், சமுதாயமே நரம்புத் தளர்ச்சியால் நலிந்துபோகும் வாய்ப்பிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

