இளங்கலை ஹானர்ஸ் பட்டப் படிப்பில் பல்கலைக்கழகத்திலேயே முதலிடத்தைப் பிடித்தவர். எம்.ஏ. பொருளாதாரப் படிப்பில் பதக்கம் பெற்றவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பொருளாதாரப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. முடித்தவர். பொருளாதார அறிவுக்காகவும் திறமைக்காகவும் ரைட் பரிசும், ஆடம் ஸ்மித் பரிசும் பெற்றவர். 16-க்கும் மேலான உள்நாட்டு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கெüரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றவர்.
இத்தனை தகுதிகளையும் பெருமையையும் கொண்டவர், வேறு யார், நமது பிரதமர் மன்மோகன் சிங்தான். அவர் பெற்ற விருதுகளையும் கெüரவங்களையும் முழுவதுமாகப் பட்டியலிட வேண்டுமானால் இங்கே இடம்போதாது.
உண்மையில் அப்படியொரு பட்டியலைத் தயாரிப்பதே கடினமான வேலையாகத்தான் இருக்கும். உலகின் வேறு எந்த நாட்டின் தலைவரும் மன்மோகன் அளவுக்குப் படிக்கவில்லை. இத்தனை விருதுகளையும் பெற்றிருக்கவில்லை. "உலகின் தலைவர்' எனவும், "தலைவர்கள் விரும்பும் தலைவர்' எனவும் "நியூஸ் வீக்' இதழ் புகழாரம் சூட்டியிருக்கிறது. நேருவுக்குப் பிறகு உலகமே வியந்து போற்றும் உன்னதமான தலைவர் என்கிறது ஃபோர்ப்ஸ் இதழ்.
கல்வித் தகுதி, திறமையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், மன்மோகன் சிங்கின் நேர்மைதான் அவரது புகழுக்குக் காரணம். "நேர்மை பற்றி யாராவது என்னிடம் கேட்டால், மன்மோகனைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுவேன்' என்று பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் பாராட்டியிருக்கிறார். மன்மோகனின் அரசியல் எதிரிகள்கூட அவரது நேர்மையைப் பற்றி நேரடியாக விமர்சனம் செய்வது இல்லை.
இப்படி நேர்மையாளர் என்று எல்லோருமே போற்றிக் கொண்டிருக்கும், அறிவில் சிறந்த ஒருவர் தனக்கு முன்னால் நடந்த முறைகேடுகளையும் ஊழலையும் ஏன் கண்டுகொள்ளாமல் இருந்தார்? இதுதான் பலரது மனதிலும் இருக்கும் கேள்வி.
2ஜி அலைக்கற்றையை முறைகேடாக ஒதுக்கியதால் நாட்டுக்கு ரூ.1,76,379 கோடி இழப்பு ஏற்பட்டதாக இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை கூறுகிறது. அலைக்கற்றை என்பது நீர், எரிவாயு, கனிமங்கள், பெட்ரோலியம் போல நாட்டின் இயற்கை வளங்களுள் ஒன்று.
இந்த வளம் மக்களுக்குச் சொந்தமானது. அரசின் தவறான கொள்கையாலும், நிர்வாகத்தாலும் நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டது என்றால், அது சமூகத்துக்கு ஏற்பட்ட இழப்பு. இந்த இழப்பைத்தான் உலகிலேயே மிக நேர்மையான ஆட்சியாளராக அடையாளம் காட்டப்படும் மன்மோகன் சிங் பொருள்படுத்தாமல் இருக்கிறார். அவரது அரசு இந்தச் சமூக இழப்பைத் தடுக்கத் தவறியிருக்கிறது.
1990-களில் மன்மோகன் சிங் கொண்டுவந்த தனியார்மயமாக்கத்தைப் பலரும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நஷ்டமடைந்து கொண்டிருக்கும் அரசு நிறுவனங்களை மீட்பதற்கு சரியான வழியை அவர் காட்டினார் என்றும் கூறுகிறார்கள். இப்படித் தனியார்மயத்தை ஆதரிப்பவர்கள், ஒரு விஷயத்தை வசதியாக மறந்துவிடுகிறார்கள்.
ஒரு துறையில் தனியாரால் லாபம் ஈட்ட முடிகிறதென்றால், அதில் ஓரளவேனும் அரசுத் துறைகளாலும் லாபம் ஈட்ட முடியுமே.
நிர்வாகச் சீர்கேடுகளாலும், திறமையின்மையாலும் நஷ்டம் ஏற்படுகிறதென்றால் அவற்றைத் தீர்ப்பதற்கு உண்மையான அக்கறையுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும் என்பதைப் பற்றி யாருமே பேசுவதில்லை. நாயைக் கொல்வதற்கு முன் அதற்கு வெறிபிடித்திருக்கிறது என்று கூறுவார்களே, அதைப் போன்றதுதான் இதுவும்.
பல்வேறு துறைகளில் தனியார்களை வர்த்தகம் செய்து கொள்ள அனுமதித்ததன் மூலமாக நாட்டுக்குப் பெரும் வருவாய் கிடைத்திருப்பதாகக்கூறி, அதன் மூலம் தனியார்மயமாக்கலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அரசு எடுத்து வருகிறது. 3ஜி அலைக்கற்றையை ஏலம் விட்டதில் ரூ.67,718 கோடி கிடைத்தது. அதில் ரூ.50,968 கோடி தனியார் நிறுவனங்களின் பணம் என்பதை அரசு சுட்டிக் காட்டுகிறது. இது உண்மைதான்.
தனியார் நிறுவனங்கள் நிறையப் பணம் வைத்திருக்கின்றன. உரிமங்களுக்கும், அனுமதிக்கும் பல ஆயிரம் கோடிகளைக் கொண்டுவந்து அரசு கஜானாவில் கொட்டுகின்றன என்பதெல்லாம் சரிதான். ஆனால், தனியார் நிறுவனங்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது? அவர்கள் எதற்காக அரசுக்குப் பணம் தர வேண்டும். கொடுத்ததைப்போல பல மடங்கு ஆதாயம் பெற வேண்டும் என்பதுதானே அவர்களது நோக்கமாக இருக்கும்? அவர்களது லாபம் மக்களின் சட்டைப்பையில் இருந்து எடுக்கப்பட்டதாகத்தான் இருக்கும்.
உண்மையில், தொலைத்தொடர்பு போன்ற முக்கியத் துறைகளை அரசே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் இதைவிட அதிக லாபம் கிடைக்கும். உதாரணத்துக்குத் தொலைத்தொடர்புத் துறையில் 2010-11-ம் ஆண்டில் ரூ.2,83,207 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. இந்த லாபத்தில் பெரும்பகுதி தனியார்களுக்குத்தான் சென்றிருக்கிறது. இந்தத் துறை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் அரசுக்கும் பெரும் லாபம் கிடைத்திருக்கும்.
பெட்ரோலியத் துறையிலும் இதே கதைதான். கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுகையை ரிலையன்ஸ் நிறுவனத்துக்குத் தாரைவார்த்துக் கொடுத்திருப்பதில் நடந்திருக்கும் முறைகேடுகள் பற்றி சிஏஜி அறிக்கை சரியாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. இதுபோல எத்தனையோ இயற்கை வளங்களைத் தனியார் அபகரித்திருக்கிறார்கள்.
இவ்வளவு மோசடிகள், ஊழல்கள் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவரை நேர்மையான பிரதமர் என்று இன்னமும் நாம் கூறிக் கொண்டிருக்க முடியுமா? தனிப்பட்ட முறையில் அவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், பிரதமர் என்று வந்துவிட்ட பிறகு, அவர் தனி மனிதரில்லை.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மக்கள் நலனைக் காக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. ஊழல் நடைபெறுவதை அனுமதிப்பதும், முறைகேடுகளைத் தட்டிக் கேட்காமல் இருப்பதும் மிக மோசமான குற்றமாகும்.
நேர்மையாளராக மட்டும் இருந்தால் மட்டும் போதாது. நாட்டின் நலனைக் காக்கும் திறமை கொண்டவராகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் நன்மதிப்பைப் பெற முடியாது. தேர்தலில் ஜெயிக்கவும் முடியாது. மன்மோகனுக்கு இது நன்றாகவே பொருந்தும். அவர் இதுவரை எந்தத் தேர்தலிலும் வெற்றிபெற்றதில்லை. 1999-ம் ஆண்டு தெற்கு தில்லியில் போட்டியிட்டு தோற்றுப் போனார். அவர் எதிர்கொண்ட ஒரேயொரு தேர்தல் அதுதான்.
நமது நாட்டில் குற்றப் பின்புலம் கொண்டவர்கள், ஊழலில் தொடர்புடையவர்கள்கூட மக்களுக்குச் செய்த நன்மைகளைக்கூறி தேர்தலில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றுவிடுகிறார்கள். பாவம், நமது பிரதமருக்கு மட்டும் அது வாய்க்கவில்லை.
1990-களில் ஏழைகளை முன்னேற்றுவதற்காகவே புதிய பொருளாதாரக் கொள்கைகள் கொண்டுவரப்பட்டதாகக் கூறினார்கள். "சிறிது காலம் சிரமம், நீண்ட காலம் நன்மை' என்பது போன்ற கவர்ச்சிகரமான வசனங்கள் பேசப்பட்டன. ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகிக் கொண்டே போகிறார்கள்.
வேலைவாய்ப்புகள் குறைந்து கொண்டேயிருக்கின்றன. இன்னொரு பக்கம் ஊழலும், முறைகேடுகளும் மலிந்திருக்கின்றன. ஆக, இரண்டு வகையிலும் மன்மோகனின் கொள்கைகளுக்குத் தோல்விதான்.
நமது அரசியல் சட்டப்படி பிரதமரும் அவரது அமைச்சர் குழுவும் மக்களவைக்குப் பொறுப்பானவர்கள். அரசின் கொள்கைகளுக்குத் தோல்வி ஏற்பட்டால் ஒட்டுமொத்த அமைச்சரவையும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். அரசியல் சட்டம் இதையே வலியுறுத்துகிறது.
ஆனால், இங்கு நிலைமையே வேறாக இருக்கிறது. ஊழல்களையும் மோசடிகளையும் அந்தந்த அமைச்சரின் சொந்தப் பிரச்னையாக்கிப் பார்க்கிறார்கள். அவர் மட்டும்தான் தவறு செய்தார், அதற்கு அவர் மட்டுமே பொறுப்பு என்பதைப் போல நடவடிக்கைகள் அமைகின்றன. அதுவும் வெளியிலிருந்து யாரோ ஒருவர் ஆதாரங்களைத் திரட்டி, அதன் மூலம் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், இவர்களுக்கெல்லாம் தலைவராக இருப்பவர் அப்பாவியாம். அவருக்கு எந்தப் பொறுப்பும் இல்லையாம்.
பிரதமர் அமைதியாக இருப்பதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதுதான் கூட்டணி தர்மம். சரியான அமைச்சர்களை நியமிக்க முடியாத, தவறுகளைத் தட்டிக் கேட்க முடியாததற்குப் பெயர் தர்மமல்ல, அதர்மம்!
எல்லாம் வெட்டவெளிச்சமான பிறகும், "எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், தவறு செய்பவர்களை நீதியின் முன் கொண்டுவராமல் விடமாட்டோம்' என்று பிரதமர் தயக்கமேயில்லாமல் கூறுகிறார். அதே நேரத்தில், "ராஜிநாமா செய்வதைப் பற்றி நான் யோசிக்கவேயில்லை' என்றும் பேசுகிறார். என்ன முரண்பாடு பாருங்கள்.
பிரதமர் பதவியில் இருந்து கொண்டு அப்படி அவர் என்னதான் வேலை செய்கிறார்? கறுப்புப் பணத்தைத் தடுப்பது, மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவது, ஊழலைக் கட்டுப்படுத்துவது போன்றவைக்கான உருப்படியான திட்டங்கள் ஏதும் இல்லாதபோது, அவரும் அவரது அரசும் பதவியில் தொடருவது எதற்காக?
இப்படியொரு ஊழல் மிகுந்த, மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசு தொடருகிறதென்றால், அதற்கான ஒரே காரணம் தங்கள் ஊழலை மூடி மறைப்பதாகத்தான் இருக்க வேண்டும். எதையும் கண்டுகொள்ளாத பிரதமரும் அதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறார்.
இப்படி ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் அமைதியாகத் துணைபோகிற பிரதமர், தனிப்பட்ட முறையில் நேர்மையாளராக இருந்து மட்டும் என்ன பயன் ஏற்படப் போகிறது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

