இன்றைய உலகத்தின் மாபெரும் பொருளாதார வல்லரசு அமெரிக்கா. நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு 15.064 டிரில்லியன் டாலர்கள். இந்திய ரூபாயில் சொல்வதென்றால் சுமார் 7.5 கோடி கோடி. உலகின் மொத்த உற்பத்தி மதிப்பில் இது 25 சதவிகிதம்.
இந்நாட்டின் தனிநபர் வருமானமும் குறைந்ததல்ல. ஒவ்வொரு அமெரிக்கரும் சராசரியாக ஆண்டுக்கு சுமார் 25 லட்ச ரூபாய் சம்பாதிப்பதாக சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அடேயப்பா, இந்நாட்டில் எல்லோருக்கும் எல்லா வசதிகளும் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா? அதுதான் தவறு.
அமெரிக்காவில் பல வசதிகள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதில் முக்கியமானது மருத்துவ வசதி. ஆண்டுக்கு சுமார் 8 லட்சத்து 75 ஆயிரம் அமெரிக்கர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள் என்கிற ஒரு புள்ளிவிவரமே, அந்நாட்டின் சுகாதார அமைப்பின் தரத்தைச் சொல்லிவிடும்.
உலகிலேயே அதிக விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் மருத்துவத் திட்டங்களுள் ஒன்று அமெரிக்காவினுடையது. இதைச் சீர்திருத்தும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு கொண்டு வந்த சட்டம் இப்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டில் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டு வந்த இந்தச் சட்டத்தின் மீதான வாதங்கள் நீதிமன்றத்தில் முடிந்துவிட்ட நிலையில், வரும் ஜூன் மாதத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தச் சட்டம் தொடர்ந்து அமலில் இருக்குமா என்பது சந்தேகம்தான்.
ஒருவேளை ஒபாமாவின் சட்டம் நீடித்தால் கூட, அமெரிக்காவின் மருத்துவத் திட்டத்தில் பெரிய மாற்றம் வந்துவிடும் என்றோ, அனைவருக்கும் பொதுவான திட்டத்தை விரும்பும் மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவிடும் என்றோ கூறிவிட முடியாது.
ஒரு சட்டம் நீடித்திருப்பதும் அல்லது இல்லாமல் போவதும் அமெரிக்காவின் சுகாதார அமைப்பில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரப் போவதில்லை என்பதுதான் நிஜம்.
அமெரிக்காவின் சுகாதார அமைப்பு மிகவும் மோசமானது என்பதை உறுதி செய்வதற்குப் பல அம்சங்களைக் கூறலாம். உலகின் பெரிய பொருளாதார வல்லரசாக விளங்கும் அமெரிக்கா, சராசரியான இறப்பு வயதைப் பொருத்தவரை உலகில் 50-வது இடத்தில் இருக்கிறது. இந்த விஷயத்தில் பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகளும், சில வளரும் நாடுகளும் அமெரிக்காவை முந்திவிட்டன.
சுகாதாரத் திட்டங்களின் செயல்பாட்டைப் பொருத்து, உலக சுகாதார அமைப்பு தயாரித்த பட்டியலில் அமெரிக்காவுக்கு 37-வது இடமே கிடைத்திருக்கிறது. மக்களின் சுகாதார நிலையில் மொத்தமுள்ள 191 உறுப்பு நாடுகளில் 72-வது இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. அது மட்டுமல்ல, சுகாதாரத் தரத்தில் வளர்ந்த நாடுகளில் கடைசி இடத்தைத்தான் காமன்வெல்த் நிதியம் அமெரிக்காவுக்கு வழங்கியிருக்கிறது.
இவ்வளவு மோசமான சுகாதார அமைப்பை வைத்திருக்கும் அமெரிக்கா, ஒருவேளை மிகக் குறைவாகச் செலவு செய்கிறதோ என்கிற சந்தேகம் வேண்டாம். சுகாதாரத் திட்டங்களுக்காக மற்ற எந்த வளர்ந்த நாட்டையும்விட பணத்தை அள்ளிக் கொட்டுவது அமெரிக்காதான். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17.4 சதவிகிதத்தை சுகாதாரத் திட்டங்களுக்காகச் செலவு செய்கிறது அமெரிக்கா. அதாவது கிட்டத்தட்ட ரூ. 1.25 கோடி கோடி. காமன்வெல்த் நிதியம் வெளியிட்ட 2009-ம் ஆண்டுக்கான கணக்கு இது. வளர்ச்சியடைந்த நாடுகளாகக் கருதப்படும் பிற 13 நாடுகளில் ஒரு நாடுகூட மொத்த உற்பத்தியில் 12 சதவிகிதத்துக்கு மேல் செலவு செய்யவில்லை.
உதாரணத்துக்கு ஆஸ்திரேலியா 8.7 சதவிகிதம், கனடா 11.45 சதவிகிதம், ஜப்பான் 8.5 சதவிகிதம், பிரிட்டன் 9.8 சதவிகிதம், பிரான்ஸ் 11.8 சதவிகிதம், நெதர்லாந்து 12 சதவிகிதம் என பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவைக் காட்டிலும் மிகக் குறைந்த பகுதியைத்தான் சுகாதாரத் திட்டங்களுக்காகச் செலவு செய்கின்றன.
தனிநபருக்கான சுகாதாரச் செலவு வகையிலும் அமெரிக்காதான் பிற நாடுகளை முந்தி நிற்கிறது. மேற்சொன்ன நாடுகள் முறையே ரூ. 1,72,250, ரூ. 2,18,250, ரூ. 1,43,900 , ரூ.1,74,350, ரூ. 1,98, 900, ரூ. 2,45,700 என தனிநபருக்கு ஓராண்டுக்குச் செலவு செய்கின்றன. ஆனால், இந்த வகையில் அமெரிக்கா செய்யும் செலவு எவ்வளவு தெரியுமா? ரூ. 4 லட்சம்!
உலகின் மற்ற எந்த நாட்டையும் விட மருத்துவத்துக்காக அதிகம் செலவழிக்கும் நாடு அமெரிக்காதான் என்பதை உலகச் சுகாதார நிறுவனமும் உறுதி செய்திருக்கிறது. இவ்வளவு செய்தும் சுகாதாரத் திட்டங்கள் மோசமான நிலையில் இருப்பது ஏன்? பல காரணங்கள் இருக்கின்றன.
முதலாவதாக, மிக அதிக அளவில் செய்தாலும், அதில் கிட்டத்தட்ட பாதித் தொகை, அனைவருக்கும் பொதுவான திட்டங்களுக்கோ, எளிதில் கிடைத்துவிடக்கூடிய வசதிகளுக்கோ செலவு செய்யப்படுவதில்லை. சில குறிப்பிட்ட வகையான மக்களுக்கு மட்டுமே பொருந்துகிற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
"மெடிகேர்' என்ற சுகாதாரத் திட்டம் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது, "மெடிக்எய்ட்' என்கிற திட்டத்தை குறைந்த வருவாய்ப் பிரிவினரும், மாற்றுத் திறனாளிகளும் மட்டுமே பயன்படுத்த முடியும். எஸ்-சிப் என்பது குடும்பத்தில் காப்பீடு பெறாத குழந்தைகளுக்கானது. விஎச்ஏ என்கிற மற்றொரு திட்டத்தின் மூலம் மூத்த ராணுவத்தினர் மட்டுமே பலனடைய முடியும். மொத்த மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேருக்கு அரசே காப்பீட்டு வசதியை வழங்கியிருக்கிறது. மீதியுள்ளவர்கள் தனியாரிடம் காப்பீடு பெற்றவர்களாகவோ, எந்தக் காப்பீடும் பெறாதவர்களாகவோ இருக்கிறார்கள்.
தனியார் மருத்துவக் காப்பீடு மூலமாகக் கிடைக்கும் சிகிச்சை அதிகச் செலவுபிடிக்கக்கூடியது. பொதுவாகவே காப்பீடு வழியாக மருத்துவச் சிகிச்சை மேற்கொள்வது எளிதாக இருக்காது. காப்பீடு பெற்றிருப்பவர்கள் அதிகமான பிரீமியம் தொகை செலுத்த வேண்டும் என்பதுடன், சிகிச்சையின்போது மருத்துவமனைகள் தரும் பில்லைக் கட்டுவதற்கு சொந்த பாக்கெட்டையும் காலி செய்ய வேண்டியிருக்கும்.
உதாரணத்துக்கு அமெரிக்காவில் சாதாரண பிரசவம், அதைத் தொடர்ந்த சிகிச்சைக்கு ஆகும் மொத்தச் செலவு ரூ.3 லட்சம். இதில் ரூ.25 ஆயிரத்தை சிகிச்சைக் கட்டணமாக மருத்துவமனைக்கு சம்பந்தப்பட்டவர் செலுத்த வேண்டும். இந்தியா என்றால் ரூ.25 ஆயிரத்தைக் கொண்டு சாதாரண பிரசவத்தை முடித்து தொட்டில், ஆடைகள், பால் என குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரையிலான செலவுகளை முடித்துவிடலாம். அதாவது, அமெரிக்காவில் சிகிச்சைக்கான உண்மையான கட்டணத்தையும் செலுத்தி, காப்பீட்டுக்கான பிரீமியத்தையும் செலுத்த வேண்டியிருக்கிறது.
இப்படி மயக்கம் வரும் அளவுக்கு மருத்துவமனைக் கட்டணங்கள் இருப்பதால்தான் தனிநபர் பலர் திவால் நோட்டீஸ் கொடுக்க நேர்ந்ததாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருக்கிறது. இன்னும் சுவாரசியம் என்னவென்றால், திவால் ஆனவர்களில் 75 சதவீதம் பேர் காப்பீடு பெற்றவர்கள் என்பதுதான்! ஆக, அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு பெற்றால்கூட நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க முடியாது.
காப்பீடு பெற்றவர்களுக்கே இந்த நிலைமை என்றால், காப்பீடு பெறாதவர்களின் நிலைமையோ கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவுக்குப் பயங்கரமானது. 2009-ம் ஆண்டுக் கணக்குப்படி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 16.7 சதவீதத்தினர் காப்பீடு பெற்றிருக்கவில்லை. உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்காததால்தான் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் இறக்க நேரிடுகிறது என்று மற்றொரு ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தக் குறைபாடுகளை எல்லாம் நீக்க வேண்டும் என்பதற்காகத்தான் 2010-ம் ஆண்டில் புதிய சீர்திருத்தச் சட்டத்தை ஒபாமா கொண்டு வந்தார். நோயாளிகள் பாதுகாப்பு மற்றும் ஏற்கத்தகுந்த செலவிலான சிகிச்சைச் சட்டம் (பிபிஏசிஏ) என்கிற இந்தச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரான ஜனநாயகக் கட்சியினரும், அதிபரும் ஆதரவாக இருந்ததால் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டப்படி அரசு, ஒருவருக்கு வேலை வழங்கும் தனியார் உள்ளிட்ட யாரும் மருத்துவக் காப்பீடு அளிக்கவில்லை என்றால், குறைந்தபட்சமாக நிர்ணயிக்கப்படும் காப்பீட்டை அவரே பெற்றுக் கொள்ள வேண்டும். வறுமை, மத நம்பிக்கை போன்ற எந்தக் காரணங்களும் இன்றி, இந்த "தனிநபர் கட்டாயக் காப்பீட்டை' பேணாத ஒருவர், சுமார் ரூ.35 ஆயிரத்தை அரசுக்கு அபராத வரியாகச் செலுத்த நேரிடும்.
காப்பீடு வாங்குவது கட்டாயம் என்கிற பிரிவுதான் இந்தச் சட்டத்தை நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்றிருக்கிறது. காப்பீட்டைப் பெறுமாறு அரசு யாரையும் நிர்பந்திக்கக் கூடாது என்று இந்தச் சட்டத்துக்கு எதிரானவர்கள் வாதிடுகிறார்கள். இந்தச் சட்டமே, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்பது அவர்களது கருத்து.
ஆனால், அரசு வேறு மாதிரியாக வாதிடுகிறது. அனைவருக்கும் பலன் கிடைக்க வேண்டும் என்பதால்தான், குறைந்தபட்ச கட்டாயக் காப்பீட்டு நடைமுறை கொண்டு வரப்பட்டதாக அரசு கூறுகிறது. அனைவருக்கும் காப்பீட்டை விரிவுபடுத்துவதன் மூலம், நிறுவனங்கள் திவால் ஆவதையும் தடுக்க முடியும் என்றும் அரசு விளக்கமளிக்கிறது.
ஆனால் அரசின் கதையை பெரும்பாலான மாநிலங்களும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கும் பலரும் கேட்பதாக இல்லை. இந்தச் சட்டம் மத்திய அரசின் அதிகார வரம்பை மீறுகிறதா, கட்டாய காப்பீடு என்கிற ஒரு பகுதியை மட்டும் ரத்து செய்வதால் சட்டமே செல்லாததாகிவிடுமா, காப்பீட்டுத் திட்டத்துக்கான நிதிப்பங்கீடை வழங்கக் கோரி மாநிலங்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனவா என்பன போன்ற அம்சங்களை இப்போது நீதிமன்றம் ஆய்வு செய்து வருகிறது.
நீதிமன்றம் எப்படி வேண்டுமானலும் முடிவெடுக்கலாம். என்ன நடக்கப் போகிறது என்பதை யாராலும் உறுதியாகக் கூறிவிட முடியாது. ஆனால் அனைவருக்கும் பொதுமான மருத்துவத் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதில் அமெரிக்காவிலுள்ள எந்த அரசுக்கும் அக்கறை இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. மருத்துவம் என்பது முழுக்க முழுக்க வர்த்தகமாகிவிட்ட ஒரு நாட்டின் அரசிடமிருந்து மக்களின் மீதான அக்கறையை எப்படி எதிர்பார்க்க முடியும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு

தமிழில் வெளியாகும் வாழ - 2!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

