உருவாகிறது வேலைவாய்ப்பு
பொருளாதார வளர்ச்சிவிகிதத்தை 2012-13-ம் நிதி ஆண்டில் 7.6 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்பது நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலக்கு. இது சாத்தியம் என்றே வைத்துக் கொள்வோம். அதேநேரம், மூன்று ஆண்டுகளுக்


பொருளாதார வளர்ச்சிவிகிதத்தை 2012-13-ம் நிதி ஆண்டில் 7.6 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்பது நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலக்கு. இது சாத்தியம் என்றே வைத்துக் கொள்வோம். அதேநேரம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, உலக அளவில் தேக்க நிலை ஏற்பட்டதற்கு முன்பு வரை, 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக, இந்தியாவில் வளர்ச்சி 8.5 சதவிகிதமாக இருந்தது. அப்போதுகூட, மேற்கூறிய சிறப்பான வளர்ச்சி, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியாக இருக்கவில்லை என்பதே உண்மை.
இந்நிலையில், 8.5 சதவிகித வளர்ச்சி 7.6 சதவிகிதமாகச் சரிந்துவிட்ட பிறகு, வேலைவாய்ப்பு சுருங்கிவிடுமோ என்ற கவலை ஏற்படுவது இயல்பு.
போதாக்குறைக்கு, அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், மீட்சி ஏற்படவில்லை. கிரீஸ், இத்தாலி, போர்ச்சுகல் போன்ற ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் நேரடி விளைவாக இந்தியாவின் ஏற்றுமதி குறைந்துள்ளது. ஜவுளி, ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள், தங்க ஆபரணங்கள், ஆபரணக் கற்கள், மருந்து வகை, ரசாயனப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் ஆகிய துறைகளில் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர்.
கடந்த ஓரிரு ஆண்டுகளாக, இந்திய ஏற்றுமதியாளர்கள், அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் மட்டும் நம்பி இராமல், புதிதாக வளர்ச்சி அடைந்து வரும் ஆப்பிரிக்க நாடுகளின் பக்கம் கவனம் செலுத்தி வருகின்றனர். இது நல்ல பலனையும் அளித்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக, இந்தியாவில் ஏற்றுமதி சற்று அதிகரித்துள்ளது. இதன் பயனாக எந்த அளவு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதேநேரம், சமீபத்தில் வெளிவந்துள்ள மனிதவள ஆய்வு அறிக்கை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. 2012-ம் ஆண்டில் இந்தியாவில் 16 லட்சம் புதிய வேலைகள் உருவாகும் என்பதே மாஃபாய் ராண்ட்ஸ்டாட் என்கிற மனிதவள ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின் சாரம். 2011-ம் ஆண்டில் உருவான வேலைகள் 14 லட்சம் ஆகும். அதேநேரத்தில், புதிய வேலைகளுக்கான ஊதியமும் 13 முதல் 15 சதவிகிதம் கூடுதலாக இருக்கும் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தை மகாராஷ்டிரமும், இரண்டாவது இடத்தை தில்லியும் பிடித்துள்ளன.
நடப்பாண்டில் மார்ச் மாதம் வரையிலான 3 மாதங்களில் 2,80,000 புதிய வேலை வாய்ப்புகளை, தில்லி, மும்பை மற்றும் சென்னை மாநகரங்கள் உருவாக்கியுள்ளன.
மொத்தத்தில், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில், 2011-ம் ஆண்டைவிட 2012-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும் என்பது ஆய்வறிக்கையின் கணிப்பு. இதை உறுதி செய்யும் வகையில், நடப்பாண்டின் முதல் மூன்று மாத காலத்தில் புதிய வேலைகள் உருவாகியுள்ளன.
வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி வேண்டும் என்கிற முழக்கம் விண்ணைப் பிளந்து வரும் நிலையில், சமீபத்திய முன்னேற்றம் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
மருத்துவமனைகள், ஹோட்டல் தொழில், தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த அயல் பணி ஒப்படைப்பு ஆகிய தொழில்கள்தான் புதிய வேலைகள் உருவாக்கத்தில் இதுவரை முன்னணியில் உள்ளன. 2012-ம் ஆண்டில் 16 லட்சம் புதிய வேலைகளில், மேற்கூறிய மூன்று துறைகளில் மட்டும் 7,10,000 புதிய வேலைகள் உருவாகும். கடந்த ஆண்டில் உருவான 14 லட்சம் புதிய வேலைகளில், இந்த மூன்று துறைகளின் பங்களிப்பு 6,20,000 வேலைகள் ஆகும்.
எனினும், வளர்ச்சிக்குச் சமமான வேலைவாய்ப்பு ஏற்படவில்லை. அதேபோல், தொழிற்சாலைகளின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் உயரவில்லை. சம்பந்தப்பட்ட காலகட்டத்தில், பணவீக்கம் கட்டுக்கு மீறிச் சென்றது. இதனால் ரிசர்வ் வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. தொழிற்சாலைகளின் உற்பத்தி குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.
தற்சமயம் வேலைவாய்ப்பு நிலைமையில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில், தொழிற்சாலை உற்பத்திக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டது. இதன் விளைவாக, 2022-க்குள் 10 கோடி புதிய வேலைகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
மேற்கூறிய துறைகள் தவிர, வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், நிதிச் சேவை நிறுவனங்கள் ஆகியவை நடப்பாண்டில் சென்னையில் 15 சதவிகித புதிய அலுவலர்களை நியமிக்க உள்ளன. அதேபோல், மும்பையில் 13 சதவிகிதம், பெங்களூரில் 12 சதவிகிதம், புனேயில் 15 சதவிகிதம் அலுவலர்களை நியமிக்க உள்ளன.
வங்கித் துறையில் மட்டும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2 லட்சம் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் ஓய்வுபெற உள்ளனர். இது அந்தத் துறைக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும். தற்போது, நாட்டில் 40 சதவிகிதத்துக்கு மேலான மக்களுக்கு வங்கிச் சேவை கிடைக்கவில்லை. ""அனைவருக்கும் வங்கிச் சேவை'' என்னும் திட்டத்தை மத்திய அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது. அதன்படி, இன்னும் ஓரிரு மாதங்களில் 2000-க்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் வங்கிச் சேவையைக் கொண்டு செல்லும் திட்டம் நிறைவு அடையும். இதன் பயனாக, 73,000 மையங்களில் அல்லது குக்கிராமங்களில் வங்கிச் சேவை முதல் முறையாக அறிமுகம் ஆக உள்ளது.
தென் இந்தியாவில் மட்டும் 38,000 குக்கிராமங்களின் அடிப்படை வங்கிச் சேவை முதன்முறையாக வழங்கப்படும். இதனாலும், புதிய வேலைகள் உருவாகும் என்பது உறுதி.
இது ஒருபுறம் இருக்க, வேலைவாய்ப்புக்குத் தடைக்கற்களாக இருக்கும் சில அம்சங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளன. முன்னேறிய மாநிலங்கள் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. உதாரணமாக, தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையைக் குறிப்பிடலாம். வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டுமானால், இதுபோன்ற சில முட்டுக்கட்டைகளை அடையாளம் கண்டு, அவற்றை அகற்றிட வேண்டும்.
படித்த, வேலையில்லா இளைஞர்களை வேலைக்குத் தகுந்தவர்களாக மாற்றுவதற்குப் பயிற்சி தேவை. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தை மத்திய அரசு அண்மையில் அமைத்துள்ளது.
ஏற்கெனவே செயல்படத் தொடங்கியுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், அடுத்த 10 ஆண்டுகளில், 15 கோடி இளைஞர்கள் பயிற்சி பெறுவார்கள்.
மேற்கூறிய பயிற்சித் திட்டம் வாயிலாக, ஒருசில ஆண்டுகளில் சென்னை, மும்பை, தில்லி போன்ற மாநகரங்களுக்கு இணையாக, இரண்டாம் நிலை நகரங்களான கோவை, ஆமதாபாத், புணே, ஹைதராபாத், சண்டீகர், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல நகரங்களிலும் வேலைவாய்ப்பு உருவாக்கம் துரிதமடையும்.
இவை அனைத்தும், நகர்ப்புறங்களைச் சார்ந்த அம்சங்கள் ஆகும். கிராமங்களை எடுத்துக் கொண்டோமேயானால், அவற்றின் மேம்பாட்டுக்கு திறவுகோல் விவசாய வளர்ச்சியே ஆகும்.
தற்போது தொடங்கியுள்ள 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில், வேளாண் மேம்பாட்டுக்கும், ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும், கடந்த காலங்களில் இல்லாத அளவு அதிகபட்ச நிதி ஒதுக்கீடும், முக்கியத்துவமும் வழங்கப்பட்டுள்ளன. இது கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு உந்து சக்தியாக அமையும்.
கிராமங்களில், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளை அமைப்பதற்கு தனியார் துறையினர் ஊக்குவிக்கப்பட வேண்டும். வழக்கமான வரிச்சலுகைகள் மட்டுமல்லாமல், தொழிற்கூடங்களை அமைப்பதற்குத் தேவையான, விளைநிலம் அல்லாத தரிசுநிலத்தை நியாயமான முறையில் பெறுவதற்கு, வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். இதற்கு ஏதுவாக, ஒளிவுமறைவற்ற நடைமுறைகளை சம்பந்தப்பட்ட அரசுகள் அறிவித்திட வேண்டும்.
கிராமப்புறங்களில், ஏழ்மை ஒழிவதற்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்தால் மட்டும் போதாது. அந்த வேலைகளுக்கான - அதிலும் குறிப்பாக, அமைப்புசாராத வேலைகளுக்கான - ஊதியம் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்பட வேண்டும். முந்தைய ஆண்டுகளைவிட, கடந்த ஓரிரு ஆண்டுகளாக வேளாண் வளர்ச்சி ஏறுமுகத்தில் உள்ளது என்பது ஒரு நல்ல செய்தி. ஊரகப் பகுதிகளில், வேளாண் சார்ந்த தொழிற்கூடங்களை அமைப்பதற்கு சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்குதல் வேண்டும். விவசாயத்துக்கு அடுத்தபடியாக, நம் நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கும் துறை சிறு தொழில் துறையே. எனவே, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களை ஊக்குவித்து, அவர்களுக்குத் தேவையான வசதிகளையும், வங்கிக் கடனுதவியையும் செய்து கொடுப்பதுகூட, வேலைவாய்ப்பு பெருக்கத்துக்கான ஓர் உத்தியாக அமையும்.
ஏற்கெனவே சிறு தொழில்கள் 40 சதவிகித வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. எனவே, சிறு தொழிலுக்குத் தரும் ஊக்குவிப்பு, வேலைவாய்ப்பு பெருக்கத்துக்குத் தரும் ஊக்குவிப்பு ஆகும்.
உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய கொள்கைகளை ஏற்றுக்கொண்டு 20 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இதனால் அரசுத்துறை நிறுவனங்களின் மூலம் கிடைத்து வந்த வேலைவாய்ப்புகள் குறைவதில் வியப்பில்லை. அந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு, மேற்கூறிய திட்டமிட்ட செயல்பாடுகள் அவசியம் மட்டுமல்ல, அவசரமும்கூட.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...