திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

சில்லறை விஷயமல்ல...

விலைவாசி உயர்வு, குறிப்பாக சில்லறை வர்த்தகப் பொருள்களின் விலை கடந்த சில ஆண்டுகளாக ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதற்கு பருவமழை குறைவு, உற்பத்திக் குறைவு என பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இத

Updated On :2 ஜனவரி 2024, 11:56 pm IST

விலைவாசி உயர்வு, குறிப்பாக சில்லறை வர்த்தகப் பொருள்களின் விலை கடந்த சில ஆண்டுகளாக ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதற்கு பருவமழை குறைவு, உற்பத்திக் குறைவு என பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதைத் தாண்டியும் சில காரணங்கள் உள்ளன. சில்லறை விஷயம் என்பதாலோ என்னவோ இதுபற்றி நுகர்வோரும் கவலைப்படுவதில்லை. அரசும் கண்டுகொள்வதில்லை.

 குண்டூசி முதல் கணினி வரையில் அனைத்துப் பொருள்களின் விலையை உற்பத்தி நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்கின்றன. இதைக் கண்காணிப்பதற்கான நடைமுறைகள் எதுவும் இல்லை. இதனால் அவர்கள் விருப்பத்துக்கேற்ப விலையை உயர்த்திக் கொள்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 பல நேரங்களில் போதுமான காரணம் இல்லாமலேயே விலை உயர்த்தப்படுகிறது. இதைக் கண்காணிப்பதற்கென தனி அமைப்பு இல்லாததும் இதற்கு முக்கிய காரணம்.

 விலைவாசி உயர்வைப் போல வருமானமும் அதிகரித்தால் பிரச்னையே இல்லை. ஆனால், குறிப்பிட்ட சிலரைத் தவிர, பெரும்பாலானவர்களின் வருமானம் அவ்வளவாக உயர்வதில்லை. இதனால் ஏழைகள்தான் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

 இதுமட்டுமல்லாமல், சில்லறை வர்த்தகத் துறையில், பொருள்களின் விலையை மறைமுகமாக உயர்த்தும் போக்கு அதிகரித்து வருகிறது. அதாவது, பொருளின் விலையை அதிகரிப்பதற்கு பதில், அதன் அளவைக் குறைத்து விடுகிறார்கள்.

 உதாரணமாக, 200 கிராம் பிஸ்கட் பாக்கெட் ரூ.15-க்கு விற்கப்பட்டது. இப்போது, 150 கிராம் ரூ.15க்கு விற்கப்படுகிறது.

 விலை அதிகரிக்கவில்லை என்றாலும், அதன் எடை குறைந்து விடுகிறது. இதுபோன்ற மோசடி பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு தெரிவதில்லை.

 ஒரு பொருள் உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோரிடம் சென்றடைவதற்கு இடையே பல இடைத்தரகர்கள் உள்ளனர். இதனால் அவர்களின் லாபத்தைக் கருத்தில் கொண்டுதான் உற்பத்தியாளர் அதிகபட்ச சில்லறை விலையை (எம்.ஆர்.பி.) நிர்ணயிக்கிறார்.

 அதாவது, ஒரு பொருளின் எம்.ஆர்.பி.யில் உற்பத்தி மற்றும் விளம்பரச் செலவு 40 முதல் 50 சதவீதம்தான் இருக்கும். ஆக, மீதமுள்ள 50 சதவீத விலை, தரகர்களுக்கு தருவதற்காக நுகர்வோர் தலையில் கட்டப்படுகிறது.

 எனவே, சில்லறை வணிகப் பொருள்களின் விலை உயர்வுக்கு இடைத்தரகர்களின் தலையீடு முக்கிய காரணமாக அமைகிறது.

 சில கடைகளில் பொருளின் மீது அச்சிடப்பட்டுள்ள எம்ஆர்பி விலைக்கு விற்கப்படுகிறது. வேறு சில கடைகளில் அதே பொருள் எம்ஆர்பியைவிட 10 முதல் 15 சதவீதம் வரை குறைவான விலைக்கு விற்கப்படுகிறது.

 கடும் போட்டி காரணமாக, சில வியாபாரிகள் தங்களது லாபத்தில் ஒரு சிறு பகுதியை குறைத்துக் கொள்வதே இதற்குக் காரணம். இதனை வரவேற்கலாம். குறைவான விலையில் பொருள் கிடைத்தால் வாடிக்கையாளருக்கு லாபம்தானே.

 அதேநேரம், இந்த வித்தியாசம் 20 முதல் 50 சதவீதம் வரை நீள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 உதாரணமாக, பட்டாசுகள் 60 சதவீதம் வரை கூட எம்.ஆர்.பி.யைவிட குறைவான விலைக்கு விற்கப்படுகின்றன. இன்னும் சில பொருள்களில் இதுபோன்ற வித்தியாசம் காணப்படுகிறது.

 பொதுவாக, எம்.ஆர்.பி.யைவிட விற்பனை விலை 10 முதல் 15 சதவீதம் வரை குறைவாக இருக்கலாம். ஆனால், அதற்கும் குறைவாக விற்பது சட்டப்படி குற்றமாகும்.

 எம்.ஆர்.பி. என்பதன் அர்த்தம், வரிகள் உள்பட இந்த விலைக்கு மேல் விற்கக் கூடாது என்பதுதான். ஆனால், பயணவழி உணவகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்பட சில இடங்களில் எம்.ஆர்.பி.யைவிட 40 சதவீதம் வரை கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்கப்படுகின்றன. உதாரணமாக, ரூ.10 மதிப்புள்ள பிஸ்கட் பாக்கெட் ரூ.15க்கு விற்கப்படுகிறது.

 தினமும் ஏழை முதல் பணக்காரர்கள் வரை பயன்படுத்தும் ஆவின் பால் கூட எம்.ஆர்.பி.யைவிட கூடுதல் விலை கொடுத்துதான் வாங்க வேண்டி உள்ளது. அரசின் எச்சரிக்கைகள் தண்ணீரில் எழுதப்பட்ட எழுத்தாக உள்ளன.

 இப்படி அனைவரும் பயன்படுத்தும் சில்லறை வணிகத் துறையில் எத்தனை முரண்பாடு? இவற்றுக்கெல்லாம் தீர்வு காணப்பட்டாலே, விலைவாசி உயர்வை ஓரளவு கட்டுக்குள் வைக்கலாம்.

 விலைவாசி உயர்வால், மக்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவதாக நினைப்பது தவறு. விலைவாசி உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கிறது. இதைக்கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கடன் வட்டியைக் குறைக்கிறது.

 கடன் வட்டியைக் குறைத்தால் நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சி சரிகிறது. இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடைய பிரச்னையை சில்லறை விஷயமாக அரசு கருதக் கூடாது. இது தொடர்பாக, விரிவான ஆய்வு செய்து விலைவாசியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 சில்லறை விற்பனை ஒழுங்குமுறை ஆணையம் சில்லறை விற்பனை துறைக்கென ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவது குறித்துப் பரிசீலிக்கலாம். இடைத்தரகர்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்துவது இந்த அமைப்பின் முக்கிய நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

 குறிப்பாக, உற்பத்திச் செலவுக்கும் நிர்ணயிக்கப்படும் விலைக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கலாம் என்பதை வரையறை செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் எம்.ஆர்.பி.யைவிட அதிக தள்ளுபடி வழங்கி ஏமாற்றுவதைத் தடுக்க முடியும். பொருளின் பாக்கெட் மீது, எம்.ஆர்.பி.யை மட்டுமல்லாமல், உற்பத்திச் செலவையும் அச்சிடுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.

 பொருளுக்கான விலை நிர்ணயத்தை தணிக்கை செய்ய வேண்டும். பொருளின் அளவு, விலை ஆகியவற்றை கண்காணிப்பு ஆணையத்தின் அனுமதி பெற்ற பிறகே நிர்ணயிக்க வேண்டும். விலையிலோ, அளவிலோ மாற்றம் செய்ய விரும்பினால் அதுபற்றி ஆணையத்தின் அனுமதி பெற வகை செய்ய வேண்டும்.

 எம்.ஆர்.பி.யைவிட கூடுதலாக விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும். மறைமுக விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.