உணவு ஏற்றுமதியின் தேவை
2012-13-ஐ முழுமையான வறட்சி என்று மதிப்பிட முடியாது. கரீஃப் பருவ மழை பல மாநிலங்களில் பொய்த்துவிட்டது. தமிழ்நாட்டில் மழை அவ்வளவாகப் பொய்த்துவிடவில்லை. எவ்வகையிலும் தமிழ்நாடு உணவு உற்பத்தியில் உபரி மாநில


2012-13-ஐ முழுமையான வறட்சி என்று மதிப்பிட முடியாது. கரீஃப் பருவ மழை பல மாநிலங்களில் பொய்த்துவிட்டது. தமிழ்நாட்டில் மழை அவ்வளவாகப் பொய்த்துவிடவில்லை. எவ்வகையிலும் தமிழ்நாடு உணவு உற்பத்தியில் உபரி மாநிலம் இல்லை என்பதால் தமிழ்நாடு நிலை இந்திய நிலைக்குப் பொருந்தாது.
இந்தியாவில் தென்மேற்குப் பருவக்காற்று வழங்கிய மழை மே முதல் ஜூலை வரை சராசரி அளவைவிடக் குறைவு. உணவு உற்பத்தியில் உபரி மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத்துகளில் வானம் பொய்த்தாலும்கூட 90 சதவீதத்துக்கு மேல் பாசன வசதி உள்ளது.
மத்திய வேளாண்மை அமைச்சகம் வழங்கும் தகவல்கள் அடிப்படையில் கரீஃப் உணவு உற்பத்தியின் பாதிப்பு கவலைப்படக்கூடியதாக இருக்காது என்றே மதிப்பிடப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்யப்பட்ட அரிசியும் கோதுமையும் குவிந்துள்ளன. கொட்டி வைக்க இடமில்லாமல் பாழாவதற்கு முன் பொது வினியோகத்துக்குரிய தேவையை ஒதுக்கிவிட்டு மிஞ்சுவதை ஏற்றுமதி செய்யலாம் என்ற கருத்து மேலோங்கியுள்ளது.
2012-13 வறட்சி சில மாநிலங்களில் காணப்பட்டாலும் ஏற்றுமதிக்குத் தடை இல்லை என்றும் கூறப்படுகிறது. இது என்ன கணக்கு?
சராசரியைவிடக் குறைவான மழை, உலகின் பல தேசங்களிலும் இந்த ஆண்டு இருந்தது. ரஷியா, உக்ரைன், கஜகஸ்தானில் மிக மோசமான வறட்சியால் கோதுமை, மக்காச்சோளம், சோயா உற்பத்தி 10 கோடி டன் அளவுக்குக் குறைந்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா தேசங்களிலும் கோதுமை உற்பத்தி குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் உணவு உற்பத்தியில் சற்று பாதிப்பு இருந்தாலும், உபரி இருப்பு இன்னமும் தேவைக்கு மேல் உள்ளது.
அரிசியைப் பொருத்தவரை பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி மத்திய தொகுப்பில் 3.3 கோடி டன் உள்ளது. கரீஃப் பருவத்தில் அரிசி உற்பத்தி சுமார் 8.8 கோடி டன்களைத் தொடும். அரிசி விளையக்கூடிய ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, கிழக்கு உ.பி. ஆகியவை சராசரி மழைப்பொழிவைப் பெற்றுள்ளதால் ரபி பருவத்திலிருந்தும் நிறைய உபரி அரிசிபெறும் வாய்ப்புள்ளது.
அரிசியில் இதர உபரி மாநிலங்களில் - குறிப்பாக பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் உபரி அரிசி 1.4 கோடி டன்கள் வரை எதிர்பார்க்கலாம். மேற்கூறிய மூன்று மாநிலங்களில் 99 சதவீத விளைச்சல் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பெறப்படுவதால் மழைப்பொழிவு குறைந்தாலும் ரபி அரிசி விளைச்சல் குறையாது என்று வர்த்தக வட்டாரங்கள் கணக்கிட்டுள்ளன.
நெல் அறுவடைப் பருவம் முடிந்து அங்காடி வரத்து இல்லாத காரணத்தால் எப்போதுமே ஆகஸ்ட் முதல் அரிசி விலை ஏறுவதுண்டு. கையில் நல்ல இருப்பு இருந்தும் விலை ஏற்றம் அரிசி அரைவையில் மின்பற்றாக்குறை, பணவீக்கம், பதுக்கல் போன்ற காரணங்களை வைத்து ஏற்றுமதியைத் தடை செய்வது மதியீனம்.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா அரிசியை இறக்குமதி செய்யவே இல்லை. 1990-லிருந்து 2008 வரை பாசுமதியுடன் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியானது. பின்னர் அரிசி ஏற்றுமதி தடை செய்யப்பட்டு 2011-ல் தடை நீக்கப்பட்டதும் பாசுமதி அல்லாத அரிசி 50 லட்சம் டன்கள் ஏற்றுமதியாயின. ஆனால், அரசுத் தரப்புக் கொள்முதல் குவியல் எதுவும் தொடப்படாத தனியார் ஏற்றுமதியே 50 லட்சம் டன்கள். இதில் வெண் புழுங்கல் அரிசி மட்டும் 30 லட்சம் டன்கள்.
கோதுமை விஷயத்தில் இந்திய உபரிநிலை நிறைவுக்குமேல் நிறைவாயுள்ளது. தேவையான உபரி 1.4 கோடி டன்கள். உள்ள உபரியோ 4.6 கோடி டன்கள்.
கோதுமைக் கொள்முதல் விலையை உயர்த்தியதன் பலனாக உற்பத்தியில் உபரி உயர்ந்து வாங்க முடியாத காரணத்தால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோதுமை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
உபரிகளை உடனுக்குடன் ஏற்றுமதி செய்திருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்குமா? இந்தியக் கோதுமை உற்பத்தி 9.3 கோடி டன்களுடன் இருப்பில் உள்ள 2 கோடி டன் சேர்த்தால் 11.3 கோடி டன் கோதுமை உள்ளது. ஏற்றுமதிக்கு ஒதுக்கப்பட்ட 60 லட்சம் டன்னையும் சேர்த்தால் உள்ளூர் நுகர்வு 8.8 கோடி டன்களே.
இன்னும் நாம் தாராளமாக 1 கோடி டன் வரை உணவுக் கார்ப்பரேஷன் கோதுமையை ஏற்றுமதி செய்யலாம். ஆனால், 50 லட்சம் டன்கள் மட்டுமே ஏற்றுமதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கோதுமையில் தனியார் ஏற்றுமதி 20 லட்சம் டன்கள்.
உணவு ஏற்றுமதி - இறக்குமதி விஷயத்தில்கூட சமன்பாடு எட்டப்படவில்லை. ஏனெனில், இறக்குமதி மதிப்பு கூடுதலாக உள்ளது. வனஸ்பதிக்காகவும் பொது விநியோகத்துக்காகவும் சோயா எண்ணெய் மற்றும் பாமாயில் இறக்குமதி செய்கிறோம்.
சென்ற ஆண்டு 80 லட்சம் டன்கள் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்த நாம் இந்த ஆண்டு 90 முதல் 100 லட்சம் டன்கள் இறக்குமதி செய்து - உள்ளூர் தென்னை - கடலை - எள் - சூரியகாந்தி விவசாயிகளைக் கொல்லத் திட்டமிட்டுள்ளோம். விவசாயிகளின் உயிர் சல்லிக்காசுக்கு மதிப்பில்லை. ஆனால், நாம் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட சமையல் எண்ணெய் மதிப்பு 10 பில்லியன் டாலர்.
கடந்த ஆண்டுடன் ஓப்பிட்டால் உலகச் சந்தையில் சோயா எண்ணெய் விலை 2 பங்கு உயர்ந்துள்ளதால் நாம் வழங்க வேண்டிய அன்னியச் செலாவணி உயர்ந்துவிட்டது. ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டதால் இறக்குமதிச் சுமை கூடி வருகிறது.
மேலும் 40 லட்சம் டன்கள் பருப்பு இறக்குமதி மதிப்பு 2.50 பில்லியன் டாலரையும் கூட்டினால் 12.5 பில்லியன் டாலரைச் சமப்படுத்த கோதுமை, அரிசி, சர்க்கரை, மக்காச்சோளம், பிண்ணாக்கு ஏற்றுமதிகொண்டு ஈடு செய்கிறோம்.
இதுவரை அனுமதிக்கப்பட்ட உணவு ஏற்றுமதி மதிப்பு 12.1 பில்லியன் டாலர். அரிசி ஏற்றுமதியில் 20 லட்சம் டன் பாசுமதியுடன் 50 லட்சம் டன் சாதா அரிசியின் மதிப்பு 4 பில்லியன் டாலர். கோதுமை 70 லட்சம் டன் மதிப்பு 2.1 பில்லியன் டாலர். மக்காச்சோளம் 20 லட்சம் டன் = 0.6 பில்லியன் டாலர். சீனி 40 லட்சம் டன் = 2.40 பில்லியன் டாலர். எண்ணெயெடுத்த புரதப் பிண்ணாக்கு 60 லட்சம் டன்கள் = 3 பில்லியன் டாலர். அப்படியும் ஏற்றுமதிப் பற்றாக்குறை 4 பில்லியன் டாலர்.
அனைத்துலகுச் சந்தைகளில் எந்த உணவுப் பொருளும் விலை இறங்கியதாகத் தெரியவில்லை. நம்மிடமுள்ள உபரி கோதுமையில் மேலும் 50 லட்சம் டன்கள் ஏற்றுமதியானால் வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுசெய்து அன்னியச் செலாவணியை உயர வைக்கலாம்.
இதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை. நம்மிடம் உணவுக் கார்ப்பரேஷன் தவிர, மாநில சிவில் சப்ளை கார்ப்பரேஷன் என்று அரிசி - கோதுமை வர்த்தகத்துக்கான பெரிய கட்டமைப்பு இருந்தாலும் அதைச் சரியாகப் பயன்படுத்த விரும்பாத அரசு, வால்மார்ட், கார்கில், மெட்ரோ ஏ.ஜி., மான்சாண்டோ போன்ற பகாசூரர்கள் வசம் இந்திய விவசாய - உணவு வர்த்தகத்தை ஒப்படைக்கத் தயாராகிவிட்டது.
விவசாயம், உணவு, அன்னிய வர்த்தகம், நிதி ஆகிய துறைசார்ந்த அமைச்சர்கள் ஒன்றுகூடித் திட்டமிட்டு வேளாண் - உணவு ஏற்றுமதிக்குரிய உருப்படியான திட்டம் தயாரித்துச் செயல்பட்டால் நாடு உருப்படும்.
கோதுமை, கரும்பு, தென்னை, பருத்தி விவசாயிகள் விலையில்லாமல் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகளுடன் கொத்தவரை சாகுபடி செய்த ராஜஸ்தான் விவசாயிகளில் சிலர் கோமான்களாகியுள்ள செய்தியும் உள்ளது.
வெறும் துவரை போட்டால் கிலோவுக்கு ரூ. 40 கிட்டலாம். ஆனால், கொத்தவரையாகப் போட்டால் பருப்புக்கு கிலோ ரூ. 400-க்கு விற்கலாம்.
கொத்தவரை விதையில் உள்ள பிசின் அமெரிக்கா - சீனாவில் ஷேர் கேஸ் (இயற்கை எரிவாயு) தொழிலுக்கு உதவுகிறதாம்.
கொத்தவரைப் பிசின் (0.5) + மணல் (5) + தண்ணீர் (94.5) கலந்த நீரை உயர் அழுத்த விசையில் அடிமட்டப் பாறைகளில் செலுத்தும்போது பாறை உடைந்து எரிவாயு கிட்ட ஏதுவாகிறதாம். 1 டன் விதையில் 300 கிராம் பிசின் எடுக்கலாம். 1 டன் பிசின் ரூ. 15,000.
2011-12-ல் கொத்தவரைப் பிசின் ஏற்றுமதி ரூ. 5,000 கோடி அள்ளித் தருமாம். விதையை எடுத்த செடி மாட்டுத்தீவனமாகப் பயனாகிறது. இதெல்லாம் அரசு முயற்சி இல்லை, விவசாயிகளின் முயற்சிதான்.
"வாழ நினைத்தால் வாழலாம்' என்ற அடிப்படையில் ஏற்றுமதியைக் குறிவைத்து இந்திய விவசாயிகள் செயல்பட்டால் பிழைக்கலாம். அதே சமயம் ஏற்றுமதி இடைத்தரகர்களின் மாயவலைகளில் சிக்காமல் தப்பும் வழியைக் கடைப்பிடிக்க உணவு - விவசாய விளைபொருள் ஏற்றுமதிக்கென்று தனிப்பட்ட விவசாயக் கூட்டுறவு அமைப்புகளைத் தொடங்கி மதிப்பூட்டப்பட்ட பொருளாக ஏற்றுமதியுடன் உள்ளூர் விற்பனையையும் செய்ய முயற்சிக்கலாம்.
நெல்லாக விற்காமல் அரிசியாகவோ, அவலாகவோ, பொரியாகவோ விற்கலாம். கோதுமையை மாவாக்கி விற்கலாம். புஞ்சைத் தானியங்களை உமி நீக்கி மாவாக்கியோ, மால்ட் வடிவிலோ விற்கலாம். தக்காளியை கெச்சப்பாக மாற்றி விற்கலாம். வெங்காயத்தை வடாமாக மாற்றி விற்கலாம்.
முயன்றால் இயற்கை விவசாயம்செய்து நஞ்சல்லா உணவை - குறிப்பாக மாங்கனி, திராட்சை, நெல்லி, எலுமிச்சை, நன்னாரிப் பழரசங்களுக்கு உள்ளூரிலும் நல்ல விலை உண்டு. ஏற்றுமதியும் செய்யலாம்.
விவசாய விளைபொருள் மூலம் நாட்டின் ஜி.டி.பி. மதிப்பை உயர்த்த அரசின் ஆதரவு தேவைப்படுகிறது. விவசாய இறக்குமதிகளைத் தவிர்த்து ஏற்றுமதியை உயர்த்தப் புது நடவடிக்கைகள் தேவை. நாணயச் செலாவணியில் வர்த்தகச் சமன்பாட்டைக் குலைப்பது இரண்டு வகை எண்ணெய்கள்.
முதலாவதாகக் கச்சா எண்ணெய் (பெட்ரோல்) இரண்டாவதாக சமையல் எண்ணெய் (பாமாயில்). இந்த இரண்டுக்கும் மாற்று உள்ளது. பெட்ரோல் இறக்குமதியைத் தவிர்க்க எத்தனால் உதவலாம். கரும்பிலிருந்து வெல்லம் - எத்தனால் தயாரிக்கும் உரிமத்தை விவசாயக் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கி எத்தனாலைப் பெட்ரோலாகப் பயன்படுத்தும் ஒரு மாற்று ஏற்பாடு மூலம் அன்னியச் செலாவணியும் மிச்சமாகும் மாசுக்கட்டுப்பாடும் குறையும்.
அதேபோல் மனித உடலுக்கு நன்மை செய்யும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்களை மட்டுமே ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும். அதற்கான கொள்முதல் நிகழ்ந்தால் உள்ளூர் விவசாயிகள் பிழைப்பார்கள். அதைவிட்டு உடலுக்குத் தீமையளிக்கும் பாமாயிலையும், சோயா எண்ணெயையும் கூடுதலாக இறக்குமதி செய்வதை நிறுத்தினால் அன்னியச் செலவாணியும் மிச்சமாவதுடன், புற்றுநோய்ப் பரவலையும் தடுக்கலாம். விவசாயம் எழுச்சிபெற ஒழுங்குமுறையான வேளாண் ஏற்றுமதி தேவைதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...