தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஏரிகளின் மேம்பாட்டில் உலக வங்கி!

தமிழகத்தின் ஏரிகள் மற்றும் கால்வாய்ப் பாசன மேம்பாட்டுக்காக உலக வங்கியின் ரூ. 2,200 கோடி நிதி உதவியுடனான "நீர்வள மற்றும் நிலவள மேம்பாட்டுத் திட்டம்' கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இத்திட்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:04 pm

தமிழகத்தின் ஏரிகள் மற்றும் கால்வாய்ப் பாசன மேம்பாட்டுக்காக உலக வங்கியின் ரூ. 2,200 கோடி நிதி உதவியுடனான "நீர்வள மற்றும் நிலவள மேம்பாட்டுத் திட்டம்' கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இத்திட்ட காலம் 7 ஆண்டுகளாகும்.

நான்கு வகைப் பாசன ஆதாரங்கள் உள்ளன. அவை கால்வாய்ப் பாசனம், ஏரிப் பாசனம், கிணற்றுப் பாசனம் மற்றும் இதர வகை பாசனம். இந்த நான்கு வகை பாசனம் தமிழகத்தில் இருந்தும், தற்போது ஏரிப்பாசனத்தில் நமது அரசும் உலக வங்கியும் கவனம் செலுத்துகிறது. இதனால் தற்போதைய பாசன நிலைமைகள் பற்றிய பல முக்கிய விஷயங்களை அறிந்துகொள்ள உதவியாக உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை 1960-களின் மத்தியில் உருவான பசுமைப் புரட்சியிலிருந்துதான் கிணற்றுப்பாசனத்தின் அருமை விவசாயிகளுக்குத் தெரிய வந்தது. நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக ஆழமான கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து நீரை வெளியேற்றுவது மிகவும் சுலபமானதாகியது.

மேலும், சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனத்தைப் பயன்படுத்தவும், நீரிறைக்கும் மற்றும் நீரினைச் சிக்கனமாகப் பயன்படுத்த உதவும் கருவிகள் மூலம் பசுமைப் புரட்சியின் சாதக விளைவுகளான உற்பத்திப் பெருக்கம் மற்றும் உற்பத்தித்திறனைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் இந்நவீன தொழில்நுட்பம் உதவியாக உள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் பெரும் பயன்களை அடைவதற்கு வேளாண்மையில் கிணற்றுப்பாசனம் உதவியாக உள்ளது. தமிழகத்துக்கு அனைத்துப் பாசன ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் மொத்த நீரில் (49.3 பில்லியன் கியூபிக் மீட்டர்) பாதிக்குமேல் (25.2 பிசிஎம்) கிணற்றுப்பாசனம் மூலமே கிடைக்கிறது.

இதன் காரணமாகவே, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் பாசன வரிசை ஏரி, கால்வாய் மற்றும் கிணறு என்பதிலிருந்து மாறி இப்போது கிணறு, கால்வாய் மற்றும் ஏரி என்ற நிலைக்கு வந்துவிட்டது.

இப்படிப்பட்ட மாற்றம் பாசன மேலாண்மையில் கடும் பாதக விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. ஏனெனில், இக்கிணறுகளுக்கான நீர் ஆதாரம் மிக முக்கியமானதாகும்.

கிணறுகளுக்குக் கிடைக்கும் நீர் ஏதோ ஆகாயத்திலிருந்து இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் வந்து சேர்ந்து விடுவதில்லை. பெய்கின்ற மழைநீர் ஆறுகள் மூலமோ அல்லது ஏரிகள் மூலமோ இக்கிணறுகளுக்கு நீர் கிடைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும், ஒருபுறம் கிணறுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மறுபுறம் அவற்றுக்கு நீர் வழங்கும் கால்வாய் மற்றும் ஏரிகளின் பரப்பு மற்றும் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.

இந்நிலையில், கிணற்றுப் பாசனம் அதன் நீர் அளிப்பின் உச்சகட்ட பங்களிப்பை அடைந்துவிட்டது. இனி இது மேலும் தொடர வாய்ப்புகள் மிகவும் குறைவு. இக்கிணற்றுப் பாசனம் இதே நிலையில் தன் பங்களிப்பைத் தொடர்ந்து வழங்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அம்முயற்சிகளின் அடிப்படையே ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். மக்கள் தங்கள் சொந்த முயற்சியில் கசிவுநீர்க் குட்டைகளைப் பெருமளவில் அமைக்க வேண்டும். பெய்கின்ற மழைநீரை அதிகபட்சமாகச் சேமிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஆறுகள் மூலம் கிடைக்கும் நீரில் கால்வாய்ப் பாசனத்தைச் செம்மைப்படுத்துவதும் முக்கியமாகும்.

சுருங்கக்கூறின், நிலநீர்ப் பாசன ஆதாரத்தில் குறைவு ஏற்பட்டால் அது நிலத்தடி நீர்ப் பாசனத்தை நேரடியாகப் பாதிப்படையச் செய்யும் என்பது கண்கூடான உண்மை.

இக் கருத்துகளின் அடிப்படையிலேயே நிலத்தடி நீர்ப் பாசனத்தை மேம்படுத்த, நிலநீர் ஆதாரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து உலக வங்கி தற்போது ஏழு ஆண்டு திட்டமான நீர்வள மற்றும் நிலவள மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

ஏரிப் பாசனத்தைப் பொருத்தவரை அதன் இரு முக்கிய அம்சங்களாக விளங்குபவை ஏரிகளின் எண்ணிக்கையும் அவற்றால் சாகுபடியாகும் பாசனப் பரப்பும் ஆகும். இவை இரண்டுக்குமான ஆதாரமாக விளங்குவது கிராம நிர்வாக அலுவலர்கள் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய பதிவேடுகளில் ஒன்றான கிராம நிலஅளவைப் பதிவேடு ஆகும்.

இப் பதிவேடுகள் மூன்று காலகட்டங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, 1880-களில் இந்தியா முழுவதிலும் உள்ள கிராமவாரியாக தயாரிக்கப்பட்ட அடிப்படை நிலஅளவைப் பதிவேடு. இரண்டாவது, 1910-களில் தயாரிக்கப்பட்டவை. இவை இரண்டும் 30 ஆண்டுகள் இடைவெளியில் ஆங்கிலேயர்களால் தயாரிக்கப்பட்டவை ஆகும். அதன் பிறகு 1980-களில் நமது அரசால் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது மூன்றாவது நிலஅளவைப் பதிவேடு ஆகும்.

இப் பதிவேடுகளின் மூலம் ஒவ்வொரு ஏரியும் அமைந்துள்ள ஊர், ஏரியின் பரப்பளவு, பாசனப் பரப்பு, நில உரிமையாளர்கள் விவரம், ஏரிக்குக் கிடைக்கும் நீர் ஆதார விவரம், ஏரியின் உபரி நீர் செல்லும் இடம், ஏரிப்பாசனப் பரப்பில் உள்ள கிணறுகளின் எண்ணிக்கை, ஏரிகளின் வகைப்பாடு (அதாவது, பாசனத்துக்கு நீர் அளிக்கும் மாத அளவிற்கேற்ப முதல், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு என்பவை), ஒவ்வொரு விவசாயிக்கும் ஏரிப் பாசனத்தில் நில அளவை எண் வாரியாக உள்ள பாசனப் பரப்பு போன்ற அனைத்து விவரங்களையும் தெள்ளத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

மிக முக்கியமாக, முதலாவது மற்றும் தற்போதைய நில அளவைப் பதிவேடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒவ்வொரு ஏரியிலும் எந்த அளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது, எத்தனை ஏரிகள் வீட்டுமனைகளுக்காகவும் நகர்ப்புற விரிவாக்கங்களுக்காகவும் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு ஏரிகள் இருந்த இடமே தெரியாத நிலை உள்ளது என்பன போன்ற விவரங்களைத் தெளிவாக அறியலாம்.

உண்மையில், இந்த நில அளவைப் பதிவேட்டில் உள்ள முதல் பத்து பக்கங்களை "கிராம ஜாதகம்' எனக் கூறலாம்.

இன்றைக்கு உள்ள நிலைமை, இந்த நவீன கணினி யுகத்தில் இப் பதிவேடுகள் சரிவர பல கிராமங்களில் பராமரிக்கப்படவில்லை. சில கிராமங்களில் இப் பதிவேடுகளே இல்லை. இவற்றை பராமரிக்க வேண்டிய பொறுப்பாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆவர். பெருவாரியான விவசாயிகளுக்கு இதுபற்றிய விவரம் சிறிதளவும் இல்லை.

இதுதவிர, தமிழகத்திலுள்ள ஏறத்தாழ 40 ஆயிரம் ஏரிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 100 ஏக்கர் பாசன அளவிற்கு மேல் உள்ள ஏறத்தாழ 11 ஆயிரம் ஏரிகள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலும் மீதமுள்ள 100 ஏக்கர் பாசனத்திற்குக் குறைவாக உள்ள ஏரிகள் அந்தந்த பஞ்சாயத்துகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இந்த ஏரிகளின் பராமரிப்பு பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்துகளின் பொறுப்பில் இருந்தாலும் நிதிப் பற்றாக்குறையின் காரணமாக பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஏரிகள் எவ்வித பராமரிப்பும் இன்றி பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளையெல்லாம் விவசாயிகளிடம் விரிவாக எடுத்துக்கூறி அவர்களை ஏரிப்பாசன மேம்பாட்டில் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக உலக வங்கி அனைத்து பொதுப்பணித்துறை ஏரிகளிலும் "ஏரி நீரைப் பயன்படுத்துவோர் சங்கம்' என்ற தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தி அச்சங்கங்கள் மூலம் இந்த ஏரிப்பாசன மேம்பாட்டுத் திட்டத்தைப் பொதுப்பணித்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது.

இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் இந்த நீர்வள மற்றும் நிலவள மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்படுவதை விவசாயிகள் அறிந்துகொண்டு அதன் மூலம் பயன்பெற்று வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்திக் கொள்வது இன்றியமையாததாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.