பட்ஜெட்டும் சிறுசேமிப்பாளர்களும்!
படித்த, மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள் பட்ஜெட்டிலிருந்து மிகவும் ஆவலாக எதிர்பார்ப்பது இரண்டு விஷயங்கள்: ஒன்று, வருமானவரிச்சுமை குறைய வேண்டும் என்பது. இரண்டாவது, தங்களது சேமிப்பு வளர்ச்சிக்கு ஏத


படித்த, மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள் பட்ஜெட்டிலிருந்து மிகவும் ஆவலாக எதிர்பார்ப்பது இரண்டு விஷயங்கள்: ஒன்று, வருமானவரிச்சுமை குறைய வேண்டும் என்பது. இரண்டாவது, தங்களது சேமிப்பு வளர்ச்சிக்கு ஏதுவாக வரிச்சலுகைகள் அமைய வேண்டும் என்பது.
ஆண்டுக்கு ரூ. 1.80 லட்சமாக இருந்த வருமானவரி விலக்கு வரம்பு குறைந்தபட்சம் ரூ. 3 லட்சமாக உயர வேண்டும் என எல்லோரும் விரும்பினார்கள். விலைவாசி உயர்வும், பணவீக்கமும்தான் இந்த எதிர்பார்ப்புக்கு காரணம் ஆகும்.
பல்வேறு வர்த்தக கூட்டமைப்புகள் மற்றும் யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான உயர் நிலைக் குழுவும் வருமான வரி விலக்கு உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தன. ஆனால், அந்த எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. வருமான வரி வரம்பை ரூ. 2 லட்சமாக அறிவித்துவிட்டார் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
பெண்களுக்கு இதுவரை இருந்து வந்த சிறப்புச் சலுகை, புதிய பட்ஜெட்டில் இல்லை. மூத்த குடிமக்களுக்கு முன்பிருந்தபடி வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2.5 லட்சமாக தொடர்கிறது.
சிறுசேமிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சேமிப்புத் தொகைக்கான வரிவிலக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதா என்றால், இங்கொன்றும் அங்கொன்றுமாக சில சலுகைகள் உள்ளனவே தவிர, பெரிதாக ஒன்றும் இல்லை.
சேமிப்புத் தொகைக்கான வரி விலக்கு ரூ. ஒரு லட்சமாகவே (பிரிவு 80சி) புதிய பட்ஜெட்டிலும் தொடருகிறது. இது அதிகரிக்கப்படவில்லை. மாறாக, அடிப்படைக் கட்டமைப்பு பத்திரங்களில் முதலீடு செய்பவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை கூடுதல் வரி விலக்கு முன்னதாக இருந்தது. இது புதிய பட்ஜெட்டில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிறுசேமிப்பாளர்களுக்கு சில புதிய சலுகைகளை பிரணாப் அறிவித்திருக்கிறார். ஆனால், அவை எந்த அளவு பயனுள்ளவை என்பது கேள்விக்குறியே.
உதாரணமாக, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் வங்கியில் சேமிப்புக் கணக்குகளில் போட்டு வைத்திருக்கும் பணத்துக்கு வட்டியாக 10 ஆயிரம் ரூபாய்வரை பெற்றால், அதற்கு வரி விலக்கு அளிக்கப்படும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான்: சேமிப்புக் கணக்கில், முன்புபோல், நிலையான வட்டி விகிதம் கிடையாது.
அதேபோல், எல்லா வங்கிகளிலும் ஒரே வட்டி விகிதம் இல்லை. அந்தந்த வங்கி தமது விருப்பம்போல, அவ்வப்போது சேமிப்புக் கணக்கில் வட்டி விகிதத்தை கூட்டியோ, குறைத்தோ கொடுக்கலாம். இதை ரிசர்வ் வங்கி சென்ற ஆண்டு அறிவித்துவிட்டது.
இந்நிலையில், பெரும்பாலான வங்கிகள் 4 சதவிகிதம் முதல் 5 சதவிகிதம் வரை மட்டுமே சேமிப்புக் கணக்கில் வட்டி தருகிறார்கள். ஒருசில வங்கிகளில், தங்கள் நிதி தேவைக்கு ஏற்ப, 6 சதவிகிதம் அல்லது 7 சதவிகிதம் வட்டி தருகிறார்கள். இந்த வட்டி சதவிகிதம் அவ்வப்போது மாறக் கூடியது.
அப்படியே 7 சதவிகிதம் வட்டி கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பிக்ஸட் டெபாசிட்டில் அதே வங்கி 9.25 சதவிகிதம் வட்டி தரும்போது, ஒரு சேமிப்பாளர் பிக்ஸட் டெபாசிட்டில்தானே தன் பணத்தை போட்டு வைப்பார்?
ஆகையால் மேற்கூறிய சலுகையால் பயன் அடையக் கூடியவர் யார் என்பது புரியாத புதிராக உள்ளது. ஆகையால், இந்தச் சலுகையால் பயன் கிடைக்க வேண்டுமானால் "சேமிப்புக் கணக்கு' என்று குறிப்பிடாமல் "வங்கி டெபாசிட்' என்று திருத்தம் செய்ய வேண்டும். சொல்லப்போனால், சில ஆண்டுகளுக்கு முன்புவரை அப்படித்தான் இருந்தது. அந்தப் பிரிவு 80(எல்) என்று பிரபலமாகவும் இருந்தது.
ஏற்கெனவே, 5 ஆண்டுகளுக்கான வங்கி டெபாசிட்களுக்கு 80சி பிரிவின்கீழ் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. கூடுதலாக, "குறுகிய கால டெபாசிட்களுக்கு' ரூ. 10,000 வரையிலான சலுகையை அறிவிக்கலாம். இதை அரசு பரிசீலிக்க வேண்டும்.
இன்னொரு சலுகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கான ஒன்று. ராஜீவ் காந்தி பெயரில் ஒரு திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்படி, 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள ஒருவர், 50 ஆயிரம் ரூபாய் வரையிலான பங்குகளை வாங்கி அவற்றை மூன்று ஆண்டுகளுக்கு விற்பனை செய்யாமல் வைத்திருந்தால் முதலீட்டுத் தொகையில் 50 சதவிகிதம் வரி விலக்கு அளிக்கப்படும். இதில் முக்கிய நிபந்தனை என்னவெனில், இந்தச் சலுகை, முதன்முதலாக ஒருவர் பங்குச் சந்தையில் ஈடுபடுபவராக இருத்தல் வேண்டும் என்பதாகும்.
நாட்டில் சேமிப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதில் இரு கருத்துகள் கிடையாது. சேமிப்பு மூலம்தான் மூலதனம் உருவாகிறது. மூலதனம் மூலம் தான் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி எல்லாம் ஏற்படுகிறது. எனவே, சேமிப்புக்கு வரிச்சலுகை தருவது அரசின் கடமை. அதேசமயம், இதுவரை பங்குச்சந்தையில் ஈடுபடாத ஒருவரை, "வரிச்சலுகை' என்கிற ஆசைகாட்டி அவரை பங்குச்சந்தைக்கு இழுப்பது நியாயமா?
பங்குகளில் முதலீடு செய்யும் நாட்டம் உள்ள ஒருவரைக்கூட, ""சந்தையின் நுணுக்கங்கள், நெளிவு, சுளிவுகளைத் தெரிந்து கொள்ளும்வரை, முதல்கட்டமாக மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்து, ஓரளவு அனுபவம் பெற்று, பிறகு சிறிது, சிறிதாகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யுங்கள்'' என்று சொல்லுவதுதானே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து?
பங்குச்சந்தை தொடர்புடைய மற்றொரு சலுகை என்னவெனில், பங்கு பரிவர்த்தனை வரி 0.125 சதவிகிதத்திலிருந்து 0.1 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, பங்குச் சந்தையில் முதலீடு அல்லது வர்த்தகம் செய்பவருக்கு பொருந்தக்கூடிய சலுகை இது. ஆனால், அவரவர்கள் பங்குகளில் முதலீடு அல்லது வர்த்தகம் செய்யும் அளவு அல்ல, வழிமுறையைப் பொருத்து, இந்த வரி குறைப்பின் பயன்பாடு அமையும்.
வருமான வரிச்சலுகை வழங்கும் பாண்டுகளில் முதலீடு செய்பவர்களுக்கு, இப்போதுள்ள வாய்ப்புகள் தவிர, மேலும் தேசிய நெடுஞ்சாலை இந்திய ஆணையம் (என்.எச். ஏ.ஐ.) மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு ஆணையம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
தங்கம் இறக்குமதிக்கான சுங்கவரி அதிகரிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக தங்க இறக்குமதிக்கான சுங்க வரி வெறும் ஒரு சதவிகிதமாக மட்டுமே இருந்தது. இதை மக்கள் பொருள்படுத்தவில்லை. ஒரு மாதத்துக்கு முன்புதான், சுங்கவரி ஒரு சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. பட்ஜெட்டில், அதை 4 சதவிகிதமாக நிதி அமைச்சர் உயர்த்தியுள்ளார்.
தேன் கூட்டில் கல் எறிந்த கதையாக இது ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஒரே மாதத்தில் நான்கு மடங்கு வரி அதிகரிக்கப்பட்டது. வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
நம் நாட்டில் ஆபரணம், அந்தஸ்து, சென்டிமெண்ட், சேமிப்பு, கலாசார பழக்கவழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் தங்கம் வாங்குகிறார்கள். எனவே, பலதரப்பு மக்களையும் புதிய சுங்கவரி பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.
இதில் பெரும்பாலும் நகைகளுக்காகவும் சேமிப்புக்காகவும் தங்கம் வாங்குபவர்கள்தான் அதிகம். சேமிப்புக்காக வாங்குபவர்களிடையே இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனால் வங்கிகளில் நாணயங்களாகவும் சிறுகச் சிறுக வாங்குகிறார்கள்.
இப்போது சுங்கவரி அதிகரித்திருப்பதால் கிராமுக்கு ரூ.100 அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்துவிடும். இதுதவிர, உற்பத்தி வரியும் இரண்டு சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலீடு ஒருபுறம் இருக்க, பெண்ணின் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்குபவர்களுக்கு, இந்த திடீர் விலை உயர்வு பெரும் சவாலாக இருக்கும்.
இதைவிட பெரிய அச்சுறுத்தல் ஒன்றும் உள்ளது. வரிகள் உயர, உயர அது தங்க கடத்தலுக்கு வழிவகுக்கும். கடந்த 15 ஆண்டுகளில் தங்க கடத்தல் ஓய்ந்து இருந்தது. அதற்கு காரணம் குறைந்த சுங்க வரியே.
இதுபோன்ற பல்வேறு கோணங்களையும் கருத்தில் கொண்டு தங்க இறக்குமதிக்கான சுங்க வரியை நிதி அமைச்சர் மறு பரிசீலனை செய்திட வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாகும்.
பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகைகளின் வாயிலாக பெற்ற பயனைவிட, உற்பத்தி வரி,சேவை வரி போன்ற மறைமுக வரிகளின் அதிகரிப்பால் இழந்ததுதான் அதிகம்.
துல்லியமாகச் சொல்வதெனில், வருமான வரிச் சலுகைகளின் மதிப்பு ரூ.4,500 கோடி. ஆனால், மறைமுக வரிகளின் அதிகரிப்பால் மக்கள் இழக்க இருப்பது ரூ.45,940 கோடி. அதாவது பத்து மடங்கு அதிகம். இதனால் விலைவாசி கடுமையாக உயரும். பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும். அதன் நேரடிப்பயனாக, நடுத்தர மக்கள் மற்றும் சிறுசேமிப்பாளர்களிடையே சேமிக்கும் சக்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தவிர, நடுத்தர மற்றும் சாதாரண மக்களை மனம்தளரச் செய்திடும் மற்றொரு முடிவையும் மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது. பட்ஜெட் அறிவிப்பதற்கு முந்தைய தினம், ஓசைப்படாமல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்)க்கான வட்டி விகிதத்தை 9.5 சதவிகிதத்திலிருந்து 8.25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பெருவாரியான பணி ஓய்வுபெற்ற சாதாரண மக்களின் ஒரே வாழ்வாதாரம், ஊன்றுகோல் இந்த வருங்கால வைப்புநிதி தான். அதற்கான வட்டியைக் குறைத்திருப்பது பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
வங்கிகளில் ஓராண்டுக்கான வைப்புநிதிக்கே (பிக்ஸட் டெபாசிட்) 9.25 சதவிகிதம் வட்டி கிடைக்கிறது. மூத்த குடிமக்களுக்கு மேலும் அரை சதவிகிதம் கிடைக்கிறது. அப்படியிருக்கும்போது, ஒரு மக்கள் நல அரசு, இ.பி.எஃப்.க்கான வட்டியை 8.25 சதவிகிதமாகக் குறைத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...