தலை தீபாவளிக்கு வெளிவந்து, மூன்றாவது தீபாவளிக்கும் சரவெடி கொளுத்தி உலகப் புகழ்பெற்ற ஒரே திரைப்படம் தமிழின் "ஹரிதாஸ்'. அன்றைய "சூப்பர் ஸ்டார்' மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் (எம்.கே.டி. பாகவதர்) நடித்தது. சென்னை சன் தியேட்டர்ஸில் 1944 அக்டோபர் 16 முதல் 1946 நவம்பர் 22 வரை 110 வாரங்கள் ஓடியது என்றால் ஆச்சரியப்படுவீர்கள். திருநெல்வேலி ராயல் தியேட்டரில் படத்தின் பெயரைச் சுவரில் காரையால் பரு எழுத்துகளில் பொறித்திருந்தார்கள்.
நூற்றாண்டு கண்ட இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதல் படம் - "புண்டலிக்' (தாமரை). 1912 மே 18 அன்று மும்பை கோரோனேஷன் சினிமாட்டோகிராஃப் அரங்கில் திரையிடப்பட்டது. தாதா சாஹேப் தோர்னி என்கிற மராட்டியர் உருவாக்கியது. படச்சுருள் லண்டனுக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள ஆய்வகத்தில் முழு வடிவம் பெற்றது. இந்தியா பாதி, இங்கிலாந்து பாதி என்ற வகையில் உருவான மெüனப் படம் அது.
ஆனாலும், இந்தியாவிலேயே தயாரான முதலாவது முழு நீள ஊமைப்படம் 1913 மே 3 அன்றுதான் வெளிவந்தது. புந்திராஜ் கோவிந்த் பால்கே (தாதா சாஹேப் பால்கே) தயாரித்த "ராஜா ஹரிஷ்சந்திரா'. அதில் ராணி வேடத்துக்கு நடிகை கிடைக்காமல் சுலுங்கே என்கிற சமையல்காரப் பையனே பெண் வேடத்தில் நடித்தானாம்!
இந்தியாவில் முதல் ஒலிப்படம் ("சவுண்ட் ஃபிலிம்') "மெலடி ஆஃப் லவ்' (யூனிவர்சல் ஸ்டுடியோ தயாரிப்பு, 1929). அதில் கதாபாத்திரங்கள் "ஆங்கிலத்தில்' காதல் உரையாடினார்கள்.
1931 மார்ச் 14 அன்று மும்பை மெஜஸ்டிக் தியேட்டரில் தாதா சாஹேப் பால்கே இயக்கிய "ஆலம் ஆரா' வெளியானது. ஒரு இளவரசருக்கும் நாடோடிப் பெண் ஒருத்திக்கும் இடையிலான காதல் கதை. இந்தியாவின் இந்த முதல் பேசும்படத்தில் கதாபாத்திரங்கள் உருது, இந்தி மொழிகளில் பேசினர்.
தமிழகத்தைப் பொருத்தமட்டில், 1916ஆம் ஆண்டு ஆர். நடராஜ முதலியார் இயக்கிய "கீசக வதம்' என்ற முதல் ஊமைப்படம் வெளியானது. 1931 அக்டோபர் 31 அன்றுதான் தமிழின் முதலாவது பேசும்படமான "காளிதாஸ்' அறிமுகம் ஆனது. சென்னை, "சினிமா சென்ட்ரல்' அரங்கில் திரையிடப்பட்டது. அதில் நடித்த திருவையாறு பஞ்சாபகேசன் ராஜலட்சுமிதான் (டி.பி. ராஜலட்சுமி) தமிழ்த்திரை உலகின் முதல் கதாநாயகி. அவர் பிறந்த நாள் 11-11-11. நிஜ வாழ்க்கையில் பால்ய விவாகத்தால் 11-ஆம் வயதில் விவாகம் முறிந்தவர். படத்தில் நாயகி தமிழில் பேசுவார், நாயகன் தெலுங்கில் பதில் சொல்லுவார். நல்ல தமாஷ்.
ஆனாலும் அதில் கதாநாயகி பாடும் சுதந்திர அனுபல்லவியைக் கேளுங்கள். ""இந்தியரே! நம்மவரை / வந்தவர்கள் ஆட்சி செய்ய / தந்திர உபாயம் நமது / சுய சண்டையே''. இந்தக் காலத்துக்கும் பொருந்துகிறது அல்லவா?
அந் நாள் "லவ குசா' (1934) திரைப்படத்தில் சீதையாக நடிப்பதற்கு வந்த லட்சுமி என்ற நடிகை ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. ராமர் பக்கத்தில் நெருங்கி நிற்கவே மறுத்தாராம்.
அதைப் போல "நந்தகுமார்' (1938) படத்தில் டி.பி. ராஜலட்சுமிக்கு யசோதை வேடம். புராண காலத்துக்கு ஏற்ப மார்புக் சச்சை அணியச் சொல்லி கெஞ்சினாராம் இயக்குநர். பலன் இல்லை. இறுதியில் யசோதை முழு ரவிக்கையுடன்தான் தோன்றினார் என்றால் யாராவது நம்புவார்களா? இன்றைய நாயகியர் தம் முதுகில் ஜன்னல் ரவிக்கையுடன் மழையில் நனைகிற நடிப்புக்கு இரண்டாவது "கலைமாமணி' வழங்கலாம்.
திருநீலகண்டர் (1939) திரைப்பட நாயகி திருநெல்வேலி பாப்பா மாதிரி, இடைமறைத்துச் சேலை உடுத்திய கதாநாயகிகள் அந்நாளில் பலர். பக்குவம் வந்த காதல் பருவத்தில் ஒருவரை ஒருவர் தொடாமல் கண்ணியமாகப் பாடி ஆடி நடித்தனர். இன்றைக்கோ திரைக் காதலர்கள் உலகெங்கும் பனியன், ஜட்டிப் பட்டாளமாகச் சென்று குதியாட்டம் போடுகிறார்கள். அந்த உதறல் காட்சிகளை அச்சு மாறாமல் ஆண் - பெண் உள்ளாடை விளம்பரங்களுக்கும் பயன்படுத்தலாம்.
ஊமைப்படங்கள் பேசும்படங்கள் ஆனதும், சொந்தக் குரலில் பாடும் நாடக நடிகர்களுக்கு அமோக வரவேற்பு. இந்த நூற்றாண்டிலோ தாங்களே நுழைவுப் பணம் செலுத்தி நடிக்கவும் சிலர் வந்துவிட்டார்கள். யாரோ எழுதிய பாடலை, யாரோ பாட, நடிப்பது சிரமமா என்ன? அதுவும் வெறுமனே கை, கால் வீசி உடற்பயிற்சி செய்வதுதான் நடனமாம். அதிலும் இன்றைய கணிப்பொறி நுட்பத்தால் துண்டுதுண்டாக நடித்து ஒட்ட வைப்பது சாகசம் இல்லை. "மாற்றான்' குரல் (டப்பிங்) இருக்கவே இருக்கிறது.
மொழுமொழு உடம்பிற்காகவே தேர்வு செய்யப்படும் நடிகையரில் பலருக்கும் தமிழில் பேசவும் கூட முடியாது. அவர்கள் குணச்சித்திர வேடமா ஏற்கிறார்கள், வசனம் பேசுவதற்கு? ஆடவும் வராது, தலையைச் சிலுப்பி ஆட்டி ஆட்டி நடக்க மட்டும் செய்கிறார்கள். அவர்களுக்காகவே ""கட்டிப்புடிடா, கடிச்சுத் தின்னுடா'' என்றுதான் முனியாண்டி விலாஸ் அசைவப் பாட்டுகள்.
""கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே, கணிகையர் கண்களே மதன் விடும் வலையே'' என்ற காலம் மாறியது. பக்திப் பாடல்களும் அற்றுப் போயின. குத்துப்பாடல்களின் சாம்ராஜ்யம் நடக்கிறது. செம்மொழிப் பாடலிலும் கூட ராப்பாடிக் கத்தல்தான் உலகத் தமிழிசை ஆனது; போகட்டும்.
ஏதோ ஒரு பழைய திரைப்பாடல் நினைவுக்கு வருகிறது. ""என்னதான் பெண்ணிடத்தில் இத்தனை இன்பம்?'' என்று நாயகி பாடுவார். ""இங்குதான் தோன்றியது முத்தமிழ்ச் சங்கம்'' என்பான் காதலன். என்ன இருவருக்கும் உண்மையிலேயே பைத்தியமோ என்றுதான் எண்ணத் தோன்றும். ஆனால் கவிதை நுட்பம் வேறுமாதிரி. காதலியின் கேள்விக்கு ""கூடல் (இன்பம்)தான்'' விடை. அதே ""கூடல்'' மாநகர் மதுரையில் அல்லவா தமிழ்ச்சங்கம் தோன்றியது? பூடகமாகச் சொல்கிறான் நாயகன். மென்மையான காதல் சுவை.
இன்றைய முத்த நாயகர்கள் பண்டைய இயக்குநர் சாண்டோ ராஜா என்ற மும்பைத் தமிழர்க்குச் சிலை எடுத்துக் கும்பிடலாம். "மேனகா' (1935) என்ற முதல் சமூகத் திரைப்படத்தில் டி.கே. சண்முகம், ருக்மணி என்ற நடிகையின் வலது நுனிவிரல் முதல் கழுத்துவரை முத்தம் கொடுக்கச் செய்தவர் ஆயிற்றே! படத்துக்காக வடுவூர் கே. துரைசாமி நாவலையே திரித்து, கதையில் அதிரடிக் காட்சியைப் புகுத்தியவர். தாம் கொடுத்த 5,000 ரூபாய் பணத்துக்காக விஜயாள் என்ற நடிகையைத் துரத்தித் துரத்திப் பலாத்காரக் காட்சிகளைப் படம் எடுத்த முதல் அகிம்சாவாதி!
அந் நாளில் வனராஜ கார்ஸன் படத்தில் நீச்சல் உடையில் தோன்றினார் கே.ஆர்.செல்லம் என்ற நடிகை. அதற்கு எதிர்ப்பு வலுத்தபோது நடிகை வருத்தம் தெரிவித்தாரே! இன்றோ "ஜனரஞ்சகம்' என்ற பெயரில் "ஜனவஞ்சகம்' நடக்கிறது. படம் எடுத்தவர்களிடம் கேட்டால், ""ஊர் உலகம் அறியாததா?'' என்கிற எதிர்வாதம், பிடிவாதம்.
தணிக்கைக் குழுவுக்கோ, ""காட்டுவோர் காட்டினால் காண்போர் பார்த்துவிட்டுப் போகட்டும்'' என்கிற தாராள மனம்.
கே.டி. ருக்மணி என்ற நடிகை "வீர ரமணி'தான் போங்கள். திரைப்படத்தில் புகைபிடித்த முதல் பெண் சாதனையாளராம்! இது என்ன ஆயுள் விருத்திக்கான அபூர்வப் பயிற்சியா? சுழற்றி வீசிய சிகரெட்டை உதட்டில் பிடிப்பது, ரசிகர்களின் நுரையீரலில் இடம்பிடிக்கத்தானே? காலம் கடந்து, "புகை நமக்குப் பகை' என்று எதுகை மோனையில் எழுதிக்காட்டினால் போதும்போல.
இளைஞர்களைத் திசை திருப்பிய இன்னொரு போதை - மது. சதி லீலாவதி (1936) படத்தில் அமெரிக்க இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கனின் "நேரடி அன்னிய முதலீடு' இது. படத்தின் மதுவிலக்குப் பிரசாரத்தை ராஜாஜி பாராட்டியது ஒருபுறம். அதில் காவல் அதிகாரியாக நடித்த "மருதூர் கோபால ராமச்சந்திரன்' (எம்.ஜி.ஆர்.) தம் படங்களில் குடிகாரராக நடிப்பதையும் தவிர்த்தாரே?
இன்றைக்கு "மச்சி ஓப்பன் த பாட்டில்'தான் தொண்டர்களின் வீர முழக்கம். காட்சியின் நடுவில், "மது உயிரைக் குடிக்கும்' என்று எழுதிப் போட்டால் மட்டும் சாப விமோசனம் ஆகுமா?
இன்னொரு விஷயம், சண்டைக் காட்சிகள். ஒரு படத்தில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். முகமூடித் திருடனுடன் போராடுகிறார். இறுதியில் விதானத்தில் தொங்கிய கனமான விளக்கு அறுந்து வில்லன் காலில் விழுகிறது.
எழ முடியாத வில்லன் காலை மனிதாபிமானத்துடன் விடுவிக்கிறார் கதாநாயகர். எல்லாப் படங்களிலும் வில்லன்கள் திருந்துவதாகத்தான் முடியும்.
ஆனால், இன்றைய வில்லன்கள் விழுந்து கிடந்தால்தான் கதாநாயகனுக்கு வசதி. மக்கள் ரசிக்கிற (?) மாதிரி, கையில் கிடைத்த கல்லோ, கடப்பாறையோ, தலையில் ஒரே போடு. நசுக்கிக் கொல்கிறார்கள். துப்பாக்கி இருந்தால் இன்னும் செüகரியம். ஒரே சுடு. இதுதான் இளம் உள்ளங்களுக்கு வண்ணத்திரையும் சின்னத்திரையும் கூறும் அறம்!
அறிவியல் தொழில்நுட்பத்தால் நிலைத்த காட்சிகள் அசைந்தன. ஊமை உருவங்கள் பேசின. கறுப்பு-வெள்ளை நிறம் மாறியது. இரு பரிமாணத் திரை மாறி, முப்பரிமாண ("3டி') அறைக்குள் வளர்ந்துள்ளது. எதிர்காலத்தில் "காட்சிகள் மணக்கும்'. ஆனாலும் கருத்தளவில் இன்னமும் அறிவியல்பூர்வமாக இல்லையே?
""பொஞ்சாதி புருஷன் இல்லாம புள்ளையும் குட்டியும் பொறக்கிறாப்பிலே விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி... அணு சக்தியாலே ஆயுள் விருத்தி செய்யப் போறேண்டி'' என்று திரைப்பட ஊடகம் வழி அறிவியல் பரப்பினார், நூற்றாண்டு கண்ட "நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன்'.
என்ன விழிக்கிறீர்கள், "என்.எஸ். கிருஷ்ணன்' என்றால்தான் தெரியுமா? அவர் பிறந்த நாள் நவம்பர் 29 என்ற குறுஞ்செய்தி இருக்கட்டும்.
கலைவாணரின் துணைவியாரும் சளைக்காமல் பாடுகிறார்: ""பள்ளிக்கூடத்துக்குப் புள்ளைங்க போகாம, படிக்கக் கருவி பண்ணியும் வெக்கணும்''. அது செயற்கைக் கோள் வழியான தொலை வகுப்பறைகள்தானே!
இத்தனைக்கும் மத்தியில் இடைவிடாத அலுப்பு, இன்றைய சிரிப்புக் காட்சிகள் வேறு. சிப்பு, சிறுநீர், அடிவாங்குதல், உறுப்பு பிதுங்குதல் என இரட்டைத் தொனிகள், இனி இத்தகைய காட்சிகளின்போது, "அறுவை நகைச்சுவை அறிவைக் கெடுக்கும்' என்று எச்சரிக்கை எழுதிக் காட்டலாம்.
சிறுவயதில் மனதில் பதிந்த ஒரு அறிவுச் சுவைக்காட்சி. "சக்கரவர்த்தித் திருமகள்' (1957) படத்தில் தலையாரிகள் இருவர், கலைவாணரைக் கொல்லச் சதி செய்கிறார்கள். தந்திரமாகத் தங்கள் ஊரில் வில்லுக் கச்சேரி நடத்த அழைத்துச் செல்கிறார்கள். நடுக்காட்டில் வண்டியை நிறுத்தித் தங்கள் கொலைத் திட்டத்தைக் கூறுவார்கள். அதை நிறைவேற்றினால் தங்களுக்கு ஏக்கர் கணக்கில் நஞ்சையும் புஞ்சையும் கூலியாகக் கிடைக்கும் என்பார்கள்.
""கொலைதானே, செய்யுங்கள் பரவாயில்லை. பலரும் இன்றைக்குக் கலையைக் கொலை செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்'' என்று கலைவாணரும் வெகுளித்தனமாகக் கூறுவார். ""கொலை - கலையை அல்ல, உங்கள் தலையை'' என்று சதியாளர்கள் சொல்லக் கேட்டதும் பதைக்கின்றனர் கலைத்தம்பதியர். இறுதியில் துணைவியாரின் அதிர்ச்சி வியூகத்தால் மூர்ச்சையான தலையாரிகள் இறந்து மண்ணில் விழுகின்றனர்.
நிதானமாகக் கலைவாணர், ""பார்த்தீங்களா, ஏக்கர் கணக்கில் ஆசைப்பட்டாங்க, இப்போது இவர்களுக்குத் தேவை வெறும் ஆறு அடி நீளம், மூன்று அடி அகலம்'' என்று புதைகுழிப் பரிமாணங்களைச் சொல்வார்.
இந்த நீதி உபதேசம் இனி எந்தத் திரைப்படத்தில் வரும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.