தமிழ்நாட்டில் இன்று முக்கிய பிரச்னை மின் தட்டுப்பாடு. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்தட்டுப்பாடு காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது.
நாள்தோறும் சாலை மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம் என நிலைமை கொதிநிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மின் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு சார்பில் கூறப்படுகிறது. ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் நிரந்தரத் தீர்வுக்கான அறிகுறி தெரியவில்லை.
தமிழ்நாட்டின் இப்போதைய மின் தேவை சுமார் 12 ஆயிரம் மெகாவாட். உற்பத்தி சுமார் 7,500 மெகாவாட். பற்றாக்குறை சுமார் 4 ஆயிரம் முதல் 4,500 வரை.
இதோ வருகிறது, அதோ வருகிறது எனக் கூறப்படும் கூடங்குளம் அணு மின் நிலையத்திலும் அடுத்த ஆண்டுதான் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அணு சக்தி துறைத் தலைவரே அறிவித்து விட்டார். அடுத்த ஆண்டு உற்பத்தி தொடங்கினாலும் அங்கிருந்து முதலில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கப் போவது வெறும் 450 மெகாவாட் மட்டுமே. அங்கு முதலில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இப்போதைக்கு மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க கை கண்ட தீர்வு, மின் சிக்கனம் மட்டுமே.
மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து மின்சார வாரியம் தொடர்ந்து ஆலோசனை கூறி வருகிறது. யார் கேட்டார்கள்?
மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் என பொதுமக்களுக்கு ஆலோசனை கூறும் அரசு நிறுவனமான மின்சார வாரியம், முதலில் தனது ஆலோசனையை அரசிடமிருந்தே தொடங்கலாமே?
ஏ.சி. பயன்பாட்டைக் குறைப்பது, குண்டு பல்புகளுக்குத் தடை, பகலில் தேவை இல்லாமல் மின் விளக்குகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவது, வர்த்தக நிறுவனங்கள் வியாபாரத்துக்காக பகலை இரவாக்கும் விளக்குகளைக் கணக்கில்லாமல் எரியவிடுவதற்குத் தடை விதிப்பது, திருவிழாவுக்காக அலங்கார விளக்குகளை வரம்பின்றி பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடு போன்றவற்றை அமல்படுத்தினால் பெருமளவு மின்சாரத்தைச் சேமிக்கலாம். பொதுமக்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்குக் கட்டணம் செலுத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது சுமார் 2,500 மெகாவாட் சென்னைக்கு மட்டுமே செலவிடப்படுவதாக மின்வாரிய அதிகாரிகளே கூறுகின்றனர்.
சென்னையில் முக்கிய துறைகளின் தலைமை அலுவலகங்கள் மையப்படுத்தப்பட்ட குளிரூட்டப்பட்ட வசதி கொண்டவை. அந்த அலுவலகங்களில் நாள் முழுவதும் ஏ.சி. இயங்கும். அந்தக் குளிர் வெளியே போய்விடக் கூடாது, வெளிவெக்கை உள்ளே வந்துவிடக் கூடாது என்பதற்காக அனைத்து ஜன்னல், கதவுகளையும் அடைத்து வைத்துக் கொள்கின்றனர். எனவே, சூரிய வெளிச்சம் உள்ளே வராது. பகலில் சூழும் அந்த இருளைப் போக்க நூற்றுக்கணக்கான குழல் விளக்குகள். அது மட்டுமல்ல. ஏ.சி. இல்லாவிட்டால் அவசரத்திற்குப் பயன்படுத்த போடப்பட்டுள்ளவைதான் மின்விசிறிகள். ஆனால் நடைமுறையில், ஏ.சி. இயங்கிக் கொண்டிருக்கும்போது ஊழியர்களின் முதுக்கு பின்னால் உள்ள மின் விசிறிகளும் சுழன்று கொண்டிருக்கின்றன. இது என்ன கொடுமை என்கிறீர்களா? இதுதான் சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களின் காட்சி.
இது மட்டுமல்ல, துறைத் தலைவர் காலை 10 மணிக்கு அலுவலகத்துக்கு வந்து விடுவார் என நினைத்து அவரது உதவியாளர் காலை 9 மணிக்கே ஏசி.யைப் போட்டு அறையைக் குளிரூட்டி வைத்திருப்பார். அதிகாரி 11 மணிக்கும் வருவார், 12 மணிக்கும் வருவார். 2 மணிக்கும் வருவார், 4 மணிக்கும் வருவார். ஏன் அன்று "கேம்ப்' என்று கூறிவிட்டு வராமல் கூட இருந்து விடுவார். ஆனால் அவருக்கான ஏ.சி. மட்டும் இயங்கிக் கொண்டே இருக்கும். இதெல்லாம் மின் விரயமாகாதா? அதிகாரி வந்த பின்பு ஏ.சி.யை இயக்கினால் அறை குளிர எடுத்துக் கொள்ளும் அந்த 10 நிமிடத்தில் அந்த அதிகாரி உருகியா போய் விடுவார்?
மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் சிக்கனம் தேவை இல்லை; காரணம், அங்கேதான் மின்சாரமே இல்லையே!
மின் தட்டுப்பாடு தீரும் வரையில் சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களில் தகுதியுள்ள உயர் அதிகாரிகளுக்கு மட்டும், தேவையான நேரத்தில் ஏ.சி.யைப் பயன்படுத்த வேண்டும். அலுவலகங்களின் அனைத்து ஜன்னல், கதவுகளைத் திறந்து வைத்து சூரிய வெளிச்சத்துடன் வெளிக்காற்றை சுவாசிக்க அனுமதிக்க வேண்டும். அதனால் பகலில் மின் விளக்குகளுக்கு அவசியம் இராது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.