தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பொதுமக்களும் காவல்துறையும்...

கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிரான போராட்டம், நபிகள் நாயகத்தைக் கேலி செய்து வெளியிட்ட அமெரிக்கத் திரைப்படத்துக்கு எதிரான

News image
Updated On :4 அக்டோபர் 2012, 7:56 pm

ஷேக் அப்துல்காதர்

கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிரான போராட்டம், நபிகள் நாயகத்தைக் கேலி செய்து வெளியிட்ட அமெரிக்கத் திரைப்படத்துக்கு எதிரான போராட்டம் என தமிழகமே போராட்டக் களமாக காட்சியளிக்கிறது.

போராட்டங்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வது, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையின் நடவடிக்கையினால் உயிரிழப்பு ஏற்படுவது போன்ற நிகழ்வுகள் வாடிக்கையாகிவிட்டன.

முன்பெல்லாம் போராட்டம், மறியல் என்றால் காவல்துறையின் அனுமதியின்றி நடத்த முடியாது. இப்போது அப்படி இல்லை. அரசுக்கு எதிராகப் போராட நொடிப் பொழுதில் மக்கள் முடிவு எடுத்து ஈடுபடுகின்றனர்.

அமைதியான முறையில் போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தங்களின் எதிர்ப்பைக் காட்டிய காலமும் மாறிவிட்டது.

தங்கள் எதிர்ப்பை, "பலத்தை'க் காட்ட சாலைகளில் திரண்டு வாகனங்களை மறித்து, கல் வீசி போராட்டம் நடத்துவது அதிகரித்து விட்டது. போராட்டங்களில் ஈடுபடும் பல ஆயிரம் பேரை குறைந்த எண்ணிக்கையில் உள்ள போலீஸôர் கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் கடினமானது.

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, குடிநீர் தட்டுப்பாடு, போக்குவரத்துக்கு தகுதியற்ற சாலைகள், மின் அழுத்த மாறுபாட்டால் தொலைக்காட்சி உள்ளிட்ட மின்சாதனங்கள் பழுதாவது, பொறுப்பற்ற வாகன ஓட்டியால் ஏற்படும் விபத்து, பெண் சீண்டல், விவசாயிகள் பிரச்னை என போராட்டங்களுக்கான காரணங்கள் பல.

பள்ளி, கல்லூரி தேர்வுகளில் வினாத்தாள் கடினமாக இருந்தால்கூட மாணவர்கள் வீதிக்குதான் வந்து போராடுகின்றனர். இதனால் காவல்துறையினர் இரவு பகல் பாராமல் பணியில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குடியிருப்புவாசிகள் ஏதோ ஒரு காரணத்துக்காக திடீர் சாலை மறியலில் ஈடுபட்டால் பஸ்களில் வரும் அவர்களைப் போன்ற சாதாரணப் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு நேரத்துக்குச் செல்ல முடியாமல் பதற்றத்தில் தவிக்க நேர்கிறது.

பொதுமக்கள் அச்சமின்றி வாழும் வகையில் காவல்துறை கடமையாற்றுகிறது. கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டறிவது, சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து போன்றவை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பது அவர்களின் முக்கிய கடமைகளாகும்.

இதில் அரசியல் பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு தரும் வேலையும் அவர்களுடைய நேரத்தின் பெரும்பகுதியைச் சாப்பிட்டுவிடுகிறது.

காவல்துறையிலும் ஆள் பற்றாக்குறை இருக்கிறது. அத்துடன் இருக்கும் காவலர்களுக்கும் இடைவிடாமல் வேலை இருந்துகொண்டே இருக்கிறது. எனவே அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்படுகின்றனர்.

தங்களுடைய கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்தும் மக்கள், போலீஸôரின் பிரச்னைகளைச் சிறிதும் நினைத்துப் பார்ப்பதில்லை.

தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் பெரிய அளவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. 400 தினங்களுக்கு மேலாக கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிரானப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நடத்தும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்படுபவர்களை தங்க வைக்க இடம், அவர்களுக்குத் தேவையான உணவு வழங்குதல் ஆகிய பணிகளைக் காவல்துறையினரே மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

போராட்டத்தில் ஈடுபடுகிறவர்களிடம் முடிந்தவரை பேச்சு நடத்தி காவல்துறையினர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருகின்றனர். உடன்பாடு எட்டாத நிலையில் போராட்டக்குழுவினரை கட்டுப்படுத்த போலீஸôர் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முடியாமலும் திணற வேண்டியுள்ளது.

காவலர்களின் நிலை உணர்ந்து பொதுமக்கள்தான் பிரச்னைகளைப் பெரிதாக்காமல் சட்டத்துக்கு உள்பட்டு நடக்க வேண்டும்.

போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும். சமூக விரோதிகளின் தூண்டுதல்களுக்கு இரையாகக்கூடாது. வீடுகளில் விலைமதிப்புள்ள நகைகள், ரொக்கத்தைத் தேவையில்லாமல் வைத்திருக்கக்கூடாது.

வங்கிகளிலிருந்து பெரும் தொகையை எடுத்துவரும்போது நிரம்பி வழியும் டவுன் பஸ்களில் ஏறாமல் செலவைப் பார்க்காமல் ஆட்டோ, டாக்சி மூலம் நேரடியாக வீட்டுக்குச் சென்று பணத்தை பத்திரப்படுத்த வேண்டும். இவ்வகைகளில் காவல்துறைக்கு நாமும் நல்ல நண்பர்களாகத் திகழலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.