வளர்ச்சிக்கு உதவாத சீர்திருத்தம்
பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்ட மாத்திரத்தில், நாட்டின் வளர்ச்சி


பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்ட மாத்திரத்தில், நாட்டின் வளர்ச்சி கிடுகிடுவென்று அதிகரித்துவிடுமா? கடந்த சில மாதங்களில் மத்திய அரசு பொருளாதாரச் சீர்திருத்தங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறிவித்திடும் வேகத்தைப் பார்த்தால், அரசு அப்படித்தான் கருதுகிறதுபோலும்!
நமது அனுபவத்தையே எடுத்துக் கொள்வோம். 1991-ஆம் ஆண்டில் நாடு வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தது. அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஓரளவு நல்ல பலனை அளித்தன.
ஒற்றுமை அதிகரித்தது; வேலைவாய்ப்பு பெருகியது; தனி நபர் வருமானம் உயர்ந்தது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியர்கள் கை ஓங்கியது. அப்போதுகூட வளர்ச்சி, பரவலான வளர்ச்சியாகவோ, நாட்டில் அனைத்து மாநிலங்களையும், அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகவோ இருக்கவில்லை. முக்கியமாக, விவசாய உற்பத்தி குறையத் தொடங்கியது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சி சராசரியாக 8 சதவீதத்துக்குக் குறையாமல் இருந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது என்ற பெயர் கிடைத்தது.
அதேநேரம், உலக அளவில் அப்போது நிலவிய பொருளாதார அம்சங்கள் இந்தியாவுக்குச் சாதகமாக இருந்தன. அமெரிக்கப் பொருளாதாரம் வலுவாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளின் வளமை ஏறுமுகத்தில் இருந்தது. இதனால் நமது ஏற்றுமதி அதிகரித்தது. வேலைவாய்ப்பு அதிகரிக்க இது உதவியது.
மேற்கூறிய நிலைமை இப்போது இல்லை. 2008-ஆம் ஆண்டில் அமெரிக்கப் பொருளாதாரம் தலைகுப்புற விழுந்தது. பெரிய நிறுவனங்கள் திவாலாயின. டஜன் கணக்கில் வங்கிகளும் திவாலாயின. அந்த வீழ்ச்சியிலிருந்து அமெரிக்கா இன்னமும் மீட்சி அடையவில்லை. ஐரோப்பிய நாடுகளும் நிதி நெருக்கடியையும், கடும் சரிவையும் சந்தித்துள்ளன. ஐரோப்பாவின் பொது நாணயமான "யூரோ' மதிப்பு இழந்து வருகிறது. கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடனில் மூழ்கியுள்ளன. மேலும் பல ஐரோப்பிய நாடுகள் வலுவிழந்துள்ளன.
இந்நிலை நமது ஏற்றுமதியை மட்டும் அல்லாமல், ரூபாயின் மதிப்பையும் மறைமுகமாகப் பாதித்தது.
இவை ஒருபுறம் இருக்க, முக்கியமாக அரசியல் உறுதிப்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக, ஒன்றை ஒன்று விஞ்சும் வகையில் ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன.
ஆளும் கூட்டணிக் கட்சிகள் முதல் ஆளும் பிரதான அரசியல் கட்சி வரை, இங்கு, அங்கு எனாதபடி எங்கும் அது வியாபித்துள்ளது. சொல்லப்போனால், ஆளும் கட்சித் தலைமையின் வாசலுக்கே வந்துவிட்டது ஊழல் குற்றச்சாட்டு.
தேவையான சட்ட மசோதாவை, தேவையான நேரத்தில் நிறைவேற்றிட முடியும் என்ற நிலை இப்போது இல்லை.
பொருளாதார வளர்ச்சிக்கு, சாதகமான அரசியல் சூழலைப்போல் அத்தியாவசியத் தேவை வேறு ஒன்றும் இல்லை என்பது பொது நியதி.
ஊழல் குற்றச்சாட்டுகள், அவ்வப்போது நாடாளுமன்ற இரு அவைகளும் பல நாள்களுக்கு, பல வாரங்களுக்கு முடக்கப்படுதல், ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் இடையேயான நெருக்கமின்மை, வசதி படைத்தவர்கள், வசதியற்றவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள நீண்ட இடைவெளி ஆகியவையே இப்போதைய ஆரோக்கியமில்லாத அரசியல் சூழலுக்குக் காரணமாகும்.
விளம்பரங்கள் மூலம் பொருள்களின் விற்பனையைப் பெருக்கி அதனால் பலர் ஏழையாவதற்கும், சிலர் குபேரர்களாவதற்கும் வழி வகுத்திடும் நுகர்வுக் கலாசாரம், சீர்திருத்தத்தின் அடையாளம் அல்ல. வால்மார்ட், சியர்ஸ், ரோபக் ஆகியவையும் நமது பொருளாதாரத்துக்கு அளவுகோல்கள் அல்ல. எனவே, எல்லையில்லா நுகர்வுக் கலாசாரத்தை ஊக்குவிப்பது சீர்திருத்தம் ஆகாது. நாம் விழுங்குவதற்காக, மேலும் மேலும் வாங்கும் தேவையில்லாப் பொருள்கள், நம்மையே விழுங்கிவிடும் என்பதே உண்மை.
முதல் சுற்று பொருளாதாரச் சீர்திருத்தம் (1991) ஆரோக்கியமான வியாபாரப் போட்டியை உருவாக்கியது. அன்னிய முதலீடுகள் இந்தியாவுக்கு வருவதை ஊக்குவித்தது.
பொதுத்துறை நிறுவனங்களின் மூலதனத்தில் ஒரு பகுதி பங்குகள் பொதுச்சந்தையில் விற்பனை ஆயின. திறமையான நிர்வாகம் கிடைத்தது. தரமான பொருள்களும் சேவைகளும் பொது மக்களுக்குக் கிடைத்தன.
இந்தியச் சூழலில், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அனைத்தும் நல்லது என்றோ, கெட்டது என்றோ ஒரே வரியில் சொல்லிவிட முடியாது. அதேபோல், ஒவ்வொருவகை பொருளாதாரச் சீர்திருத்தமும் நன்மை பயக்கும் என்றோ, தீமை என்றோ சொல்லுவதும் சாத்தியமல்ல.
உதாரணமாக, சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எடுத்துக்கொள்வோம். அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்று - ""குளிர்சாதனக் கிடங்குகள் அமைத்தல், விவசாயிகளிடமிருந்து நேர்முகக் கொள்முதல், விவசாயிகளுக்குச் சரியான விலை கிடைத்தல், இடைத்தரகர்கள் நீக்கம், மக்களுக்குத் தரமான பொருள்கள் சரியான விலையில் கிடைத்தல், புதிய வேலை வாய்ப்புகள்'' எனப் பட்டியலிடுகிறது மத்திய அரசு. இது ஓரளவு உண்மையும்கூட.
அதேநேரம், இதைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்தத் தவறினால் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகள் ஏராளம். உதாரணமாக, சிறு வணிகர்களுக்கு உடனடியாக ஏற்படக்கூடிய மன உளைச்சல், வியாபார இழப்பு, வாழ்க்கை முறையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், இட மாற்றங்கள் நாளடைவில் அன்னிய நேரடி முதலீட்டால் விலை நிர்ணயங்களில், "தான் வைத்ததுதான் விலை' என்கிற ஏகபோக (மொனாபலி) யதேச்சதிகாரப் போக்கை உருவாக்கிவிடுமோ என்கிற மக்களின் நியாயமான அச்சம் என எத்தனையோ இருக்கின்றன.
"பென்ஷன் ஃபண்டு' என்கிற ஓய்வூதிய நிதி என்பது மக்களின் மனதைப் பிசையக்கூடிய உணர்வுபூர்வமான ஒரு விஷயம். புதிய ஓய்வூதிய ஃபண்டுக்குத் தேவையான வழக்கமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளே இன்னமும் உருவாக்கப்படவில்லை.
இந்நிலையில் ஓய்வூதிய நிதியில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு அவசரம் காட்டுவது கண்டிப்பாக ஏற்கக்கூடியது அல்ல.
அதேபோல் வெளிநாட்டு முதலீட்டுக்குக் கதவைத் திறந்தால் மட்டும் போதாது. வரக்கூடிய அன்னிய நேரடி முதலீட்டைத் திறம்பட கையாளுவதற்குரிய திட்டங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டியதும் அவசியமாகும். உதாரணமாக, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் லாபகரமாகவும், விரைந்து தொடங்கப்படக்கூடிய நிலையிலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான திட்டங்கள் வெளிப்படைத்தன்மையுடன் உருவாக்கப்படாவிடில் அன்னிய நேரடி முதலீடு எதிர்பார்த்த அளவு வராமலும் போகலாம்.
அண்மையில் பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு சில முன்னேற்றங்கள் தென்படுகின்றன. உதாரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயரத் தொடங்கியுள்ளது.
இதனால் நாம் இறக்குமதி செய்திடும் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறையும். இரண்டாவதாக, நமது நிதிப் பற்றாக்குறையின் அளவும் குறைய வாய்ப்புள்ளது.
பங்குச் சந்தையில் எழுச்சி ஏற்படத் தொடங்கியுள்ளது. ஆனால், இதுவே எல்லாமும் அல்ல. பங்குகளின் விலை உயர்வதும், இறங்குவதும் அன்றாட நிகழ்வு.
பொருளாதாரச் சீர்திருத்தத்தின் பயனாக நாடு எதிர்பார்ப்பது புதிய வேலைவாய்ப்புப் பெருக்கம், தொழில்துறை மேம்பாடு, விவசாய உற்பத்தி அதிகரிப்பு, குறைந்த வட்டியில் வங்கிக் கடன், பணவீக்கம், விலைவாசி கட்டுப்பாடு ஆகியவையே.
ஆக, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதாரச் சீர்திருத்தங்கள் உரிய பலன் அளிக்க வேண்டுமானால், எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதைத் தடுத்திட வேண்டும். இதற்கு நிர்வாகச் சீர்திருத்தங்கள் உடனடித் தேவை. திட்டங்களைச் செம்மையாகவும், விரைந்தும் செயல்படுத்துவதுடன் மக்கள் நலனைப் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாகவும் இருக்கக்கூடிய வகையில் அரசின் நிர்வாக இயந்திரங்கள் செயல்பட வேண்டும். நிர்வாகத்தின்மீது, மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும் வகையில், திட்டங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டவையாக அமைய வேண்டும். இவை சாத்தியப்பட வேண்டுமானால், "பொலிடிகல் வில்' என்கிற அரசியல் திண்மை தேவை.
நிர்வாகச் சீர்திருத்தம் பற்றி குறிப்பிடும்போது ஒரு தகவலைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் தனது பரிந்துரைகளை 15 அறிக்கைகள் மூலம் ஏற்கெனவே சமர்ப்பித்துவிட்டது. அவற்றைப் பரிசீலித்த மத்திய அமைச்சரவைக் குழுக்கள் 95 சதவிகிதப் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட்டன. ஆனால், வேதனை என்னவெனில், வெறும் 10 சதவிகிதப் பரிந்துரைகள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அன்னிய நேரடி முதலீட்டைப் பெறுதல் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தல் ஆகிய திட்டங்களுடன் ஒப்பிடுகையில், நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் அப்படி ஒன்றும் சர்ச்சைக்குரியதல்ல. அதேநேரம் இதன் மூலம் ஏற்படக்கூடிய பலன்கள் மிக அதிகம்.
அப்படியிருந்தும் நிர்வாகச் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்வதில் ஏன் இத்தனை மெத்தனம் காட்டப்படுகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. இதனால் அரசு இயந்திரத்தைச் சரி செய்திட வேண்டிய அத்தியாவசியப் பணி முடங்கிப்போய் உள்ளது. இந்தப் பணி முடுக்கிவிடப்பட்டால் மட்டுமே, பொருளாதாரச் சீர்திருத்தங்களினால் கிடைக்க வேண்டிய பலன் கிடைக்கும்.
அது மட்டுமல்ல, புதிய பொருளாதாரச் சீர்திருத்த அறிவிப்புகள் சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளையும், ஏதோ நல்லது நடக்கப் போகிறது என்ற நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளன.
இந்த எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போனால் எளிய மக்களுக்கு ஏமாற்றமும் மனக்கசப்பும் மட்டுமே மிஞ்சும். பொருளாதாரச் சீர்திருத்தங்களின் மீது இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் காணாமல் போகும். அது ஆட்சியாளர்களுக்கும் நல்லதல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...