காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எல்லோருக்குமான வளர்ச்சியைப் பற்றிப் பேச சலிப்பதே கிடையாது. ஆனால் அதன் கொள்கைகளும் நடவடிக்கைகளும் அதை எதிரொலிப்பது கிடையாது. "எல்லோருக்குமான வளர்ச்சி' என்றால் அது உண்மையில் ஏழைகளையும் முன்னேற்றுவதாகும். அரசின் உதவிபெறும் திட்டங்களிலிருந்து அதிகபட்ச ஏழைகளை விலக்குவதும், ஏழைகள் பரம ஏழைகளாவதும் பணக்காரர்கள் பெரும் பணக்காரர்கள் ஆவதும் அனைவரையும் முன்னேற்றுவதற்கான அறிகுறிகளே அல்ல.
ஒரு கட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை அதிகமாக்குவதற்கே அரசின் கொள்கைகள் உதவுகின்றன. ஏழைகளுக்கான மானியங்களையும் சலுகைகளையும் அரசு திரும்பப் பெற்று வருகிறது.
சில நாள்களுக்கு முன்னதாக டீசல் விலையை மத்திய அரசு கூட்டியது, சமையல் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடு விதித்தது. வறுமை பரவியுள்ளது குறித்தோ, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவருவது குறித்தோ சிறிதும் அக்கறை செலுத்தாமல் எடுக்கப்பட்ட முடிவுகள்தாம் இவை.
"பொருளாதார ஒத்துழைப்பு, வளர்ச்சிக்கான அமைப்பு' (ஓ.இ.சி.டி.) என்ற நிறுவனம் தயாரித்துள்ள அறிக்கையானது கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியர்களுக்கு இடையிலான வருவாய் ஏற்றத்தாழ்வு கிட்டத்தட்ட இரு மடங்காகிவிட்டது என்று தெரிவிக்கிறது.
அதிக வருவாய்பெறும் முதல் 10 சதவீதத்தவர், குறைந்த வருவாய்பெறும் கடைசி 10 சதவீதத்தவரைவிட 12 மடங்கு அதிகம் சம்பாதிக்கின்றனர். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இவ்விருவரும் பெற்றுவந்த ஊதியத்துடன் ஒப்பிட்டதில் இந்தத் தகவல் கிடைத்துள்ளது. அதாவது வறியவர்கள் மேலும் வறியவர்களாகியுள்ளனர், பணக்காரர்கள் பெரும் பணக்காரர்கள் ஆகியுள்ளனர்.
பணக்காரக் குடும்பங்களில் முதல் 10 சதவீத இடங்களில் உள்ளோரின் நுகர்வு கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 3 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து வந்திருக்கிறது. அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் இது ஆண்டுக்கு 2 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
வருவாயில் கடைசி இடத்தில் உள்ள 10 சதவீத ஏழைகளின் நுகர்வு 1 சதவீதமாகவே நீடிக்கிறது. உலகிலேயே அதிக எண்ணிக்கையுள்ள ஏழைகள் இந்தியாவில்தான் வசிக்கின்றனர் என்று வேண்டுமானால் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆம் மொத்தமுள்ள 121 கோடி மக்களில் 42 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு சுமார் 60 ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர்!
ஆனால் அரசை ஆதரிக்கும் பொருளாதார நிபுணர்கள் உண்மையான ஏழைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டவே முயல்கின்றனர். அவர்கள் தங்களை மக்களின் நண்பர்கள் என்று கூறிக்கொள்ளவே முடியாது.
வறுமை என்ற பிணியை ஒழிக்கவேண்டும் என்பதுதான் நோக்கம் என்றால், வறுமையை முறையாக ஆராயவேண்டும். வறுமையை ஒழித்து வறியவர்களைக் காப்பதுதான் உண்மையான நோக்கம் என்றால் உண்மையில் இப்போது என்ன நிலவரம் என்பதையும் மறைக்காமல் கூற வேண்டும்.
அரசை ஆதரிப்போர் எவ்வளவு முயன்றாலும் வறுமையை அப்படியே போர்வை போட்டு மூடி மறைத்துவிட முடியாது. அரசு, ஆய்வு நிறுவனங்கள், தனியார் சந்தை ஆய்வாளர்கள், சர்வதேச அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை மேற்கொள்ளும் சர்வேக்களும் ஆய்வுகளும் உண்மை என்ன என்பதை வெவ்வேறு இடங்களில் வெளிப்படுத்தி வருகின்றன. நாட்டின் பெரும்பாலான மக்கள் மிகவும் ஏழ்மை நிலையில்தான் வசிக்கின்றனர் என்பதை இவை உணர்த்துகின்றன.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் 53.1 சதவீத வீடுகளில் கழிப்பறை ஏதும் இல்லை. 47 சதவீத வீடுகளில் இருந்தாலும் அதில் 36 சதவீத வீடுகளில்தான் தண்ணீர் தொட்டியுடன் சேர்ந்த கழிப்பறைகள் உள்ளன.
2012-இல் மத்திய அரசு திரட்டிய தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் 53.1 சதவீத வீடுகள்தான் ஓரளவுக்கு "நல்ல நிலையில்' இருக்கின்றன. 41.5 சதவீத வீடுகள்தான் வசிப்பதற்கு ஏற்றவை. 5.4 சதவீத வீடுகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளன.
ஆனால் இந்த ஆய்வறிக்கையை மேலும் சிறிது கூர்ந்துநோக்கினால்தான், "நல்ல நிலையில்' இருப்பதாகக் கூறப்படும் வீடுகள்கூட எந்த அளவுக்கு பாதுகாப்பானவை என்ற உண்மை தெரியவரும். இப்படி பல கோடிப்பேர் வாழும் இந்த வீடுகள் உண்மையில் வசதியானவைதானா என்பதும் புலனாகும். நாடு முழுக்க 20 லட்சம் வீடுகள்தான் பற்றாக்குறை என்று அரசு கூறினாலும் உண்மையில் பிரச்னை மேலும் கடுமையானது என்பது அந்த வீடுகளின் அமைப்பு, தன்மைகளிலிருந்து தெரியவரும்.
இந்த நல்ல வீடுகளில் 29 சதவீதம் மட்டுமே சிமென்ட் தள கூரை உள்ளவை. மற்றவை மஞ்சம்பில், ஓலைக் கூரை, மண், மங்களூர் ஓடுகள் போன்றவற்றையே கூரையாகக் கொண்டவை.
அதே போல 47.5 சதவீத வீடுகள் மட்டுமே சுட்ட செங்கல்லால் கட்டப்பட்டவை. மற்றவை மண் சுவர் வைத்துப் பூசப்பட்டவை, பாறாங்கல்லை அண்டக் கொடுத்தவை அல்லது மஞ்சம் புல் போன்றவற்றையே சுற்றி மறைப்பாகக் கட்டப்பட்டவை.
10.8 சதவீத வீடுகள் மட்டுமே மொசைக் தரைகள் அல்லது கிரானைட் பதிக்கப்பட்டவை. 46.5 சதவீத வீடுகள் மண் தரையால் ஆனவை. மற்ற வீடுகளில் சிமென்ட், கல் அல்லது வேறு பொருள்களைக் கொண்டு தரையை அமைத்துள்ளனர்.
3.9 சதவீத வீடுகளில் அறைகள் என்று தனியாக ஏதும் இல்லை. 37.1 சதவீத வீடுகளில் ஒற்றை அறை மட்டுமே உள்ளன. 31.7 சதவீத வீடுகளில் 2 அறைகள் உள்ளன. அதாவது பெரும்பாலான தம்பதியருக்கு தனி படுக்கையறைகள் இல்லை. 88.9% வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு தம்பதியாவது இருக்கின்றனர். 18.2 சதவீத வீடுகளில் 2 அல்லது அதற்கும் மேற்பட்ட தம்பதியர் உள்ளனர். 0.5 சதவீத வீடுகளில் ஐந்துக்கும் மேற்பட்ட தம்பதியர் உள்ளனர்.
குடிநீர் வசதி என்று பார்த்தால் 32 சதவீத வீடுகளில்தான் குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறது. 47 சதவீத வீடுகளில்தான் ஏதோ ஒரு வகையில் குடிநீர் வீட்டிலேயே கிடைக்கிறது. 18 சதவீத வீடுகளில் - கிராமப்புறமானால் சுமார் 1,500 அடிகளுக்கு அப்பாலும் - நகரமானால் 300 அடிகளுக்கு அப்பாலும் நடந்துசென்றுதான் குடிநீர் எடுத்துவர வேண்டும்.
மொத்த வீடுகளில் 31.4 சதவீதம் பேர் விளக்கு எரிக்கக்கூட கெரசினைத்தான் நம்பியிருக்கின்றனர். 0.5 சதவீத வீடுகளில் அதாவது சுமார் 60 லட்சம் பேர் வீடுகளில் விளக்கே கிடையாது. அதாவது அவர்கள் சாலையோரங்களில் அல்லது வேலை செய்யும் இடங்களில் அல்லது வனப்பகுதிகளில் ஒப்புக்கு ஒரு குடிசை போட்டுக்கொண்டு விளக்கு வெளிச்சம் ஏதும் இல்லாமல் இருட்டிலேயே வசிக்கின்றனர்.
42 சதவீத வீடுகளில் வீட்டிலேயே குளிக்க குளியலறை உள்ளிட்ட வசதிகள் இல்லை. 58 சதவீத வீடுகளில் பாத்ரூம் இருக்கிறது; 16.4 சதவீத வீடுகளில் பாத்ரூமுக்கு மேல் கூரை கிடையாது. 3 பக்கம் சுவரும் கதவும் பொருத்தி ஒரு மறைப்பாக பாத்ரூமைக் கட்டியிருக்கிறார்கள். 49 சதவீத வீடுகளிலிருந்து கழிவுநீரை வெளியேற்றும் வசதியே இல்லை.
56 சதவீத வீடுகளில்தான் சமையலறை என்று தனியாக இருக்கிறது. 44 சதவீத வீடுகளில் ஏதாவதொரு இடத்தில்வைத்து சமைக்கிறார்கள்.
மொத்தத்தில் 28.5 சதவீத வீடுகளில்தான் சமையலுக்கு சமையல் எரிவாயு (கேஸ்) பயன்படுத்துகின்றனர். அதாவது 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இன்னமும் விறகு, சாண உருண்டை, எருவராட்டி போன்றவற்றையே பயன்படுத்துகின்றனர்.
5 சதவீத வீடுகளில்தான் கார்கள் உள்ளன. 21 சதவீத வீடுகளில்தான் ஸ்கூட்டர், பைக் போன்ற 2 சக்கர வாகனங்கள் உள்ளன.
வேலைவாய்ப்பு குறைந்து வருவதை மற்றொரு புள்ளிவிவரம் உணர்த்துகிறது. கிடைக்கும் வேலைவாய்ப்புகளும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் விதத்தில் இல்லை. புதிய வேலைவாய்ப்புகளில் 93 சதவீதம் இப்போது "அமைப்புரீதியாக திரட்டப்படாத' துறைகளிலிருந்துதான் கிடைக்கிறது. இதுவும் மக்கள் தொகை வளர்ந்துவரும் வீதத்துக்கு ஈடாக இல்லாமல் அதைவிடக் குறைவாகவே இருக்கிறது. அதாவது வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.
நாட்டு மக்கள் தொகையில் 6 சதவீதம் பேருக்கு வேலை இல்லை என்று 1993-94 புள்ளிவிவரம் காட்டியது. இதுவே 2009-10-ல் 6.6 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
"அமைப்புரீதியான துறைகளில்' கடந்த 20 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு வளர்ச்சியே இல்லாமல் தேக்க நிலையில்தான் இருக்கிறது. 1991-இல் வேலையில்லாதோர் எண்ணிக்கை 26.7 மில்லியன். 2010-இல் இது 28.6 மில்லியனாக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் அரசுத்துறை நிறுவனங்களில் மட்டும் 12 லட்சம் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. மொத்த வேலைவாய்ப்பில் அமைப்பு ரீதியாக கட்டமைக்கப்பட்ட துறை அளிக்கும் வேலைவாய்ப்பு வெறும் 7 சதவீதமாகத்தான் இருக்கிறது.
அரசு திரட்டிய புள்ளிவிவரங்களையெல்லாம் இப்படி பகுத்து ஆய்வு செய்தால், ஏழைகள் அல்லாதவர்கள் என்று அரசு கூறும் பிரிவினரே அவலமான நிலையில்தான் வாழ்கின்றனர் என்பது புரியும். தனிச் சமையலறையோ படுக்கை அறையோ குளியலறையோ கழிப்பறையோ இல்லாத வீடுகளை எந்தக் கணக்கில் சேர்ப்பீர்கள்?
சமையலுக்கு விறகு, சுள்ளி, சாண உருண்டை, காட்டு முள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது வளர்ச்சியின் அடையாளமா? பாதுகாப்பான குடிநீர் இல்லை, வீட்டில் குளித்த, துணி துவைத்த தண்ணீரை வெளியேற்ற பாதாள சாக்கடை இணைப்பு இல்லை.
நிரந்தரவேலை கிடையாது, ஒப்பந்த அடிப்படையிலோ அன்றாடக் கூலி அடிப்படையிலோ வேலைக்குச் செல்கின்றனர். அன்றாட வாழ்க்கைத் தேவைக்கான தொகையைவிட குறைவாகவே ஊதியமாகப் பெறுகின்றனர். ஆனால் இவர்கள் அனைவரும் வறுமைக் கோட்டுக்கு மேலே இருப்பதாக அரசு கூறுகிறது.
ஏழைகளைத் துல்லியமாக அடையாளம் காண அரசு பல முயற்சிகளை எடுத்துவருகிறது. தனித்துவம் கொண்ட அடையாள எண் முறை (யு.ஐ.டி.) மூலமோ "ஆதார்' அட்டைகள் மூலமோ இதைச் செய்யவும் ஏழைகள் அல்லாதவர்களை அரசின் உதவிபெறுவோர் பட்டியலிலிருந்து விலக்கவும் அரசு உத்தேசித்துள்ளது.
நடுத்தர வர்க்கம் என்று அழைக்கப்படுவோர் - அதிலும் குறிப்பாக - கீழ் நிலையில் இருப்போர் மலிவான விலையில் உணவு தானியம், கல்வி, மருத்துவ வசதி கிடைக்கவில்லை என்றால் மிகவும் அவதிப்படுவர். சுமாரான வாழ்க்கைத்தரம் உள்ளவர்களையும் "ஏழைகள் அல்ல' என்று அரசு ஒதுக்கினால் அரசின் மீதான நம்பிக்கையை ஏழைகள் இழந்துவிடுவார்கள்.
மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்கள் அரசாக இதை ஏழைகள் கருதவில்லை என்றால் ஆதரவை விலக்கிக் கொண்டுவிடுவார்கள்.
பொதுத் தேர்தலுக்குத்தான் இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றனவே, தேர்தல் நெருங்கும்போது மக்கள் இந்த நடவடிக்கைகளையெல்லாம் மறந்துவிடுவார்கள் என்று ஆளும் கட்சியினர் நினைக்கக் கூடாது. மக்கள் இதையெல்லாம் மறக்காமல் அடுத்துவரும் தேர்தலில் தங்களுடைய தீர்ப்பைத் தெளிவாக வழங்குவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய இலக்கியச் சிற்பிகள்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

வரப்பெற்றோம் (13-04-2026)
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

