இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஒரு குடும்ப ஊழலுக்கு கட்சியே பலி

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அவமானகரமான சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன; 5 வயதுச் சிறுமியைப் பாலியல்

Updated On :29 ஏப்ரல் 2013, 1:25 am IST

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அவமானகரமான சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன; 5 வயதுச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான தகவல்களைக் கேட்கவே நெஞ்சு பதறுகிறது. பொதுமக்களுடைய கோபம்  கட்டுக்கடங்காமல் பெருகி, வீதிகளில் வந்து போராடும் நிலைக்கு அவர்களைத் தள்ளிவிட்டது. இதில் அரசியலும் கலந்துவிட்டது. பாரதிய ஜனதா, இடதுசாரி கட்சிகள், "ஆம்-ஆத்மி' கட்சி (ஏ.ஏ.பி.) ஆகியவற்றின் சார்பு தொழிற்சங்கங்களும் அமைப்புகளும் களத்தில் இறங்கிப் போராடுகின்றன. போராடுகிறவர்கள் யாராக இருந்தாலும் மக்களுடைய கோபமும் இதில் சேர்ந்திருப்பதால் இதை ஆட்சியில் உள்ளோர் அலட்சியம் செய்துவிடக்கூடாது.

 இந்தப் பிரச்னைக்கு எப்படித் தீர்வு காண்பது என்று அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும். தவறு செய்தவர்களின் தலையை வெட்ட வேண்டும், தூக்கில் போட வேண்டும் என்றெல்லாம் ஆவேசமாகப் பேசுவது எளிது. இப்போதிருப்பதைவிட சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டும் என்றுகூட கோரிக்கை விடலாம்.

 இந்தச் சம்பவம் நடந்த உடனேயே தில்லியில் 13 வயதுச் சிறுமி கடத்தி வன்புணர்ச்சிக்கு ஆளானாள், மத்தியப்பிரதேசத்தில் 4 வயதுச் சிறுமி சீரழிக்கப்பட்டாள், ஒடிசா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கேரளம், கர்நாடகம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் பெண்ணைக் கடத்திச் சென்று கும்பலாகப் பாலியல் பலாத்காரம் செய்தனர் என்ற தகவல்கள் அடுத்தடுத்து வந்துகொண்டேயிருக்கின்றன. கண்டிக்கத்தக்க இந்தச் செயலுக்காக இந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள், காவல்துறைத்தலைவர்கள் ஆகியோரின் பதவி விலகல்களையும் வலியுறுத்தப் போகிறோமா?

  எல்லா வீடுகளிலும் பெண்களை அடிமையாக, மட்டமாக நடத்துவது என்பதே வழக்கமாக இருக்கிறது. பாலியல் பலாத்காரங்களில் 90 சதவீதம் வீடுகளுக்குள்ளேயேதான் நிகழ்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை வெளி உலகுக்குத் தெரிவதே இல்லை. இந்த நிலையில் மாற்றம் ஏற்படவேண்டும் என்றால் பெண்கள் பற்றிய நம்முடைய கண்ணோட்டம்தான் மாற வேண்டும். பெண்கள் ஆண்களுக்கு அடிமை அல்ல, அவர்கள் போகப் பொருளும் அல்ல, அவர்களுடைய உரிமைகளையும் சுதந்திரத்தையும் நாம் மதித்து நடக்கவேண்டும் என்ற கண்ணோட்டம் நம்மில் ஏற்பட வேண்டும்.

******

அடுத்த சுற்று தேர்தல் தொடங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் மத்திய அரசின் முடிவுகளையும் செயல்களையும் சரியென்று வாதிடுகின்றன. எதுவுமே சரியில்லை என்று பாரதிய ஜனதாவும் இடதுசாரி கட்சிகளும் கண்டனக் கணைகளைத் தொடுத்துவருகின்றன. மாநிலக் கட்சிகள் அவர்களுடைய எதிர்கால அரசியல் நிலைமையைத் தீர்மானிக்க வேண்டியிருப்பதால் உரத்து கருத்து சொல்லாமல் மெüனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

 "2 ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்குத்  தெரிந்தேதான் எல்லாவற்றையும் செய்தேன் என்று அந் நாளைய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா கூறியிருப்பதால் பிரச்னை சூடுபிடித்திருக்கிறது. அது இப்போது பெரிய விவகாரமாகிவருகிறது. நிலக்கரி வயல்களை ஏலத்துக்கு விடுவது தொடர்பான விவகாரமும் புயலைக் கிளப்பிவிட்டிருக்கிறது. இரண்டிலுமே, "ஆவணங்களின் நகல்' என்றும்

"ஏதோ ஒரு பகுதி' என்றும் அரைகுறையாகக் கிடைத்த தகவல்கள் அடிப்படையில்தான் புயல் வீசிக்கொண்டிருக்கிறது. முழு ஆவணங்களும் கிடைக்காத நிலையில் இப்படி பிரச்னைகள் கிளப்பப்படுவதே கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாகிவிட்டது.

 இந்தத் தவறுகளுக்குத் தார்மிகப் பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து மன்மோகன் சிங் விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா கோருகிறது. பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜவாதி கட்சியும் தங்களுடைய கருத்து என்னவென்று வெளிப்படையாகத் தெரிவிக்காமல் மெüனம் காக்கின்றன. பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இருந்தாலும் அதன் நிலையை ஐக்கிய ஜனதா தளம் ஏற்கவில்லை.

 ஒரு விவகாரத்தில் நியாய, அநியாயம் எது என்று பார்த்து உடனடியாகக் கருத்துச் சொல்வதற்குக்கூட கட்சிகளால் முடியவில்லை; இதனால் தங்களுக்கு வாக்குகள் அதிகரிக்குமா, குறையுமா என்று மனதுக்குள் கூட்டிக் கழித்துப் பார்க்கின்றன!

 ஆளும்தரப்பில் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் வரிசையிலும் எதையும் உறுதியாகத் தீர்மானிக்கும் தன்மை இல்லை; எல்லாமே நிச்சயமற்ற தன்மையில் உள்ளன. அதற்குக் காரணம் எல்லா கட்சிகளுமே எதைப் பேசினால் வாக்குகள் நமக்குச் சேரும், எதை ஆதரித்தால் நமக்கு ஆதரவு குறையும் என்று வாக்கு வங்கிகளை மனதில் வைத்தே காய் நகர்த்துவதுதான்.

******

கர்நாடக மாநிலத்தில் 14-வது சட்டப் பேரவை பொதுத் தேர்தல் மே 5-ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்டது கர்நாடக சட்டப் பேரவை. மாநிலத்தின் அரசியலை ஊன்றிக் கவனிப்போர் கணிப்பின்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சிக்கு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்கும். தேவ கெüடா தலைமையிலான மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 35 முதல் 40 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். பாரதிய ஜனதா கட்சியும் முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தொடங்கியுள்ள கர்நாடக ஜனதா கட்சியும் (கே.ஜே.பி.) படுதோல்வியைத் தழுவும்.

 காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 120 தொகுதிகள் கிடைக்கும் என்பது என்னுடைய கணிப்பு. எடியூரப்பா தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்தபோது அடுத்தடுத்து ஊழல்கள் அம்பலமாயின. அதன் பிறகு அவரை இறக்கிவிட்டு அவர் சொன்னவரை முதல்வர்களாக ஆக்கியபோது மாநில நிர்வாகமே நடைபெற முடியாமல் அவர் முட்டுக்கட்டைகள் போட்டு நிர்வாகத்தைச் சீர்குலைத்தார். ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கிவிடுவேன் என்று வாரந்தோறும் எச்சரித்தார். இதனால் மாநில மக்கள் வெறுத்துப் போய்விட்டார்கள். எனவே இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா படுதோல்வி அடையும் என்பது நிச்சயம்.

 ******

அரசியல் கட்சிகள் கட்சி நிதியாக "கிரிமினல்' பேர்வழிகளிடம் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களைக் கட்சிக்குள் அனுமதிப்பதால் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டு ஆட்சியும் கட்சியும் அழிகிறது. கர்நாடகத்தில் சுரங்கத் தொழில் துறையில் செல்வாக்கு படைத்த ரெட்டி சகோதரர்களைக் கட்சியில் சேர்த்துக்கொண்டு அவர்கள் தந்த பணத்தை கோடிக்கணக்கில் வாங்கி செலவிட்டதால் அவர்களுடைய சட்டவிரோதச் செயல்களுக்கு பாரதிய ஜனதா துணைபோக வேண்டியதாயிற்று.  இதனால் ஆட்சியை இழக்கப் போகிறது; கட்சிக்கும் தேசிய அளவில் கெட்ட பெயர் வந்துவிட்டது.

 எடியூரப்பாவின் ஒரு குடும்பம் அடைந்த கோடிக்கணக்கான ரூபாய் ஆதாயத்துக்காக பாரதிய ஜனதா விலை கொடுக்க வேண்டியதாயிற்று.

 உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிபதியான சந்தோஷ் ஹெக்டே இந்த சுரங்க ஊழலை அம்பலப்படுத்தினார்.

 இந்த ஊழலில் பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர்களான அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் மீது களங்கம் சுமத்த முடியாது. ஆனால் முதலமைச்சராக இருந்த எடியூரப்பாவும் அவருடைய குடும்பத்தவரும் அடைந்த ஆதாயத்துக்கு கட்சி இப்போது பலியாகி ஆட்சியை இழக்கப் போகிறது.

 "2 ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலை எடுத்துக் கொள்ளுங்கள். தி.மு.க.வினரைத் தவிர காங்கிரஸ்காரர்கள் யார் மீதும் குற்றச்சாட்டு இல்லை. உச்ச நீதிமன்றமே இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணைக் குழுவை நியமித்து விசாரணையை முடுக்கிவிட்டதால்தான் இந்த அளவுக்கு இதில் ஊழல் வெளிப்பட்டது.

 "2 ஜி' அலைக்கற்றை ஊழலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகியவற்றைச் சேர்ந்த தேசிய அல்லது மாநிலத் தலைவர்களுக்குப் பங்கு இருப்பதாக இதுவரை தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத்தேர்தலில் இந்த ஊழலுக்காகவே மக்கள், திமுகவைத் தண்டித்து ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டனர். 2014 மக்களவை பொதுத்தேர்தலின்போது திமுகவுக்கு இதைவிடப் பெரிய தோல்வி காத்துக்கொண்டிருக்கிறது; தி.மு.க. யாருடன், எப்படி கூட்டணி அமைத்தாலும் தோல்வியிலிருந்து தப்ப முடியாது. தி.மு.க.வுடன் கூட்டு வைத்திருந்ததற்காக காங்கிரஸ் கட்சியும் வரும் தேர்தலில் "உரிய விலையை'க் கொடுக்கப் போகிறது.

******

மேற்கு வங்கத்தில் சீட்டு நிதி நிறுவனங்களின் மோசடி இப்போது அம்பலப்பட்டு வருகிறது. இப்போது தெரியவந்திருப்பது சிறு முனையளவுதான்; கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதோ பெரும்பகுதி. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் 400 சீட்டு நிதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அசாம், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநில மக்கள்கூட இவற்றில் முதலீடு செய்துள்ளனர்.

 இந்த முறைகேடுகளுக்கும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பழைய ஆட்சியாளர்கள் மீதே குற்றம் கூறித் தப்பிக்க முடியாது, ஏனென்றால் இவர் ஆட்சிக்கு வந்து சுமார் 23 மாதங்கள் ஆகிவிட்டன.  அடுத்த சில மாதங்களில் மேலும் பல சீட்டு நிதி நிறுவனங்கள் அடுக்கடுக்காக மூழ்கிவிடும் என்று தெரியவருகிறது. எனவே மம்தாவுக்கு மிகப்பெரிய நெருக்கடி காத்திருக்கிறது.

 ஆயிரக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்த 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நடுத்தர, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இவற்றில் பணம் போட்டுள்ளனர்.

 இவர்களிடம் பணம் திரட்டித்தந்த முகவர்களும் இப்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் தாங்கள் திரட்டிய முதலீட்டுக்கு 15 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கமிஷனாகப் பெற்றுள்ளனர்.

 "சாரதா' என்ற மிகப் பெரிய சீட்டு நிதி நிறுவனம் பற்றித்தான் இப்போதைக்கு கவனம் செலுத்தப்படுகிறது. இது 1,200 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டியிருக்கிறது. அதே சமயம், "ரோஸ் வேலி' என்ற நிறுவனம் 4,000 கோடி நிதி திரட்டியிருக்கிறது. "செபி' தன்னுடைய விசாரணையைத்  தீவிரப்படுத்தினால்தான் மேலும் பல நிறுவனங்களின் பங்கு குறித்துத் தெரியவரும். திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதால் நிலைமை முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கையை மீறிவிட்டது என்றே கருதலாம்.

 கட்டுரையாளர்: அரசியல் விமர்சகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.