பெயர் விளங்க வேண்டும்' இது நமது நாட்டில் அதிகமாக புழக்கத்தில் உள்ள வாசகமாகும். பெயருக்கும் வளர்ச்சிக்கும் தொடர்பு இருப்பதாக இந்திய புராணங்கள் கூறுகின்றன. என்ன பெயர் சூட்டினால் என்ன? பெயரில் என்ன வந்துவிடப்போகிறது என கருதிவிட முடியாது. பெயர் என்பது குடும்பத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கக் கூடியது. தொடக்க காலத்தில் கடவுளின் பெயர்கள் அதிகமாக சூட்டப்பட்டதற்கான காரணம் அதுதான். கடவுளது பெயர்களை மீண்டும் மீண்டும் கூறுவதால் ஆன்மிகப் பயன்கள் கிடைக்குமென்று இந்து சமயம் நம்புகிறது.
ஐம்பது வருடங்களுக்கு முன்பு கிராமங்களில் குழந்தைகளுக்கு குல தெய்வ பெயர்களை வைத்து அழைக்கப்பட்ட நிலை இருந்தது. கருப்பையா , முனியய்யா, முருகையா, முருகன், வெள்ளையம்மாள், காளியம்மாள், மாரியம்மாள் எனும் வகையில் பெயர்கள் இருந்தன. ஒரே ஊரில் ஒரு தெருவில் இரண்டு மூன்று குழந்தைகள் ஒரே பெயரில் அழைக்கப்படும் நிலையும் இருந்தது. பகுத்தறிவும், கல்வியறிவும் ஓங்கத்தொடங்கியபிறகு பூங்குன்றனார், நல்லார், திருவள்ளுவர், பூதலார், தாயம்மா, பொன்னம்மா என பெயர்கள் சூட்டத்தொடங்கினார்கள். மற்றொருபுறம் கல்வியாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மு.வ, நா. பார்த்தசாரதி, தி. ஜானகிராமன், கல்கி நாவல்களில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் பெயர்களை சூட்டி மகிழ்ந்தார்கள். அந்த வகையில் பூரணி, கயல்விழி, பாமொழி, கண்ணகி, பார்வதி எனும் பெயர்கள் தமிழகத்தில் அதிகமாக புழங்கிய பெயர்களாகும். இந்திய சுதந்திர போராட்டத்திற்குப் பிறகு தியாகிகளின் பெயர்கள் அதிகமாக இடம்பெறத் தொடங்கின. தற்போது மொழிக்கலப்பு பெயர்களும் பொருள் கண்டறிய முடியாத பெயர்களும் அதிகம் சூட்டப்படுவது வருத்தமளிக்கவே செய்கிறது.
பெயர் யாருக்குச் சொந்தம் உரியவருக்கா? இல்லை அழைப்பவர்களுக்கா? இது நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வரும் கேள்வி. சிலரின் பெயர்கள் நாக்கில் வளைவதில்லை. அப்படியான பெயர்கள் இடைகாலத்தில் மாற்றி அழைக்கப்படுவதுண்டு. தென் ஆப்பிரிக்காவில் தெம்பு ராஜ பரம்பரையினருக்கு ஆலோசகராயிருந்த கேட்லாவிற்கு நான்காவது மகனாக பிறந்தவர் ரோலிஹலாடாலிபுங்கா. அந்தப் பெயரைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத தொடக்கப்பள்ளி ஆசிரியை அந்த சிறுவனுக்கு ஆங்கிலப்பெயரான நெல்சன் மண்டேலா என்ற பெயரைச் சூட்டினார். அதேபோன்று யூகொஸ்லோவியா நாட்டிலிருந்து ஒரு பெண்மணி இந்திய நாட்டிற்கு சமூகசேவை புரிய வந்தார். அவர் பெயர் எக்னஸ் கோன்ஸ்கா பொஜாக்கூ. இந்திய மக்களால் அந்தப்பெயரைச் சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை. இந்திய மக்கள் அந்த பெண்மணியை தெரஸா என அன்புடன் அழைத்தார்கள். இவ்விருவரின் பெயர்களுக்கும் பிற்காலத்தில் வரலாற்றில் முக்கியமானதாக மாறிப்போனது.
திராவிட மொழிகளுக்கு ஒப்பிலக்கணம் கண்ட அயர்லாந்து நாட்டை சேர்ந்த ரோபர்ட் கால்டுவெல் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை தென் இந்தியாவில் } குறிப்பாக தமிழகத்தில் } கழித்தவர். அவர் தன் தாய்மொழியின் மீது கொண்டிருந்த பற்றின் காரணமாக கடைசி வரைக்கும் தனது பெயரை மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால் அவர் காலத்தை ஒட்டி இத்தாலி நாட்டிலிருந்து மதப்பிரச்சாரம் செய்ய வந்த பாதிரியார் ஜோசப் பெஸ்கி திராவிட மொழி மீது கொண்ட அதீத பற்றின் காரணமாக தன் பெயரை தமிழ் மொழியில் வீரமாமுனிவர் என மாற்றிக்கொண்டார்.
தமிழறிஞர்களான சூரியநாராயண சாஸ்திரி தன் பெயரை பரிதிமாற்கலைஞர் என்றும் வேதாசலம் மறைமலையடிகள் என்றும் பெயர் மாற்றிக்கொண்டனர். அன்னிய நாட்டைச்சேர்ந்த ஒரு பாதிரியார் தன் பெயரை தமிழ் மொழியில் மாற்றி வைத்துக்கொள்ளும்பொழுது தமிழர்கள் தமிழிலும் இந்தியர்கள் இந்திய மொழிகளிலும் பெயர் சூட்ட முன்வருவதில்லையே.
வெளிநாட்டினர் தங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என இணையத்தில் தேடுவதில்லை. பஞ்சாங்கத்தில், ஜோதிடத்தில், எண் சாத்திரத்தில் மூழ்குவதில்லை. குடும்பத்து மூதாதையர் பெயருடன் இணைத்து ஒரு பெயரைச் சூட்டி மகிழ்கிறார்கள். வெளிநாட்டினர் தங்கள் குழந்தைகளுக்கான பெயரை மத நூலிலும் இலக்கியத்திலும் தேடுகிறார்கள். நாம் தேடுவது இணையத்தில்தான்.
பெற்றோர் வைக்கும் பெயர் தனக்கு பிடிக்கவில்லை என்றால் பெரும் சிரத்தை எடுத்து தனக்கு பிடித்தபடி பெயரை மாற்றி வைத்துக்கொள்ளும் நிகழ்வுகளும் நடந்தவண்ணம் இருக்கின்றன. ஒரு அரசு ஊழியர் பெருமாள் என்கிற பெயரை பெருமாள்சாமி என மாற்றி வைத்துக்கொண்டார். பெருமாள் என்கிற பெயரில் இருக்கின்ற "ள்' என்கிற எழுத்து பெண்பாலை குறிக்கிறதாம்! இன்னும் சிலர் "ன்' என முடிகின்ற தன் பெயரை "ர்' என முடியும் விதமாக மாற்றி வைத்துக் கொள்கிறார்கள். அதன்படி ராமன், கண்ணன், பாவேந்தன் போன்ற பெயர்கள் ராமர், கண்ணர், பாவேந்தர் என திரிந்து விட்டது. "ன்' ஒற்றில் முடியும் பெயர்கள் மரியாதைக்குறைவான பெயர்களாம்! என்னவொரு கண்டுபிடிப்பு பாருங்கள்.
எந்தப் பெயராக இருந்தாலும் அந்தப்பெயருக்கு பின்னால் அந்தப் பெயர் சார்ந்த சாதியும் மதமும் பிணைந்திருப்பதை கண்டு கவலைப்படாமல் இருக்க முடிவதில்லை. இது ஒருபுறம் இருக்க சில சமூக மக்கள் குழந்தைகளுக்கு சூட்டப்படும் பெயரால் புரட்சி செய்ய தொடங்கியிருப்பதும் கவனிக்க வைக்கிறது. ஒருவர் தன் குழந்தைக்கு "கும்பிடுறேன்சாமி' என பெயர் வைத்து அழைப்பதை அண்மையில் கேட்க முடிந்தது. இந்தப்பெயர் வைத்ததற்கான காரணத்தை கேட்கையில் அவர் இவ்வாறு சொன்னார். "எத்தனை நாள்களுக்குத்தான் நாங்கள் உங்களை கும்பிடுவது. இனி நீங்கள் எங்கள் பிள்ளையைக் கும்பிடுங்கள்.'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.