இந்திய நாட்டின் 67-ஆம் ஆண்டு சுதந்திர நாள் கொண்டாட்டங்கள் நாடெங்கும் நடந்து முடிந்துள்ளன. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் ஒரு பக்கம்; மாநிலங்களில் பிரிவினைக் கலவரங்கள் மறுபக்கம். இத்தனைக்கும் இடையில் சுதந்திர நாளும் வந்து போய்விட்டது.
சும்மா வந்ததா சுதந்திரம்? ஆயுத வழியிலும், அகிம்சை வழியிலும் போராடிப் பெற்ற விடுதலையை மக்கள் அவ்வளவு ஆர்வமாகக் கொண்டாடவில்லை என்பது சமூக ஆர்வலர்களின் ஆதங்கம். ஆனால் ஆளுவோரும், அரசியல் கட்சிகளும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அரசு அலுவலகங்களும், கல்விக்கூடங்களும் கொண்டாடினால் போதும் என்று நினைக்கின்றனர்.
இன்று கட்சித் தலைவர்கள் இருக்கிறார்களே தவிர, தேசியத் தலைவர்களோ, மக்கள் தலைவர்களோ இல்லை என்பதே இதற்குக் காரணம். மக்களைப் பற்றியே கவலைப்படாத மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதுதான் வேடிக்கை. தியாகத் தழும்பேறிய தேசியத் தலைவர்களையும் சாதியத் தலைவர்களாக ஆக்கி அவர்களைக் கொச்சைப்படுத்தும் போக்கே வளர்ந்து வருகிறது.
வறுமையை ஒழித்து ஏழை, எளிய மக்களைக் காப்பதாகக் கூறி அவர்களது வாக்குகளையும், தொழிலை வளர்த்து செல்வந்தர்களைக் காப்பதாகக் கூறி அவர்களிடமிருந்து தேர்தல் நிதியும் வாங்கியே ஆட்சி அமைக்கப்படுகிறது. இந்த இரு பிரிவினரையும் நம்ப வைப்பதே ஆட்சியாளர்களின் அரிய சாதனையாகும். இந்தச் சாதனைக்கு அளிக்கப்பட்ட பரிசே 5 ஆண்டு ஏகபோக ஆட்சியாகும்.
இன்று நாட்டின் எல்லாக் குறைபாடுகளுக்கும், குழப்பங்களுக்கும் இதுவே காரணம். இந்தக் குறைபாடுகளைப் போக்க யாராவது முன்வந்தால் அவர்கள் மீது அரசின் அடக்குமுறைகள் பாயும். அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் நல்லவர்கள் ஒதுங்கி விடுகின்றனர் அல்லது ஒதுக்கப்படுகின்றனர். "துஷ்டரைக் கண்டால் தூர ஓர் அடி' என்பதே இதற்கும். இதிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது எப்படி என்பதை இளைய தலைமுறை யோசிக்க வேண்டிய வேளையும், வேலையும் வந்துவிட்டது.
நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய தகவல். அதனால் பயன் என்ன? கல்வி, வேலைவாய்ப்புகளில் அவர்களுக்குரிய பங்களிப்பு இல்லாமல்தானே இருக்கிறது! உலகமயக் கொள்கையினால் அயல்நாட்டு மூலதனம் வரும்; அதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என்று கூறப்பட்டது. ஆனால், நடைமுறை உண்மை அதற்கு எதிர்மாறாகவே இருக்கிறது.
"சுதந்திரம் கிடைத்துவிட்டால் நாட்டில் பாலாறும், தேனாறும் பாயும்' என்று கூறப்பட்டது. இதனை நம்பிய மக்கள் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இலவு காத்த கிளியின் கதையாகிப் போனது. இதைத்தான்,
""நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ-கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடீ'' என்று பாரதி பாடினார்.
இந்த ஆண்டும் தலைநகர் தில்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் கொடியேற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தியுள்ளார். மாநிலத் தலைநகர்களில் மாநில முதல்வர்கள் கொடியேற்றி வைத்து, உரை நிகழ்த்தியுள்ளனர். தமிழ்நாட்டில் சென்னைக் கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்தியுள்ளார்.
இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லைதான். ஆனால், இருவர் பேச்சிலும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்துகளைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். உணவுப் பாதுகாப்பு மசோதாவைப் பற்றியே இந்த உரைகளும் அமைந்திருந்தன.
""அண்மையில் கொண்டு வரப்பட்ட உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதன் மூலம் கிராமப்புறத்தில் வாழும் 75 விழுக்காடு மக்களும், நகர்ப்புறங்களில் வாழும் 50 விழுக்காடு மக்களும் பயன்பெறுவர்...'' என்று பிரதமர் பேசியுள்ளார்.
இதன் மூலம் சுமார் 81 கோடிப் பேருக்கு அரிசி கிலோ ரூ. 3, கோதுமை கிலோ ரூ. 2, இதர உணவு தானியங்கள் கிலோ ரூ. 1 -க்குக் கிடைக்கும் என்றும், இத்தகைய முயற்சி உலகிலேயே முதல்முறையாக இந்தியாவில்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டுள்ளார்.
""தமிழகத்தில் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்துக்கே பங்கம் விளைவிக்கும் வகையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற முனைந்துள்ளது. இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழகத்தில் இப்போது ரேஷன் அட்டைகள் மூலம் வழங்கப்படும் அரிசியில் ஒரு லட்சம் டன் அரிசி அளவுக்கு பற்றாக்குறை ஏற்படும்...'' என்று தமிழக முதல்வர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு சுதந்திர தினத்தில் நிகழ்த்திய இருவர் உரைகளும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளது. மக்களாட்சியில் அரசியல் கட்சிகளுக்கு இடையே இருவேறு பார்வைகள் வருவது இயற்கையென்றாலும், மக்களுக்கான ஒரே திட்டத்தில் இருவேறு அரசுகளுக்கு இடையே மாறுபாடான நிலை உருவாகியிருப்பது கவனிக்கத்தக்கது.
"யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே' என்று கூறுவார்கள். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வருவதை முன்னிட்டு இந்தத் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு இவ்வளவு அவசரமாகக் கொண்டு வந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததுதான்.
"சேமிப்புக் கிடங்குகளில் உள்ள உணவு தானியங்களை ஏழை மக்களுக்குக் கொடுங்கள்; வீணாக எலிகளுக்குக் கொடுக்காதீர்கள்' என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் பல முறை கூறியுள்ளது.
அதிக அளவிலான உணவு தானியம் கிடங்குகளிலேயே இருந்து கெட்டுப் போவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மத்திய அரசு எந்தப் பதிலும் கூறாமல் மௌனம் சாதித்தது; மக்களுக்குத் தராமல் மூடி மறைத்தது.
உணவு தானியக் கிடங்குகளில், முக்கியமாக இந்திய உணவுக் கழக சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள தானியங்கள் கெட்டுப் போய் கடலில் கொட்டுவதோ, எலிகள் சாப்பிட்டு வீணாகவோ விடக்கூடாது என்றும், அவற்றைப் பயனுள்ள வகையில் ஏழை மக்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு (ஆகஸ்ட் 20, 2001) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
உணவு தானியத்தைச் சேமிப்பதே பசித்தவர்களுக்கு அவை சென்றடைய வேண்டும் என்பதுதான். அதைச் செய்யாமல் பல்வேறு திட்டங்களைத் தீட்டி என்ன பயன்? எதிர்கால உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யவும், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும் உணவு தானியங்களை அரசு வாங்கி சேமிப்பது அவசியம்.
ஆனால் அவற்றை முறையாகப் பாதுகாத்து வைக்காமலும், கிடங்குகளில் போதிய வசதிகளைச் செய்யாமலும் இருப்பது கவலையளிக்கிறது. உணவு தானியங்களை வீணாக்காமல் அவற்றை வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
இப்போதைய கணக்குப்படி நாட்டில் 7 கோடிக்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். ஆனால், மத்திய அரசு 1991-ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி உள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் உணவு தானியத்தைக் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இதனை அரசு மாற்றிக் கொண்டு ஏழைகள் அனைவருக்கும் உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் அப்போது கூறியிருந்தனர்.
2001 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் கூறியபோதும் மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதாவை அவசரச் சட்டத்தின் மூலம் கொண்டு வந்துள்ளனர்.
குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற முக்கிய தேசிய தினங்களிலும் ஆட்சியாளர்கள் தேச நலனை முன்வைக்காமல் கட்சி நலனை முன்வைத்துப் பேசுவது வழக்கமாகிவிட்டது. இது தடுக்கப்பட வேண்டும். தேசம் என்பதும், அரசு என்பதும் எல்லோருக்குமானது. சுதந்திரக் காற்றை எல்லோரும் சுவாசிக்க வேண்டாமா?
"சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்னும் எழுச்சி முழக்கங்கள் பிரெஞ்சுப் புரட்சியின் மூலம் உலகத்துக்கு அறிமுகம் ஆயின. "செய் அல்லது செத்துமடி' என்பது இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்திய முழக்கமாக எங்கும் எதிரொலித்தது. மக்களும், "வாழ்வா? சாவா?' என்ற இறுதிப் போராட்டத்தில் குதித்தனர். இந்திய விடுதலை இப்படித்தான் கிடைத்தது.
""புதுதில்லியில் இருக்கும் அரண்மனைகளுக்கும், பரிதாபகரமான தொழிலாளர்களின் குடிசைகளுக்கும் இருக்கும் இந்த வித்தியாசம் சுதந்திர இந்தியாவில் ஒருநாள்கூட இருக்கக் கூடாது. சுதந்திர இந்தியாவில் நாட்டின் மிகப்பெரிய பணக்காரருக்கு இருக்கும் அதே அதிகாரமே ஏழைக்கும் இருக்கும்...'' என்று மகாத்மா காந்தி சுதந்திரம் அடைவதற்கு முன்பு கூறினார். சுதந்திரமடைந்த நாட்டின் நிலை என்ன?
நாடு விடுதலை பெற்றபோது, அந்தச் சுதந்திரக் கொண்டாட்டங்களில் மகாத்மா காந்தி பங்கேற்றுக் கொள்ளவில்லை. அப்போது கொல்கத்தாவில் ஹைதரி மன்ஸில் என்ற பழைய கட்டடத்தில் தங்கியிருந்த காந்தியடிகள், சுதந்திர தினத்தன்று உண்ணாநோன்பு இருந்தும், கைராட்டையில் நூல்நூற்றும் அமைதியாகக் கழித்தார். அந்த நகரில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சிகள் எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
மத்திய அரசின் செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஓர் உயர் அதிகாரி காந்தியடிகளை அணுகி, பத்திரிகைகளில் பிரசுரிக்க சுதந்திர தின அறிக்கை அல்லது செய்தி தரும்படி கேட்டார். அதற்கும் அவர் மறுத்துவிட்டார். சுதந்திர இந்தியாவைப் பற்றிய அவரது முன்கூட்டி அறியும் "தீர்க்கதரிசனம்' என்பது இதுதானோ?
இந்திய நாட்டில் சுதந்திரம் இல்லையா? இருக்கிறது. எல்லை மீறிய சுதந்திரம் இருக்கிறது. கள்ளக் கடத்தல், கறுப்புப் பணம், ஊழல், லஞ்சம் என எல்லை மீறிய சுதந்திரம் - சிலருக்கு. இது பெரும்பான்மையான மக்களின் சுதந்திரத்தைப் பறித்து விடுகிறது. எல்லோரும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டாமா?
கட்டுரையாளர்:
பணி நிறைவு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.