நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சட்டத்தால் ஆகாதெனினும்!

சமூகத்தில் நிகழும் குற்றச்சம்பவங்களைக் கடுமையான சட்டங்களால் தடுத்து நிறுத்திவிட முடியும் என்பது ஒருசாரார் முன்வைக்கும் வாதம். அது எல்லாக் காலங்களிலும்...

News image
Updated On :24 பிப்ரவரி 2013, 8:43 pm

வே.சுந்தரேஸ்வரன்

சமூகத்தில் நிகழும் குற்றச்சம்பவங்களைக் கடுமையான சட்டங்களால் தடுத்து நிறுத்திவிட முடியும் என்பது ஒருசாரார் முன்வைக்கும் வாதம். அது எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் வெற்றிகரமாக அமைந்துவிடுகிறதா என்பது மற்றொரு சாரார் எழுப்பும் கேள்வி.

அரபு நாடுகளில்கூட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்குப் பொது இடங்களில் நிற்க வைத்து கசையடி கொடுப்பதும், தூக்கிலிடுவதும் நடக்கத்தானே செய்கிறது. அங்கெல்லாம் குற்றச்சம்பவங்கள் முற்றிலும் ஒழிந்துபோய்விடவில்லையே என்று தங்கள் தரப்பு வாதத்திற்கு நியாயமும் கற்பிக்கின்றனர்.

இப்போது, குற்றச் சம்பவங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது சமூகக் கலாசார அடிப்படைக் கட்டமைப்பையே உலுக்குவதாக அமைந்துள்ளது.

""மாதர்களும் தங்களை ஆண் ஆதிக்கம் மிகுந்த இந்தச் சமூகம் தவறான கண்களுடன் பார்க்காதவாறு நடை - உடை, பாவனைகளில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்'' என்பது மண்ணின் பாரம்பரியம், கலாசாரம் மீது நம்பிக்கை கொள்வோரின் எதிர்பார்ப்பு.

பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் குடிப்பழக்கம், போதைக்கும் அடிமையானவர்களாக இருப்பது அண்மையில் நிகழ்ந்த சம்பவங்கள் மூலம் தெரியவருகிறது.

ஜனநாயக நெறிமுறைகளின்படி ஆட்சி நடத்தப்படும் இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற செயல்கள் நடப்பது, உலக நாடுகள் மத்தியில் நம் மீதான நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிடும்.

ஏனெனில், மரபு, பண்பாடு, கலாசாரம், பாரம்பரியம், மொழிவளம் என பல சமூகக் கூறுகளிலும் உலகுக்கு வழிகாட்டும் உன்னத தேசம் பாரதம்.

அமெரிக்காவில் நிகழ்ந்த சில துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்குப் பிறகு அந்நாட்டில் துப்பாக்கிகளுக்கு உரிமம் வழங்குவதைக்கூட மறுபரிசீலனை செய்ய வேண்டிவரும் என்று அதன் அதிபர் பராக் ஒபாமா எச்சரித்துள்ளார். ஆயுதம் செய்வது அழிவுப் பாதைக்கு வித்திடுமே ஒழிய, அதனால் அறமும், அகிம்சையும் ஒருபோதும் வளர்க்கப்படுவதில்லை என்பதை உணர்த்துவதாக உள்ளது.

அகிம்சையால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலக்கு உணர்த்திய உதாரண புருஷர் காந்தி மகான் வாழ்ந்த தேசம் நம்முடையது.

துப்பாக்கிகளும், பீரங்கிகளும் கொண்ட ஆங்கிலேயர்களை கத்தியின்றி, யுத்தம் செய்து வெற்றிகண்ட பெருமகனார் அவர்.

அன்பு, மனிதநேயம், சகோதரத்துவம், சமத்துவம், காருண்யம் ஆகியவற்றின் வலிமையை உலகுக்கு எடுத்துச் சொன்னது மட்டுமின்றி, அதன்படி வாழ்ந்து உலகத்தாருக்கு வழிகாட்டியவர் அவர்.

உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம், உள்துறை அமைச்சகம், காவல் கண்காணிப்பு அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என அனைத்து முக்கியத் துறைகளின் இருப்பிடமாக விளங்கும் தில்லி, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நகரமாகப் போகும் நிலை வந்ததற்கு யார் காரணம்?

தில்லியில் டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பஸ்ஸில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக மத்திய, மாநில அரசுகள் தலைநகரில் பெண்களுக்கான பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தினம், தினம் அரசுத் தரப்பில் இருந்தும், காவல் துறையில் இருந்தும் செய்தி அறிக்கைகள் வருகின்றன.

அண்மையில், நீதியரசர் ஜே.எஸ். வர்மா குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுவிட்ட பிறகு, பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனைக்கு வகை செய்யும் அவசரச் சட்டத்துக்குக்கூட குடியரசுத் தலைவரால் ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது.

ஆகவே, பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்களில் இருந்து தடுக்கவும், அவர்களைப் போகப் பொருளாகப் பார்க்கும் மனப்போக்கில் மாற்றம் ஏற்படுத்தவும் வேண்டும். இது எப்படி சாத்தியமாகும்?

நமது நாட்டின் பாரம்பரிய மதிப்பீடுகளையும், விழுமியங்களையும் நாம் ஒவ்வொருவரும் உணரத் தொடங்கும்போதுதான் இது சாத்தியம். இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் தலையாய பொறுப்பு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், அரசு நிர்வாகத்திற்கும் மட்டுமே உண்டு!

இந்தியாவுக்கே உரித்தான பண்பாடு, கலாசாரம், பாரம்பரிய விஷயங்களையும், உயர்ந்த வாழ்வியல் நெறிமுறைகளையும், நவீனத் தொடர்பு சாதன வசதிகளைப் பயன்படுத்தி மக்களிடையே ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாது?

ஆன்மிக வாழ்விலும் அறவாழ்விலும் சிறந்து விளங்கும் பெரியோர்களின் கருத்துகளை முன்னிலைப்படுத்த வேண்டும். மதம், மொழி, இனம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு இந்த நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

"குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாமா?' என்ற எண்ணத்தை இந்த விஷயத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் ஒதுக்கிவைக்க முன்வர வேண்டும். காரணம், அவர்களின் வீடுகளிலும் பெண்கள்தானே உள்ளனர். இந்த ஒரு விஷயத்திற்காகவாவது மனமாச்சரியங்களை மறந்து அரசியல் தலைவர்கள் ஒன்று சேர வேண்டும். இன்றைய - நாளைய தலைமுறையினர் நல்ல தலைமுறையாக உருவாகப் பாடுபடும் நல்ல தலைவர்களை இந்த தேசம் காலம் உள்ளவரைத் தலையில் வைத்துக் கொண்டாடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.